பிரம்மன் பிரபஞ்சத்தை உருவாக்க சித்தம் கொண்டான். அச்சமயத்தில் வேதத்தை கவர்ந்து சென்ற மது, கைடபர் எனும் அசுரர்களை மாதவன் வராக அவதாரமெடுத்து மாய்த்து, மறைகளை மீட்டார். மாயவனால் மாண்ட மது கைடபரின் உடல்கள் மெல்ல மிதந்து மேலே வந்தன. தன் படைப்பை ஆரம்பிக்கும் வேளையில் நீரில் மிதந்து வந்த உடல்களை கண்டான். நீரும், அந்த அசுரர்களின் உடல்களையும் சேர்த்து ஒன்றாக இறுகி மண்ணுலகம் தோன்றுமாறு செய்தால் என்ன என்று எண்ணினான். இந்த யோசனையை மகேசனிடம் தெரிவித்தான். ‘அமுதமான நீரும் அரக்கர்களின் தசையையும் இணைத்தா உலகம் உருவாக வேண்டும்? ஆரம்பமே அசுரத்தனத்திலிருந்தா?’ அரனுக்கு இதில் உடன்பாடில்லை. உடனே அவரே ஒரு மாமலையாகி நின்றார்.
கர்வம் பிரம்மனின் கண்ணை மறைத்தது. இறைவனாகிய மாமலையைக் காணாது தன் விருப்பப்படி மலைகளை உருவாக்கிக் குவித்தான். ஆனால், அவ்வாறு தான் படைத்த மலைகள் இருக்க இடமில்லாது மிதந்து கொண்டிருப்பதைக் கண்டு கலங்கினான். ஞானக்கண் திறந்தது. பெரிதும் வருந்தினான். எங்கு தவறு நேர்ந்தது என்று புத்தியை குவித்துப் பார்த்தான். தனக்குள் செருக்கு செழித்து வளர்ந்திருப்பதால் சிவத்தை உணராது இருந்ததை அறிந்தான். மனம் அடங்கி, பரமனின் பாதம் பணிந்து நின்றான். கர்வம் தொலைத்து நின்ற அவனிடம் கனிவு கொண்டார் கயிலைநாதன். சாஸ்திரப்படியான அவனுடைய படைப்புக்கு வழி விட்டார். அவன் படைத்த மலைகளுக்கு மண்ணில் இடம் கொடுத்தார். ‘‘நான் வேறு, இம்மலை வேறு அல்ல. நானே படைப்பின் தொடக்கமாய் மலையாகி நின்றோம். முதலில் எனது அம்சமாய் தோன்றிய இந்த மலை இன்று முதல் ‘பழமலை’ என்று அழைக்கப்படும். இது மண்ணுலகத்திற்கு அச்சாணியாக அழுந்தி நின்று மேலே சிவலிங்கமாக முகிழ்ந்து நிற்கும். இதனை வழிபடுவோர் அனைவரும் விரும்பிய பயனை அடைவார்கள். பிறவிப் பிணி தீர்ந்து எமை வந்தடைவார்கள்’’ என்று அருளுரைத்தார்.
ஒரு மகத்தான புனிதத் தலம் உருவாகி விட்டது. இந்த பூமியில் இனி உருவாகப்போகும் ஜீவன்களை இதுதான் கரை சேர்க்கப் போகிறது. இந்த ஜீவன்களின் பாவங்களை கரைக்க ஒரு நதி வேண்டாமா? பிரபஞ்சம் விருத்தியடைய உதவிய அந்த விருத்தகிரீஸ்வரர் யோசித்தார்.
