‘பஞ்சாமிர்தம்’ என்று சொன்னாலேயே நம் நினைவுக்கு வருவது ‘பழனியின் பஞ்சாமிர்தம்’தான். ‘பஞ்சாமிர்தம்’ என்ற சொல்லுக்கு ‘ஐய முதம்’ என்று பெயர். அமுதம் என்பது நீண்ட ஆயுளை வழங்கும் தன்மை வாய்ந்தது. அத்தகு ஐந்து வகை அமுதங்களைக் கொண்டுதயாரிக்கப்படுவதே பஞ்சாமிர்தமாகும்.இதில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு பகுதியிலிருந்து கிடைப்பதாகும். வாழைப்பழமும் நாட்டுச்சர்க்கரையும் மற்றும் கற்கண்டாகிய மூன்றும் - வயலும் வயல் சார்ந்த பகுதியுமாகிய மருதநிலத்திலும், தேன் - மலையும் மலைசார்ந்த பகுதியுமாகிய குறிஞ்சி நிலத்திலும், நெய் - காடும் காடு சார்ந்த பகுதியுமாகிய முல்லை நிலத்திலும் கிடைப்பவையாகும்.
இவற்றை விகிதாச்சார முறையில் சேர்ப்பதால் உண்டாவதே பஞ்சாமிர்தமாகும்.இந்தப் பஞ்சாமிர்த அபிஷேகமானது எல்லாக் கோயில்களிலும் நடைபெற்றாலும் பழனியில் கிடைக்கும் பஞ்சாமிர்தத்திற்கு மட்டும் புகழ் அதிகம். அதற்குக் காரணம், பஞ்சாமிர்தத்தில் பயன்படுத்தப்படும் ‘விருப்பாச்சி’ என்ற வகை மலைப்பழம் என்றாலும், மலையின்மீது பழமாக இருக்கும் முருகனின் (நவபாஷாண சிலை) மீது பட்டு வருவதாலாகும்.
பஞ்சாமிர்த அபிஷேகப் பலன்
மலைப்பழம், நாட்டுச் சர்க்கரை, கற்கண்டு, நெய், தேன் உள்ளிட்டவற்றை முறைப்படிக் கலந்து முறையான மந்திரம் சொல்லி, முருகனுக்கு அபிஷேகம் செய்தால், பஞ்சமா பாதங்களாகிய ஐந்து வகைக் குற்றங்களும் நம்மைவிட்டு நீங்கி வேண்டியவற்றை அந்த வேலாயுதம் வழங்குவார்.
முருகனின் விருப்பம்;
நாட்டுச் சர்க்கரை, நறுந்தேன், பசும்பால், பழங்கள், நெய் ஆகியவற்றோடு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யும்போது, கையில் தண்டு கொண்டு அருளும் தண்டாயுதன் அதை ஏற்றுக்கொண்டு அருள்கிறான். இதனை,
“சர்க்கரா மது கோஷீர பலசார க்ருதைர்யுதம்
பஞ்சாமிர்தம் ஸ்நாநமிதம் பாகுலேய க்ரஹாணபோ”
என்கிறது சுப்ரமண்ய கல்பபூஜா
விதாநம்.பஞ்சாமிர்த விதி;
பஞ்சகவ்யத்திற்கு (பசுவிலிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், கோமியம் மற்றும் சாணத்தை விகிதாச்சார முறையில் கலப்பது) முன்னால், கிழக்குப் பகுதியில் தலைவாழை இலைபோட்டு, அதில் பச்சரிசி இட்டு, பாகம் பகிர்ந்து பிரித்து, பாத்திரங்கள் வைத்து மந்திரம் சொல்லி, நடுவில் பால், கிழக்கில் தயிர், தெற்கில் நெய், வடக்கில் தேன், மேற்கில் சர்க்கரை, அக்னி (தென்கிழக்கு) யில் வாழைப்பழம், பலாப்பழம் மற்றும் மாம்பழம் ஆகிய பழங்கள், ஈசான (வடகிழக்கு)த்தில் சந்தன நீரும், நிருதி (தென்மேற்கு)யில் பழரசங்களும், வாயு (வடமேற்கு)வில் நெய் ஆகியவற்றை வைத்து முறைப்படி பூசை செய்து தயாரிக்கப்படுவது என்று குமாரந்திரம் சொல்கிறது.
“பஞ்சகவ்ய…………..”
(பழனித்தல வரலாறு, ப.26)
தற்போதைய தயாரிப்பு முறை;
மலைப்பழம், நாட்டுச்சர்க்கரை, கற்கண்டு, தேன், நெய் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை இயந்திரங்களின் உதவியுடன் விகிதாச்சார முறையில் கலந்து பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு முறைப்படி தயாரித்த பஞ்சாமிர்தத்தைத் தரம் சோதித்த பிறகு முருகனுக்குத் தினந்தோறும் அபிஷேகம் செய்யப்படுகிறது. அப்படி அபிஷேகம் செய்த அபிஷேக பஞ்சாமிர்தத்தைக் கலந்தே தேவஸ்தான பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படுகிறது.
சிவ.சதீஸ்குமார்

