நாடெங்கும் நவராத்திரி விழா கோலாகலமாகவும் விமரிசையாகவும் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலும் முப்பெருந்தேவியரான லட்சுமி, சரஸ்வதி, துர்க்கையைப் போற்றி வழிபடுகிறார்கள். ஆனால், மும்பை போன்ற பகுதிகளில், லட்சுமியைச் சிறப்பித்தும், கேரளாவில் பல பகுதிகளில் சரஸ்வதியைப் போற்றியும், மேற்கு வங்காளத்தில் துர்க்கைக்கு முக்கியத்துவம் அளித்தும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் வித்தியாசமாகக் கொண்டாடப்படும். நான்கு நவராத்திரிகள் பற்றிய செய்திகளை அறிந்து கொள்வோம்.
நல்லுறவை நாடும் நவராத்திரி பவனிஆதிபராசக்திக்கு ஆயிரமாயிரம் வடிவங்களும் பெயர்களும் இருந்தாலும் மகாசரஸ்வதி, மகாலட்சுமி, மகா பார்வதி ஆகிய மூன்று திருநாமங்கள் கொண்டதே முக்கிய வடிவங்களாகும்!மனிதனுக்குரிய குணங்களான சத்வம் (மென்மை) கொண்டவளாய் மகாலட்சுமியும், ரஜோ (வன்மை) குணம் கொண்டவளாய் மகா சரஸ்வதியும், தமோ (மந்தம்) குணம் கொண்டவளாய் மகா பார்வதியும் உள்ளனர். இந்த குணங்கள் எல்லாம் ஏதாவது ஒரு சமயத்தில் மனிதனுக்கு உதவுகிறது. எனவே தான் நாம் மூன்று தேவியரையும் வழிபடுகிறோம்.
ஆதி பராசக்திைய மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும், மூன்று நாட்கள் லட்சுமியாகவும், மூன்று நாட்கள் துர்கையாகவும் வழிபடுவது தான் நவராத்திரியின் சிறப்பம்சம். நாடு முழுவதும் நடைபெறும். இந்த விழாவில் நாட்டின் தெற்கு எல்லையில் நாடு, மொழி, இனத்தைக் கடந்து இரு மாநிலங்களுக்கு இடையே இருக்கும் நல்லுறவைப் பேணும் விழாவாக நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
ஆண்டுதோறும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்காக தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் இருந்து சுவாமி, தேவிகளின் உற்சவ விக்கிரகங்கள் மூன்று நாள் பவனியாக கொண்டு செல்லப்பட்டு நவராத்திரி நாட்களில் அங்கு நடைபெறும் பூஜையில் கலந்து கொள்வதே இதன் சிறப்பு அம்சம்.பல நூறு ஆண்டுகளுக்கு முன் மன்னராட்சி நடந்து வந்த காலம். கேரளம், இன்றைய குமரியை உள்ளடக்கிய பகுதிகள் எல்லாம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்து வந்தது. அதன் தலைநகராக கி.பி.1550 முதல் 1790 வரை குமரி மாவட்டத்தில் தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் திகழ்ந்தது.
நவராத்திரி காலங்களில் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் 9 நாட்களும் பூஜைகள் வெகு விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம்.கி.பி.1790-ல் ஆட்சியில் இருந்த கார்த்திகை திருநாள் மன்னர் தர்மராஜா மகாராஜா, திருவிதாங்கூர் சமஸ்தான தலைநகரை பத்மநாப புரத்தில் இருந்து நிர்வாக வசதிக்காக திருவனந்தபுரத்திற்கு மாற்றினார். அப்போது முதல் பல நூற்றாண்டுகளாக திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் பத்ம தீர்த்தக் குளம் அருகே உள்ள நவராத்திரி மண்டபத்தில் நவராத்திரி விழா நடந்து வருகிறது.
