அனுக்ஞை என்பது பெரியோர்களிடமும், சபையோர்களிடமும் அனுமதி பெறுதல். பெரியோர்களிடம் சொல்லிக் கொள்ளாமல் எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாது என்பது நமது மரபு. அது இங்கே நினைவூட்டப்படுகிறது. சில விஷயங்கள் இப்படி மரபும், பண்பும் மாறிவிடாமல் தொடர்வதற்காக அனுசரிக்கப்படுகின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். பாரத யுத்தம் துவங்குவதற்கு முன், அர்ஜூனன், தான் சண்டை செய்ய அனுமதிக்கும்படி குலப்பெரியவரான, பீஷ்மரிடமும், குலகுருவாகிய துரோணரிடம் முறைப்படி அனுமதி பெறுகிறான். தர்மயுத்தத்திற்கு வந்திருக்கும் அனைத்து வீரர்களையும் வணங்குகிறான். தருமன் பின்னர் அஸ்வமேதயாகம் செய்யும் போது, முறைப்படி பெரியோர்களிடமும், பகவான் கிருஷ்ணனிடமும் அனுமதி பெறுகிறான். காரியத்தைச் செய்து விட்டு அனுமதி பெறுதல் முறையல்ல. அனுமதி பெற்றுவிட்டுத்தான் காரியத்தைச் செய்ய வேண்டும். எனவே அனுக்ஞையை முன்னே வைத்தார்கள். இனி அந்த மந்திரத்தைப் பார்ப்போம்.
ருத்யாஸ் மஹவைர் நமஸ் ஸோ பஸத்ய
மித்ரம் தே வம் மித்ர தே வன்னோ அஸ்து
அநூராதான் ஹவிஷா வர்த்தயந்தா
ஸ தம் ஜீவேமே சதஸஸ் ஸவீரா
- என்பது மந்திரத்தின் முதன் பகுதி.
மித்திரனே, எங்களுக்குரிய செல்வத்தை அருள்வாயாக. அனுஷத்தில் உள்ள நட்சத்திர தேவதைகளை ஹவிஸினால் போற்றி வளர்த்துக் கொண்டு வீரர்களுடன்கூடி நாங்கள் நூறாண்டு வாழ்வோமாக என்பது மந்திரத்தின் பொருள். வெற்றிலை பாக்கு பழம் தேங்காய் போன்ற பொருட்களை ஓர் தட்டில் வைத்து நின்று கொண்டு இந்த மந்திரத்தைச் சொல்ல வேண்டும். இதன் பொருள் இதுதான். அடுத்து தட்டை கீழே வைத்துவிட்டு கைகூப்பி சபையோர்களை வணங்க வேண்டும். அப்போது சொல்லும் மந்திரம் இது:
நமஸ்ஸதஸே நமஸதஸஸ்பதயே
நம:ஸகீனாம் புரோ காணாம் சசுஷூ நமத்வே
நம பிரதிவ்யை
இதற்கு முன்னர் ஹரிஓம்: சொல்லி பவித்ரத்தை அணிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு பெரிய கோ டீஸ்வரராக இருந்தாலும் தர்ப்பை யினால் ஆன பவித்ரம்தான். நம் சாத்திரத்தில் எள்ளுக்கும், புல்லுக்கும் அவ்வளவு சிறப்பைச் சொல்லியிருக்கிறார்கள். சரி. மந்திரத்திற்கு வருவோம். நமஸ்ஸதஸே - சபையோர்களுக்கு வணக்கம். நமஸஸ்பதயே - ஸபைத்தலைவருக்கு வணக்கம். அடுத்து நேரடியாக உறவினர்களுக்கு வரவில்லை. ஸகீ என்று நண்பர்களுக்கு வந்து விடுகிறது. நம் உயர்வினால் மகிழ்பவர்கள்; நம் தாழ்வில் தாங்குபவர்கள். உதவிக்கு முன்னால் வந்து நிற்பவர்கள்; பந்துக்களும் அப்படித்தான் என்றாலும் நட்பு ஒருபடி மேல்! எனவே நண்பர்களுக்கு வணக்கம். அடுத்து நடத்தி வைக்கும் புரோகிதர். அவருக்கு வணக்கம்!இவ்வளவு விஷயங்களையும் நாம் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையிலே, பூமியில் (கர்மபூமி) நின்று கொண்டு நடத்துவதால் விண்ணுக்கும் மண்ணுக்கும் வணக்கம் என்று வணங்குகிறோம்.
