அவரவர் வினைகளுக்குத் தகுந்தவாறு நன்மை தீமைகளைத் தருபவை நவகிரகங்கள். ஒருகாலத்தில் சைவத்திலும் வைணவத்திலும் நவக்கிரகங்களுக்கு என்று தனிக் கோயில்கள் இல்லை. ஆனால் பிற்காலத்தில் நவகிரக தோஷங்களை நீக்கிக் கொள்வதற்காக, அந்தந்த கிரகங்களுக்குரிய சந்நதிகளும் வந்தன. பெரும்பாலான சிவன் கோயில்களில் தனியாக நவகிரக சந்நதியும் அமைக்க ஆரம்பித்தார்கள். வைணவ வழிபாட்டில் நவகிரக வழிபாடு என்பது சொல்லப்படவில்லை. நவகிரகங்களும் பெருமாளுக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று இருந்தாலும் கூட, தஞ்சை மாவட்டத்தில் உள்ள சில வைணவ கோயில்களை ஒன்பது நவகிரகங்களுக்கு உரிய கோயில்களாக சொல்லும் வழக்கம் வந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிகளை 9 கிரகங்களுக்கு உரிய கோயில்களாகச் சொல்வது வழக்கம். அந்த வகையில் எந்தெந்த கோயில் எந்தெந்த கிரகத்திற்குச் சொல்லப்பட்டு இருக்கிறது என்பதன் அடிப்படையில் நாம் பார்க்கலாம். நவதிருப்பதி ஆலயங்களை திருவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி (தேவர்பிரான்) இரட்டை திருப்பதி (அரவிந்தலோசனன்) பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி ஆகிய வரிசைப்படி தரிசிக்கலாம்.
ஸ்ரீவைகுண்டம் (சூரியன்)
இது ஆழ்வார் நவ திருப்பதிகளில் ஒன்று. திருநெல்வேலி திருச்செந்தூரில் பாதையில் உள்ளது. திருநெல்வேலியிலிருந்து சுமார் 30 கிமீ தூரத்திலுள்ளது. பெருமாள் நின்ற திருக்கோலத்தில் வைகுண் டநாதன், கள்ளபிரான் என்ற திருநாமத்தில் சேவை சாதிக்கிறார். தாயாருக்கு வைகுந்தவல்லி, பூதேவி என்று திருநாமங்கள். காரணம் இங்கே இரண்டு தனிக்கோயில் நாச்சியார்கள் இருக்கிறார்கள்.
9 நிலைகளும் 110 அடி உயரமும் கொண்டுள்ளது இக்கோவிலின் ராஜ கோபுரம். மூலவர் வைகுண்டநாதர்; கோவிலுக்குள் இவர் சந்திர விமானத்தின் கீழ், ஆதிசேஷன் குடைபிடிக்க, நான்கு கரங்களுடன், மார்பில் மகாலட்சுமியுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் வைகுண்டநாச்சியார்.
உற்சவர் சோரநாதர் (கள்ளபிரான்) பூதேவி, ஸ்ரீதேவியுடன் காட்சி தருகிறார். தாயார் சோர நாச்சியார். இரண்டு தாயார்களுக்கும் தனித்தனி ந்நதியும், நரசிம்மர் சந்நதி, கோதண்டர் சந்நதியும் உள்ளன. தலவிருட்சம் பவளமல்லி.
தாமிரபரணி நதி தான் பிரதானம் என்றாலும் பிருகு தீர்த்தம் என்று ஒன்று உண்டு. ஆதிசேஷன் குடைபிடிக்க பெருமாள் அபாரமான கோலத்தில் காட்சி தருவார். ஒரு காலத்தில் காலதூஷகன் என்கின்ற ஒரு திருடன் தான் களவாடிய பொருளில் ஒரு பாதியை இந்த பெருமாளுக்குக் கொடுத்து விடுவானாம். ஒருசமயம் அவன் பிடிபட்டு விட்டான். அவன் பெருமாளை தியானம் செய்தான். பெருமாள் திருடன் வேடத்தில் அரசனுக்கு தத்துவங்களை உபதேசித்து, அசல் திருடனை யோகி என்று நினைக்க வைத்தான். அதன்பிறகு திருடனுக்கும் அரசனுக்கும் நட்பு உண்டாகிவிட்டது. இருவருக்கும் பகவான் காட்சி தந்தார். கள்ளபிரான் என்று அப்பொழுது திருநாமம் வந்தது.
