Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நலம் தரும் நவராத்திரியும் கலை தரும் சரஸ்வதி பூஜையும்

நவராத்திரி: 22-9-2025 முதல் 2-10-2025 வரை

1. முன்னுரை

விழாக்கள் விரதங்களில், ஒரே ஒரு நாள் மட்டும் இருக்கக்கூடிய விரதங்கள் உண்டு. உற்சவங்கள் உண்டு. தொடர்ந்து பல நாட்கள் அனுசரிக்கப்படும் விழாக்கள் உண்டு; உற்சவங்கள் உண்டு. பெரும்பாலும் கோயில்களில் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் உற்சவத்தை பிரம்மோற்சவம் என்பார்கள். அதைப்போல, புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய விழாக்கள் எல்லாமே தொடர்ந்து பல நாட்கள் நடைபெறக் கூடிய விழாக்களாக அமைந்திருப்பது தனித்துவமானது.

புரட்டாசி மாதத்தில் தான், முன்னோர்களுக்காக 15 நாட்கள் தொடர்ந்து மகாளய பட்சம் கடைபிடிக்கிறோம். அது முடிந்தவுடன் தொடர்ந்து 10 நாட்கள் நவராத்திரி விழாவை அனுசரிக்கிறோம். புரட்டாசி மாதத்தில் தான், பல திருத்தலங்களில் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக திருமலையில் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவம் சிறப்பானது. இந்த இதழ் முத்துக்கள் முப்பது தொகுப்பில் நவராத்திரியின் சிறப்பையும் சரஸ்வதி பூஜையின் சிறப்பையும் அனுபவிப்போம்.

2. சிவராத்திரியும் நவராத்திரியும்

சிவனுக்கு இசைந்தது சிவராத்திரி.சக்திக்கு இசைந்தது நவராத்திரி. இந்த உலகமே சிவ சக்தி ஸ்வரூபம் அல்லவா! சிவராத்திரி ஒரு நாள். நவராத்திரி ஒன்பது நாள். இரண்டும் சேர்ந்தால் 10 நாள். சிவசக்தி சொரூபம் தான் உலகப் படைப்பின் ஆதார சக்தி. ஒரு குழந்தை பிறக்கிறது என்று சொன்னால், தந்தையிடம் ஒரு மாதமும், தாயிடம் ஒன்பது மாதமும் இருந்து பிறக்கிறது. சிவராத்திரியையும் நவராத்திரியையும் இணைத்து யோசித்தால், இந்த உலகத்தின் படைப்பையும் உயிர்களின் படைப்பையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

உத்தராயண காலத்தில் மகா சிவராத்திரியும், தட்சிணாயன காலமான புரட்டாசி மாதத்தில் நவராத்திரியும் வருகின்றது. தேய் பிறை சதுர்த்தசி திதியில் சிவராத்திரியும், அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் தொடங்கி, வளர் கலையாய் நவராத்திரியும் வரும் அமைப் பையும் கவனித்தால் படைப்பின் ரகசியங்கள் விளங்கும். அக்ஞான இருட்டில் இருந்து மெய்ஞான வெளிச்சத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் தத்துவங்கள் தான் இப்படிப்பட்ட உற்சவங்களாக வடிவெடுத்து இருக்கின்றன.

3. நவராத்திரி படிநிலைகள்

சிவசக்தி ஸ்வரூபத்தை சக்தியின் ஊற்றாகவும், சக்தி வெளிப்படும் ஆற்றலாகவும் சொல்வார்கள். புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கும் பொழுது சந்திரனோடு சேரும் நாள் அமாவாசை. அடுத்த நாளிலிருந்து, சூரியனை விட்டு சக்தியாகிய சந்திரன் விலகி, படிப்படியாக ஆற்றலை அதிகரித்துக் கொண்டே சென்று, பத்தாம் நாளில் வெற்றியைத் தரும். அந்த நாள்தான் விஜயதசமி என்று கொண்டாடுகின்றோம்.

விஜயதசமி அன்று சந்திரன் மகர ராசியில் உத்திராடம் நட்சத்திரத்தில் பிரகாசிக்கும்.மகரம் செயல்பாட்டுக்கான கர்ம ராசி (பத்தாவது ராசி) அல்லவா. செயல்தானே வெற்றியை பெற்றுத்தரும். சிவம் என்னும் ஊற்றிலிருந்து சக்தி என்னும் ஆற்றல் பிரகாசித்து வெற்றி வாகை சூடும் நாள் விஜயதசமி. இந்த வெற்றியை நோக்கிய படிநிலைகளைத் தான் பிரதமை முதல் தசமி வரை நவராத்திரி திருநாளாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் படிநிலையைச் சொல்வதுதான் நவராத்திரிக்காக வைக்கப்படும் கொலுவின் படி நிலைகள்(Steps). படிநிலை வளர்ச்சியைக் குறிப்பதற்காகவே ஒவ்வொரு படியாக ஏறுவது போல் (ascending) வைத்தார்கள். எந்த நிலையில் இருந்தாலும், மனிதன் அறி வாலும் ஞானத்தாலும் உயர்ந்து, தன்னுடைய இலக்கை அடைய வேண்டும் என்பதுதான் நவராத்திரி உற்சவத்தின் நோக்கம்.

