Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாயனார்களின் குருபூஜைகள்

புகழ்த் துணை நாயனார் குருபூஜை

22.8.2025 - வெள்ளி

சிவமறையோர் திருக்குலத்தில் உதித்தவர் புகழ்த்துணையார் என்னும் சிவபக்தர். இறைவனுக்கு அன்பால் பூசித்தல், வாயால் அர்ச்சனை செய்தல், உடம்பால் வழிபாடு செய்தல், போன்ற மனம், வாக்கு, காயம் என்ற மூன்றாலும் இறைவனை வழிபட்டால் அதற்கு நிகர் வேறு சிறந்த தவம் இல்லை என்ற எண்ணம் கொண்டு தன் கடமையை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். ஒரு சமயம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. பல ஆண்டுகளாக மழை பொழியாத காரணத்தால், நீர் நிலைகள் வறண்டன. வயல்கள் காட்டாந்தரையாகி, ஆடுகளும், மாடுகளும் தவித்தன. மக்களும் ஊர் விட்டு ஊர் சென்றார்கள். பசி வந்திடப் பத்தும் பறந்து போம் என்ற சொல்லுக்கு இணங்க, உறவினர்கள் யாவரும் பிரிந்தனர்.அவர் வசித்து பூஜைசெய்துவந்த ஊரும் கோயிலுமான செருவில்லிபுத்தூர் மயானமாகத் திகழ்ந்தது. கோயிலுக்குள் செல்பவர்கள் இல்லை. ஆனால் இன்னிலையிலும் புகழ்த் துணையார் மாத்திரம் ஊரைவிட்டுச் செல்லாமல் இருந்தார். அவருக்குத் தாம் வழிபடும் சிவபெருமானை விட்டுச் செல்ல மனம் இல்லை.

அவர் ஒருநாள் சிவபிஷேகத்திற்காக குடத்தில் நீர் கொண்டு வரும் பொழுது, வெகு நாள் பட்டினி கிடந்ததால் சோர்வாகி தளர்ந்து அமர்ந் தார். ஆயினும் சிவா பூஜையை விட மனம் இல்லை. மெல்லச் சிவலிங்கத்தை அடைந்தார். கஷ்டப்பட்டு கையை மேலே உயர்த்தி குடத்திலுள்ள நீரால் திருமஞ்சனம் செய்தார். அவரால் குடத்தைத் தாங்கிப் பிடிக்க முடியவில்லை. தடாலென்று குடத்தைச் சிவலிங்கத்தின் மேலே போட்டுவிட்டு அவரும் மூர்ச்சையானார். கீழே மயங்கிக் கிடந்த அவர் கனவில் சிவபெருமான் எழுந்தருளினார். ‘அன்பனே! உன் தவத்தை வெகுவாக மெச்சினோம்! உயிரை இழப்பதானாலும் நம்மைப் பிரியாமல் இருக்கும் உன் உறுதியைக் கண்டு மகிழ்ந்தோம்! இனி நீ கவலையுற வேண்டாம். ஒவ்வொரு நாளும் காலையில் இந்தப் பீடத்தின் கீழே ஒரு பொற்காசைக் காண்பாய். அதை எடுத்துச் செலவு செய்து உன் உடலைப் பேணிப் பின் நமக்கு வழிபாடு செய்து வருவாயாக!’’ என்று மலர்ந்தருளினார்.

‘‘மயக்கத்திலிருந்து எழுந்த அன்பர் கண்ணைத் துடைத்துக் கொண்டார். எம்பெருமான் திருமுடியின் மேல் குடத்தைப் போட்டுவிட்டோமே” என அங்கலாய்த்து வருந்தினார். தாம் கண்ட கனவைப் பற்றிய நினைவு வந்தது. இறைவன் பீடத்தைப் பார்த்தார். இறைவன் கூறியது போல் அங்கே பள பளவென்று ஒரு பொற்காசு மின்னியது, அந்தக் காசைக் கொண்டு, உணவுப் பொருள்களையும், இறைவன் பூசைக்கு வேண்டிய பொருட்களையும் வாங்கினார். உடலும், உள்ளமும் வலிமை பெற்றார். “எம்பெருமான் துணையிருக்க எனக்கு என்ன கவலை?” என்று பெருமிதம் கொண்டார். தன் தொண்டிலே சிறிதும் குறைவறாது மேன்மேலும் சிறப்பாகப் பூசனை செய்து இறைவன் அருள் பெற்று, இறுதியில் அவனடி சேர்ந்தார். அவர் குரு பூஜை இன்று.

அதிபத்த நாயனார் குருபூஜை

22.8.2025- வெள்ளி

அதிபத்த நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். நாகப்பட்டினத்தில் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். அதிபத்தர் தன்னுடைய சிவபக்தியின் காரணமாக, தான் பிடிக்கும் மீன்களில் சிறந்த ஒன்றை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். சில நாட்களில் ஒற்றை மீனே பிடிபட்டாலும் அதனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து விட்டு, வெறுங்கையுடன் திரும்புவார். இதனால் வறுமையால் வாடினார். ஒரு சமயம் சிவபெருமான் அதிபத்தரை சோதிக்க எண்ணி ஒரு மீனும் பிடிபடாத நாளில், ரத்தினங்கள் பதிந்த தங்க மீனை வலையில் சிக்குமாறு செய்தார். ஆனால் தீவிரமான பக்தரான அதிபத்தர் அதனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார். இவ்வாறு வறுமையிலும், பசியிலும் வாடிய பொழுதும் இறைவனுக்கு சமர்ப்பிக்கும் வழமை தவறாத பக்தியை கொண்டவராக அதிபத்தர் விளங்கியமையால் அவரை நாயன்மார்களில் ஒருவராக

போற்றுகின்றார்கள்.

இளையான்குடி நாயனார் குருபூஜை

23.08.2025 - சனி

இளையான்குடியில் பிறந்த மாறனார், சிவனடியாரிடத்து அன்புள்ளமும் கொண்டு திகழ்ந்தார். தம் இல்லத்திற்கு சிவனடியார் வந்தால், எதிரே சென்று கை கூப்பி வணங்கி, வரவேற்று, அவர்களுக்கு உணவளிப்பார். ஒருநாள் நல்ல மழை. உணவின்றிப் பசியால் வாடியபோதும், இரவு வெகுநேரம் வரை சிவனடியார்களை எதிர்பார்த்திருந்து எவரும் வராமையால், கதவைப்பூட்டி விட்டு வீட்டினுள் சென்றார். நள்ளிரவில் சிவபெருமான், அடியார் கோலங் கொண்டு கதவைத் தட்டி அழைத்தார். மாறனார் கதவைத் திறந்து, அடியாரை வீட்டினுள் அழைத்து வரவேற்றார். உணவளிக்க வீட்டில் ஏது மில்லையே என வருத்தம் மிகுந்தது. பகற்பொழுதில் நிலத்தில் விதைக்கப்பட்ட நெற் மணிகளைச் சேகரித்து வந்து, கீரைகளைப் பறித்து, அடுப்பெரிக்க விறகில்லாமல், வீட்டின் சிதல மடைந்த கூரையிலிருந்த மரக் கட்டைகளைப் பயன்படுத்தி உணவு சமைத்து, மாறனாரும் அவரது துணைவியாரும், சிவனடியாருக்கு உணவு படைத்தனர். அப்பொழுது அடியாராக வந்திருந்த பெருமான், சோதிப் பிழம்பாய் எழுந்து தோன்றினார். அவர் குரு பூஜை நாள் இன்று.