சோமுகாசுரன் என்ற அரக்கன் பிரம்ம தேவனிடம் வேதங்களை ஒளித்து வைத்துக்கொண்டான். தாமிரபரணி ஆற்றங்கரையில் விஷ்ணுவை நோக்கி பிரம்மா தவம் இருந்தார். கடும் தவம் செய்துகொண்டிருந்த பிரம்மாவுக்கு திருமால் நேரில் காட்சியளித்து வேதங்களை சோமுகாசுரனிடமிருந்து மீட்டு பிரம்மாவிடம் ஒப்படைத்தார். தனக்கு காட்சி கொடுத்து நின்ற திருக்கோலத்திலேயே இங்கு வைகுண்டநாதனாக காட்சியளிக்க வேண்டும் என்று பிரம்மா வேண்ட திருமாலும் அப்படியே ஆகட்டும் என வைகுண்டநாதனாக நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.
இக்கோயிலில் உள்ள திருவேங்கடமுடையான் சந்நதியில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த அற்புதமான சிற்பங்கள் உள்ளன. சித்திரை, ஐப்பசி மாதங்களில் 6 ஆம் நாளன்று சூரிய ஒளி வைகுண்டநாதர் மீது விழுகின்றது. அதற்கு ஏற்றாற்போல கொடிமரம் சற்றே விலகி உள்ளது. ஆங்கிலேயருக்கு எதிராகக் கட்டபொம்மன் நடத்திய விடுதலைப் போரில் இக்கோயில் கோட்டையாகப் பயன்
படுத்தப்பட்டது.
நம்மாழ்வார் இப்பெருமாளைப் பாடியிருக்கின்றார்.
திருவரகுணமங்கை
(சந்திரன்) இது ஆழ்வார் நவதிருப்பதிகளில் ஒன்று. ஸ்ரீவைகுண்டம் திவ்ய தேசத்திற்கு அருகிலேயே உள்ளது. வரகுணமங்கை என்றால் தெரியாது. நத்தம் என்று சொன்னால் பலருக்குத் தெரியும். இங்கேயும் ஆதிசேஷன் குடை பிடிக்க வீற்றிருந்த கோலத்தில் காட்சி தருகின்றார். விஜயாசனப் பெருமாள் என்று பெருமாளுக்குப் பெயர். இங்கே தனி கோயில் நாச்சியார் இல்லை. விஜயகோடி விமானத்தின் கீழ் பெருமாள் வீற்றிருக்கிறார். வேதவித் என்ற பிராமணனுக்கு
இங்கே பெருமாள் காட்சி தந்தார். மாதா, பிதா, குரு ஆகியோருக்குரிய கடன்களை முடித்து திருமாலை நோக்கி ஆசன மந்திரத்தை ஜெபித்து கடும் தவம் புரிந்தவருக்கு திருமால் காட்சியளித்தார். ஆசன மந்திரம் ஜெபித்து இறைவன் காட்சியளித்த இடமாதலால் விஜயாசனர் என்னும் திருநாமம்.
இத்திருக்கோயிலை நம்மாழ்வார் பாடி இருக்கின்றார்.
புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கைஇருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்தஎன்சிந்தை அகம்கழியாதே என்னைஆள்வாய் எனக்குஅருளி
நளிர்ந்தசீர்உலகம் மூன்றுடன்வியப்ப நாங்கள்கூத்துஆடி நின்று ஆர்ப்ப
பளிங்குநீர் முகிலின்பவளம்போல் கனிவாய்சிவப்பநீ காணவாராயே
திருப்புளியங்குடி (புதன்)
இந்த வரகுணமங்கையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் அதே சாலையில் உள்ள ஊர். மூன்றாவது நவதிருப்பதி. பெருமாளுக்கு காய் சினவேந்தன் என்று பெயர். பூமிபாலர் என்ற பெயர்களில் பள்ளி கொண்ட நிலையில் கிழக்கு நோக்கிய கோலத்துடன் காணப்படுகிறார். சயன கோலத்தில் காட்சி தருகின்றார். தாயாருக்கு மலர்மகள் நாச்சியார், புளிங்குடி வல்லி என்று பெயர். இத்தலத்திலுள்ள இலக்குமி தேவி, பூமிப் பிராட்டி, நாச்சியார்களின் திருவுருவங்கள் வேறெங்கும் காணமுடியாத அளவிற்கு மிகமிகப் பெரியவைகள்.