இது இரண்டாம் பகுதி
நமது வணக்கங்களை ஏற்றுக்கொண்டு, காரியம் தடையின்றி நடக்க அவர்கள் நமக்கு நல்லாசி வழங்குகிறார்கள். இனி மந்திரத்தின் மூன்றாம் பகுதி. மறுபடி தாம்பூலம், பழம், தேங்காய், இவற்றோடு தட்சிணை வைத்து புரோகிதரிடம் (அதாவது நடத்தி வைக்கும் வேத பண்டிதரிடம்) கொடுத்து, “ஐயா! உனது திருவடிகளில் அடியேன் ச மர்ப்பிக்கிறேன். ஏதோ என்னால் இயன்ற தட்சிணை இது! இது கொஞ்சமாக இருக்கலாம்! அதிகமாக இருக்கலாம்! ஆனால், இதனை ஏற்று நடத்தித்தர உம்மைப் பிரார்த்திக்கிறேன்! மனதார நாம் சமர்ப்பிக்கும் இந்த தட்சிணையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு ஆசிர்வதித்து இக்காரியத்தை நடத்தித்தர வேண்டும்! இதுதான் மந்திரத்தின் பொருள்! இதில் இவ்வளவு ரூபாய் தட்சிணை என்ற எந்தக்குறிப்பும் கிடையாது. அவரவர் சக்திக்கு ஏற்ப வைக்க வேண்டும். வாங்கும் வேத பண்டிதரோ கவரைப் பிரித்துப் பார்க்காமல் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். கொடுத்தவர் சுருங்கினாலும், கொண்டவர் கசங்கினாலும், ஆகாத பொண்டாட்டி சோறாக்கிய கதை தான். சுகப்படாது. தட்சிணையைப் பற்றி ஒரு வார்த்தை. தட்சிணை என்பது ஆட்டோ, டாக்ஸி கட்டணமல்ல. தகுதிக்கு ஏற்ப கொடுப்பதும், தகுதிக்கேற்ப கொள்வதும் ஆகும். ஒரு பெரிய பணக்காரர் 5000 கொடுப்பார்.
ஒரு ஏழை 5 ரூபாய் கொடுப்பார். புரோகிதனுக்கு இரண்டும் சமம்தான்.அப்படிக் கருதாவிட்டால் அது யாகமோ, ஹோமமோ அல்ல. செய்து வைப்பவரும் புரோகிதர் அல்ல. வியாபாரி. வியாபாரத்துக்கு செய்யும் யாகஹோமங்களின் பலன் சைபர்தான். இந்த மந்திரத்தில் கவனிக்க வேண்டியது. இதன் அமைப்பு. இதை மந்திரம் என்று கூடச் சொல்ல முடியாது. ஓர் விண்ணப்பம், இதனை எப்படி விநயமாகச் செய்யவேண்டும் என்பதை அழகாகச் சொல்லித் தருகிறது. இனி மூன்றாம் பகுதி மந்திரம்;
அசேஷே ஹே பரிஷத் பவத் பாதமூலே
மயா ச மர்ப்பிதாம் இமாம் சௌவர்ணீம்
யத்கிஞ்சித் தக்ஷிணாம் தாம்பூலம் ஸ
யதோக்த தக்ஷிணாம் இவ ஸ்வீக்ருத்ய
கொடுக்கிறேன் என்று அகம்பாவமாகச் சொல்லக்கூடாது என்பதால் ஸமர்ப்பிதாம் என்றும், ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நயமாக ஸ்வீக்ருத்ய என்றும் அமைந்த வாக்கிய அமைப்பின் அழகைப் பார்க்க வேண்டும். இதனைப் பெரியோர்களான புரோகிதர்களின் தலைவர் ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியோடு நல்லாசி வழங்க வேண்டும். ஸபையோரும் இதனை ஆமோதிக்க வேண்டும். எந்த நிகழ்ச்சிக்கும் இந்த அனுக்ஞை! முக்கியம். சரி, வடமொழி நாக்கில் வரவில்லை. தமிழில் அனுமதி பெறலாமா! தாராளமாகப் பெறலாம்! இவைகள் மூல மந்திரங்களல்ல! சில பீஜாஷரங்களை வைத்துச் செய்யும் வேள்வியின் மூல மந்திரங்களைத் தவிர்த்து, சாதாரணமான பிரார்த்தனைகளை தமிழில் சொல்வதால் ஒரு குறைவும் வராது.