‘‘இரண்டு தேர்க்கால்களில் வெங்கடேசப் பெருமாள்’’
திருவேங்கடம் என்கிற திருமலையில் பகவான் ஏழுமலையான் ‘நின்ற வண்ணமுள்ள பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். இந்த ஏழுமலையானைப் போல் தெற்கேயும் வகுளகிரி என்ற சிறிய மலைமேல் அருளும் வெங்கடேசப் பெருமாள் சில வித்தியாசங்களுடன் எழுந்தருளியிருக்கிறார். வகுளகிரி என்பது திருநெல்வேலி மாவட்டத்தில், திருநெல்வேலியிலிருந்து சுமார் ஒன்பது மைல் தூரத்தில் திருச்செந்தூர் போகும் பாதையில் கருங்குளம் என்ற கிராமத்தில் இருக்கிறது. இந்தக் கிராமத்தின் வடகோடியில் ஒரு சிவன் கோயிலும், வகுளகிரியின் மேல் ஸ்ரீ னிவாசப் பெருமாள் கோயிலும் இருக்கின்றன. இந்தக் கோயிலுக்குச் சற்றுத் தெற்கேதான் ஸ்ரீ மத் வெங்கடாசலபதி அர்ச்சாமூர்த்தியாக தனிக் கோயிலில் எழுந்தருளியிருக்கிறார்.
இவரும் நின்ற வண்ணம் பெருமாள்தான்! இந்த அர்ச்சாமூர்த்தியான ‘வெங்கடாசலபதிக்கும்’ சில விசேஷங்கள் காணப்படுகின்றன. இங்கு சிவபெருமானுக்குச் செய்வது போல் அபிஷேகாதிகள் நிறையவே செய்கிறார்கள். இவருக்குப் படைத்திருக்கும் வெங்கடாசலபதி எனும் திருநாமமும் விசேஷ முடையதாகத்தான் தோன்றுகிறது. இவரது அபிஷேகத்திற்கான தீர்த்தம் தாமிரபரணி நதியிலிருந்து தினமும் ஸ்மார்த்தர்களே கொண்டு வருகிறார்கள். இவருக்கு மற்ற பெருமாள் கோயிலைப் போல் இங்கு புளியோதரை நிவேதனம் கிடையாது.
இந்த மூலவரான மூர்த்திக்கும், உற்சவ மூர்த்தி கிடையாது. அருகில் உள்ள மற்றொரு கோயிலில் உள்ள ஸ்ரீ னிவாசருக்குத்தான் உற்சவ மூர்த்தி உண்டு. இந்த உற்சவ மூர்த்தியும் வருடத்திற்கு ஒருமுறைதான் அதாவது சித்ரா பௌர்ணமி அன்றுதான் மலையிலிருந்து கீழே இறங்குகிறார்.மேலும், இந்த வெங்கடாசலபதி கோயிலுக்கு சற்று தெற்கேதான் தல விருட்சமான புளியமரம் இருக்கிறது.
இதிலும் ஒரு விசேஷம் என்னவென்றால், இந்த மரத்தின் இலைகள் மற்ற புளிய மரத்தின் இலைகளைப் போல் மாலைப் பொழுதிற்குப் பிறகு மூடிக் கொண்டு உறங்கி விடுவதில்லை. ஆகவே, இது உறங்கா புளியமரம் என்று கூறப்படுகிறது. மேலும், இங்குள்ள வெங்கடாசலபதி இரண்டு சந்தன மரக்கட்டைகளில் ஆவிர்பவித்து அர்ச்சா மூர்த்தியாக இருக்கிறார். இந்தத் தலத்தைப் பற்றிய மகாத்மியம் ‘பிரமாண்ட புராணத்தில்’ கூறப்பட்டிருக்கிறது. இதன் பெருமையை அறிந்த காசி நகரில் உள்ள சந்திரகாந்த அரசன், அகத்திய முனிவரிடம் கேட்கிறான்.
‘‘அகஸ்திய மகரிஷியே! இரண்டு தேர்கால்களுக்கா இவ்வளவு அபிஷேகங்களும் ஆராதனை பூஜைகளும் நடக்கின்றன? மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறதே? இதை யார் எங்கிருந்து இங்கே கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தார்கள்? அதன் வரலாற்றை விஸ்தாரமாகக் கேட்க விரும்புகிறேன்!’’ என்றான் அரசன். அகஸ்திய மாமுனிவரும் விவரமாகக் கூற ஆரம்பித்தார்.