4. வைணவ ஆலயங்களிலும் நவராத்திரி

நவராத்திரி உற்சவம் என்பது, சிவாலயங்களில் அம்பாள் சந்நதிகளிலும், தனி அம்மன் சந்நதிகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படியானால் சைவ சமயத்தில் மட்டும் நவராத்திரி உற்சவமா என்றால் இல்லை. வைணவ ஆலயங்களிலும் நவராத்திரி உற்சவம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அங்கே சக்தியும் சிவமும் இணைந்திருப்பது போல, இங்கே திருவும் மாலும் இணைந்திருக்கிறார்கள்.

சிவபெருமான் சக்திக்கு தன் உடலின் சரிபாதியைத் தந்ததுபோல, பெருமாள் மகாலட்சுமித் தாயாரை தன்னுடைய மார்பின் மீது தாங்கியிருக்கிறார். புகழ்பெற்ற அனைத்து வைணவத் திருத்தலங்களிலும் நவராத்திரி உற்சவம் சிறப்பாகவே கொண்டாடப்படுகிறது. திருமலை, திருவெள்ளக்குளம், ஒப்பிலியப்பன் கோயில், முதலிய திருத்தலங்களில் நவராத்திரி விழா பெருமாளுக்கான பிரம்மோற்சவம் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

5. எத்தனை நவராத்திரிகள்?

வருடத்தில் மொத்தம் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுவது வழக்கம். ஆஷாட நவராத்திரி, சாகம்பரி நவராத்திரி, சைத்ர நவராத்திரி மற்றும் சாரதா நவராத்திரி என நான்கு வகையான நவராத்திரிகள் உள்ளன. இவற்றில் புரட்டாசி மாதத்தில் வரும் சாரதா நவராத்திரியையே இந்தியா முழுவதும் வெகு கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு நவராத்திரி, செப்டம்பர் 22, 2025 திங்கட்கிழமை முதல் அக்டோபர் 1 புதன்கிழமை வரை நடைபெறும். முதல் நாளில் கலசம் அமைத்து, கொலு படிகள் அடுக்கி வழிபாட்டைத் துவங்க வேண்டும்.

செப்டம்பர் 28ம் தேதி துவங்கி, கடைசி ஐந்து நாட்கள் மகா சஷ்டி, மகா சப்தமி, மகா அஷ்டமி, மகா நவமி மற்றும் அதைத் தொடர்ந்து விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது. செப்டம்பர் 22ம் தேதி நவராத்திரி வழிபாடுகள் துவங்கி, அக்டோபர் 01ம் தேதி சரஸ்வதி பூஜை எனப்படும் மகா நவமியும், அக்டோபர் 2ம் தேதி விஜய தசமியும் கொண்டாடப்பட உள்ளது.

6. கலசம் வைக்க நல்ல நேரம்

அன்னை பராசக்தி, அசுரர்களை வதம் செய்து வெற்றி அடைந்ததைக் கொண்டாடும் விழாவாக நவராத்திரி விழா புராணங்களில் குறிப் பிடப்படுகிறது. புரட்டாசி மாத அமாவாசை, அதாவது மகாளய அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதி துவங்கி ஒன்பது நாட்களும் நவராத்திரி என்றும், பத்தாவது நாளை விஜயதசமி என்றும் கொண்டாடுகிறோம். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுகிறோம்.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பிகையின் ஒன்பது விதமான சக்திகளைப் போற்றித் துதிக்கிறோம். செப்டம்பர் 22ம் தேதி காலை 6.10 முதல் 8.00 மணி வரையிலான நேரம் கலசம் அமைப்பதற்கான முகூர்த்த நேரமாகக் கொள்ளலாம். அன்றைய தினம் அபிஜித் முகூர்த்தமும் காலை 11.49 முதல் பகல் 12.38 வரையிலான நேரம் அமைந்துள்ளது. இந்த நேரங்களில் கலசம் அமைத்து, நவராத்திரி வழிபாட்டிற்காக அம்பிகையை கலசத்தில் ஆவாஹனம் செய்வதும் சிறப்பானதாகும்.

7. அம்பிகைக்கு அலங்காரங்கள்

ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியின் போது அன்னை பராசக்தி ஒவ்வொரு வாகனங்களில் பவனி வந்து அருள் செய்வாள். இந்த ஆண்டு அம்பிகை, யானை வாகனத்தில் எழுந்தருளுகிறாள். யானை என்பது செல்வ வளம், வளர்ச்சி, அமைதி, ஞானம் ஆகியவற்றின் அடையாளம். அதனால் இந்த ஆண்டு நவராத்திரி வழிபாடு மங்கலம் தரும் விழாவாகக் கருதப்படுகிறது. ஒன்பது நாட்களிலும் அம்பிகையை மகேஸ்வரி, கவுமாரி, வராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, மகா சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி ஆகிய வடிவங்களில் அலங்கரித்து வழி படுவார்கள்.. சில ஊர்களில் வாகன புறப்பாடும் உண்டு.

நவராத்திரியில் கன்னி பூஜை என்பது விசேஷமானது. முதல் நாள் இரண்டு வயது சிறுமியை அம்பிகையாக பாவித்து வணங்குவார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வயது கூட உள்ள சிறுமியை அம்பாளாக பாவித்து வணங்குகின்ற கன்னி பூஜை சிறப்பானது. ஒன்பது நாளும் வழிபட முடியாதவர்கள் குறைந்த பட்சம் அஷ்டமி, நவமி தசமி முதலிய நாட்களில் விரதம் இருந்து வழிபட வேண்டும். நவராத்திரி நாட்களில் வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், சந்தனம், தாம்பூலம், பூக்கள் கொடுக்க தேவியின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.