பிரம்மா, விஷ்ணு உள்ளிட்ட தேவர்கள், ரிஷிகள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பழமலை நாதனை மனதில் நிறுத்தி கடுந்தவம் செய்தார்கள். தவத்தின் விளைவாய், அந்த தவபூமியில் பிரம்மானந்த வெள்ளம் பெருக்கெடுத்தது. அங்கு தோன்றிய ஈசன் அந்த வெள்ளத்தை தம் திருக்கரத்தால் ஏந்தி நதியாய் ஓட விட்டார். அது ‘மணிமுத்தாறு நதி’யாகியது. கங்கையின் புனிதத்துடன் கொப்பளித்து சுழித்துக் கொண்டு ஓடியது. ஒளியாய் உயர்ந்து நின்ற சிவபெருமான், ‘‘இந்த நதியின் ஒரு திவலை பட்ட மாத்திரத்திலேயே புழு, பூச்சிகள், விலங்குகள், புல், பூண்டுகள் எல்லாம் மறுபிறவி என்ற பெருந்துன்பத்திலிருந்து விடுபடும். இந்த நதியில் நீராடும் மனிதர்கள் தம் பாவங்கள் நீங்கப்பெற்று, வாழும் நாளில் அனைத்து செல்வங்களையும் பெற்று இன்புற வாழ்வார்கள். மரணத்திற்குப் பிறகு பிறவி நோய் அணுகாது சிவலோகம் வந்தடைவார்கள். இது தவ சீலர்கள் வாழ தகுந்த பிரதேசமாகவும், தீர்த்தமாகவும் விளங்கும்’’ என்று அருளினார்.
இந்த புண்ணிய நதியில் நீராடி இத்தல ஈசனை வணங்கிய சுக்ராச்சாரியார், அசுர குருவானார். யாக்ஞவல்கியர், சாகாவரமருளும் மிருதசஞ்சீவனம் என்னும் மந்திரத்தை பெற்றார். தேவர்கள் திருநடன தரிசனம் பெற்றார்கள். கலிங்கன் மணிமுத்தாறு நதியில் நீராடி பேயுரு நீங்கப் பெற்றான். அகத்தியர் மாமிசம் உண்ட பாவம் நீங்கப் பெற்றார். சுவேத மன்னர் சிவபதமும், நாத சர்மா, அநவர்த்தினி ஆகியோர் ஈசனருள் பெற்றனர். குமாரத்தேவர் கயிலை நாதனின் அன்புக்கு பாத்திரமானார். இப்படி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இத்தனை மகத்துவம் மிக்க நதியில் மாசி மகம் அன்று நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய, அவர்களை அரனும், அன்னையும் அரவணைத்துக் கொள்கிறார்கள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. அதனால்தான் ஆண்டு தோறும் மாசி மகம் அன்று மணிமுத்தாறு நதிக்கரையில் லட்சக் கணக்கான மக்கள் கூடி தம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களை கரை சேர்க்கிறார்கள்.
வேண்டியவர்க்கு வேண்டியதை தரும் கற்பக மரத்திற்கும் ஓர் ஆசை ஏற்பட்டது. அது, பழமலைநாதனை தரிசித்து மகிழ வேண்டுமென்பதே.
பழமலை நாதனை பூஜிக்க விபசித்து முனிவர் நடுநாட்டிற்கு வந்தார். அழகுப் பெண்ணின் நளினத்தோடு நடைபயின்ற மணிமுத்தாறு அவர் மனதில் பேரொளியைத் ததும்பச் செய்தது. நதியில் நீராடி ஈசனை தரிசித்த முனிவருக்கு அரனுக்கு ஓர் ஆலயம் அமைத்தால் என்ன என்ற எண்ணம் எழுந்தது. இதற்காகவே காத்திருந்த கற்பக மரம், இறைவன் அனுமதியோடு அத்தலத்திற்கு வந்து வன்னி மரமாய் மாறி ஈசனிருந்த இடமருகே நிலை கொண்டது. ‘’விபசித்து முனிவரே உம் விருப்பம் ஈடேறும். ஆலயம் அமைக்கும் பணிக்கு வன்னி மரத்தை பயன்படுத்துக’’ என்றார் அருள்வாக்கு நல்கினார் ஈசன்.
