Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பழனியும் திருவண்ணாமலையும்

பதின் மூன்றாம் வயது முதல் பத்தொன்பதாம் வயது முடிய, விசேஷமான காலம்! ‘டீன் ஏஜ்’ என்பார்கள். பதின் மூன்று தொடங்கி பத்தொன்பது வரை ‘டீன், டீன்’ என அடிக்கடி ஒலிப்பதால், இந்தப்பருவ காலத்தை ‘டீன் ஏஜ்’ என்றார்களோ என்னவோ? எது என்ன எங்கே எப்படி எப்போது? என எதுவுமே புரியாத வயது. ஒரு விதத்தில் பார்த்தால் இந்த ஏழாண்டு காலம். நம் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் காலம் எனலாம். பதின்மூன்று என்பது, மிக முக்கியம்.

பலருக்குப் பதின் மூன்றாவது வயதில், பெரும்மாறுதல் ஏற்பட்டு, எவ்வளவோ நன்மைகளைத் தந்திருக்கிறது. உதாரணம்... காஞ்சி ஸ்ரீ மகா ஸ்வாமிகள் பதின்மூன்றாவது வயதில்தான், துறவறம் மேற்கொண்டார். இதுபோலப் பதின் மூன்றாம் வயது பலரது வாழ்வில் பெரும்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி, உலகை வாழ வைத்திருக்கிறது.

பதின் மூன்றாம் வயதில் மாறுதல் ஏற்பட்ட ஒருவரால் ஏற்பட்ட விவரங்களைத் தரிசிக்கலாம் வாருங்கள்! இடுப்பில் தூய்மையான ஆடை, ருத்ராட்ச மாலை அணிந்த அகன்ற - திறந்த மார்பு, உள்ளத்தின் நிறம் இதுதான் என்பதை வெளிப்படுத்துவதைப் போன்று நெற்றியில் ஔி வீசும் திருநீறு, மழித்த தலை, எளிமையான தோற்றம் - ஆகியவற்றுடன் திருவண்ணாமலையில் அடியெடுத்து வைத்தார்.

பதின்மூன்று வயதான அவர்தான், ``பழனி ஸ்வாமிகள்’’ என்று மக்களால் போற்றித் துதிக்கப்பட்டவர். பழனியில் அவதரித்த அவர், முன்னை நல்வினையின் உந்துதலால் பழனியில் இருந்து, திருவண்ணாமலைக்கு வந்தார். வந்தவர் சும்மாயில்லை. ‘‘எவ்வளவோ பேர்கள் உணவுக்கு வழியில்லாமல் தவிக்கும் போது, எனக்கு உணவளித்து என்னைக் கட்டிக்காக்கும் தெய்வமே! அண்ணாமலையாண்டவா! கைமாறு என்ன செய்வேன் நான்?’’ என்று தினந்தோறும் அருணாசலேஸ்வரரிடம் கண்ணீர் மல்க முறையிடுவார்.

அதன்பின் அருணாசலேஸ்வரர் ஆலயத்தில், சுற்றிச் சுற்றி அங்கங்கே கிடக்கும் குப்பை கூளங்களையெல்லாம் கூட்டி அப்புறப்படுத்தி, ஆலயத்தைத் தூய்மையாக வைப்பார். மிகவும் இளமையான அவரது தோற்றமும், அவரது பயன் கருதாத் திருத்தொண்டும், யாரையும் எதற்கும் கடிந்து பேசாத தன்மையும் அனைவரையும் கவர்ந்தன. பழனியில் இருந்து வந்த அவரை, ‘`பழனிச்சாமி’’ என்று அழைத்துப் போற்றினார்கள்.