8. ஒன்பது எனும் எண் தரும் மகத்துவம்

ஒன்பது இரவுகள் கொண்டாடும் பண்டிகை நவராத்திரி. ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம் என்று பெயர். நவ என்ற சொல் புதிய, புதுமை எனும் பொருள் உடையது. 1,இன்பம், 2,நகை,3,கருணை, 4,கோபம், 5,வீரம், 6,பயம், 7,அருவருப்பு, 8,அற்புதம், 9,சாந்தம் ஆகியன நவரசங்கள் ஆகும். எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது. அந்த எண்ணில், நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல் கின்றனர், சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது.

எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம் எண்ணை விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன. புத்த மதத்தில், மிக முக்கியமான சடங்குகள் யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறும். தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள். பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான். இப்படி மகத்துவங்கள் கொண்டது ஒன்பது என்ற எண்ணுக்கு சிறப்பு தரும் விழா நவராத்ரி.

9. அர்த்தஜாம பூஜையே நவராத்திரி

சித்திரை, புரட்டாசி ஆகிய இரு மாதங்களையும் எமனின் கோரப் பற்கள் என்று கூறுவார்கள். இந்த இரு மாதங்களிலும் பிணிகள் உடலை துன்புறுத்தி, நலிவடையும்படி செய்யும். அதனைப் போக்கும் விதமாகவே நவராத்திரி வழிபாடு உள்ளது. பல்வேறு பெயர்களில் இந்த நவராத்திரி விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. மூன்று சமயப் பிரிவுகளுக்கும் உரிய பண்டிகையாக இருந்தாலும் இது பெண் தெய்வத்துக்கு உரிய பண்டிகை என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அடுத்து இது இரவு நேரப் பண்டிகை. அதனால் “ராத்திரி” என்று இந்த பண்டிகைக்கு உரிய காலத்தை நிர்ணயித்திருக்கிறார்கள் . இது புரட்டாசி மாதத்தில் வருவதால் தேவர்களுக்கு அர்த்தஜாம பூஜைக்கு உரிய நேரம்.

அனந்தாக்ய சம்ஹிதை என்கின்ற நூலில் திருமால் ஆலயங்களில் கொண்டாடப்படும் நவராத்திரி உற்சவம், மகா நவமி உற்சவம் என்று குறிப் பிடப்பட்டுள்ளது. வேறுசில சம்ஹிதைகளிலும் இந்த உற்சவம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. சந்திரன் ஒவ்வொரு கலையாக வளர்வது போல, எல்லா கலைகளும் பூரணமாக வளர்ந்து பெரு வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, வளர்பிறையைத் தேர்ந்தெடுத்தார்கள்.

10. ஆண்டாளும் நவராத்திரியும்

ஆண்டாள் மணலால் உருவ பொம்மைகளைச் செய்து பாவை நோன்பு நோற்றது உண்டு. மணலால் கண்ணனை நினைத்து சிறு வீடு கட்டியது போன்ற செயல்கள், அக்காலத்தில் மண் பதுமைகளை கொலு வைப்பது என்பதின் அடிப்படை. ராமானுஜர் காலத்தில் திருவரங்கத்தில் சிறுசிறு மண் பொம்மைகளை வைத்துக் கொண்டு சிறுவர்கள் திருவரங்க கோயிலாக பாவித்து, உற்சவாதிகளை பாவனையாக நடித்துக் காட்டியது குறித்து பல செய்திகள் உண்டு. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா நவராத்திரியின் முதல் நாள் மது கைடபர் என்னும் இரு அரக்கர்களைக் கொன்றார். தர்மம் வெல்லும். அதர்மம் தோற்கும் என்பதை உணர்த்துவது நவராத்திரி தத்துவம் என்ற கருத்தும் உண்டு.

11. ராமாயணமும் மகாபாரதமும்

ராமபிரான் ராவணனோடு போர்புரிந்து ராவணனை வெற்றி கொண்ட நாள் விஜயதசமி என்று சொல்லப்படுகிறது. ராமாயண காலத்தில் இருந்தே இந்த நவராத்திரி உற்சவம் கொண்டாடப்படுவதாக சொல் கிறார்கள். சீதாபிராட்டியை போர் புரிந்து மீட்ட இராமபிரான், அவளைத் திரும்ப அயோத்திக்கு அழைத்து சென்ற வைபவத்தை பிராட்டி வைப வமாக நவராத்திரியில் கொண்டாடப்படுகிறது .. இரண்டு வேறு விதமான கதைகள் இருந்தாலும், இரண்டு சம்பிரதாயங்களிலும்,அவரவர் மரபு சார்ந்து திருக்கோயில்களில் நவராத்திரி கொண்டாடப்படுவதால், நவராத்திரி உற்சவம் எல்லா ஆலயங்களிலும் விசேஷமாக நடக்கிறது.