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்காக, அதற்கு 3-நாட்கள் முன்னதாக சுவாமி, தேவி விக்கிரகங்கள் பத்மநாப புரம் அரண்மனையிலிருந்து பவனியாக கொண்டு செல்லும் வழக்கம் அதன் பின்னர் துவங்கியிருக்கிறது. இதில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை தேவி, குமார கோயில் முருகன், பத்ம நாபபுரம் தேவாரக் கெட்டு சரஸ்வதி தேவி ஆகிய விக்கிரகங்கள் எழுந்தருளி பவனியாகச் செல்கின்றன. அது மட்டுமின்றி மன்னரின் உடைவான், குமாரக்கோயிலில் உள்ள வெள்ளிக் குதிரை வாகனம் ஆகியவை பவனியில் அடங்கும்.
சரஸ்வதி தேவியின் விக்கிரகத்தை திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் பத்ம தீர்த்தக் குளம் அருகே உள்ள நவராத்திரி மண்டபத்தில் வைத்து 9-நாட்கள் நவராத்திரி பூஜைகள் செய்வர். குமாரகோயில் முருகனை ஆரிய சாலை தேவி கோயிலிலும், முன்னுத்தி நங்கை தேவியை செந்திட்டை பகவதி கோயிலிலும் வைத்து பூஜை செய்து வருவர். 9-நாட்களுக்குப் பின்னர் அங்குள்ள பூஜை புரையில் ஒரு நாள் சரஸ்வதி தேவியை எழுந்தருளச் செய்வர். தொடர்ந்து சுவாமி விக்கிரகங்கள் அனைத்தும் நவராத்திரி விழா ஆடல் பாடல் மற்ற இன்னிசைக் கச்சேரிகளோடு நிறைவு பெற்றதும் மீண்டும் குமரி மாவட்டத்திற்கு திரும்பக் கொண்டு வருவர்.
திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தாய்த் தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைந்தாலும் பல நூற்றாண்டு காலமாக தொடர்ந்து வரும் மன்னர் கால பாரம் பரியத்தோடு தமிழகம்- கேரனம் இடையேயான நல்லுறவை பேணும் விழாவாக வருடந்தோறும் இன்றளவும் நவராத்திரி பவனி நடைபெற்று வருகிறது. நல்லுறவை நாடும் நவராத்திரி பவனி குமரியிலிருந்து புறப்படும் போதும். விழா முடிந்து திருவனந்தபுரத்திலிருந்து திரும்பும் போதும் மேளம், தாளம் பல்லக்குப் பரிவாரம், வாண வேடிக்கைகளுடன் பக்தர்கள் கூட்டம் புடைசூழ வரும். காட்சியைக் காணக்கண் ஆயிரம் வேண்டும்.
வில்லில் ராமன் வழிபட்ட வன்னிய நவராத்திரி
சீதா பிராட்டியைத் தேடி வரும் வழியில் ராமபக்தை சபரியிடம் சென்று, அவள் செய்த பூஜைகளை ஏற்று, அவள் வாய் மொழியாகச் சுக்ரீவனைப் பற்றிய விவரங்களை அறிந்து, அவனுடன் நட்புக் கொள்வதற்காக லட்சுமணனுடன் கிஷ்கிந்தை நோக்கிச் சென்றார் ராமர்.வாயுமைந்தன் அனுமன் எதிர்கொண்டு ராம-லட்சுமணர்களைச் சந்தித்து அன்புடன் வரவேற்றார். பிறகு ராமர் சுக்ரீவனை அடைந்து தம் வலிமையைக் காட்டி நட்புக் கொண்டார். அதன் பின் அவனை வாலியுடன் போருக்கு அனுப்பினர். தாரை தடுத்தும் போருக்கு வந்து விட்ட வாலியை ஒரே அம்பினால் வீழ்த்தி வாலிக்குத் தான். அபராதி என்பதை உணர வைத்து, சாந்தியளித்து, பின்பு லட்சுமணனைக் கொண்டு சுக்ரீவனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்தார். சுக்ரீவன் சுகமாகக் கார் காலத்தை மனைவியருடன் கழித்து வந்தார்.
இந்த நிலையில் சீதையின் பிரிவாற்றாமையால் ராமர் பெரிதும் வருந்தினார். அவளை எண்ணியெண்ணி மறுகினார். அப்போது அங்கே திரிலோக சஞ்சாரியான நாரதமுனிவர் வந்தார்.