மக்களின் பாராட்டும் போற்றுதலும் ஒருபுறமிருக்க, பழனிச் சாமியின் செயல்கள் அப்போது கோபுரத்து இளையனார் ஆலயத்தில் இருந்த, உத்தமத்துறவி ஒருவரின் பார்வையில் பட்டன; ஊரார் அத்துறவியை ‘`ரெட்டியார் சுவாமிகள்’’ என அழைத்து வந்தார்கள். ரெட்டியார் சுவாமிகளின் பார்வை, பழனிச் சாமியின் மீது பதிந்தது.‘‘இந்த இளந்துறவியை, சிவத்தொண்டராக மாற்ற வேண்டும். இவருடைய செயல்கள் என்றென்றும் மக்களால் போற்றப்பட வேண்டும். நம் திட்டம் இந்த இளந்துறவியால்தான் நிறைவேற்றப்பட வேண்டும்’’ என்று நினைத்த அவர், பழனிச்சாமியை அழைத்து அன்போடு அவர் வரலாற்றைக் கேட்டறிந்தார். அவ்வளவுதான்! ரெட்டியார் ஸ்வாமிகள் தன் திட்டத்தைச் செயல் படுத்தத் துணிந்துவிட்டார். அப்படி என்ன திட்டம்? திருவண்ணாமலை பெரும் ஆலயத்தில் ஆங்காங்கே மேடும்பள்ளமுமாக இருப்பதை, சீராக்கி அழகுபெறச் செய்ய வேண்டும்.

மேலும் அங்கே பெரும் நந்தவனம் ஒன்றை அமைக்க வேண்டும். ஆட்களுக்கு எங்குபோவது? சாதாரணத் திருப்பணியா என்ன? அதற்கும் ஒருவழி வைத்திருந்தார் ரெட்டியார் சுவாமிகள். துறவுக்கோலம் பூண்டிருந்தாலும் ஒரு தொண்டுகூடச் செய்யாமல், பலர் அங்கே திருவண்ணாமலையில் தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தார்.

‘‘இவர்களைக் கொண்டு நாம் திருப்பணியைச் செய்து முடிக்கலாம். ஆனால் இவர்களின் உழைப்பை இலவசமாகப் பெறக்கூடாது. இவர்களுக்குப் போதுமான உணவைக்கொடுத்தே, இவர்களின் உழைப்பைப் பெற வேண்டும்’’ என்று எண்ணிய ரெட்டியார் ஸ்வாமிகள், அதற்கான வழிமுறை புலப்படாததால் அமைதியாக இருந்தார்.பழனிச் சாமியைப் பார்த்ததும், ரெட்டியார் சுவாமிகளின் உள்ளம் பூரித்தது.

‘‘அப்பாடா! நம் எண்ணம் பலித்துவிடும். பழனிச்சாமி மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம். திருப்பணியில் ஈடுபடும் அடியார்களுக்கு எல்லாம், காவடி எடுப்பதன் மூலம் உணவிட முடியும்’’ என எண்ணிய ரெட்டியார் சுவாமிகள், அத்திருப்பணியைப் பழனிச்சாமியிடம் ஒப்படைத்தார். திருத்தொண்டு செய்யும் அடியார்கள் அவ்வளவு பேர்களுக்கும் பழனிச்சாமி எப்படி உணவிட முடியும்? பழனிச்சாமி அசரவில்லை.

‘‘நாம யார் அதச்செய்ய? இதச்செய்ய? அண்ணாமலையப்பன் இந்தச் செயலச் செய்ய, நம்மள தேர்ந்தெடுத்திருக்காரு! அதை ஆர்வத்தோட பொறுப்போட செய்ய வேண்டியதுதான் நம்ம வேல’’ என்று எண்ணிய பழனிச்சாமி, செயலில் இறங்கினார். காவடி எடுத்தார்; ஆமாம்! உணவுக்காக வீடுவீடாகப் போய், காவடி எடுத்தார். இருபுறமும் உள்ள பெரும்பெரும் பாத்திரங்களில் அவரவர்களால் இயன்ற உணவுப் பொருட்களைச் சேர்த்தார்கள்.

அதன்மூலம் திருப்பணியில் பங்கு பெறும் அனைவர்க்கும் உணவுக்கு வழி பிறந்தது. ரெட்டியார் ஸ்வாமிகளும் சும்மாயிருக்க வில்லை. தான் தேடி வைத்திருந்த செல்வம் முழுவதையும், தொடங்கிய திருப்பணியை இடையூறில்லாமல் செய்து முடிக்கும் பொறுப்பையும், பழனிச்சாமியிடம் ஒப்படைத்துவிட்டு, அவர் இறைவனடி சேர்ந்தார்.வழிகாட்டியை இழந்த பழனிச்சாமி கொஞ்சம் கலங்கினாலும், ‘‘அவர் எண்ணிய திருப்பணியை முடிப்பதே அவருக்கு நாம்செய்யும் நன்றிக்கடன்’’ என்ற எண்ணத்தில், முன்னிலும் தீவிரமாக உழைத்தார். அடியார்களும் அவர் சொல்லை அப்படியே செயல் படுத்தினார்கள். அழகான நந்தவனங்களும் கிணறுகளும் உருவாயின. மலர்கள் மலைபோலக் குவிந்தன.