12. வைணவத்தில் கொலு

வைணவ ஆலயங்களில் நவராத்திரிக்கு , தினம் ஒரு அலங்காரமாக பெருமாளை அலங்காரம் செய்வார்கள். முதல்நாள் வெண்ணைத்தாழி கிருஷ்ணனாகவும், இரண்டாம் நாள் காளிங்க நர்த்தன கிருஷ்ணனாகவும், மூன்றாம் நாள் வேணுகோபாலனாகவும், நான்காம் நாள் வைகுண்ட நாதனாகவும், ஐந்தாம் நாள் நாச்சியார் கோலத்திலும், ஆறாம் நாள் சார்ங்க பாணியாகவும் , ஏழாம் நாள் ராஜகோபாலனாகவும், எட்டாம் நாள் ஸ்ரீரங்கநாதர் கோலத்திலும் அலங்காரம் செய்து, ஒன்பதாம் நாள் ராமர் பட்டாபிஷேக கோலத்தில் அலங்காரம் செய்வார்கள். இன்னும் வேறுவித அலங்காரங்களும் செய்வது உண்டு.

13. மகாலட்சுமி பூஜை

நவராத்திரியில் கொலு அமைத்து 10 நாட்களும் மகாலட்சுமி பூஜை செய்வது முக்கியமானதாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு லஷ்மி தேவியாக அலங்காரம், பூஜை என 10 நாட்களும் தாயாருக்கு உற்சவம் நடத்துவது வழக்கம். தாயார் கருணையின் கடல். அவர்தான் நமது தேவைகளை பகவானிடம் எடுத்துச் சொல்லி நமக்குப் பலன் பெற்றுத் தருகின்றார். கொலுவில் பூலோகத்திலிருக்கும் சகல உயிர்களையும் எம்பெருமான் நாராயணனின் பெயரால் அமைக்கிறோம். மண்ணாலான பொம்மைகளை வைத்து வழிபடுவது பூமிக்கு செய்யும் மரியாதையாகும்.

14. திருவரங்கத்தில் நவராத்திரி உற்சவம்

திருவரங்கத்தில் மகாளய அமாவாசை அன்று நவராத்திரி உற்சவம் தொடங்கிவிடும். அன்று நம்பெருமாள் புறப்பாடு கண்டருளுவார். சந்தனு மண்டபத்தில் அவருக்கு 81 கலச திருமஞ்சனம் நடைபெறும். அதற்கு அடுத்த நாள் வளர்பிறை பிரதமையில் இருந்து கோயில் நவராத்திரி உற்சவம் ஆரம்பமாகும். ஸ்ரீரங்க நாச்சியாருக்கு கர்ப்பக்கிரகத்தில் திருமஞ்சனம் நடைபெறும். பெருமாள் எழுந்தருளும் தங்க குதிரைக்கும் ஸ்ரீரங்கநாச்சி யாருக்கும் ரக்சாபந்தனம் நடக்கும்.தோளுக்கினியானில் பிராகார வலம் வந்து நாலுகால் மண்டபத்தில் திருவாராதன வைபவங்கள் மிகச் சிறப்பாக நடக்கும்.

15. திருவரங்கத்தில் சரஸ்வதி பூஜை

நவராத்திரி ஒன்பதாம் நாளில் அக்கோயிலில் உள்ள 8 மூர்த்திகளுக்கு திருவாராதனம் நடைபெறுவது கண் கொள்ளாக் காட்சியாகும். கருவூல நாச்சியார், நாயகர் அறை நாச்சியார், சுக்கிரவார நாச்சியார், அரவிந்த நாச்சியார், ஹயக்ரீவர், சரஸ்வதி, செங்கமல நாச்சியார், குருகூர் நாச்சியார். ஏழாம் நாள் உற்சவத்தில் ஸ்ரீரங்கநாயகியார் திருவடி சேவை சிறப்பு. சரஸ்வதி பூஜையன்று ஸ்ரீரங்கநாச்சியாருக்கு விசேஷமான திருமஞ்சனம் நடந்து ரக்சாபந்தன விசர்ஜனம் நடைபெறும். தங்கக் குதிரை வாகனம் நம்பெருமாள் சந்நதிக்குக் கொண்டு வரப்படும்.

அங்கு பெருமாளுக்கும் தங்கக் குதிரைக்கும் ரக்சாபந்தனம் செய்யப்படும். அடுத்த நாள் விஜயதசமி காலை நம்பெருமாள் பல்லக்கில் புறப்பாடு கண்டருளி, காட்டழகிய சிங்கர் சன்னதி சென்று அடைவார். மாலையில் குதிரை வாகனத்தில் அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெறும். அது முடிந்தவுடன் அடைய வளைந்தான் வீதி, சாத்தார வீதி வழியாக ஆஸ்தானம் சென்று அடைவார்.

16. சுண்டல் நிவேதனம்

தீபாவளிக்கு இனிப்பு, விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை, கிருஷ்ண ஜெயந்திக்கு வெண்ணெய், முறுக்கு, சீடை என்று நிவேதனம் படைப்பது போல நவராத்ரி ஒன்பது நாளும் ஒன்பது வகையான சுண்டலைப் பிரசாதமாக படைப்பார்கள். கல்விக்கு குரு முக்கியம். குருவின் அதி தேவதை தட்சிணாமூர்த்தி, ஹயக்ரீவர், சரஸ்வதி. எனவே குருவின் தானியமான கொண்டைக்கடலை சுண்டல் பிரசாதமாகப் படைக்கப்படுகிறது.

பொதுவாக கடலைக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் உண்டு என்பார்கள். அறிவிலும் உடலிலும் தேவையான சக்திக்கு முளைகட்டிய சுண்டலை நாம் உணவில் சேர்த்துக் கொள்கிறோம். சக்தியாகிய இறை அருள் பெறவேண்டும் என்று கொண்டாடப்படும் நவராத்திரியில், இதை குறிப்பால் உணர்த்துவதுபோல கொண்டைக் கடலை, பட்டாணி, மொச்சை, பாசிப்பயிறு முதலிய சுண்டல் வகைகளை நிவேதனம் செய்கிறோம்.