ராமபிரான் நாரதமுனியை வரவேற்று தனது வருத்தத்திற்குரிய காரணத்தைக் கூறி, ‘‘முனிபுங்கவரே! என்னுடைய துன்பம் நீங்குமா? என் மனைவி சீதையை நான் மீண்டும் பெற முடியுமா? அதற்கான வழியாது?’’என்று வருத்தத்தோடு கேட்டார்.
அதற்கு நாரதமுனிவர், ‘‘ராமா! கவலை வேண்டாம். நீ நினைத்த காரியம் எல்லாம் விரைவில் சுகமாக முடியும். விரைவில் கீதை உன்னிடம் வந்து சேர்வாள் அதற்கு ஒரு வழி இருக்கிறது. நாளை நவராத்திரி தொடங்குகிறது. நீ விரதம் இருந்து விநாயகப் பெருமானை முன்வைத்து முப்பெருந்தேவியர்களான லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை ஆகியோரை வழிபட்டு நவராத்திரி மகோத்சவத்தை நடத்தினால் நீ நினைத்த காரியம் விரைவில் கைகூடும்!’’ என்றார்.
அதற்கு ராமர், ‘‘முனிவரே! சுற்றிலும் அடர்ந்த காடுகள் சூழ்ந்த மலைப் பகுதியில் நான் இருக்கிறேன். இந்நிலையில் நான் எப்படி நவராத்திரியைக் கொண்டாட முடியும்?’’ என்று கேட்டார்.
அவ்வுரை கேட்ட நாரதர், ‘‘ராமா! ‘வன்னிய நவராத்திரி’ என்று ஒன்று உண்டு. இதைக் கொண்டாடுவதற்கு பூஜைப் பொருட்கள் எதுவும் தேவையில்லை அது சுகந்த மூலிகைகளைக் கொண்டு செய்வது! கானகத்தில் வசிக்கும் மகாமுனிவர்களும் மகரிஷிகளும், ஏனைய துறவிகளும் இந்த வன்னிய நவராத்திரியைக் கொண்டாடி மகிழ்வார்கள். இதனால் முன்னோர்களும் மூதாதையர்களும் மகிழ்ச்சி அடைவார்கள். உன் எண்ணம் நிறைவேறும் எனவே நீ இந்த வன்னிய நவராத்திரியைப் பக்தியுடன் கொண்டாடு. அனைத்தும் நல்ல விதமாய் நடந்தேறும்!’’ என்றார்.‘‘முனிவரே! அதென்ன வன்னிய நவராத்திரி! நான் கேள்விப்பட்ட தேயில்லை. விவரமாகக் கூறுங்கள்!’’ என்றார் ராமர்.
‘‘ராமா! வன்னி நவராத்திரி பற்றி விநாயகர் புராணதில் கூறப்பட்டுள்ளது. அது ஒரு சுவரரஸ்யமான வரலாறு கூறுகிறேன் கேள்.‘‘ஒரு சமயம் சௌம்யர் புத்திரனும், சௌநகர் மாணாக்கனுமாகிய மந்தாரகன் என்பவன். தன் பத்தினியும், ஔரவர் புத்திரியுமாகிய சமி எனும் வன்னி எனப் பெயர் கொண்டவளுமாகிய மனைவியுடனும், ஒரு அடர்ந்த கானகத்தின் விழியாக வரும் போது, விநாயகப் பெருமான் சாரூபம் பெற்ற புருசுண்டி முனிவர் என்பவர் எதிரே வந்து கொண்டிருந்தார். அவருக்கு விநாயகரைப் போன்றே நீண்ட துதிக்கை உண்டு. அதைக் கண்டு மந்தாரகனும் வன்னியும் கேலியாகப் பார்த்து கிண்டல் செய்து சிரித்தனர். முனிவரை அவமதித்தனர்.’’
