Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஓங்காரேஸ்வரர் (மத்தியபிரதேசம்)

ஓங்காரேஸ்வரர் (மத்தியபிரதேசம்)

ஓம்காரேஸ்வரர் அழகுமிக்க சுயம்பு லிங்கமாகும். ஓங்கார அமலேஸ்வரர் என்ற மற்றொரு பெயரும் இதற்குண்டு. நர்மதா நதி தீர்த்தத்தில் அமைந்துள்ள தீவுப்பகுதியில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. ஓம் எனில் ஆத்மா எனும் ஆன்மீக மந்திரத்தின் சத்தியமான அர்த்தத்தை எடுத்து உணர்த்தி மனித வாழ்வில் ஒளி பெறச் செய்ததால் இப்பெயரால் சிறப்பிக்கப்படுகிறார்.

உழவாரப் படை

உழவாரம் என்பதற்கு மேன்மைப்படுத்தும் இடம் என்பது பொருள். ஆலயங்களையும் இறை வழிபாட்டுக்கும் உரிய இடங்களையும் தூய்மைப்படுத்தி மேன்மைப்படுத்தும் ஆயுதமாக இருந்ததால் அது உழவாரப் படை எனப்பட்டது. இது முன்புறம் அகன்று (பாதி இலை) இலை போன்றும், அதன்பின் பகுதி நீண்ட கோலுடன் இணைந்து காட்சியளிக்கிறது. (இந்நாளைய தோசைக் கரண்டி போல) இலைப்பகுதியில் சிவலிங்கம் அல்லது நந்தியின் உருவம் அமைந்துள்ளது. ஆலயத்தைத் தூய்மை செய்யும் பணி இதன் பெயரால் உழவாரப்பணி என்றழைக்கப்படுகிறது. இந்த ஆயுதத்தை மலரிட்டு அன்பர்கள் வழிபடுகின்றனர். உழவாரம் என்னும் பெயரில் மதுரையிலிருந்து மாத இதழ் ஒன்றுவெளி வந்து சைவத்தைப் போற்றி வருகிறது.

பெருநகர் வைரவர்

பெருநகரில் எழுந்தருளியிருக்கும் வைரவர் தனிச்சிறப்பு வாய்ந்தவர். இவர் பிற தலங்களிலுள்ள சேத்திர பாலகர் போன்ற வரில்லை. பிரம்மனின் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் தானே வைரவர் கோலத்துடன் தோன்றி அவனுக்குக் காட்சியளித்த நிலையாகும். அதனால் மண்டையோட்டு மாலைகள் மணிமாலைகள் நாய் வாகனம் முதலியவை இன்றிக் காட்சியளிக்கின்றார். சாக்த தந்திரர்கள் சிவபெருமானே வைரவராக இங்கு இருக்கின்றார் என்பர். இவருடைய கணங்களான வேதாளங்களைத் தூண்களில் காண்கிறோம். இவரை வழிபடுவதால் படிப்பில் உண்டாகும் தடைகள் நீங்கும். கடன் தொல்லைகள் நீங்கும்.

மூன்று நிலையில் அருள்

பரத்வாஜ முனிவருக்கும், கந்தர்வப்பெண் ஒருத்திக்கும் பிறந்த குழந்தையை பரமேஸ்வரனும், திருமாலும் பல்லவ மன்னன் ஒருவரிடம் ஒப்படைத்தனர். அக்குழந்தைக்கு பரமேஸ்வரன் என பெயரிட்டார் மன்னர். தக்க சமயத்தில் பெருமாள் அந்த பரமேஸ்வரனுக்கு 18 கலைகளை போதித்ததாகவும் அதற்காக இத்தலத்தில் எழுந்த, அமர்ந்த, கிடந்த நிலையில் அருளுவதாக தலபுராணம் கூறுகிறது. பெருமாள் பரமபதநாதன் எனும் பெயரில் தாயார் வைகுந்தவல்லியுடன் முகுந்த விமானத்தில் அருளும் கோயில் இது.

ஓய்வெடுக்கும் ராமன்

ராவணனை வதைத்த களைப்பு தீர ஓய்வெடுக்கும் ராமபிரான்தான், வீரராகவராக திருவள்ளூரில் அருள்கிறார் என திருமங்கையாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட தலம் இது. மூலவர் வீரராகவன், தாயார் கனகவல்லி எனும் வசுமதியோடு விஜயகோடி விமானத்தின் கீழ் அருள்புரி கிறார். நோய்களை தீர்ப்பதில் நிகரற்றவராக வைத்ய வீரராகவராக இத்தலப் பெருமாள் திகழ்கிறார். இங்குள்ள திருக்குளத்தில் சரும நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வெல்லம் கரைத்திட நேர்ந்து கொண்டால், அந்நோய்கள் நீங்கி விடுகின்றன.

தாலிபாக்கிய அருளும் சுமங்கலி பூஜை

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலயத்தில் ஜனவரி மாதம் முதல் தேதி சுமங்கலி பூஜை விமரிசையாக நடைபெறும். இந்த பூஜையில் நூற்றுக்கணக்கில் திருமணமான பெண்கள் கலந்து கொள்வர். அன்றிரவு ஏழு மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். பூஜை முடிந்ததும் பெண்கள் தங்களுக்கு அளிக்கப்படும் மஞ்சள் கயிற்றை தங்கள் கழுத்தில் கட்டிக் கொள்வர். இதனால் தாலிபாக்கியம் நீடிக்கும் என்பது நம்பிக்கை.

தொகுப்பு: அருள்ஜோதி