17. கலைமகளும் நவராத்திரியும்

புரட்டாசியில் வரும் நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து ‘சாரதா நவராத்திரி’ என்று அழைத்தனர். புதன் கலைகளுக்கு அதிபதி. வித்தைக்கு அதிபதி. புத்திக்கு அதிபதி. எனவே, கலைகளுக்கு அதிபதியான புதனுடைய ராசியில் சூரியன் பிரவேசிக்கும் கன்னி மாதத்தை நவராத்திரி உற்சவம் கொண்டாடத் தேர்ந்தெடுத்தார்கள். திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோவிலில் ஸ்ரீவேதவல்லித் தாயார் தினமும் ஒரு வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

முதல்நாள் தாமரை வாகனம், மறுநாள் கிளி வாகனம், மூன்றாவது நாள் சேஷ வாகனத்தில் வரும் அவர் 4ம் நாள் யாளி வாகனத்தில் எழுந்தருளுகிறார். 5ம் நாள் மீண்டும் தாமரை வாகனத்திலும், 6ம் நாள் குதிரை வாகனம், 7ம் நாள் ஹம்ச வாகனம், 8ம் நாள் யானை வாகனத்திலும் உற்சவம் காண்கிறார். 9ம் நாள் ஸ்ரீவேத வல்லித் தாயார், ஸ்ரீரங்கநாதருடன் எழுந்தருளுகிறார்.

18. பெருமாளை அடைய தாயார் இருந்த விரதம்

திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவம் பிரசித்தமானது. திருமலையில் லட்சுமிதேவி, அலமேலுமங்கை என்ற நாமத்துடன் பிறந்து, திருப்பதி வெங்கடேசப் பெருமாளை அடையும் பொருட்டு ஒன்பது நாட்கள் விரதம் இருந்து பெருமாளை அடைந்ததாக ஒரு கதையுண்டு. அதன் காரணமாகவே இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுவதாகவும் கூற்று உள்ளது. உடுப்பி கிருஷ்ணனுக்கு நவராத்திரி ஒன்பது நாட்களும் மைசூர் மகாராஜா சமர்ப்பித்த பட்டுப் புடவைகளை அணிவிக்கிறார்கள். திருவந்திபுரத்தில் தேவநாதசுவாமி கோவிலில் தாயாருக்கு புரட்டாசி நவராத்திரி உற்சவம் வெகு கோலாகலமாக நடைபெறும்.

ஒவ்வொரு நாளும் தாயாரின் புறப்பாடு வெகு அற்புதமாக இருக்கும். தில்லைத் திருச்சித்திர கூடத்தில் தினந்தோறும் காலையில் தாயாருக்கு சிறப்புத் திரு மஞ்சனம் நடைபெறும். சிறப்பு அலங்காரத்தோடு தாயார் கண்ணாடி அறையில் சேவை தருவார். இரவு பிரகார புறப்பாடு நடந்து, பெருமாள் சந்நதியில் மாலை மாற்றுதல் நடைபெறும். பிறகு சேர்த்தி ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். மகாநவமியான சரஸ்வதி பூஜை அன்று பெருமாள் மூலவருக்கும், உற்சவருக்கும் திருமஞ்சனம் செய்யப்படும். அன்று தாயார் பெருமாள் தேவாதி தேவனோடு சேர்த்தியாக எழுந்தருளுவார். விஜய தசமியன்று பெருமாள் குதிரை வாகனத்தில் புறப்பாடு கண்டரு ளுவார். அன்று வன்னி மரத்துக்கு அம்பு போடும் சேவை நடைபெறும்.

19. தசரா விழா

இந்தியாவின் கடைக் கோடியான கன்னியாகுமரியில் நவராத்திரி விழா அற்புதமாக நடைபெறும். பாணாசுரன் என்ற அசுரனை பார்வதி தேவி போரிட்டு அழிக்கிறாள். இப்பொழுதும் இந்தச் சம்பவம் பள்ளிவேட்டை என்ற நாட்டுக் கூத்தாக நவராத்திரி சமயத்தில் நடைபெற்று வருகிறது. நவராத்திரி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில், சர்வ அலங்கார பூஷிதையாக அன்னை வீதி வலம் வருகிறாள்.

கேரளத்தில் ஓணம் திருவிழாபோல, கர்நாடகாவில் தசரா விழா பிரசித்தி பெற்றது. அதில் யானை பவனி கண் கொள்ளாக் காட்சி. கர்நாடகத்தின் பல பகுதிகளிலிருந்து யானைகள் வரவழைக்கப்படும் அதில் எந்த யானை அன்னை சாமுண்டீஸ்வரியைச் சுமக்கப் போகிறது என்பது முக்கியம். பல்வேறு பரிசீலனைக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட யானையின் முதுகில் தங்க சிம்மாசனம் அமைத்து சாமுண்டீஸ்வரி அம்மனை எழுந்தருளச் செய்வார்கள். அந்த யானை முதலில் செல்ல மற்ற யானைகள் அணிவகுத்து செல்லும் காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும்.