‘‘இதனால் கோபம் கொண்ட புருசுண்டி முனிவர் அவ்விருவரையும் பார்த்து, ‘‘மூட மதியாளர்களே! உங்களைச் சபிக்கிறேன். மந்தாரகா, மந்தாரை விருட்சமாகவும், வன்னியே நீ வன்னி விருட்சமாகவும் ஆவீர்களாக!’’ எனக்கடும் சாபமிட்டார். அவர்களிருவரும் தங்கள் தவறை உணர்ந்து வருந்தியதோடு முனிவரின் அடிபணிந்து தங்களை மன்னித்து சாப விமோசனம் அளிக்குமாறு வேண்டி வணங்கி நின்றனர்.
புருசுண்டி முனிவர் அவர்களைப் பார்த்து, ‘‘சாபம் கொடுத்தது கொடுத்தது தான். நீங்கள் இருவரும் மந்தாரை மற்றும் வன்னி விருட்சங்களாக இருக்க, உங்கள் நிழலில் விநாயகப் பெருமான் எழுந்தருளுவார். அக்காலத்து சாபம் நீங்கி விநாயகப் பெருமானின் அன்புக்குரியவராவீர்கள். நீங்கும் இருவரும் என்றென்றும் புனித விருட்சங்களாகவே போற்றப்படுவீர்கள்!’’ என்று கூறிச் சென்றார்.
தம் மாணாக்கர் நிலையை யோகத்தால் அறிந்த சௌநகர் வனமடைந்து விநாயகர் பூஜை புரிய, விநாயகப் பெருமான் தரிசனம் தர. தம் மக்களின் சாபம் தவிர்க்க வேண்டும்!’’ என்று வேண்டினார். அவரைப் பார்த்து விநாயகப் பெருமான், ‘‘முனிவரே! இவர்கள் இருவரும் தங்களது பெயர் கொண்ட மதங்களாக இருந்து எல்லோராலும் பூஜிக்கும் பேற்றைப் பெற்றுள்ளனர். தாம் அம்மரங்களினடியில் எழுந்தருளியிருந்து இவர்கள் பெயர் கொண்ட வன்னி மந்தாரைப் பத்திரங்களால் பூசிப் போர்க்கு இஷ்டசித்தி பெற்று சுபிட்சம் அடைவர்!’’ என்றருளி மறைந்தார்.
ராமா! இதுதான் வன்னியின் வரலாறு. இது விநாயகர் புராணத்தில் உள்ளது. இது பாபத்தை சமிக்கச் செய்வதால் சமி என்றும் பெயர் பெறும் இவ்விருட்சங்களின் அடியில், ஈசான்ய திசையில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வன்னி, மந்தாரைப் பத்திரங்களால் முப்பெருந்தேவியரை எண்ணி விநாயகப் பெருமானை அர்ச்சித்து வழிபட்டால் சத்ருக்கள் அழிவர். எண்ணிய காரியம் நிறைவேறும்!’’ என்று கூறி முடித்தார் நாரதர்.
நாரதர் மற்றும் தம்பி லட்சுமணனின் துணையுடன் வன்னிய நவராத்திரி பூஜையை பக்தியோடு செய்து முடித்தார் ராமர்.ராமபிரான் வன்னிய நவராத்திரியை இப்படியாகக் கொண்டாடியதும் புத்துணர்ச்சி பெற்றார். ஊக்கத்துடன் சுக்ரீவனை வரச்செய்தார். சீதையைத் தேடி தென் திசை நோக்கிச் செல்லுமாறு அனுமனுக்கு உத்தரவிட்டார். அனுமனும் ராமன் கணையாழியைப் பெற்றுச் சென்று சீதையைத் தேடிக் கண்டு பிடித்து கணையாழியைச் சேர்ப்பித்து, அவள் தந்த சுடாமணியைப் பெற்றுக் கொண்டு வந்து ராமரிடம் சமர்ப்பித்தார் ராமர் தன்னை நாடி வந்த ராவணன் தம்பி விபீஷணனுக்கு அடைக்கலம் அழித்தார். சீதையை மீட்டார். பின்னர் இலங்கை மன்னனாக விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் செய்தார்.
