Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஓடம் நதியினிலே...

மௌலானா ரூமி அவர்கள் இந்த உலகத்தைக் குறித்துச் சொன்ன எடுத்துக் காட்டை தன் சிந்தையில் வைத்துக் கொள்வானேயானால், உலகத்தைக் குறித்து மனிதனிடம் எப்போதும் தவறான எண்ணம் தோன்றாது. ‘இந்த உலகம் தண்ணீர் போன்றது. மனிதன் ஓடம் போன்றவன்’. ஓடத்தைத் தண்ணீர் இல்லாமல் செலுத்த விரும்பினால், அது நடக்காத காரியம். ஓடம் செலுத்தப்பட, வளங்கள் இல்லாமல், உழைத்தல், உண்ணுதல் இல்லாமல் மனிதனால் வாழ முடியாது.ஆனால், ஓர் உண்மையை நினைவில் பதித்துக் கொள்ள வேண்டும். ஓடத்தைச் சுற்றிலும் அதற்குக் கீழும் தண்ணீர் இருக்கும் வரைதான் ஓடம் பயன்பெற முடியும். எந்த நிமிடம் தண்ணீர் மேலே ஏறிவிடுகிறதோ, ஓடத்திற்குள் நீர் புகுந்து விடுகிறதோ அந்த நிமிடமே ஓடம் கவிழ்ந்து சின்னா பின்னமாகிவிடும்.

இந்த உலகம் எதுவரை மனிதனுக்குக் கீழடங்கி இருக்குமோ, அதுவரை மனிதன் தன் தேவைகளை நிறைவேற்றலாம், பொருளீட்டலாம், உண்ணலாம், பருகலாம், மகிழ்ச்சியுடன் வாழலாம். அந்நிலையில் உலகம் அவனுடைய வாழ்க்கைக்கு ஒரு கருவியாக, வழிமுறையாக இருக்கும். அந்த வாழ்க்கைதான் நல்லது. தூய்மையானதும்கூட. ஆனால், இந்த உலகம் எனும் தண்ணீர் மேலே ஏறிவிடுமாயின், மனிதனின் இதய ஓடத்திற்குள் அது புகுந்து விடுமேயானால், உலகிற்குள் முங்கி மூழ்கி விடுவான்.உலக ஆசை அவனுடைய இதயத்தை ஆக்கிரமித்துவிட்டால், பிறகு அவனுடைய சிந்தனை முழுவதும் அதைச் சுற்றியே இருக்கும். உலக நினைவு அவன் மீது அகற்ற முடியாத நிழலாகப் படிந்துவிடும். உலகைத் தவிர, உலக இன்பங்களை தவிர, வேறு எந்தப் பொருளும் அவனுடைய கண்களுக்குத் தெரியாது. அந்நிலையில், மனிதன் உலகத்திடம் வசமாகச் சிக்கிக் கொள்வான். அவனுடைய எண்ணம், சிந்தனை, விருப்பம் எல்லாமே உலகம் என்றாகிவிடும். பிறகு மறுமையின் நினைவோ, மறுமை வெற்றி குறித்த எண்ணமோ எப்படி ஏற்படும்?

மறுமையை மறந்தவன் ஆகிவிடுவான். அதுமட்டுமல்ல, உலகின் செல்வங்கள், வசதி வாய்ப்புகளை கண்டு கர்வம் கொள்கிறான். உலக சுகத்துக்காக அவன் கடும் மோதல் போக்கைக் கடைபிடிக்கிறான். அதன் விளைவாக தர்ம நியாயங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு ஹராமான, தடுக்கப்பட்ட செயல்களிலும் ஈடுபட்டு விடுகிறான். நபித்தோழர் உமர் (ரலி) அவர்கள் கூறினர்கள்; ‘முட்புதர்கள் நிறைந்த வழியில் செல்லும்போது, உங்கள் ஆடை முள்ளில் சிக்கிவிடக் கூடாதே என்று எவ்வளவு கவனமாகச் செல்வீர்களோ, அதேபோல், இவ்வுலகில் வாழுங்கள். அப்படி யார் வாழ்கிறார்களோ அவர்கள் நிச்சயம் வெற்றி அடைந்து விட்டார்கள்.’’

- சிராஜூல் ஹஸன்.