20. சரஸ்வதி சப்தமி

கல்விக்கும், தொழிலுக்கும்,(தொழிலே கல்வி தான்) ஆதார சக்தியாக விளங்கும் கலைமகளுக்குச் சிறப்புப் பூஜை செய்வதே “ஆயுதபூஜை” எனும் சரஸ்வதி பூஜை . வீடுகளில் அலுவலகங்களில் பயன்படுத் தக்கூடிய பொருட்கள், இயந்திரங்கள், வாகனங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அன்று சுத்தம் செய்து, தூப தீபம் காட்டி புஷ்பங்களைத் தூவி வழிபாடு செய்வார்கள். நம்முடைய சமயம் ஆண் பெண் எனும் சக்திகளைக் கொண்டுதான் இயங்குகிறது படைப்புத் தொழிலைச் செய்யும் பிரம்மாவின் சக்தி, சரஸ்வதியாக வெளிப்படுகிறாள். சரஸ்வதி தேவியின் அவதார நாள் சப்தமி திதி. நவராத்திரியில் சப்தமி நாளில் சரஸ்வதியை வணங்க வேண்டும். அன்றிலிருந்து மூன்று நாட்கள் அதாவது சப்தமி, அஷ்டமி, மஹாநவமி, கலைமகளுக்கு உரிய நாட்கள்.

21. வித்யா தேவதை

“கலைகளெல்லாம் அள்ளித் தருபவளே

இளம் கன்னித் தமிழாய்த் திகழ்பவளே!”

- என்றொரு பாடல் உண்டு. சரஸ்வதிக்கு கலைமகள் என்று பெயர். வித்யா தேவதை என்று சொல்வார்கள். கலைமகளே நாற்பத்தி ஒன்பது புலவர்களாக தமிழ்ச் சங்கத்தில் வீற்றிருந்தாள் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. அனைத்து உயிர்களின் நாவினிலும் கலைமகள் வீற்றிருக்கிறாள் என்கிறது கந்தபுராணம். யாரை உபாசித்தால் கலைகளெல்லாம் ஒருவருக்கு வசப்படுமோ அந்த கலைகளுக்கு அதிதேவதை என்பதாலும் கலைமகள் என்று அழைக்கப்படுகிறாள்.

ஓங்கார ஒலியில் உறைந்திருப்பவளும், நாத மயமான இசையில் கலந்திருப்பவளும், அறிவின் உறைவிடமாகவும், நினைவின் நிறைவிடமாகவும், சகல மொழிகள் மற்றும் எழுத்தின் வடிவமானவளும், அறிவியல், ஜோதிடம் போன்ற அனைத்து கலைகளின் ஒருமித்த முழு வடிவமாகவும் விளங்கும் கலை மகளுக்கு பற்பல பெயர்கள் உண்டு. அவற்றில் சில நாமங்கள்: பத்மாக்ஷி, விமலா, ஞானமுத்ரா, சாவித்ரி, சௌதாமினி, பிரம்மி, சுபத்ரா எனப்பல பெயர்கள் உள்ளன. ரிக் வேதத்தில் தான் சரஸ்வதி ஸூக்தம் எனும் பிரத்தியேகமான மந்திரங்கள் உள்ளன.

22. படிக்க வேண்டும்

சரஸ்வதி பூஜை அன்று அதிகாலையில் கண் விழிக்க வேண்டும். அன்று சூரிய உதயத்திற்கு முன் படிக்க வேண்டும். சரஸ்வதி பூஜை முடிந்ததும் ராமாயணத்தின் ஒரு பகுதியை அவசியம் வாசிக்க வேண்டும். பிறகு பூஜையில் புத்தகங்களை வைக்க வேண்டும். விஜயதசமி அன்று புனர்பூஜை செய்து மறுபடியும் புத்தகங்களைப் படிக்கத் தொடங்க வேண்டும். அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது சிறப்பு. குறைந்தபட்சம் அன்று குழந்தைகளின் கல்வியைத் தொடங்கும் நாளாக வைத்துக்கொள்வது நல்லது. இதனால் குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயிலில் குழந்தைகளுக்கு விஜயதசமி அன்று நாக்கில் நெல்லால் ஓம் எனும் பிரணவத்தை எழுதி வித்யாப்பியாசம் செய்கிறார்கள்.

23. சரஸ்வதி ஆலயங்கள்

சரஸ்வதி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது தமிழ்நாடு கூத்தனூரில் உள்ள சரஸ்வதி ஆலயம் . இது தவிர கர்நாடகாவில் சிரிங்கேரி, கடக் எனும் இடங்களில் தனி ஆலயம் உள்ளது. ஆந்திராவில் பசர எனும் இடத்தில் தனி ஆலயம் உள்ளது. காஷ்மீரின் தக்த்-இ-சுலைமான் மலையில் ‘சர்வஜ்ன பீத’ என்றழைக்கப்படும் பழங்காலத்திய ஆலயம் உள்ளது. திபெத், நேபாளம், இந்தோனேசியா மற்றும் ஜப்பான் நாடுகளிலும் இந்ததெய்வத்தின் மீதான வழிபாடு நடைமுறையில் உள்ளது.

இங்கு ‘பென்சய்-டென்’ எனும் பெயரில் வழங்கப்படுகிறாள். திருவீழிமிழலை திருத்தலத்தில் சரஸ்வதி, காயத்ரி, சாவித்ரி ஆகிய மூன்று தேவியரும் தனித்தனியே சிவலிங்கம் ஸ்தாபித்து சிவபூஜை செய்தனர். திருமயிலை கபாலீச்சரம், அம்பிகை மயிலாக வந்து இறைவனை வழிபட்ட தலம். இதே தலத்தில் சரஸ்வதிதேவியும் இந்திராணியும் சிவவழிபாடு செய்துள்ளார்கள்.