நவராத்திரியில் மூக்குத்தி தரிசனம்
மதுரை அரசாளும் மீனாட்சியின் மாணிக்க மூக்குத்தி மிகவும் பிரசித்தி பெற்றது. அது போல கும்பகோணம் வேத நாராயண பெருமாள் கோயில் காயத்ரி தேவியின் மூக்குத்தி தரிசனம் மிகவும் விசேஷம்.கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உச்சிப் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது புராதனமான, பழம்பெருமை வாய்ந்த வேதநாராயணப் பெருமாள் கோயில். இதை பிரமன் கோயில் என்று அழைக்கின்றனர்.
அழகிய வடிவில் கலையம்சங்கள் நிறைந்த பதுமைகளுடன் மூன்று விமானங்கள் கொண்டு அழகாக காட்சியளிக்கிறது வேதநாராயணப் பெருமாள் கோயில். கருவறையில் பிரம்மா தன் தேவியர்களான சரஸ்வதி, காயத்ரி தேவியிருடன் நின்ற கோலத்தில் வேத நாராயணப் பெருமாளிடம் ஆசிபெறும் கோலத்தில் உள்ளார். அடுத்துள்ள மூலஸ்தானத்தில் வேதநாராயணப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். பிரம்மனுக்கு எதிரில் யோக நரசிம்மர் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உள்ளார். இப்படி ஒரே இடத்தில் அடுத்தடுத்த சந்நதிகளில் மூன்று தெய்வங்களையும் தம்பதி சமேதராய் தரிசிப்பது இத்தலத்தின் சிறப்பம்சம் ஆகும்.
கல்வியில் சிறந்து விளங்குவதற்கும், தொழிலில் மேன்மையடையவும் இங்கு ‘‘பிரம்ம சங்கல்ப பூஜை’’ செய்யப்படுகிறது.குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்குமுன் இங்குள்ள பிரம்மா, சரஸ்வதி, காயத்ரிக்கு விசேஷ பூஜையும் அர்ச்சனையும் செய்கிறார்கள். வியாழக்கிழமைகளில் பிரம்மனுக்கு சிறப்பு பூஜை உண்டு.
கடன் பிரச்னைகள் தீரவும், வறுமையைப் போக்கவும் செல்வம் சேரவும் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. சனிக்கிழமைகளில் வேதநாராயணப் பெருமாளுக்கும், யோக நரசிம்மருக்கும் விசேஷ வழிபாடுகள் உண்டு. அதோடு ஆயுள் அவ்விருந்தி, சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, கடன் நிவாரணம் ஆகியவற்றுக்காக சிறப்பு ஹோமங்கள் செய்யப்படுகிறது.
இத்திருக்கோயில் நவராத்திரி விழா மிகவும் சிறப்பாகவும் வித்தியாசமாகவும் கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி பூஜையன்றும், ரோகிணி நட்சத்திர நாட்களிலும் அதிசயமாக நடைபெறும் ‘‘மூக்குத்தி தரிசனம்’’ நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த மூக்குத்தி தரிசனம்’’ குறித்து ஆலயத்தின் தல வரலாறு கூறுவது என்னவென்று பார்ப்போமா? உயிர்களைப் படைக்கும் தொழில் தன்னிடம் மட்டுமே உள்ளது. சிவன், விஷ்ணுவிடம் இந்த சக்தி இல்லை என்பது குறித்து பிரமனுக்கு கர்வம் ஏற்பட்டது. இதை அறிந்த மகாவிஷ்ணு ஒரு பூதத்தை பிரம்மனிடம் அனுப்பினார். பூதத்தைப் பார்த்ததும் பயந்த பிரம்மா, மகாவிஷ்ணுவிடம் சென்று தான் படைக்காத பூதம் ஒன்று தன்னை வந்து பயமுறுத்துவதாகவும், கொலை மிரட்டல் விடுவதாகவும் அதனிடமிருந்து தன்னைக் காப்பாற்றும்படியும் வேண்டினார்.’
