Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெஞ்சம் உன் சந்நதி நித்தமும் நிம்மதி

ஒரு குழந்தை பிறக்கிறது. ஒன்றாம் இடம். அதுதான் அந்தக் குழந்தையின் விதியைத் தீர்மானிக்கிறது. சென்ற இதழில் 12-ஆம் பாவம் ஸ்தானம் (Bhavam) எப்படிச் செயல் படுகிறது என்று சொன்னேன். 12-ஆம் பாவ முடிவுதான் ஒன்றாம் பாவத்தின் தொடக்கம். மரணத்தின் முடிவு ஜனனத்தின் ஆரம்பம். இதைத்தான் ஆதி சங்கரர் “புனர் அபி ஜனனம், புனர் அபி மரணம்” என்று பாடினார். இது ஒரு சுழற்சி என்பதால் தான் அண்டங்கள் ஒரு சக்கரமாக அமைந்திருக்கின்றன. சக்கரத்தின் ஒரு புள்ளியானது நிறைவின் தொடக்கமாகவும், தொடக்கத்தின் நிறைவாகவும் அமைந்திருக்கிறது. நீங்கள் வட்டம் போட்டு பார்த்தால் அப்படித் தான் முடியும். தொடங்கிய புள்ளியிலேயே முடிப்பீர்கள். ஆனால் நேர் கோடு முதலிய விஷயங்கள் அப்படி அல்ல. அதனால் தான் வாழ்க்கை என்பதை சக்கரம் என்று சொன்னார்கள். வாழ்க்கை எப்படிச் சுற்றி வருகிறதோ, அப்படி அண்டங்களும் சுற்றிக்கொண்டே இருக்கின்றன. இந்த சுற்று நிற்பதில்லை.

சூரியனையே எடுத்துக் கொள்ளுங்கள். காலையில் கிழக்கே தோன்றுகிறது கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறுகிறது. மாலையில் மறைகிறது. அதோடு முடிந்து விடுவதில்லை அடுத்தநாள் காலையிலே மறுபடியும் தோன்றுகிறது. உயிர்களும் அப்படித்தான். தோன்றுகின்றன. வளர்கின்றன. தேய்கின்றன. முடிகின்றன. மறுபடியும் தோன்றுகின்றன.வளி சுழற்சியும் உயிர் சுழற்சியும் ஒன்றாகவே இருப்பதை கவனியுங்கள். இதைத்தான் ஜாதகச் சக்கரமும் சொல்லுகின்றது. அதிலிருந்து சாதாரண பலன்களைத் தெரிந்து கொள்வது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் வாழ்க்கையின் சூட்சுமத்தைத் தெரிந்து கொள்வோம். ஆன்மிகத்தைத் தெரிந்து கொள்வோம்.12-ஆம் இடத்தின் பலங்களின் ஒரு பகுதிதான் மறுபடியும் ஜனனம் ஆகி ஒன்றாம் பாவமாகிய லக்கின பாவத்தில் வந்து நிற்கிறது. சென்ற ஜென்மத்தின் 12 ஆம் பாவத்தின் வினைத் தொகுப்பின் ஒரு பகுதிதான் இந்த ஜென்மத்தின் லக்னமாக மாறுகிறது.

இந்தச் சக்கரத்தை உடைத்துக்கொண்டு வெளியேறும் ஞானமாகிய சாஸ் திரத்தையும் நமக்கு இறைவன் தந்திருக்கிறான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.ஒன்றாம் பாவத்தில் குழந்தை பிறக்கிறது. இரண்டாம் பாவத்தில் அதற்குப் பேச்சும் ஆரம்பக் கல்வியும் கிடைக்கிறது. மூன்றாம் பாவத்தில் அந்தக் குழந்தைக்குச் சகோதர உறவுகள் கிடைக்கின்றன. நான்காம் பாவம் அந்தக் குழந்தையின் அடுத்த முன்னேற்றம் நோக்கிப் பயணிக்க வைக்கிறது. ஐந்தாம் பாவம் சிந்திக்க வைக்கிறது. அடுத்து என்ன செய்வது என்பதைத் தீர்மானிக்க வைக்கிறது. ஆசைகளை விதைக்கிறது. அனுபவங்களைச் சுவைக்க வைக்கிறது. சந்தோஷங்களைப் பகிர வைக்கிறது. அன்பைக் கொடுக்க வைக்கிறது. ஆறாம் பாவம் ஒரு வேலைக்குச் சென்று உழைக்க வைக்கிறது. ஏழாம் பாவம் திருமண உறவைக் கொடுத்து சந்ததியை உற்பத்தி செய்ய வைக்கிறது. எட்டாம் பாவம் முதல் 11ம் பாவம் வரை அடுத்த பகுதி.

திருமணமாகிவிட்டால் அடுத்து அதற்கான துன்பங்களும் தொடரத்தான் செய்யும். அந்த வேலையை எட்டாம் பாவம் செய்கிறது. சம்பாதித்து விட்டோம்; அதை முறையாகச் செலவு செய்ய வேண்டும். தர்மம் செய்ய வேண்டும். அதை ஒன்பதாம் பாவம் சொல் கிறது. அதனால் கிடைக்கக்கூடிய புகழ், கௌரவம், பதவிகள், இவற்றை எல்லாம் பத்தாம் பாவம் பேசுகின்றது. இந்தச் செயல்களுக்கான விளைவுகளை பதினோராம் பாவம் கொடுக்கிறது. இவைகளெல்லாம் ஒரு உயிர் பிறந்து, பலபடியாக பரிமாணம் அடைந்து நிற்கும் வரை உள்ள பகுதிகளாகும்.இனி மோட்ச பாவம் என்று சொல்லக்கூடிய 12-ஆம் பாவம். ஒரு வருடத்தின் கணக்கு வழக்குகளை ஐந்தொகை (Balance Sheet) என்று போடுவார்கள். அந்த ஐந்தொகை கணக்கு இங்கே போடப்படுகிறது.இந்த ஐந்தொகைக் கணக்குப் போடும் பொழுது, வருமானம், தர்மங்கள், கஷ்ட நஷ்டங்கள், நமக்குப் பிறர் தந்த கஷ்டங்கள், நான் பிறருக்குத் தந்த கஷ்டங்கள், சேமிப்பு, எல்லாம் கணக்கெடுக்கப்படுகிறது.