24. அஷ்ட சரஸ்வதிகள்

அஷ்டலட்சுமி போலவே அஷ்ட சரஸ்வதிகள் உண்டு. கட சரஸ்வதி, கினி சரஸ்வதி, அந்தரிக்ஷ சரஸ்வதி ,சித்ரேஸ்வரி, வாகேஸ்வரி, கீர்த்தீஸ்வரி, கலைவாணி, துளஜா ஆகிய அஷ்ட சரஸ்வதிகள் உள்ளனர் நவராத்திரி களில் கலைவாணியை எட்டு விதமான அலங்காரங்கள் செய்வார்கள். குமரி மாவட்டம், பத்மநாபபுரத்தில் தனிக் கோயிலில் அருள் புரியும் சரஸ்வதி தேவியை கவிச் சக்ரவர்த்தி கம்பர் வழிபட்டார் என்கிறது வரலாறு. கவிச் சக்கரவர்த்தி கம்பர் பல தமிழ் நூல்களையும், தனிப் பாடல்களையும் இயற்றி இருக்கின்றார். அவர் இயற்றிய இரண்டு அந்தாதி நூல்கள் உண்டு. ஒன்று தன்னுடைய குருவாகக் கருதிய நம்மாழ்வார் மீது இயற்றிய சடகோபர் அந்தாதி. அடுத்து கலைவாணி சரஸ்வதி தேவியின் மீது இயற்றிய சரஸ்வதி அந்தாதி.

25. அறுபத்தி நான்கு கலைகளுக்கும் அன்னை

சரஸ்வதி அந்தாதியில் உள்ள செய்யுள்கள் அதி அற்புதமாக இருக்கும். சரஸ்வதி தேவியின் வணங்கத்தக்க திருவுருவை வர்ணிக்கும் வார்த்தைகள் நம் எண்ணத்தை கொள்ளை கொள்ளும். அதில் நாம் தினமும் சொல்லத்தக்க இரண்டு பாடல்கள்,

1.ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய

உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே

இருப்பளிங்கு வாரா(து) இடர்.

2.படிக நிறமும் பவளச் செவ்வாயும்

கடிகமழ் பூந்தாமரை போற் கையும் - துடியிடையும்

அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்

கல்லும்சொல் லாதோ கவி.

இதில் கலைமகளைப் பற்றிச் சொல்லும் செய்திகள் அதிகம்.

அறுபத்தி நான்கு கலைகளுக்கும் அவள் தான் அன்னை. அவள் அறிவு மயமாக உள்ளத்தில் இருந்தால் துன்பம் என்னும் இருள் மயம் விலகும். இடர்கள் வராது. அதுமட்டுமல்ல அவளுடைய அற்புதமான திருவுருவத்தை மனதில் இருத்தி வணங்கினால், அசையாத கல் கூட, எல்லோ ரையும் இசைவிக்கும் கவிபாடும். எனவே ஒருவன் கல்வியில் வல்லவனாக வேண்டும் என்று சொன்னால், நா மகளின் நல்லருள் வேண்டும் என்பது கம்பர் வாக்கு.

26. ஸ்ரீ சியாமளா தண்டகம்

காளிதாசன் சமஸ்கிருத இலக்கியத்தில் சிறந்து விளங்கியவர். சாகுந்தலம், மேகதூதம், இரகுவம்சம், குமாரசம்பவம், ருது சம்ஹாரம் போன்ற நூல்கள் இந்திய மொழி இலக்கியங்களில் முக்கிய இடம் வகிக்கிறது. காளிதாசனுக்கு வாக்கு வன்மையைத் தந்தவள் சியாமளா தேவி. அவள் மேல் பாடிய முதல் துதி ஸ்ரீ சியாமளா தண்டகம். இருபத்தாறுக்கும் மேலான எழுத்துக்களைக் கொண்ட பத்திகளை உடைய கவிதை “தண்டகம்” எனப்படுகிறது. அதிலேயே காளிதாசர் கல்விக் கடவுளான சியாமளா தேவியை கலைமகளின் இடத்தில் வைத்து வர்ணிக்கிறார்.

மாணிக்ய வீணாம் முபலாலயந்தீம்

மதாலஸாம் மஞ்சுளவாக் விலாஸாம் |

மாஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம்

மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி ||

மாணிக்க கற்கள் இழைத்த அருமையான வீணையை மடியில் வைத்திருப்பவளே.!. தெளிவும் சுறுசுறுப்பும் நிறைந்தவளே! இனிய சொற்களை பேசும் குரல் அழகு உடையவளே அற்புதமான நீல மணியின் ஒளி வாய்ந்த மெல்லிய மேனி உடையவளே! மதங்க முனிவரின் திருமகளே! உன்னை நான் வணங்குகின்றேன் என்பது முதல் ஸ்லோகத்தின் பொருள். சகல கலைகளிலும் தேர்ச்சி பெற சியாமளா தண்டகத்தின் இந்த ஒரு ஸ்லோகத்தைத் தினசரி பூஜை அறையில் பாட வேண்டும்.