அதற்கு மகாவிஷ்ணு, ‘‘பூமியில் கும்பகோணம் எனும் திருத்தலம் சென்று தவம் செய்தால் உமக்கு விமோசனம் கிடைக்கும்’’ என்றார்.ஒருமுறை பிரளயம் ஏற்பட்டு உலகம் அழிந்த காலத்தில் இந்த பூமியில் அழியாமல் இருந்த பெருமை பெற்றது கும்பகோணம். அங்கு சென்று பிரம்மா யாகம் செய்தார். அவரது துணைவியரான சரஸ்வதியும், காயத்ரி தேவியும் உடனிருந்தனர்.
பிரம்மாவுக்கு நான்கு தலை காயத்ரி தேவிக்கு ஐந்து தலை. கணவரை விடமனைவிக்கு அதிக தலை இருந்ததால் யாக குண்டத்தில் இருந்து நெருப்பு எழவில்லை. உடனே அருகில் இருந்த சரஸ்வதி தேவி தனது மந்திரப் பார்வையால் காயத்ரி தேவியைப் பார்க்க ஒரு முகம் மறைந்து, பிரம்மாவை நோக்கி இருந்தது. அந்த முகத்தில் இருந்த ஒரு மூக்குத்தி ‘பளீர்’ என்று சூரியப் பிரகாசத்துடன் ஜொலித்தது. அந்த ஒளியில் உடனே யாக குண்டத்தில் நெருப்புப் பற்றியது. கொழுந்து விட்டு எரிந்தது.
உடனே ஸ்ரீ மகாலட்சுமி சமேதராக ஸ்ரீ மகாவிஷ்ணு தோன்றினர். பிரம்மனுக்கு சாபவிமோசனம் கொடுத்து, வேதங்களைச் சொல்லித் தந்து, வேத நாராயணப் பெருமாள்’ என்று பெயர் பெற்றார். தாயார் வேதவல்லி நாச்சியார் எனப் போற்றப்பட்டார்.யாகம் முடிந்தவுடன் கலந்து கொண்டவர்கள் அனைவரும் ஜலத்தை சுற்றி வரும் ‘அவபிருதஸ்நானம்’ செய்வதற்காக மகாவிஷ்ணு தன் கதாயுதத்தால் பூமியைப் பிளந்து ஒரு நதியை உருவாக்கினார். இந்த நதி ஆதியில் ‘ஹரிசொல்லாறு’ என்று அழைக்கப்பட்டது. காலப் போக்கில் மருவி ‘அரசலாறு’ எனப் பெயராயிற்று.காயத்ரி தேவியின் மூக்குத்தி ஒளிபட்டு யாக குண்டம் தீப்பற்றியதால், இத்திருத்தலத்தில் ‘மூக்குத்தி தரிசனம்’ முக்கியத்துவம் பெற்றது.
நவராத்திரி நாளில் வரும் சரஸ்வதி பூஜையன்றும், ரோகிணி நட்சத்திர நாட்களிலும் அன்னை காயத்ரி தேவியின் மூக்குத்தி தரிசனம் நிகழ்ச்சி இங்கு மிகவும் விசேஷமாக நடக்கும். காயத்ரி தேவியின் மூக்குத்தி அளியை இங்கு காணலாம். இந்த அற்புத தரிசனத்தைக் காண ஏராளமான பெண்கள் திரண்டு வருகிறார்கள். இதைக் காணும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும் என்ற நம்பிக்கையுடன் வந்து வழிபடுகிறார்கள். நவராத்திரி நாட்களில் 9 நாளும், ரோகிணி நட்சத்திர நாட்களிலும் மட்டும் இலவச மூக்குத்தி தரிசனத்துக்கு அனுமதிக்கிறார்கள். இதைக் காணவே நவராத்திரி நாட்களில் ஏராளமான பெண்கள் வருகிறார்கள். மற்ற நாட்களில் அன்னை காயத்ரி தேவியின் மூக்குத்தி தரிசனத்துக்கு உரிய கட்டணம் செலுத்தித்தான் தரிசிக்க முடியும்.