இடப வாகனன் இட்ட கட்டளையை முழுதும் உள்வாங்கிக் கொண்ட முனிவர் பணியைத் தொடங்கினார். வேலையாட்கள் வியர்வை சிந்தி உழைத்தார்கள். ஊதியமாக வன்னி மர இலையை உருவி கொடுத்தார். அவர்கள் வீட்டிற்குப் போய் சேர்வதற்குள் உழைப்புக்குத் தகுந்த ஊதியமாய், தங்கமாய் மாறிக்கிடந்தது! வேகமாய் கோயில் உருவாயிற்று. விபசித்து, தன் எண்ணம் ஈடேறிய நிறைவில் ஈசனடி சேர்ந்தார். வன்னி மரமாய் நின்ற கற்பக மரம், அரனின் அருளில், அவர் பணியில் கரைந்த மகிழ்வோடு, தன் அம்சத்தை இங்கேயே இருத்திவிட்டு தேவலோகம் புகுந்தது. இந்த வன்னி மரத்திற்கு வயது 3000 என்கிறது புராணம்.
அது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு. சுந்தரமூர்த்தி நாயனாரும், பரவைநாச்சியாரும் திருமுது குன்றமெனும் விருத்தாசலம் வந்தார்கள். மணிமுத்தாறு நதியில் நீராடி பரமனை தொழுதார்கள். ‘‘நஞ்சியிடையின்று நாளை...’’ என பதிகம் பாடிய சுந்தரமூர்த்தி நாயனார், தான் மேற்கொள்ளும் சிவப்பணிக்கு பொன் வேண்டுமென்ற குறிப்போடு ‘‘பெய்மை முற்றப் பொடி பூசியோர் நம்பி’’ என்று பாடி தொழுதார். சுந்தரர் கோரிக்கையை பழமலைநாதர் உடனே ஏற்றார். பன்னீராயிரம் பொன் கொடுத்தார். அவ்வளவு பெரிய தொகையை எப்படி பாதுகாப்பாக எடுத்துச் செல்வது? வழியில் கள்வர் நடமாட்டம் இருக்கிறதே. இந்தத் தொகை, தான் பணி மேற்கொள்ளும் ஆரூரில் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்று மீண்டும் ஐயனிடம் விண்ணப்பித்தார். அதற்கும் இசைந்தார் ஈசன். ‘‘மணிமுத்தாறில் செலுத்தி, திருவாரூர் கமலாலயத்தில் பெற்றுக்கொள்’’ என்றார். அதன்படி தங்கத்தின் தரத்தைக் குறித்துக் கொண்டு மணிமுத்தாற்றில் போட்ட சுந்தரமூர்த்தி நாயனார், திருவாரூர் சென்று கமலாலய குளத்தில் இறங்கித் தேடினால்..... பொன் காணவில்லை. ‘‘ஆற்றில் போட்டு விட்டு குளத்தில் தேடுகிறீர்களே’’ என்று கேலி செய்தார் பரவையார். மனம் வருந்திய சுந்தரர் பழமலை ஈசனிடம் ‘‘பொன் செய்த மேனியிநீர்...’’ என்று பதிகம் பாடி முறையிட, ஆற்றில் இட்ட பொன் அவர் கையில் வந்தடைந்தது. தங்கத்தின் தரத்தை சோதித்தார். அது குறைந்திருந்தது. ‘தரமான தங்கம் தா’ என்று மீண்டும் பாட, அப்படியே தந்தருளினார் ஈசன். (இப்போதைய வங்கி ஏடிஎம் முறை அப்போதே இருந்திருக்கிறது!) & இப்படி பல சிறப்புகளை உடைய இத்திருத்தலம் எங்கிருக்கிறது?
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில். விருத்தாம்பிகை - பாலாம்பிகை சமேதராய் அருள் பரப்பி வருகிறார் விருத்தகிரீஸ்வரர். விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் இருக்கிறது இத்திருக்கோயில்.
நடுநாட்டு சிவாலயங்களில் ஒன்பதாவது திருத்தலம் இது. விருத்தாசலம், விருத்தகாசி, பழமலை, திருமுதுகுன்றம் என இதற்கு பல பெயர்கள் உள்ளன. இத்தலம் புராண பெருமை யும் வரலாற்றுச் செறிவும் நிறைந்து காணப்படுகிறது. நால்வரால் பாடல் பெற்ற இத்தல ஈசனை வள்ளலார், குருநமச்சிவாயர், குமாரதேவர் ஆகியோரும் பாடிப் பணிந்துள்ளார்கள்.