உற்சவமூர்த்தி (தாயார்) சிறிய திருவுருவத்தில் காட்சி தருவார். தனிக் கோயில் நாச்சியார் கிடையாது. பெருமாள் திருவயிற்றில் இருந்து கிளம்பிய தாமரையில் பிரம்மா காட்சி தருவார். இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய தலம். வசிஷ்டரின் பிள்ளைகளால் ஒரு அந்தணன் ராட்சஸனாக சபிக்கப்பட்டார். அந்த அந்தணன் இங்கே சாபவிமோசனம் பெற்றதால் சாபங்களை தீர்க்கும் தலம். இதுவும் நம்மாழ்வார் பாடிய தலம்.
திருத்தொலைவில்லி மங்கலம் (ராகு, கேது)
ஒருமுறை ஆத்ரேயசுப்ரபர் எனும் ரிஷி இந்த இடத்தில் யாகசாலை ஏற்படுத்தினார். அப்போதுதான் அந்த இடத்தை அவர் பார்த்த பொழுது ஒளி மயம் உடைய தராசையும் வில்லையும் கண்டு வியப்படைந்தார். அதை அவர் எடுத்த போது தராசு ஒரு பெண்ணாக மாறியது. வில் ஒரு ஆணாக மாறியது. குபேரன் சாபத்தினால் துலை (தராசு), வில்லாக இருந்தவர்கள் ஆணும் பெண்ணும் என பழைய உருவில் மாறியதால் துலை (தராசு) வில்லி (வில்)
மங்கலமானது.
திருத்துலைவில்லி மங்கலம் தேவர்பிரான் திருக்கோயில்
108 வைணவத் திருத்தலத்தில் ஒரு திவ்ய தேசம். இரண்டு திருக்கோயில்கள் சேர்ந்து ஒரு திவ்ய தேசத் திருத்தலமாகக் கருதப்படுகின்றது. எனினும் நம்மாழ்வார் இரண்டு பெருமாள்களையும் தனித்தனியே பெயரிட்டுள்ளதால் நவதிருப்பதிகள் கணக்கில் இரண்டு திருத்தலங்களாகக் கொள்வது மரபு அஸ்வினி தேவர்களுக்கு பகவான் அருளால் யாகத்தில் பாகம் கிடைத்த தலம். நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீநிவாசன் என்ற திருநாமத்தில் பெருமாள் காட்சி தருகின்றார். உபய நாச்சிமார் உண்டு. தனிக்கோயில் நாச்சியார் கிடையாது. இது முதல் கோயில். இத்திருத்தலம் இரட்டைத் திருப்பதியில் தெற்கு திருக்கோயில் ராகு அம்சம் திருக்கோயில்.
திருத்துலைவில்லி அரவிந்தலோசனன் திருக்கோயில்
இரண்டாவது கோயில் பக்கத்திலேயே இருக்கிறது. தினந்தோறும் தேவர் பிரானுக்கு தாமரை மலர் கொண்டு வழிபாடு செய்து வந்தார் சுப்ரரர். பெருமாள், சுப்ரரர் தாமரை மலர்களை தடாகத்தில் இருந்து எடுக்கவரும் போது பின் தொடர்ந்து வரவே, சுப்ரரர் காரணம் வினவினார். செந்தாமரை மலர்கள் கொண்டு செய்த வழிபாட்டில் மயங்கி வந்ததாகவும் அங்கேயே தமக்கு ஓர் ஆலயம் எழுப்பவும் கூறினார் பெருமாள். இத்திருத்தலம் இரட்டைத் திருப்பதியில் வடக்கு திருக்கோயில். கேது அம்சம் திருக்கோயில். பெருமாளுக்கு அரவிந்த லோசனன் என்ற அழகான பெயர். தமிழில் செந்தாமரைக்கண்ணன். வீற்றிருந்த திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். தாயாருக்கு கண்கள் கருமையாக பெரிதாக இருப்பதால் கருந்தடங்கண்ணி நாச்சியார் என்று பெயர். நம்மாழ்வார் பாடியிருக்கின்றார்.