வங்கத்தில் நவராத்திரி விழா, மக்கள் விழா
வங்கதேசத்தில் நவராத்திரி விழா உண்மையிலேயே மக்கள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. பழங்காலத்தில் இந்து மன்னர்களும் பின்னர் ஜமீன்தார்களும் மகாளய அமாவாசைக்கு மறுநாள் பிரதிமை துவங்கி தசமி வரை பத்து நாட்கள் துர்க்கா பூஜைையத் தங்கள் இல்லங்களில் மிகச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள் மற்ற இடங்களில் சரஸ்வதி பூஜைக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். ஆனால் வங்கத்தில் மட்டும் துர்க்கைக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதில் வங்க மக்கள் பெரும் ஆர்வத்துடன் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நவராத்திரி விழாவை துர்கா பூஜை என்று அழைக்கிறார்கள். கிழக்கு இந்தியக் கம்பெனியார்கள் சிறுக சிறுக நாட்டைக்கைப் பற்றி ஆட்சி புரிந்த காலத்திலிருந்து, குறிப்பாக 1757-ல் இருந்து வங்கத்தில் துர்கா பூஜை வளர்ச்சி பெற்றது.கி.பி.1757-ல் லார்ட் ராபர்ட்கிளைவ் பிளாஸிப் போரில் சிராஜ் உத்தௌலாவை வெற்றி கொண்டு, கிழக்கு இந்தியக் கம்பெனியின் வெற்றி்க் கொடியை நாட்டிய பின், தன் வெற்றியைக் கண்டோர் வியக்கும் வண்ணம் விமரிசையாகக் கொண்டாட எண்ணினார்.
ஆனால், அந்த கிராமத்தில் இருந்த பெரிய ‘சர்ச்’ போரால் சின்னா பின்னமாகச் சிதைந்து போய் விட்டது. அந்த சமயம் அவனுடைய முன்சீப்பாக இருந்த நபகிஷன் என்பவன் கல்கத்தாவுக்கு வந்து, தன் வீட்டில் நடைபெறும் நவராத்திரி விழாவில் துர்க்கா பூஜையில் கலந்து கொண்டு வெற்றியைக் கொண்டாட வேண்டுகோள் விடுத்தான்.கிறிஸ்துவரான ராபர்ட் கிளைவ் முதலில் இதற்கு இசையவில்லை. அவருக்குக் கீழ் பணியாற்றிய அதிகாரிகள் பலவாறு எடுத்துக் கூறி, ‘தங்கள் வெற்றியை அறிவிக்க இதைவிட நல்லதொரு வாய்ப்புக் கிட்டாது’ என்று அறிவுறுத்த, கிளைவ் மகிழ்ச்சியோடு முன் சீப் இல்லத்தில் 10-நாட்கள் நடைபெறும் நவராத்திரி துர்க்கா பூஜையில் கலந்து கொண்டான்.
கிறிஸ்துமஸ் விழாவைத் தவிர வேறு விழாக்களைக் கண்டறியாத கிளைவ் முதன் முதலில் இந்தியாவில் நடைபெறும் நவராத்திரி விழாவில் கலந்து கொண்டதைப் பெருமையுடன் அறிவித்தான். அங்கேயே தனக்குக் கீழ் பணியாற்றிய அதிகாரிகளுக்குப் பரிசில் வழங்கிப் பெருமைப்படுத்தினான். பின்னர் வருடந்தோறும் வரும் நவராத்திரி விழாவில் தவறாமல் கலந்து கொண்டார் கிளைவ்.
ராபர்ட் கிளைவ்வின் அடிச்சுவட்டைப் பின்பற்றிப் பின்னால் வந்த கிழக்கு இந்தியக் கம்பெனியைச் சேர்ந்த வெள்ளையர்கள், அரசர்கள் மற்றும் ஜமீன்தார்கள் நடத்திய நவராத்திரி துர்க்கா பூஜையில் ஆர்வத்துடன் ஆண்டுதோறும் தவறாமல் கலந்து கொண்டனர்.