27. ஹயக்ரீவரையும் வணங்க வேண்டும்

மஹாவிஷ்ணு இவ்வுலகைக் காக்கவும், வேதங்களை மீட்டு வரவும், அற்புதமான வடிவம் எடுத்தார். அந்த வடிவம் தான் ஹயக்ரீவ அவதாரம். ஹயக்ரீவருக்கு பரிமுகன் என்றொரு பெயர் உண்டு. உபநிஷத்தில் ஹயக்ரீவர் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. மத்வ ஸம்பிரதாயத்தில் ஸ்ரீ வாதிராஜ ஸ்வாமிகள் ஹயக்ரீவ உபாசகராக விளங்கி புகழ் பெற்றார். ஹயக்ரீவருக்கும் சரஸ்வதிக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவரும் ஞானமும் ஆனந்தமயமான, தூய்மையான ஸ்படிகம் போன்ற தேகத்தை உடையவர்கள். சகல கலைகளுக்கும் ஆதாரமானவர்கள். சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதி குருவான ஹயக்ரீவரையும் வணங்க வேண்டும்.

28. தட்சிணாமூர்த்தி

சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி இரண்டு தெய்வங்களுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. சரஸ்வதி ஞான மூர்த்தி. தட்சிணாமூர்த்தியும் ஞான வித்தையை அருள்பவர். சர்வ கலைகளுக்கும் பிரபு அவர். மேதா தட்சிணாமூர்த்தி அறிவு வெளிச்சத்தையும் வாக்கு வன்மையையும் அருளும் தெய்வமாக இருக்கிறார். சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி என இருவருமே அட்ச மாலை, சுவடி இவற்றோடு சந்திர கலையைத் தலையில் தரித்து காட்சி தருகிறார்கள். சரஸ்வதிக்கும் தட்சிணாமூர்த்தியை போல நெற்றிக்கண் உண்டு.

அது காமத்தை எரித்து ஞானத்தை உணர்த்தும். இரண்டு தெய்வங் களுக்கும் ஜடாமகுடம் உண்டு. இருவருமே சுத்தமான வெண்மையை விரும்புபவர்கள். அதனால்தான் அனைத்தையும் ஊடுருவிப் பார்க்கும் ஸ்படிக மாலையை இருவரும் கையில் வைத்திருக்கிறார்கள். இரண்டு தெய்வங்களையும் வணங்கினால் ஞானம் தானே வந்தடையும். ஞானம் வந்தால் உள்ளம் நிறைவு பெற்று, அடங்கி, சாந்தி பெறும்.

29. ஆயுத பூஜை விழா

மகாபாரதத்தில் ஆயுத பூஜை குறித்த செய்தி உண்டு. மகாபாரதத்தில் பாண்டவர்கள் யார் கண்ணிலும் படாமல் மறைந்திருந்து வாழும் அஞ்ஞாத வாசத்தை மேற்கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்கள் விராட தேசத்தில் வேலைக்காரர்களாக இருந்தனர். அவர்களை எப்படியாவது கண்டுபிடித்து மறுபடியும் காட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று துரியோதனன்மும் முரமாகத் தேடிக்கொண்டிருந்தான்.

அப்போது ஒற்றர்கள் மூலம் பாண்ட வர்கள் விராட தேசத்தில் மறைந்து இருக்கிறார்கள் என்பதை ஊகித்து, அந்த நாட்டின் மீது படை எடுத்தான். அங்கு பெண் வேடம் பூண்டு இருந்த அர்ஜுனன் விராடனின் மகனான உத்தரனை முன்னிறுத்தி தேரில் வருகின்றான். அந்த ஊர் மயானத்தில் உள்ள வன்னி மரத்துப் பக்கம் தேரைச் செலுத்தி, அம்மரத்தின் மீது மறைத்து வைத்திருந்த தனது ஆயுதங்களை எடுக்கின்றான். அப்பொழுது அந்த ஆயுதங்களுக்கு, ஒரு படையல் போட்டு விட்டு, போர் செய்யத் தொடங்குகிறான். இது மகாபாரதத்தில் நாம் காணும் ஆயுதபூஜை விழா.

30. சரஸ்வதி பூஜை கொண்டாட சகல தோஷங்களும் போகும்

புரட்டாசி மாதம் 10 நாட்கள் தொடர்ந்து விரதமிருந்து தேவியை வணங்குவதன் மூலம் அற்புதமான வாழ்க்கையைப் பெறலாம். சக்தியைப் பெறலாம். ஆற்றலைப் பெறலாம். அற்புத வரங்களைப் பெறலாம். மிக எளிமையான விரதம் தான் இது. ஒவ்வொரு நாளும் காலையில் எதுவும் சாப்பிடாமல் மாலை பூஜை செய்து சாப்பிட வேண்டும். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும். எல்லோரோடும் சேர்ந்து குதூகலமாகக் கொண்டாடுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

ஒற்றுமை ஓங்கும். ஒவ்வொரு நாளும் நவதானியங்களில் ஒவ்வொரு விதமான தானியத்தைக் கொண்டு சுண்டல் செய்து பகவானுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும்.நவராத்திரியில் கொலு வைப்பதால், வீட்டிலிருக்கும் சகல வாஸ்து தோஷங்களும் விலகி, நன்மை பயக்கும். எப்போதும் சந்தோஷம், நிம்மதி, பெருமை, ஆரோக்கியம் கிடைக்கும். சகல ஐஸ்வர்யங்களுடன், வம்சம் வளர்ச்சி பெற்று, அன்புடனும், பண்புடனும் வாழ்வாங்கு வாழ முடியும்.

எஸ். கோகுலாச்சாரி