இத்தலம் ஐந்தின் சிறப்புகளை கொண்டது. இத்தலத்திலுள்ள திருச்சுற்றுகள் ஐந்து. கோபுரங்கள் ஐந்து. கொடிமரங்கள், நந்திகள், தீர்த்தங்கள், மூர்த்திகள், லிங்கங்கள், தேர்கள், திருக் கோயில் உள்மண்டபங்கள், இத்தல விநாயகர்கள் என எல்லாமே ஐந்து மயம்தான்.
பரந்து விரிந்து கிடக்கும் இத்தலத்தை முழுதாக தரிசிக்க ஒருநாள் போதாது. நுழைவாயி லைக் கடந்து உள்ளே சென்றவுடன் நாம் தரிசிக்கும் ஆழத்து பிள்ளையார் கிழக்கு முகமாக 18 அடி ஆழத்தில் இருக்கிறார். அறுபடை முருகனுக்கு உள்ளது போன்று விநாயகருக்கான ஆறு வீடுகளில் இதுவும் ஒன்று.
கைலாச பிராகாரத்தில் 28 ஆகமக் கோயில் இருக்கிறது. 28 ஆகமங்களும் சிவலிங்கங்களாக அமைக்கப்பட்டு இத்தலத்தில் பூஜிக்கப்படுகின்றன. வடக்கு கைலாச பிராகாரத்தில் அன்னை பெரியநாயகி அருள் பொங்க நிற்கிறாள். அன்னையை விருத்தாம்பிகை என்றும் அன்போடு அழைப்பார்கள். அன்னையின் தரிசனம் மன இருளை நீக்கி உள்ளத் தெளிவு தரும். அன்னையின் சந்நதியின் வெளிப்புறம் சிவகதி அடைந்த நாதசர்மா - அநவர்த்தினி தம்பதியின்கோயிலை தரிசிக்கிறோம்.
வன்னியடி பிராகாரத்தில் மடப்பள்ளிக்கு மேல்புறம் தலவிருட்சமான வன்னி மரம் இருக்கிறது. இங்கே பிள்ளையார், விபசித்து முனிவர், உரோமேச முனிவர், விதர்க்கண செட்டி, குபேரனின் தங்கை ஆகியோரின் தரிசனம் பெறுகிறோம்.
கொடிமர மண்டபத்தில் உற்சவமூர்த்தியான பெரியநாயகரின் அழகு தரிசனம். அடுத்து ஆடலரசனின் ஆனந்த நடனம் கண்டு அறுபத்து மூவர் பிராகாரத்தை அடைகிறோம். இங்கே அறுபத்து மூவர், மாற்றுரைத்த பிள்ளையார், யோக தட்சிணாமூர்த்தி, சப்தமாதாக்கள் ஆகியோரின் அருட்பார்வையில் நனைகிறோம். இளமை நாயகியான பாலாம்பிகையின் தரிசனத்தில் பரவசமடைகிறோம். இத்தலத்தில் உள்ள காலபைரவர் காசியில் உள்ள பைரவரை போன்றே அமைந்துள்ளார். அடுத்து நாம் நகர்வது கருவறையை நோக்கி. திண்டியும், முண்டியும் காவல் இருக்க, பழமலையாய் தோன்றிய ஈசன், நம் பாவங்களை தம் அருள் பார்வையால் துடைத்து அருள்கிறார். ஐயனை காணும் போது அகம் தெளிகிறது. உள்ளம் ஆனந்தத்தால் நிறைகிறது. தம்மை வணங்குபவர்கள் இந்த பூவுலகிலும், மேலுலகிலும் எல்லா வளத்துடனும் நல்ல வண்ணம் வாழ அருள்புரிகிறான் பழமலைநாதன்.
ஐந்தின் அதிசயமாக விளங்கும் இத்திருக்கோயில், நம் வாழ்வின் நற்பயன்களை குறைந்தபட்சம் ஐந்து மடங்காவது உயர்த்தும் என்ற நம்பிக்கை மனநிறைவை ஏற்படுத்துகிறது.

