Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தெளிவு பெறுவோம்!!

?சீர்காழியில் உள்ள இறைவனுக்கு தோணியப்பர் என்ற பெயர் எப்படி வந்தது?

- சண்முகம், மும்பை.

தோணி என்பது சிறிய படகு ஆழமான நீர்நிலையைக் கடந்து செல்ல உதவும். இக்கரையில் இருந்து அக்கரையை அடைய உதவுவதுதான் படகு (தோணி) சாதாரண நீர் நிலையை இப்படி ஒரு தோணியால் கடந்துவிட முடியும். ஆனால், தொடர்ந்து வருகின்ற பிறவி என்னும் பெருங்கடலைக் கடப்பதற்கு ஒரு தோணி வேண்டுமல்லவா. துணை வேண்டுமல்லவா. தோணியாக விளங்கும் துணைதான் சீர்காழியில் உள்ள ஈசன். பிறவிப் பெருங்கடலை கடக்க வைக்கும் திருவடியை உடையவர் என்பதால் அவரை தோணியப்பர் என்று அழைக்கிறார்கள்.

?நாம் ஏதாவது ஒன்றை வேண்டித்தான் கோயிலுக்குச் செல்கின்றோம். ஆனால் நாம் முயற்சி செய்து பெறக் கூடிய, சாதாரண விஷயங்களுக்காக கடவுளை வேண்டுகின்ற வழிபாடு குறைவடைந்தது என்று சொல்கிறார்களே?

- பூமிகாதேவி, சென்னை.

ஒரு பக்குவ நிலையில் வழிபாடு என்பது இறைவனிடம் எதுவும் வேண்டாம் என்பது. காரணம், நமக்குத் தேவையான எல்லாவற்றையும் இறைவன் தந்து விடுவான் என்கின்ற நம்பிக்கை நிலை அது. வழிபாட்டின் பூரண நிலை வந்துவிட்டால் அவனிடம் எதையாவது வேண்டி பிரார்த்திக்க வேண்டியது இல்லை. ஆனால் அத்தனைப் பக்குவம் எல்லோரிடமும் ஏற்படுமா? அதனால் தங்களுக்கு வேண்டியதை அந்த தயாளனிடம் வேண்டுகிறார்கள். ஒரு குழந்தை, தனக்கு வேண்டிய பொருளை தாய் தந்தையரிடம் கேட்பதால், தாய் தந்தையர்களுக்கு குழந்தையின்மீது அன்பு குறையாது. அதைப்போல நாம் இறைவனிடம் நமக்கு வேண்டுவதைக் கேட்கும் வழிபாடு குறை உடையதாக ஆகாது.

?நம்முடைய அருளாளர்கள் இசையால் இறைவனைப் போற்றி இருப்பதற்குக் காரணம் என்ன?

- ஜெயசூரியா, திருச்சி.

இசை என்பதற்கு சங்கீதம் என்று ஒரு பொருள் இருக்கிறது. இசை என்பதற்குப் புகழ் என்று பொருள் இருக்கிறது. ‘‘ஈதல் இசைபட வாழ்தல்’’ என்ற குறளில் புகழோடு வாழ்தல் என்பதுதான் இசைபட வாழுதல் என்று வருகிறது. மூன்றாவதாக, இசை என்றால் ஏற்றுக் கொள்ளல், இசைந்து விடுதல் என்று ஒரு பொருளும் இருக்கிறது. இசையால் (சங்கீதத்தால்) இசைபாடி (புகழ்பாடி) இசைவிக்க (ஏற்றுக் கொள்ள வைக்க) பெருந்துணையாக இருப்பதால், அருளாளர்கள் இசை பாடினார்கள். இசையால் வசமாக இதயம் எது, இறைவனே இசை வடிவம் எனும் போது என்பதை அறிந்தவர்கள் அருளாளர்கள்.

?ஆயுள் நிர்ணயம் ஜோதிடத்தில் செய்யமுடியுமா?

- இராம. கண்ணன், திருநெல்வேலி.