திருக்குளந்தை (பெருங்குளம்)
திருப்புளிங்குடியிலிருந்து அதே சாலையில் இன்னும் 7 மைல் சென்று அடையவேண்டும். ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து வடகிழக்கில் 7 மைல். ‘ஏரல்’ பஸ்ஸில் வரலாம். இங்கே உள்ள பெருமாளுக்கு ஸ்ரீனிவாசன் (வேங்கடவாணன்) என்று பெயர். நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் நான்கு கரங்களுடன், மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், கீழ் இரு கரங்களில் வலது கரம் அபயம் காட்டியும், இடது கரத்தை தொடையில் வைத்தபடி திருப்பதியில் உறையும் பெருமாளை போன்றே காட்சியளிக்கிறார்.
உற்சவ மூர்த்திக்கு மாயக்கூத்தன் என்ற பெயர். தாயார் அலர்மேல் மங்கை நாச்சியார் அல்லது திருக்குளந்தைவல்லி. இரண்டு உபய நாச்சியார்கள் உண்டு. தனிக்கோயில் நாச்சியார் கிடையாது. கருடன் உற்சவராக பெருமாள் பக்கத்திலேயே வீற்றிருப்பது சிறப்பு.
வேத சாரன் என்று ஒரு அந்தணன். மனைவியான குமுதவல்லியோடு வாழ்ந்து வந்தான். இவர்களின் இல்லறம் நல்லறமாகவே சென்றது. ஆனால் குழந்தை இல்லை. பல்வேறு திருக்கோவில்களுக்கும் சென்று வேண்டிக் கொண்டனர். இவர்கள் தவத்திற்கு பெருமாள், தன்னுடன் இருந்த மகாலட்சுமியை அழைத்து அவர்களின் குறையை போக்க குழந்தையாக அவதரிக்கும்படி கூறுகிறார். அவருக்கு கமலாவதி என்று ஒரு பெண் பிறந்தாள். அவள் பெருமாளையே கணவனாக அடைய வேண்டும் என்று தவம் புரிந்தாள். மகாவிஷ்ணு அவளுக்கு காட்சி தந்து தன்னுடைய கௌஸ்துப மணியுடன் அவளைச் சேர்த்து கொண்டார். அச்மசாரன் என்ற அசுரனை யுத்தத்தில் ஜெயித்த பெருமாள் அவனைப்போலவே நாட்டியம் ஆடி அவனை வென்றதால் மாயக்கூத்தன் என்ற திருநாமம். தேவர்களின் குருவாக விளங்கிய பிரகஸ்பதி என்னும் வியாழ பகவான், பெண்ணாசையால் ஏற்பட்ட மோகத்தால் சாபம் பெற்றுவிட, அந்த சாபம் தீர இங்கு பெருமாளை வழிபட்டு சாப நிவர்த்தியும் பெற்றுள்ளார். இத்தலத்தில் நீராடி பெருமாளை தரிசித்தால் சனி தோஷம் நிவர்த்தியாகும். திருமணத் தடை அகலும். நம்மாழ்வார் பாடிய திருத்தலம்.
திருக்கோளூர்
திருக்கோளூர் ஆழ்வார் நவதிருப்பதிகளில் ஒன்று. தென்திருப்பேரையில் இருந்து செல்லலாம். திருநெல்வேலி - திருச்செந்தூர் மெயின் ரோட்டில் திருநெல்வேலியிலிருந்து 37வது கிலோ மீட்டரில் அமைந்துள்ள பால்குளத்தில் இறங்கி 1 கி.மீ. தூரம் நடந்தால் வருவது திருக்கோளூர். பெருமாளுக்கு வைத்தமாநிதி பெருமாள் என்று பெயர். சயன கோலத்தில் காட்சி தருகிறார்.