இந்த இடத்தில்தான் சென்ற பிறவியின் 12-ஆம் பாவத்தில் எடுத்த கணக்கில், எவ்வளவு சதவீதம் நன்மை தீமை இந்த பிறவிக்குக் கொடுக் கப்பட்டதோ, அதுபோக மீதம் இருக்கக்கூடிய பழவினைத் தொகுப்போடு இந்தத் தொகுப்பும் சேர்ந்துவிடுகிறது.ஆக, நம்முடைய அடுத்த பிறவி மோட்சமா இல்லை மறுபிறப்பா என்பதைத் தீர்மானம் செய்வது இந்த பன்னிரண்டாம் இடம்தான்.இதைத்தான் கவியரசு கண்ணதாசன் ஒரு திரைப்படப் பாடலிலே இரண்டே வரிகளிலே சொன்னார்.வாழ்க்கை என்பது வியாபாரம் அதில் ஜனனம் என்பது வரவாகும் மரணம் என்பது செலவாகும் இதிலிருந்து மீள என்ன வழி? இந்த வியாபாரக் கணக்குகளை எல்லாம் நாம் நமக்கென்று வைத்துக் கொள்ளாமல், இறைவன் திருவடிகளில் சமர்ப்பித்துவிட்டு, அவனுடைய திருவடியே கதி என்று இருந்துவிட்டால், அந்தத் திருவடிகளில் நம்முடைய ஆன்மாவை இளைப்பாற விட்டால், பன்னிரண்டாம் பாவத்தில் இருந்து ஒன்றாம் பாவத்துக்கு உயிர் தாவாது. அங்கேயே ஒரு சிறு சந்து வழியாக, பிறப்பு இறப்பு என்ற வளையம் உடைக்கப்பட்டு, பிறப்பில்லாத பேரின்ப நிலையைப் பெறும்.இதை திருவள்ளுவரும் மிக அழகாகச் சொன்னார்.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு கீதையில் கண்ணன் 18 வது அத்யாயத்தில் “விடு எல்லாவற்றையும்” என்று சொல்கிறார்.அர்ஜுனன் கேட்கிறான் ‘‘விட்டுவிட்டு என்ன செய்வது?’’ பகவான் சொல்கிறான்‘‘விட்டுவிட்டு என் திருவடியைப் பற்றிக்கொள் உனக்குக் கவலைகள் இருக்காது. உன்னைக் காப்பாற்றுவதற்கு நான் இருக்கிறேன்”இதைச் சொல்வது தான் கீதையின் சரணாகதி ஸ்லோகம்.“புகல் ஒன்றும் இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே” என்பது ஆழ்வார் வாக்கு.ஒரு ஜாதகத்தின் 12 ஆம் பாவத்தின் வெளியேற்றம் இங்கேதான் நடைபெறுகிறது. மற்றபடி, நாம் செய்கின்ற நன்மை தீமைகளால் இந்தப் பிறவிச் சிக்கலில் இருந்து விடுபட முடியாது.தீமையைச் செய்யாமல் நன்மையே செய்வோம். அந்த நன்மையின் பலனை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிப்போம். அதற்குப் பிறகு கிடைக்கக்கூடிய நன்மைதான் பேரின்பம் ஆகிய மோட்சம்.அதைச் சொல்வது தான் ஜோதிட சாஸ்திரம்.

நாம் பெரும்பாலும் வினைகளைப் பெருக்கிக்கொள்வதற்குத்தான் சாஸ்திரத்தைப் பார்க்கிறோம். “நல்லதைச் செய்கின்றேன்; நல்லதை நினைக்கிறேன்; நல்லதைப் பேசுகிறேன். இதற்குப் பிறகு எது நடந்தாலும் அது என் கட்டுப்பாட்டில் இல்லை. அது இறைவன் விட்ட வழி. அவன் பார்த்துக் கொள்வான்” என்று நினைத்து வாழும் பொழுது, ஒரு மனிதனுக்குத் துணிச்சல் இருக்கும். தெளிவு இருக்கும். சிக்கல் இருக்காது. சிக்கல் இல்லாத வாழ்க்கையில் சந்தோஷம் மட்டுமே இருக்கும்.நன்று செய்; நன்று சொல்;நடத்து உன் வாழ்வினை;நெஞ்சமுன் சந்நதி நித்தமும் நிம்மதி.

- கண்ணதாசன்

பெரும்பாலும் நாம் துன்பப்படுவதற்குக் காரணம் “தவறு செய்து விட்டோமே” என்று நினைக்கும் மனப்பான்மை தான். நாம் சரியாகத்தான் செய்து வந்திருக்கிறோம் என்று நினைப்பவர்களுக்குக் குற்ற மனப்பான்மை இருக்காது. குற்ற மனப்பான்மை இல்லாதவர்களுக்கு துக்கமும் இருக்காது. இந்த ஆன்மிகத்தைப் புரிய வைப்பதுதான் ஜாதகத்தின் 12 கட்டங்கள்.