Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பட்டீஸ்வரர் திருக்கோயில்

திருத்தலங்கள் அவற்றின் அற்புதங்களுக்குள் பல அதிசயங்களும் சூட்சுமங்களும் ஒளிந்துள்ளன. புராணங்களும் கதைகளும் நமக்கு ஒரு திருத்தலத்தில் இருக்கின்ற ஆற்றல்களையும் அதிசயங்களையும் சொல்கின்றன. அவற்றை அறிந்து அதற்கு ஏற்றாற் போல தெய்வங்களை வழிபட்டால் நிச்சயம் வெற்றி உண்டு என்பதை உணரலாம்.

ஒரு சமயம் பிரம்ம தேவர் படைப்புத் தொழிலை செய்து சோர்வு ஏற்பட்டு கண்ணயர்ந்துவிட்டார். இதையறிந்த திருமால் காமதேனுவிடம் ‘‘நீ சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய அருளினால் படைப்புத் தொழிலைச் செய்வாயாக'' எனக் கட்டளையிட்டார். அதன்படியே காமதேனுவும் இமயமலையில் தவம்புரிந்தார். காமதேனு அருள் செய்யவில்லை. கைலாயம் பற்றி நாரத முனிவர் வழி சொல்ல அவ்விடத்தை காமதேனு கன்றுடன் அடைந்தது. ஆதி லிங்க மூர்த்தியாக காஞ்சி நதிக்கரையில் உள்ள சிவபெருமானுக்கு தவமிருந்து காமதேனு தினமும் பாலபிஷேகம் செய்தது. இவ்வாறு நிகழ்ந்துகொண்டிருக்க காமதேனு கன்று விளையாடும் பொழுது அதன் குழம்படி ஆதி லிங்க மூர்த்தியின் மேல் விழுந்துவிட்டது. பதறிப்போனது காமதேனு. காமதேனுவின் வருத்தத்தை போக்க சிவபெருமான் முன் தோன்றி பார்வதி தேவியின் வலைத்தழும்பை என் மார்பகத்தில் பெற்றது போல உனது கன்றின் குழம்படி தழும்பையும் பெற்று மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என ஆறுதல் கூறினார்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், அப்பர், காசியப்பர் ஆகியோர் பாடல் பெற்ற திருத்தலமாக உள்ளது. ேசாழமன்னர்களால் இக்கோயிலை நிறுவியதாக புராணங்கள் சொல்கின்றன. இந்த திருத்தலத்திற்கு சூரியன், புதன், வியாழன், சுக்ரன் ஆகிய கிரகங்கள் நாமகரணம் செய்துள்ளன. பங்குனி உத்திரம் இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தேவலோக இந்திரன் பட்டீஸ்வரரை வழிபட்டு தனது பிரம்மஹத்தி தோஷத்தை போக்கிக் கொண்டதாக ஸ்தல புராணங்கள் சொல்கின்றன.

*மூல நட்சத்திரத்தன்று மஞ்சள் அரிசியோடு பாலும் சேர்த்து சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நெய்வேத்தியம் செய்தால் வீட்டில் சுபிட்சம் உண்டாகும். சுபகாரியங்கள் நடக்கும். ஐஸ்வர்யங்கள் கைகூடும்.

*கட்டி முடிக்கப்படாத வீடு வெகு காலம் கட்டமுடியாதவர்களும் அந்த நிலத்தின் மண்ணை கைப்பிடி அளவு மஞ்சள் துணியில் வைத்து சுவாமியின் முன் வைத்து அனுஷம் நட்சத்திரத்தன்று சுவாமியைத் தரிசனம் செய்து வீடு கட்டி முடிக்க வேண்டும் என்ற சங்கல்பம் செய்து அந்த மண்ணை மீண்டும் அந்த நிலத்தில் கொட்டிவிட்டால் தடைகள் விலகி மீண்டும் கட்டடம் உருவாகும்.

*சித்திரைப் பௌர்ணமி அன்று சுவாமிக்கு பால் அபிஷேகம் நெய் அபிஷேகம் செய்து இரவு கோயில் அருகில் தங்கியிருந்து வீடு திரும்பினால் எப்பேர்பட்ட நோயும் குணமாகும்.

*தொழில் முன்னேற்றம், தம்பதிகள் ஒற்றுமை, ஆட்டிசம் பிரச்னை தீர பௌர்ணமி அன்று தங்கி வழிபட்டு சென்றால் பிரச்னையிலிருந்து மீள்வார்கள்.

*பூசம் நட்சத்திரத்தன்று அறுகம்புல் மாலை சுவாமிக்கு கொடுத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றிகள் உண்டாகும். வழக்கு முடிவுக்கு வரும்.

*தனுசு லக்னகாரர்கள் சாமி தரிசனம் செய்து ஊனமுற்ற கால்நடைகளுக்கு உணவு வழங்கினால் மிக நல்ல மாற்றத்தையும் ஏற்றத்தையும் பெறுவார்கள்.

இத்திருக்கோயிலின் புராதனப் பெயர் பல உள்ளன.

இக்கோயிலுக்கு எப்படி செல்வது?

கோயம்புத்தூரிலிருந்து (6கி.மீ.) சிறுவாணி செல்லும் வழியில் பேரூர் உள்ளது. டவுன் பஸ் வசதி இருக்கிறது.