Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பேச்சிழந்தவர்களுக்கு உத்தமராயப் பெருமாள்

இவ்வுலகைப் படைத்து, வழிநடத்தும் இறைவன், அவரவரது பாவ - புண்ணியங்களுக்கு ஏற்ப உயிர்களை பல வகையாகப் படைக்கின்றார். அதேசமயம், அவ்வுயிர்களின் குறைகளைக் களையவும், பல்வேறு திருத் தலங்களில் எழுந்தருளி, இடர் நீக்குகின்றார். அப்படி இறையருள் நிறைந்த ஓர் அற்புத மலைத்தலம்தான் பெரிய அய்யம்பாளையம் ஊமைக்கு வாய் கொடுத்த ஸ்ரீஉத்தமராய பெருமாள் ஆலயம். ‘‘ஓங்கி உலகளந்த உத்தமன்’’ என்கிற ஆண்டாளின் வரிக்கேற்ப உத்தமனாய் வீற்றிருக்கும் திருமால், இங்கு பேச்சுக் குறைபாடுள்ளவர்களை பேச வைத்த காரணத்தால், பேச வாய்க் கொடுத்த உத்தமராய பெருமாள் என்றழைக்கப்படுகின்றார். முன்பொரு சமயம், அய்யம்பாளையத்திலுள்ள மலைமீது ஆடுகளை மேய்த்து வந்தான் ஒரு வாய் பேச முடியாத சிறுவன்.

ஆதியிலிருந்தே மலை உச்சியில் ‘‘உத்தமராயர்’’ என்கிற பெயருடன் பெருமாள் சிலை ஒன்று இருந்தது. ஆடுகளை மேய்க்க வந்த சிறுவன், புதிய இடம் நாடி மலை உச்சிக்குச் செல்கின்றான். அப்போது அங்கிருந்த பெருமாளின் கற்சிலையை காண்கிறான். தனது நிலைக்காக கண்ணீர் மல்க வேண்டுகின்றான். உடன் அவன் தன்னையும் அறியாமல், ‘‘உத்தமராயா’’ என்று அலறினான். அவனுக்கு பேசும் திறன் வந்துவிட்டது. ஆனந்தத்தில் துள்ளிக் குதித்த அச்சிறுவன், இச்செய்தியை ஊர் முழுதும் பரப்பினான். அது முதல் மக்களும் இந்த பெருமாளை வழிபடத் தொடங்கினர். அன்று முதல் உத்தமராயப் பெருமாள், ‘‘பேச வாய் கொடுத்த உத்தமராயப் பெருமாள்’’ என்று போற்றலானார். விஜயநகர மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், அந்தணர்களுக்கு அளிக்கப்பட்ட ஊரே அய்யர்பாளையம். அதுவே நாளடைவில் மருவி, இன்று அய்யம்பாளையம் ஆகிவிட்டது.

விஜயநகரப் பேரரசின் கலைப்பாணியில் இவ்வாலயத்தில் தெரிவதாலும், அய்யம்பாளையம் குன்றின் கீழ் உள்ள மண்டபம் ஒன்றில் அவர்கள் கால கல்வெட்டு ஒன்று உள்ளதாலும், இவ்வாலயம் விஜயநகர மன்னர் ஒருவர் கட்டியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. அய்யம்பாளையம் ஊரின் வடக்கே, சிறு குன்றின் மீது உத்தமராய ஆலயம் அமைந்துள்ளது. மலையின் கீழ் திருக்குளமும், சுனை ஒன்றும் காணப்படுகின்றது. சுமார் 150 படிகளை கொண்ட இவ்வாலயத்தின் கீழே, விநாயகர், பாலமுருகன் மற்றும் நவக்கிரக சந்நதிகள் அமையப் பெற்றுள்ளது. இக்குன்று மிகுந்த வனப்புடன் அற்புதமாக காட்சி அளிக்கின்றது. சிறுசிறு கற்களாலான 150 படிகளை கடந்தால், அழகிய ஆலயத்தை அடையலாம். ஆலயத்திற்கு வெளியே சிறிய திருவடியான ஆஞ்சநேயர் சந்நதி அமையப் பெற்றுள்ளது. ஆலயம், மகாமண்டபம், அந்த்ராளம், கருவறை என்கிற அமைப்புடன் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் ஸ்ரீஉத்தமராய பெருமாள் நின்ற கோலத்தில் பேரருள் பொழிகின்றார். இங்கு தாயார் சந்நதி கிடையாது. ஆழ்வார்கள், மகாமண்டபத்தில் வீற்றுள்ளனர். தனி விமானத்துடன் கூடிய பெருமாள் சந்நதி காண்போரை கவர்ந்திழுக்கின்றது. தற்பொழுது வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இங்கு திரளான பக்தர்கள் கூடி பேச்சிழந்த தங்களது பிள்ளைகளுக்காக விரதமிருந்து, பெருமாளுக்கு அர்ச்சனை வழிபாடு செய்கின்றனர். பெருமாளுக்கு அபிஷேகம் செய்த தேனை, திக்குவாய் மற்றும் பேச்சு வராமல் இருக்கும் குழந்தைகளுக்கு நாக்கில் வைக்கப்படுகிறது. தொடர்ந்து ஏழு சனிக் கிழமைகளில் இங்கு வந்து வழிபாடு செய்யும் பக்தர்களின் பேச்சு குறைகள் தீர்ந்து, பேச்சு வந்ததும் மீண்டும் இங்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி செல்கின்றனர்.

சனிக் கிழமைகளில் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை ஆலயம் திறந்திருக்கும். அன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். புரட்டாசி சனிக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் இங்கு அலைமோதும். வருடாவருடம் காணும் பொங்கலுக்கு மறுநாள் இங்கு திருவிழா நடக்கிறது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமானின் திருவருளைப் பெறுகின்றனர். ஆலய தொடர்புக்கு: அத்திமலைப்பட்டு சிவா ஐயர் - 93455 24079.எப்படி செல்வது? திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தில் உள்ள இந்த அய்யம்பாளையம் ஆரணியில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஆரணி - வேலூர் பேருந்து தடத்தில் உள்ள அத்திமலைப்பட்டிலிருந்தும், வேலூர் - திருவண்ணாமலை சாலையில் உள்ள வண்ணாங்குளத்திலிருந்தும் இவ்வாலயத்தை எளிதில் அடைந்திடலாம். கண்ணமங்கலத்தில் இருந்து இங்கு வர ஆட்டோ மற்றும் பேருந்து வசதி உள்ளது.