பிரம்மன், திருமால், சிவன் ஆகிய முப்பெரும் கடவுள்களை உள்ளடக் கியவர் தத்தாத்ரேயர். இவரை “திருமூர்த்தி சொரூபம்” என்று அழைப்பார்கள். “தத்தாத்ரேயர்” “தத்தகுரு” அழைக்கப்படுபவர். திருமாலின் வடிவமாகவும் இவரைக் கருதுபவர்கள் உண்டு . அத்திரி முனிவருக்கும் அனுசுயாவுக்கும் மகனாகப் பிறந்தவர். கார்த்த வீரியார்ஜுனனுக்கு குரு.. இந்தியாவிலும் நேபாளத்திலும் இவர் மிகவும் அறியப்பட்ட அவதாரம். கருட புராணம், பிரம்ம புராணம் முதலிய நூல்களில் இவரைப் பற்றிய செய்திகளைக் காணலாம். தத்தாத்ரேயரின் ஜெயந்தி விழா ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் பவுர்ணமி தினத்தன்று அனுசரிக்கப்படும். ஆனால் சில இடங்களில் வைகாசி வளர்பிறை தசமி திதியில் இவருடைய ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. சிரஞ்சீவி வரம்பெற்ற இவரை வழிபட்டால், மும்மூர்த்திகளையும் ஒரு சேர வழிபட்ட பலன் கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். மனோபலம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாலாஜா பேட்டை தன்வந்திரி பீடத்தில் இவருக்கு விசேஷ சந்நதிகள் உண்டு. அவருடைய அவதார தினத்தில் அவருக்குரிய காயத்ரி மந்திரத்தை சொல்லி வழிபடலாம்.
ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே
யோகேஸ்வராய தீமஹி
தன்னோ தத்த பிரசோதயாத்
தாணுமாலய வடிவமே தத்தாத்ரேயர் என்று சொல்வதும் உண்டு. ஞான வடிவமாக விளங்கக் கூடியவர். பிரம்ம யோகிகளுக்கு வழிகாட்டி.காணாமல் அல்லது திருடு போன பொருள்கள் மீண்டும் கிடைக்க கார்த்தவீர்யார்ஜுனன் மந்திரம் ஜெபிப்பார்கள். அந்த மந்திரத்தின் பிதாமகர் தத்தாத்ரேயர். பரசுராமருக்கு குருவாக இருந்து பல மந்திரங்களைச் சொல்லித் தந்ததாகவும் ஒரு கருத்து உண்டு.எல்லோர்க்கும் ஞான குருவாக விளங்கிய தத்தாத்ரேயர் தனக்கு குருவாக 24 குருமார்கள் இருந்ததாகக் கூறுவார்.
1. பூமி - பூமியிடம் கற்றது பொறுமை.
2. காற்று - காற்றிடம் கற்றது எல்லோரையும் பேதமின்றி எதிர்கொள்ளும் பக்குவம்.
3. ஆகாயம்- கற்றது - பிரம்மத்தோடு ஆன்மாவுக்கு உள்ள ஒற்றுமை.
4. நீர் - கற்றது - எதையும் தூய்மை படுத்தும் தன்மை.
5. நெருப்பு - பாவங்களை அழிக்கும் அப்படி செய்தாலும் தான் அழுக்கு ஆகாது.
6. சந்திரன் - வளர்வதும் தேய்வதும் ஆன நிலை எல்லோருக்கும் உண்டு என்கின்ற நிலையாமையை உணர்த்துவது.
7. சூரியன்- எல்லாருக்கும் நன்மை களையும் அள்ளி வழங்குவது.
8. புறா - எல்லையற்ற ஆசையே துன்பத்திற்கு காரணம் என உணர்த்துவது.
9. மலைப்பாம்பு - கிடைப்பதைக் கொண்டு பிழைப்பது.
10. கடல் - எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை.
11. வீட்டில் பூச்சி - கற்றது - சபலத்தில் சிக்கினால் இறப்பு நிச்சயம்.
12. தேனீ - தேனை சேகரித்து உண்ணாமல் செத்து மடிவது.
13. யானை மோகத்தால் குழியில் விழுவது.
14. வேடன் - தேனியின் உழைப்பை சுரண்டி வாழ்வது.
15. மான் - மருட்சியால் மாட்டிக்கொள்வது.
16. தூண்டிலில் சிக்கிய மீன்.
17. சிற்றின்பத்தில் இருந்தாலும் அதைக் கடமையாகச் செய்து பரமனிடம் சரண் புகுந்த தாசி ஒருத்தி.
18. அதிகளவு உணவுக்கு ஆசைப்பட்ட புறா.
19. சூதும் அறியாத சிறு குழந்தைகள்.
20. நெல் குத்தும் ஒருத்தி அந்த சத்தத்தில் அமைதியோடு இருப்பது.
21. ஒரே குறிக்கோளை கொண்ட அரசன்.
22. எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளாத பாம்பு.
23. ஈஸ்வரர் தத்துவத்தை உணர்த்தும் சிலந்தி.
24. ஒரே சிந்தனையால் கொட்டி குளவியாக்கும் புழு.
நாம் காணும் ஒவ்வொரு ஜீவனிடம் இருந்தும் கற்றுக் கொள்வதற்கு எத்தனையோ பாடங்கள் இருக்கின்றன. சில எப்படி வாழலாம் என்று சொல்லித் தரும். சில எப்படி வாழக்கூடாது என்று சொல்லித் தரும். இதை உணர்த்திய ஞான கடவுளை இன்றையதினம் வணங்கி நல்வாழ்வு பெறுவோம்.

