Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மனித வாழ்வின் தத்துவம்

ஒரு ஈ, ஒரு எருதின் கொம்பில் நெடுநேரம் உட்கார்ந்திருந்தது. தான் உயர்ந்த இடத்தில் இருப்பது போல எண்ணிக்கொண்டு, உலகை அனுபவித்தது. பின்னர், அந்த கொம்பிலிருந்து பறந்து செல்லத் தயாரான போது, அந்த எருதை நோக்கி;

“எருதே, நான் பறந்து செல்லப்போகிறேன். அதனால் உனக்கு எந்த துக்கமும் இல்லைதானே?” என்றது. உடனே எருது, ஈயைப் பார்த்து சிரித்துக் கொண்டே தனது கண்களை மேலே உயர்த்தி;

“ஓ சிறிய அற்பமான ஈயே, நீ இருந்தாலும், இல்லையென்றாலும் எனக்கு ஒன்றுதான். நீ எனது கொம்பில் வந்து உட்கார்ந்ததே எனக்கு தெரியவில்லை. அப்படியிருக்க, நீ போகட்டுமா என்று என்னைக் கேட்கிறாயே!” என்று நக்கலாகப் பதிலளித்தது. இதைக் கேட்ட ஈ முகம் சிவந்து போனது.

இறைமக்களே, மேற்கண்ட கதையைப் போலத்தான் பலருடைய எண்ணங்களும் இருக்கின்றன. உலகம் என்ற எருதின் கொம்பில் அமர்ந்திருக்கும் அவர்கள், தங்களைப் பற்றியே வீண்பெருமை கொண்டு வாழ்கின்றனர். தங்களைச் சுற்றியுள்ள உலகம் தங்களைத் தங்கள் தலைக்குமேல் தூக்கி வைத்திருக்கிறது என்றும், இவ்வுலகம் தங்களுக்கு பெரிய அந்தஸ்தையும் முக்கியத்துவத்தையும் கொடுக்கிறது என்றும் மாயமான மனக்கோட்டையை கட்டிக் கொள்கின்றனர்.

“உங்களில் எவனானாலும் தன்னைக் குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், தெளிந்த எண்ணமுள்ள வனாய் எண்ண வேண்டும்” (ரோமர் 12:3) என்றும்,

“உன்னை அதிக ஞானியுமாக்காதே” (பிரசங்கி 7:16) என்றும் இறைவேதம், பெருமையான எண்ணங்களுக்கு எதிராக எச்சரிக்கிறது. இஸ்ரவேலின் அரசனாகிய தாவீது தன்னை “தெள்ளுப்பூச்சி” (1 சாமு. 26:20) என்றும், விஸ்வாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாம் தன்னை “தூளும் சாம்பலுமானவன்” (ஆதி. 18:27) என்றும், செல்வந்தனாகிய யோபு தன்னை “நான் நீசன்” (யோபு 40:4) என்றும் தாழ்த்திக் கொண்டதை காண்கிறோம். ஆனால் இன்று பலரும் தங்களைத் தாங்களே மிகவும் பெரியவர்கள் என்று நினைத்து, கௌரவம் கோரிக் கொள்கின்றனர். இதனால் தங்களையும், தங்களுக்குரிய காரியங்களையும் அடிக்கடி பெரிதாகப் பேசிக் கொள்கின்றனர். இறைவன் நம்மை மண்ணிலிருந்து உருவாக்கினார். ஆகவே, “நாம் மண்ணென்று தேவன் நினைவு கூருகின்றார்” (சங்கீதம் 103:14) என்ற புரிதலோடு நாம் நடக்க வேண்டும். “தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான்; தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” (லூக்கா 14:11) என இறைவேதம் மனித வாழ்வின் தத்துவத்தை எடுத்துரைக்கிறது.

- அருள்முனைவர்.

பெ. பெவிஸ்டன்.