‘‘அரசே’’ பாஹ்லிகம் என்ற தேசத்தில் கல்ஹாரம் என்ற பட்டணத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான் சுபகண்டன் என்ற அரசன். அவன் மகாபக்திமான். மகாவீரன். அவனுக்கு கண்டமாலை என்ற நோய் வந்து, அநேகம் கிருமிகளால் பாதிக்கப் பட்டான். சுபகண்டன் என்ற அவனது பெயரே ‘கிருமி கண்டன்’ என்றாகியது. திருமலை - திருப்பதியில் உள்ள திருவேங்கடவனைத் தவிர வேறு கதியில்லை என்றென்ன நிறைய தனத்துடன் திருமலைக்கு வந்து தங்கி பகவானை ஆராதித்து வந்தான். அப்பொழுது ஒரு நாள், பகவான் அவன் கனவில் தோன்றி, நல்ல சந்தன மரத்தால் ஒரு ரதம் செய்து விடக் கூறுகிறார். இறைவன் ஆணைப்படியே, மிகவும் அழகான சந்தன மரத்தேர் செய்து முடிக்கப்பட்டது. எவ்வளவோ கணக்குப் பார்த்தும் சிற்ப, சித்திர ஆகம விதிகளைப் பின் பற்றிப் பார்த்தும் கால்களை செய்தும், இரண்டு கால்கள் மீதியாகவே இருந்தன.
சிற்பிகள் ஆச்சர்யத்தில் செய்வதறியாது திகைத்தனர். அப்பொழுது பகவான் இரு தேர்கால்களிலும் ஆவீர் பாகம் செய்ய அசரீரியாக அந்த அரசனின் கனவில் வந்து, ‘‘அரசனே! அந்த இரு சந்தனக்கட்டைகளையும் தாமிரபரணித் தீர்த்தத்திலிருக்கும் வகுளகிரியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் உன் வியாதி முற்றிலும் குணமாகும்!’’ என்றார்.அவ்விதமே அரசனும் வகுளகிரியின் உச்சியில் ஸ்ரீ னிவாசப் பெருமாள் கோயிலுக்கும் உறங்காப்புளிய மரத்திற்குள் நடுவில் அந்த இருதேர் கால்களையும் வெங்கடாசலபதியாக பிரதிஷ்டை செய்து கோயிலும் கட்டினான்.
இந்த இரு தேர்கால்களின் மேல் பாகம் நடுவில் இரண்டும் சேர்ந்து முகம் போல் தோற்றமளிக்கும். மற்ற இரு பக்கத்திலுமுள்ள இருபாகமும் இருகைகளைப் போல் தோன்றும். ஆகவே, இரு தேர்கால்களில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் ஸ்ரீ வெங்கடாசல பதியாக ஆவிர்பாவித்து இந்தப் பூவுலகத்தை ரட்சித்து வருகிறார். இவ்விறைவனை வழிபட்டு வந்ததால் அந்த அரசனின் வியாதியும், முழுவதுமாகக் குணமாகி மறுபடியும் சுபகண்டனாக ஆனான். மேலும் இத்திருத்தலத்தில் பல விசேஷங்கள் உண்டு.
எங்கும் உள்ளது போல் பகவான் ஸ்ரீ தேவி பூதேவியுடன் காட்சியளிப்பதில்லை. தனியாகவே நின்ற திருக்கோலத்தில் அபயஹஸ்தம் காட்டியபடி நின்ற வண்ணம் கொண்ட பெருமாளாக இருக்கிறார். இங்கு பகவானுக்குப் போட்டிருக்கும் திருநாமத்திலும் ஒரு விசேஷம் உண்டு. இவருக்கு அணிவித்திருக்கும் நாமம், தென்கலை நாமத்தைப் போல் கீழ் பாதம் கிடையாது. அதே சமயம் வடகலை நாமத்தின் தோற்றமுமில்லை. மேலும் இவர் ருத்ராட்சமாலையும் அணிந்திருக்கிறார். இப்பெருமாளுக்கு சிவனுக்கு செய்வது போலவே தினமும் பல வகையான அபிஷேகங்கள் செய்யப்படுகிறது. இந்த வெங்கடாசலபதியைத் தரிசிக்கும் முன், கட்டாயமாக சற்று வடக்கிலிருக்கும் சிவாலயத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு குலசேகர நாயகி சமேத மார்த்தாண்டேஸ்வரரைத் தரிசிக்க வேண்டும்.
சைவ, வைணவ ஒற்றுமைக்குச் சான்றாக விளங்கும் இத்திருக்கோயிலில், நவகிரக நாயகர்கள் அழகிய திருக்கோலம் கொண்டு தங்கள் தங்கள் நாயகியர்களுடன் வீற்றிருப்பது மேலும் சிறப்புக்குரிய தாகும். மேலும், இந்த வகுளகிரி திருத்தலத்துக்குப் பெருமை சேர்க்கும் மற்றொரு விஷயம் என்ன வென்றால், இங்குதான் நமது காஞ்சி மகாசுவாமிகள் தனது சிறு பிராயத்தில் சில சாஸ்திரங்களைக் கற்றுக் கொண்டாராம். அவரது குருவாகத் திகழ்ந்தவர் மஹாமஹோபாத்யாய ஸ்ரீ மான் கிருஷ்ண சாஸ்திரிகள் அவதரித்தது இந்த வகுளகிரியில்தான்!
டி.எம்.ரத்தினவேல்