Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பதிபக்தி, குருபக்தி இரண்டில் அதிக பலன் தருவது எது?

பதிபக்தி, குருபக்தி இரண்டில் அதிக பலன் தருவது எது?

- விநாயகராமன், திசையன்விளை.

பதிபக்தி என்பது பெண்கள் கணவரிடம் கொண்டிருப்பது. குரு பக்தி என்பது மனிதர்கள் தங்களை வழிகாட்டும் குருமார்களிடம் செலுத்துவது. குரு மூலமாகத்தான் வாழ்க்கைப் பயணத்தை கடக்க இயலும். எல்லோருடைய வாழ்விலும் குரு என்பவர் நிச்சயமாக ஒருவர் இருப்பார். யாரேனும் ஒருவரைப் பின்பற்றித்தான் எல்லோருமே தங்களுடைய வாழ்வினில் குறுக்கே வரும் இடர்களைக் கடக்கிறார்கள். பெண்களைப் பொறுத்த வரை அவர்களது கணவன்மார்கள்தான் அவர்களுக்கு உரிய குரு. திருமணம் ஆகும் வரை தந்தை குருவாக இருந்து வழிகாட்டுகிறார். திருமணத்திற்குப் பிறகு கணவன்மார்கள் குருவாக இருந்து அவர்களை உடன் அழைத்துச் செல்கிறார்கள். திருமணமான பெண்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு கணவனே குரு என்பதால் பதிபக்தி என்பதும் குருபக்தி என்பதும் ஒன்றுதான். ஆக பதிபக்தி என்பதும் குருபக்திக்குள் உள்ளடங்கிவிடுவதால் குருபக்தி என்பதே அதிக பலனைத் தரக்கூடியது என்று தீர்மானிக்க இயலும்.

சாதத்தை எடுக்க காகம் வராவிட்டால் கிணற்றில் அதனைப் போடலாமா?

- வாணிரமேஷ், சிதம்பரம்.

கிணற்றில் மீன்கள் இருந்தால் போடலாம். ஜீவராசிகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். மீன்கள் இல்லாத கிணற்றில் போடுவதை விட அந்த சாதத்தை தெரு நாய்களுக்கு வைக்கலாம். சிராத்தம் செய்த பின் காகத்திற்கு வைக்கும் பிண்டத்திற்கு இந்த விதி பொருந்தாது. அவ்வாறு சிராத்தம் செய்த பின் வைத்த பிண்டத்தை காகம் எடுக்க வராவிட்டால் அதனை ஆறு, குளம், ஏரி அல்லது கடல் முதலான மீன்கள் வாழுகின்ற தீர்த்தங்களில் கரைப்பதே நல்லது.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மின்விளக்கு திடீரென அணைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? மீண்டும் அதை சாப்பிடலாமா அல்லது எழுந்துவிட வேண்டுமா?

- அரிமளம் இரா.தளவாய் நாராயணசாமி.

எழுந்துவிட வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். சாஸ்திரம் மின்விளக்கு என்று தனியாக பிரித்துச் சொல்லவில்லை. தர்மசாஸ்திரம் எழுதப்பட்ட காலத்தில் மின்விளக்கு என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தவிதி பகல் நேரத்திற்கு பொருந்தாது. இரவில் சாப்பிடும்போது திடீரென விளக்கு அணைந்து அங்கே கும்மிருட்டு என்பது சூழ்ந்துவிடும் பட்சத்தில் நிச்சயமாக அந்த உணவை உட்கொள்ளக் கூடாது. அதே நேரத்தில் அந்த இடத்தில் ஒரு சிறிய விளக்கொளி வெளிச்சம் இருந்தால் அந்த உணவினை உட்கொள்ளலாம்.

அதனால் தான் இரவு நேரத்தில் உணவு உட்கொள்ளும்போது மின்சாரத்தை நம்பாமல் உணவு அருந்தும் பகுதியில் அருகினில் ஒரு எண்ணெய் விளக்கு ஏற்றி வைத்துக்கொள்ள பெரியவர்கள் அறிவுறுத்துவார்கள். தற்காலத்தில், இன்வெர்ட்டர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அடுத்த நொடியே பளீரென்று எரியும் பேட்டரி லைட்டுகள் போன்ற வசதிகள் உள்ளதால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. சாப்பிட்டுக்கொண்டிருக்கும் தருணத்தில் திடீரென்று விளக்கு அணைந்து அந்த இடத்தில் கும்மிருட்டு என்பது சூழுமேயானால் அந்த உணவை சாப்பிடாமல் எழுந்துவிட வேண்டும் என்பதே உங்கள் வினாவிற்கான தெளிவான விடை ஆகும்.

வேதங்களின் அங்கங்கள் ஆக சிட்சை, கல்பம், வியாகரணம், ஜோதிஷம், சந்தஸ், நிருக்தம் என ஆறினைக் கூறுகிறார்கள். அதன் பொருள் என்ன?

- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

சீக்ஷா அல்லது சிட்சை என்பது வேதத்தின் உச்சரிப்பு முறைகளை விளக்குவதாகும். உச்சரிக்கும் முறையிலும் ஸ்வரத்திலும் உண்டாகும் மாற்றம், தவறான பொருளைத் தந்துவிடும். வேதத்தை உச்சரிக்கும் முறையைக் கற்றுத் தருவது சிட்சை ஆகும். வியாகரணம் என்ற வார்த்தைக்கு ‘‘இலக்கணம்” என்று பொருள். சந்தஸ் என்பது செய்யுள் இலக்கணத்தையும் நிருக்தம் என்பது சொல் இலக்கணத்தையும் குறிக்கும். ‘‘ஜோதிஷம்” என்ற வார்த்தைக்கு ஒளி அறிவியல் என்று பொருள். இது வானசாஸ்திரம் பற்றி உரைப்பதாகும். ‘‘கல்பம்” என்பது செயல்முறையைப் பற்றச் சொல்வதாகும். ப்ராக்டிகல் பாடம் என்று நீங்கள் புரிந்துகொள்ளலாம். அதாவது, கிரியைகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்று வேதத்தில் சொல்லபட்ட பாடங்களை நடைமுறைப் படுத்த உதவுவது கல்பம் ஆகும். இந்த ஆறும் வேதத்தின் மிக முக்கியமான உறுப்புகள் ஆகும்.

துறவிகள் அனைவரும் காவி உடையை அணியும்பொழுது வள்ளலார் மட்டும் வெள்ளை ஆடையை தேர்வு செய்தது ஏன்?

- லட்சுமி நாராயணன், வடலூர்.

காவி உடை என்பது சந்யாசிகளுக்கான அடையாளம். சமரச சன்மார்க்க சபையை நிறுவி சமூகத்தில் மறுமலர்ச்சியை உண்டாக்கியவர் வள்ளலார். சமரசத்திற்கான அடையாளமாக அவர் வெள்ளை ஆடையை தேர்வு செய்தார். அருட்பெருஞ்சோதி, அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி என்ற கருத்தினை மையப்படுத்தி வாழ்ந்ததோடு அதனை மெய்ப்பித்தும் காட்டியவர். காவி உடை அணிந்தவர் மட்டும்தான் இறைவனைக் காண இயலும் என்பதில்லை. மனதில் எவ்வித அப்பழுக்கும் இன்றி வெள்ளை உள்ளத்தோடு உயிர்களிடத்தில் அன்பு செலுத்துபவர் எவரோ அவரிடம் இறைவனின் அருட்பார்வை என்பது நிறைந்திருக்கும் என்பதை உணர்த்தும் விதமாக வெள்ளை ஆடையை அணிந்தவர் வள்ளலார் ஸ்வாமிகள். தைப்பூசத் திருநாளில் அருட்பிரகாச வள்ளலார் ஜோதி ஸ்வரூபமாக காட்சி அளிக்கிறார்.

ஜோதிட அறிவியல் ரீதியாக, இந்த நாளுக்கு ஒரு தனி மகத்துவம் உண்டு. ஜோதிட அறிவியலைப் பொறுத்த வரை உணவு, விவசாயம், நீர்வளம் ஆகியவற்றை வழங்கும் கோள் சந்திரன். கடும் வெயிலால் அதிக வெப்பமோ, அல்லது அதிக மழையால் வெள்ளமோ இன்றி விவசாயத்திற்கு ஏற்ற இதமான தட்பவெப்பநிலையை தை மாதத்தில் காண்கிறோம். முழு நிலவாக ஒளிவீசும் பௌர்ணமி நாள் தை மாதத்தில் வரும்போது மட்டுமே தனது சொந்த வீடான கடகத்தில் சந்திரன் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பார். அதுவே தைப்பூசத் திருநாள் ஆகவும் கொண்டாடப்படுகிறது. இந்த தைப்பூசத் திருநாளில் வறியவர்களுக்கு அன்னதானம் செய்வதால் அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாக வாழ்வினில் வளம் பெருகக் காணலாம்.

சூரிய நமஸ்காரம் செய்வது போல சந்திர நமஸ்காரம் செய்வது இல்லையே ஏன்? சந்திர நமஸ்காரம் செய்யலாமா?

- அயன்புரம் த.சத்தியநாராயணன்.

சந்திர தரிசனம் என்ற வார்த்தையை பஞ்சாங்கத்திலேயே காண முடியுமே... ஒவ்வொரு மாதமும் அமாவாசை கழிந்த இரண்டாவது நாளில் சந்திர தரிசனம் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டிருப்பார்கள். அப்படியென்றால் சந்திரனை தரிசிக்க வேண்டும் என்றுதானே அர்த்தம். பிரதி மாதந்தோறும் வருகின்ற முழுநிலவு நாளை வைத்துத்தானே நமது தமிழ் மாதத்தின் பெயர்களும் அமைந்திருக்கின்றன. அவ்வாறு இருக்க சந்திரனை தரிசித்து நமஸ்கரிக்க வேண்டியது அவசியம்தானே.. தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது போல சந்திரனை நாள்தோறும் நமஸ்கரிக்க இயலாவிட்டாலும், பௌர்ணமி நாளில் நமஸ்கரிப்பது நல்லது. அதே போல, சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை தரிசித்துவிட்டு உடன் சந்திர தரிசனம் செய்வதால் மனதில் உள்ள சங்கடங்கள் அனைத்தும் விலகி நிம்மதி என்பது நிலைத்திருக்கும். மனோகாரகன் ஆகிய சந்திரனை கண்டிப்பாக நமஸ்கரிக்க வேண்டும்.