பெருமாளின் தலைக்கு அடியில் நாழியும், அவரின் இடது உள்ளங்கை விண்னை நோக்கியும், வலது கை பூமியை நோக்கியும் உள்ள கோலத்தில் காட்சி தருகிறார். தாயாருக்கு குமுதவல்லி நாச்சியார் என்ற திருநாமம். திருக்கோளூர் வல்லி என்று ஒரு நாச்சியார் இருக்கிறார். 2 தனிக்கோயில் நாச்சியார்கள் இங்கு உண்டு. பார்வதி தேவியால் குபேரன் சபிக்கப்பட்டான். அதனால் அவன் வைத்திருந்த செல்வங்கள் அவனை விட்டுப் பிரிந்தன. அப்படி பிரிந்த செல்வங்கள் பகவானை நாதனாக அடைய தவம் செய்ய பகவான் காட்சி தந்து நவநிதிகளின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டார். அதனால் பகவானுக்கு வைத்தமாநிதி பெருமாள் என்று திருநாமம்.
மாசி மாதத்தில் வரும் வளர்பிறையில் சுவாதி நட்சத்திரத்தன்று குளித்து, பெருமாளை வேண்டினால் இழந்த சொத்துக்கள் திரும்பக் கிடைக்கும். மூலவரான வைத்தமாநிதியின் கோவிலுக்கு பின்புறம் யோக நரசிம்மர் அருள்பாலிக்கிறார். இந்த கோயிலில் யோக நரசிம்மருக்கு நீராஞ்சன விளக்கு ஏற்றப்பட்டு பிரதோஷ விழா நடைபெறும்.
மதுரகவி ஆழ்வாரின் அவதாரத் தலம் இது. குபேரனுக்கு சாபவிமோசனம் கிடைத்த தலம்.
தென்திருப்பேரை
ஆழ்வார்திருநகரியிலிருந்து அருகாமையில் உள்ள தலம் இது. பெருமாளுக்கு மகரநெடுங்குழைக்காதன் என்று பெயர். தமிழில் நிகரில் முகில் வண்ணன் என்று அழைப்பார்கள். ஸ்ரீபேரை (இலக்குமியின் உடல்) என்ற பெயரில் பூமிதேவி இங்கு தவம் செய்ததால் திருப்பேரை என்றே இத்தலத்திற்குப் பெயர். திருச்சிக்கு அருகில் திருப்பேர் நகர் என்ற திருத்தலம் ஒன்றிருப்பதால் இத்தலத்தை தென்திருப்பேரை என்று அழைத்தனர். பெருமாள் வீற்றிருந்த திருக்கோலம். தாயாருக்கு குழைக்காதவல்லி நாச்சியார் என்று பெயர். திருப்பேரை நாச்சியார் என்று இன்னொரு தாயாரும் இருக்கிறார். இரண்டு தனிக்கோயில் நாச்சியார் சந்நதிகள் உண்டு.
பூமாதேவித் தாயார் தாமிரபரணியில் கிடைத்த இரண்டு மீன் போல் வடிவமுள்ள குண்டலங்களை பகவானுக்குச் சமர்ப்பித்தாள். அதனால் பகவானுக்கு மகரநெடுங்குழைக்காதன் என்று திருநாமம். வருண பகவான் தன்னுடைய குருவை அவமதித்து விட்டார். அதனால் அவருக்கு பாவம் வந்தது. அந்த பாவத்தை பங்குனி பவுர்ணமியில் பகவானுக்கு திருமஞ்சனம் செய்து தீர்த்துக் கொண்டார் என்று தல வரலாறு. சுக்ர புஷ்கரணி, சங்க தீர்த்தம், மகர தீர்த்தம் ஆகியன. விமானம்: பத்ர விமானம் என்ற வகையைச் சேர்ந்தது.
சுக்கிரன் ஸ்தலம்.
திருக்குருகூர்
ஆழ்வார் திருநகரி என்று இத்தலத்திற்குப் பெயர். நம்மாழ்வார் அவதரித்த தலம். பிரம்மாவுக்கு குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால் குருகூர் எனப்படுகின்றது. குருகு என்றால் ‘பறவை, சங்கு’ எனப் பல பொருள் உண்டு. இத்தலத்தில் உள்ள பெருமாளை, சங்கன் எனும் சங்குகளின் தலைவன் வழிபட்டதால் இத்தலம் ‘குருகூர்’ எனப் பெயர் பெற்றது.