முடியும் என்று தான் சொல்கிறார்கள் ஜோதிடத்தில் அதற்கான கணக்கு வழக்குகள் இருக்கின்றன துல்லியமான கணக்குகள் போட்டுச் சொல்வதற்கு ஆற்றல் உள்ள நிபுணர்களும் இருக்கிறார்கள். ஆனால் மழை, மகவு, ஆயுள் மூன்றும் ரகசியமானது. இதை எல்லாம் வெளிப் படுத்த இறைவன் ஏதோ ஒரு விதத்தில் அனுமதித்தால் மட்டுமே துல்லியமாகச் சொல்ல முடியும். மற்றதெல்லாம் தோராயமான கணக்குதான். பல பழைய ஜாதகங் களில் ஆயுர் தாய கணக்குப் போட்டு, ஜாதகம் எழுதும் போதே, ஆயுளையும் ஆண்டு மாதம் நாள் கணக்கில் நிர்ணயித்து எழுதி வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட ஜாதகங்களை பார்த்திருக்கிறேன். ஆனால் பெரும்பாலும் அதன்படி துல்லியமாக நடந்ததில்லை. இந்த விஷயத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று தான். பிறக்கின்ற அனைவரும் ஒரு நாள் இந்த நிலவுலகத்தில் வாழ்க்கையை முடித்து விட்டுத்தான் செல்ல வேண்டும். அப்படி வாழும் காலத்தில் நன்றாக வாழ்வதற்கு என்ன வழி என்றுதான் பார்க்க வேண்டும். ஆயுளை முன்கூட்டியே தெரிந்து கொள்வதில் தனி மனிதர்களுக்கு மட்டுமல்ல, சமூகத்துக்கும், சமூக அமைதிக்கும் மிகப்பெரிய கேடு இருக்கிறது.

?அபய அஸ்தம், வரத அஸ்தம் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

- சுவாமிநாதன், விழுப்புரம்.

பெருமாளின் வலது கை கீழே என்னுடைய திருவடியைப் பார் என்றபடி இருந்தால் அதற்கு அபய அஸ்தம் என்று பெயர். உன்னுடைய பயத்தை நான் நீக்குகின்றேன் நீ என் திருவடியைப் பிடித்துக்கொள் என்று பொருள். அதே பெருமாளின் வலது கை நேராக நிமிர்ந்து வரம் தருவதாக இருந்தால் அதற்கு வரத ஹஸ்தம் என்று பெயர். நாம் கேட்பதை தருவதற்கு பெருமாள் தயாராக இருக்கிறார் என்று குறிப்பு.

?பாரதத்தில் பெண்களை ஜனங்கள் வணங்குவது ஏன்?

- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

கோயிலுக்குப் போய்த் தெய்வத்தை வணங்குகிறோம். கர்பக் கிரகத்தில் அதாவது, கருவறையில் இருப்பது ஆண் தெய்வமோ; பெண் தெய்வமோ? எல்லோரும் வணங்குகிறோம். அது போல, தன் கர்ப்பத்தில் அதாவது கருவில், ஆணோ - பெண்ணோ, ஏதாவது ஒன்றைத் தாங்கக் கூடியவள் பெண். அனைவரும் வணங்கும் தெய்வம் இருக்குமிடம் - கருவறை. அப்படிப்பட்ட உயர்ந்ததான அந்தக் கருவறை இருப்பது பெண்களிடம்தான்; ஆண்களிடம் இல்லை. இதன் காரணமாகவே பாரத தேசத்தில் பெண்களைத் தெய்வமாக வணங்குகிறோம்.

?நாமாவளி, பாராயணம் இவற்றின் பொருள் மற்றும் வேறுபாடு குறித்து விளக்கம் வேண்டுகிறேன்.

- ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

ஆவளி என்பதற்கு வரிசை என்று பொருள். தெய்வத் திருநாமங்களை ஒருவரோ அல்லது பலரோ, வரிசையுடன் பக்கவாத்தியங்களுடன் இசையுடன் சொல்வது - நாமாவளி. பாராயணம் ஏதாவது ஒரு நூலை முழுமையாகவோ அல்லது பகுதி பகுதியாகவோ, ஏதேனும் ஒரு வேண்டுகோள் நிறைவேறுவதற்காக - பிரார்த்தனை பலிப்பதற்காகப் படிப்பது ‘பாராயணம்’.