ஆண்டுகள் பல கடந்தன. பழைய திருப்பணிகளுடன், மலைபோல் குவிந்த மலர்களைக் கொண்டு பூக்கட்டும் திருப்பணியையும் மேற்கொண்டார். மாலைகள் தொடுக்க பூச்சாவடி ஒன்றும் கட்டினார். மாலைகள் கட்டப்பட்டு ஆலயத்திற்கு அளிக்கப்பட்டன. அவர் கட்டிய அந்தப் பூச்சாவடி, கோபுரத்து இளையனார் சந்நதியில் இருந்து, வன்னிமரப் பிள்ளையாரைத் தரசிக்கச் செல்லும் வழியில் உள்ளது.

ஒருநாள், கலசப்பாக்கத்திற்கு அருகில் உள்ள காப்பளூரில் இருந்து வந்த அடியார்கள் சிலர், தங்கள் ஊருக்குப் பழனிச் சாமியை அழைத்தார்கள். பழனிச்சாமியும் பொறுப்பான சிலரிடம் நந்தவனப் பராமரிப்பை விட்டுவிட்டு, காப்பளூர் சென்றார். அங்கு போனதும்தான் விவரம் தெரிந்தது. கூட்டிப்போன அடியார்கள், அவ்வூரில் சிதைந்து பாழ்பட்டுக் கிடந்த சிவன் கோயில் ஒன்றைப் பழனிச்சாமியிடம் காட்டினார்கள். அத்துடன் தாங்கள் அழைத்துவந்த காரணத்தையும் கூறினார்கள்.‘‘சுவாமி! தங்களைப் போன்ற உத்தமர்கள் இக்கோயிலைப் புதுப்பிக்க மேற்கொண்டால், உள்ளூர்வாசிகளும் வெளியூர்க்காரர்களும் நம்பிக்கையோடு பணம் தருவார்கள். ஆலயத் திருப்பணி இடையூறில்லாமல் நடைபெறும்’’ என்றுகூறி, தாங்கள் அழைத்து வந்த காரணத்தையும் விவரித்தார்கள்.

‘‘அண்ணாமலையப்பா! இத்திருப்பணிக்காக அடியேனை, நம்பிக்கைக்கு உரியவனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாயே!’’ என அண்ணாமலையாரைத் துதித்து விட்டுத் திருப்பணியில் இறங்கினார். ஆலயமும் திருக்குளமும் சீரமைக்கப்பட்டு, கூடவே ஒரு நந்தவனமும் உருவாக்கப்பட்டது. ஊரார் அனைவரும் வியந்தார்கள். கோயிலைப் பராமரிக்கும் பணியை அவர்களிடமே ஒப்படைத்து, அறிவுரைகூறி, திருவண்ணாமலை திரும்பினார் பழனிச்சாமி. திரும்பியவர் முன்னிலும் மும்முரமாக தோட்டப் பணியில் ஈடுபட்டார்.

தேன் உள்ள இடம் தேனீக்களுக்குத் தெரியுமல்லவா? அது போல, பழனிச்சாமியின் ஆழமான அழுத்தமான திருப்பணிகள், மக்களிடையே பரவின. திருவண்ணாமலைக்குக் கிழக்கே உள்ள மேக்களூரில் இருந்து, கந்தன் எனும் அடியார் ஒருவர் வந்து, இனிமையாகப் பேசி, மேக்களூருக்குக் கூட்டிப்போனார். அங்கு போனதும் பெரும்குளம் ஒன்று பாழ்பட்டுக் கிடப்பதைக் கண்ட பழனிச்சாமி, ‘‘இதைச் சீர் படுத்தினால் பல காலம் மக்களுக்குப் பயன் கிடைக்குமே’’ என எண்ணி, அந்தக் குளத்தைச் சீராக்கும் திருப்பணியை மேற்கொண்டார்.