காலப் போக்கில், குறிப்பாக நாட்டின் சுதந்திரப் போராட்ட காலத்தில் நவராத்திரி துர்க்கா பூஜை நடைபெற்ற முறையில் மாறுதல் ஏற்பட்டது. ஜமீன்தார்கள் மற்றும் பிரபுக்களின் ஏக போக உரிமையாக இருந்து வந்த துர்க்கா பூஜை ‘பொது மக்கள்’ பூஜையாக உருப்பெற்றது. இது ‘சர்வ ஜன பூஜை’ என்ற பெயரில் பகுதி தோறும் மக்கள் ஒன்று கூடி, குழு அமைத்து, நிதி வசூலித்து ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளுடன் மிகப்பெரிய தேசியத் திருவிழாவாக நடத்தத் துவங்கினர்.
நவராத்திரி விழா 10-தினங்களுக்குப் பதிலாக மகாசப்தமியில் துவங்கி தசமி முடிய 4-நாட்கள் மட்டும் சர்வ ஜனமும் கொண்டாடும் வகையில் இந்த விழாவை மக்கள் அமைத்தனர்.அப்போது ஆட்சி புரிந்து வந்த ஆங்கிலக் கம்பெனியார் சமயங்களில் வழிபாடுகளில் தலையிடாத நல்லதொரு கொள்கையைக் கொண்டிருந்தனர். இந்துக்களின் திருவிழாக்களிலும் அவர்கள் பங்கு கொண்டு சிறப்பித்தனர் காலனி மக்கள், நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு துர்க்கா பூஜை பந்தல்களில் மறைமுகமாக ஆனால் தீவிரமாக மக்களிடையே சுதந்திரப் பிரசாரத்தைத் துவக்கினார்கள்.
விழாப் பந்தல்களில் ஆங்காங்கே பாரத மாதாவை துர்க்காவாகவும் ஆங்கில அரசை மகிஷாசுரனாகவும் சித்தரித்த ஓவியங்கள் காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் அலங்காரமாக வைத்தனர். இந்தப் புதிய உத்தி, சுதந்திரப் போராட்டத்தின் மாபெரும் தலைவராகத் திகழ்ந்த பாலகங்காதர திலகர் அவர்களைப் பெரிதும் கவர்ந்தது. இதையே அவர் பின்பற்றி மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் வரும். ‘விநாயகர் சதுர்த்தி பூஜையில்’’ நுழைத்து ‘‘சர்வ ஜன பூஜை’’யாக நடத்தும் வழக்கத்தை ஏற்படுத்தினார் என்பது வரலாறு.
வங்கத்தில் மிகச்சிறிய அளவில் துவக்கப்பட்ட ‘சர்வ ஜன துர்க்கா பூஜை’ கால ஓட்டத்தில் மிகப் பெரிய தேசியத் திருவிழாவாக வளர்ந்துவிட்டது. பகுதிதோறும் நடைபெற்ற இந்த பூஜை தெருக்கள் தோறும் ஒன்றுக்கு மேற்பட்ட பூஜைகளாக வளர்ந்து விட்டது. மேற்கு வங்கம் முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் இந்த பூஜை நடந்தாலும், கல்கத்தாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ‘சர்வ ஜன துர்க்கா பூஜை’’ நடத்தப்படுகிறது. இப்பூஜைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து வருகிறது.
இதில் ஒரு விசேஷம் என்ன வென்றால், துர்க்கா பூஜை தொடங்குவதற்கு முழு ஆறு மாதங்களுக்கு முன்னரே பூஜைக்குரிய சகல திட்டங்களும், செயல்முறை விதிகளும், துர்க்கா சிலைகளும் உருவாக்கி அந்தந்தப் பகுதிக் குழுக்கள் வேலைகளைத் துவக்கி விடுகின்றன. அந்நாள் முதற்கொண்டே கல்கத்தா நகரம் விழாக் கோலம் பூண்டு, எங்கும் உற்சாகம் கரைபுரண்டு ஓடும்.விஜயதசமியன்று பூஜைகள் முடிந்ததும் நள்ளிரவில் அனைத்துத் துர்க்கை சிலைகளையும் ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள். பின்னர் அவற்றை கங்கை நதியில் கரைத்து விழாவை நிறைவு செய்கிறார்கள்.
ஆர். சந்திரிகா