“இறைநம்பிக்கை கொண்டவர்களே...! பொறுமையின் மூலமும் தொழுகையின் மூலமும் இறைவனிடம் உதவி தேடுங்கள். நிச்சயமாக, இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.”
(குர்ஆன் 2:153)
“சிறிதளவு அச்சத்தாலும் பசியாலும் உடைமைகள், உயிர்கள், விளைபொருள்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக நாம் உங்களைச் சோதிப்போம். (இந்த நிலைகளில்) பொறுமையை மேற்கொள்கிறவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.”
(குர்ஆன் 2:155)
“இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். ஒருவருக்கொருவர் பிணங்கிக்கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்தால் உங்களிடையே பலவீனம் தோன்றிவிடும். மேலும் உங்கள் மதிப்பும் வலிமையும் அழிந்துபோய்விடும். ஆகவே பொறுமையை மேற்கொள்ளுங்கள். திண்ணமாக இறைவன் பொறுமையாளருடன் இருக்கிறான்.” (குர்ஆன் 8:46)
‘ஸப்ர்’ எனும் அரபுச் சொல்லுக்குப் ‘பொறுமை’ என்று தமிழில் குறிப்பிடுகிறோம். இந்தச் சொல்லின் விரிவான பொருளைப் பேரறிஞர் மௌலானா மௌதூதி(ரஹ்) அவர்கள்
‘தப்ஹீமுல் குர்ஆன்’ விரிவுரை நூலில் தந்துள்ளார். அது வருமாறு;
“உங்கள் உணர்ச்சிகளையும் ஆசை களையும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருங்கள்.
“அவசரம், பயம், பதற்றம், ஆசை, பொருத்தமற்ற ஆவேசம் ஆகியவற்றைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
“அமைதியான நெஞ்சோடும் தெளிவாகத் தீர்மானிக்கும் ஆற்றலுடனும் பணிபுரியுங்கள்.
“ஆபத்துகளும் சிரமங்களும் எதிர்ப்பட்டால், உங்கள் பாதங்கள் சறுக்கிவிட வேண்டாம்.
“கொதிப்பூட்டும் சந்தர்ப்பங்களில் உங்களுக்கு ஏற்படும் கோபாவேசம் பொருத்தமற்ற செயல் எதனையும் உங்களைச் செய்ய வைத்துவிட வேண்டாம்.
“துன்பங்கள் தாக்கினாலும் சூழ்நிலைகள் சீர்கெட்டுக்கொண்டிருப்பதாகத் தென்பட்டாலும், பதற்றத்தில் உங்கள் உணர்வுகள் குழம்பிவிட வேண்டாம்.
“குறிக்கோளை அடைந்திடும் ஆர்வத்தில் நிதானமிழந்து அல்லது மேலோட்டமாகப் பார்க்கும்போது பயனுள்ளதாகத் தெரியும் அரைகுறை திட்டத்தினால் உங்கள் நாட்டங்கள் அவசர கோலத்தினால் தோல்வியுற்றுவிட வேண்டாம்.
“சில வேளைகளில் உலக லாபங்களும் மன இச்சையின் தூண்டுதல்களும் உங்களைத் தம் பக்கம் ஈர்க்கின்றன என்றால் அவற்றுக்கு எதிரில் உங்கள் உள்ளம் தன்னையும் அறியாமல் அவற்றின் பால் இழுபட்டுச் செல்லும் அளவிற்கு பலவீனமாக இருக்கக் கூடாது.
“இந்தக் கருத்துகள் அனைத்தும் ஸப்ரு எனும் ஒரே சொல்லில் புதைந்திருக்கின்றன.
“இந்த அம்சங்கள் அனைத்திலும் யார் பொறுமையாளர்களாக நிலைகுலையாமல் திகழ்கின்றார்களோ அவர்களுக்கே என் துணையும் ஆதரவும் கிட்டும் என்று இறைவன் கூறுகின்றான்.”
(ஆதாரம் - தஃப்ஹீமுல் குர்ஆன், `அன்ஃபால்’ அத்தியாயத்தின் அடிக்குறிப்பு எண்-16)
சோதனைகள், துன்பங்கள், துயரங்கள், தடைகள், இழப்புகள் என எந்தச் சூழ்நிலையிலும் இறைவனின் பக்கமே திரும்புவோம். இறைத்தூதருக்கே கீழ்ப்படிவோம். பொறுமையை மேற்கொள்வோம். இறை உதவியைப் பெறுவோம்.
- சிராஜுல் ஹஸன்.
இந்த வார சிந்தனை
“எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்திருப்பார்களோ அவர்களை நாம் திண்ணமாக, சான்றோர்களுடன் சேர்த்துவிடுவோம்.” (குர்ஆன் 29:9)