தகுந்தவர்களிடம் சென்று, குளத்திருப்பணிக்கு உதவியும் பெற்று, குளத்தை அழகுபடச் செம்மையாக்கி, ‘‘இதை நல்ல முறையில் பராமரித்து வாருங்கள்!’’ என ஊராருக்கு உபதேசமும் செய்து, திருவண்ணாமலை மீண்டார். திருவண்ணாமலை கோபுரத்து இளையனார் சந்நதியில் இருந்தபடி, திருத்தொண்டைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்த இவ்வேளையில், இரவு பகல் பார்க்காமல், பழனிச்சாமி பாதாள லிங்கத்தின் பக்கமாக அடிக்கடி உலாவி வருவார்.

அப்போதெல்லாம் அந்தப் பக்கமே யாரும் போக மாட்டார்கள். தனிமையில் அமர்ந்து தியானம் செய்ய, விரும்பினால், ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தவம் செய்வது பழனிச்சாமியின் வழக்கம். ஒருநாள்; வழக்கப்படிப் போனவர், பாதாள லிங்கத்தின் அருகாகப் போனபோது, உள்ளிருந்து ஏதோ சற்று பலமாகவே மூச்சுவிடும் ஓசை கேட்டது. ஒரு விநாடி நின்றவர், ‘‘உள்ளே ஏதேனும் நாகம் இருக்குமோ?’’ என்ற சந்தேகத்தில், கூட ஒருவரை அழைத்துக் கொண்டு உள்ளே போனார்.

அங்கே.... பாலயோகி ஒருவர் சுவரில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தார். சில நாட்களாக உணவின்றி இருந்ததால் சற்று களைப்பாகக் காணப்பட்ட அவர் விடும் மூச்சுதான், தனக்குக் கேட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட பழனிச்சாமி, கூட வந்தவரின் உதவியோடு, அந்தப் பால யோகியை மெள்...ள வெளியே கொண்டு வந்து, நீராட்டி, புதிய கௌபீனம் கொடுத்துப் பராமரித்தார். பழனிச்சாமியால் அவ்வாறு வெளிக்கொணரப்பெற்ற அந்த பாலயோகிதான் `பகவான் ஸ்ரீ ரமணர்’.

அதன்பின் சிலநாட்கள் கழித்து, அவலூர்ப்பேட்டை அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அங்கு சென்ற பழனிச்சாமி, மொட்டைப் பிள்ளையார் கோயிலில் தங்கினார்.

அப்போது அவர் செய்த திருப்பணிகள் ஈடு இணை சொல்ல முடியாதவை. கரடும் முரடுமாக இருந்த நான்கு ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்தி, ஒரு பெரும் தோப்பு ஒன்றை உருவாக்கினார். அதில் வரும் வருவாயைக் கொண்டு, ஆலயப் பூஜை நல்ல முறையிலே நடக்க ஏற்பாடு செய்தார். அங்கும் வழக்கப்படி, உழைத்த அடியார்களுக்குக் காவடி எடுத்தே உணவுபடைத்து, அவர்கள் மனம் கோணாதவாறு பார்த்துக் கொண்டார்.

பழனிச்சாமி உருவாக்கிய நந்தவனங்களும் திருக்குளங்களும் கணக்கற்றவை. அவற்றை நல்லமுறையில் பராமரித்திருந்தாலே போதும்; தண்ணீர்ப் பஞ்சம் தலை காட்டியிருக்காது. திருவருட்செல்வர்களை மறந்தது மட்டுமல்ல. அவர்கள் செய்த திருப்பணிகளையும் சிதைத்து விட்டோம். போனது போகட்டும். மழைக்காலம் வருகின்றது. பழனிச்சாமி எனும் அந்தத் திருவருட்செல்வரை நினைத்தாவது, இருக்கும் ஏரி - குளம் - கிணறுகைளப் பராமரித்துப் பாதுகாப்போம்!

திருத்தொண்டிற்காகவே வாழ்ந்த பழனிச்சாமி எனும் ‘பழனி சுவாமிகள்’ 1929-ம் ஆண்டு, மார்கழி மாத வளர்பிறை, சித்திரை நட்சத்திரத்தன்று சிவபெருமான் திருவடிகளை அடைந்தார். இவருடைய சமாதிக் கோயில், அவலூர்ப் பேட்டையில் அமைந்துள்ளது. ஆராதனைகளும் நடக்கின்றன.

தொகுப்பு:  V.R.சுந்தரி