‘கூழ் குடித்தாலும் குருகூரில் வசித்து திருவடி சேர்’ என்றொரு பழமொழி உண்டு. ஆதியிலேயே தோன்றிய நாதன் என்பதால் பெருமாள் ஆதிநாதன் என திருப்பெயர் பெற்றார். குரு தோஷ நிவர்த்தி தலம் என்பார்கள்.
மூலவருக்கு ஆதிநாதன் ஆதிப்பிரான் என்று பெயர். தமிழில் பொலிந்து நின்ற பிரான். “ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதீரே” என்பது ஆழ்வார் பாசுரம்.
ராமாயணம் உத்தரகாண்டத்தில் ஒரு நிகழ்ச்சி. ராமபிரானாக அவதரிக்கையில் இலக்குவனாக உடன் வந்தவன் ஆதிசேஷன். தனது இறுதிக் காலத்தில், காலாந்தகனைச் சந்திக்கும் வேளை நெருங்குகையில் எவரையும் அனுமதிக்க வேண்டாம் எனத் தன் தம்பியான இலக்குவனிடம் ராம பிரான் கூறியிருந்தான். அவ்வேளை அங்கு துர்வாச மாமுனியை அனுமதிக்க இலக்குவன் தயங்கவே, அவர் அவனைப் புளிய மரமாகப் பிறப்பெடுக்கும்படி சபித்து விட்டார். அவ்வாறு, ஆழ்வார் திருநகரி என்னும் இத்திருத்தலத்தில் இலக்குவன் புளிய மரமாகி விட, அவன் வேண்டுகோளுக்கு இணங்கி ராமபிரான் பின்னாளில் தாமே நம்மாழ்வாராக அவதரித்து அப்புளிய மரத்தில் காட்சி அளித்ததாகவும், இலக்குவன் திருப்புளியாழ்வாராக இங்கு காட்சியளித்தமையால், இத்தலம் சேஷ ஷேத்திரம் என விளங்குவதாகவும் கூறுவர்.
தாயார் திருப்பெயர் குருகூர் வல்லி. ஆதிநாதவல்லி என்று இன்னொரு நாச்சியாரும் உண்டு. நவதிருப்பதிகளில் சில கோயில்களில் தனிக்கோயில் நாச்சியார் கிடையாது. சில கோயில்களில் இரண்டு நாச்சியார்கள் உண்டு என்பது நவதிருப்பதிகளின் விசேஷம்.
வைணவத் திருத்தலங்களில் சில தலங்களில் பெருமாள் தானாகவே தோன்றினார். அப்படி எட்டுத் தலங்களைச் சொல்வார்கள். அந்த எட்டுத் தலங்களில் ஒன்று இந்தத்தலம். மூலவரின் பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக ஐதீகம். இந்த திருக்கோயிலில் உள்ள புளியமரம் விசேஷமானது. 5000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து புளிய மரம் அப்படியே இருப்பதாகவும், இங்கே உள்ள அந்த புளிய மரத்தின் அடியில்தான் நம்மாழ்வார் யோகத்தில் 16 ஆண்டுகாலம் இருந்ததாகவும் வரலாறு. இங்கே வைகாசி மாத கருடசேவை விசேஷமானது. அப்பொழுது நம்மாழ்வார் அன்ன வாகனத்தில் எழுந்தருளுவார். இந்திரன் தன்னுடைய பெற்றோர்களை உபசரிக்காமல் விட்டு விட்டான். அதனால் சபிக்கப்பட்டு இத்தலத்திற்கு வந்தான். பெருமாளை வழிபட்டு சாப விமோசனம் அடைந்தான். மகாலட்சுமித் தாயார், பெருமாளை அடைவதற்காக பிரார்த்தனை செய்தாள். பகவான் பிரம்மச்சரிய யோகத்தில் இருந்த படியால் லட்சுமியை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் அவளை மகிழ மாலையாக மார்பில் தரித்துக் கொண்டான்.