Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாவுக்கரசர் பார்வையில் ‘ங’ என்ற தமிழ் எழுத்து

தமிழ்மொழியின் நெடுங்கணக்கு எழுத்துகள் வரிசையில் ‘க’ என்பதன்பின் வரும் உயிர்மெய்யெழுத்து ‘ங’ என்பதாம். ‘ங’ என்ற இவ்வெழுத்து மொழிக்கு முதல் எழுத்தாகத் திகழ்வதில்லை. மரக்கால் அல்லது குறுணி என்ற முகத்தல் அளவையின் குறியீடாக ‘ங’ என்ற எழுத்து கல்வெட்டுகளில் காணப்பெறுகின்றது. தாண்டக வேந்தர் எனும் சிறப்புப் பெயர் பெற்ற திருநாவுக்கரசராம் அப்பரடிகள் இவ்வெழுத்தை முதன்முதலாக மொழிக்கு முதல் எழுத்தாகப் பயன்படுத்தியதோடு அவ்வெழுத்தில் யாருமே சிந்திக்காத ஓர் ஓவியத்தையும் எழுதிப் பார்த்திருக்கிறார். அப்பர் அடிகளின் கலைப்பார்வையையும், மொழியியல் திறனையும் இக்கட்டுரையின்கண் காண்போம்.

அறக்கருத்துகளை வலியுறுத்தும் ஒரு செய்யுள் நூலே ஆத்திசூடி ஆகும். இதனை ‘வருக்கக்கோவை’ என்ற பா வகையாகக் கூறுவர். இவ்வகையில் முப்பதுக்கும் மேற்பட்ட ஆத்திசூடி நூல்களும், சில வருக்கக் கோவை நூல்களும் தமிழில் மலர்ந்துள்ளன. இருபதாம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற சில ஆத்திசூடி நூல்களுக்கு முன்பாக ஒளவையார் எழுதிய ஆத்திசூடியில் மட்டுமே ‘ங’ என்ற எழுத்து இடம்பெற்றுள்ளது.

‘‘ஙப்போல் வளை’’ என்ற அவரது வாக்கு ஆழ்ந்த பொருளுடையது. ங என்ற ஓர் எழுத்து மட்டுமே தமிழ்மொழியின் பயன்பாட்டில் இருந்து கொண்டு அதன் வருக்க எழுத்துகளான ஙா, ஙி, ஙீ, ஙு, ஙூ… ஆகியவை எந்தப் பயனும் இல்லாமல் இருந்தபோதிலும் அவ்வெழுத்துகளைக் காத்து நிற்பது போல ஒருவன் தன் சுற்றத்தாரைப் பேணிக் காக்க வேண்டும் என்பதே ஒளவையாரின் கூற்றாகும். ஙப்போல் வளை என்பதற்கு வேறு பொருள் கூறுவாரும் உண்டு. ‘ங’ என்ற எழுத்து எல்லாத் திக்கும் வளைந்து நிற்பது போல ஒருவன் எத்திக்கும் - எத்துறையும் - எந்நிகழ்ச்சிக்கும் வளைந்து செயல்பட வேண்டும் எனவும் பொருள் கொள்வர்.

தமிழ்மொழியில் வருக்கக் கோவை என்ற இலக்கிய வகைப்பாட்டிற்கு முதன் முதலாக வித்திட்டவர் அப்பரடிகளே ஆவார். ‘‘சித்தத்தொகை திருக்குறுந்தொகை’’ எனும் தலைப்பில் அவர் 30 பாடல்கள் பாடியுள்ளார். இரண்டாம் பாட்டு அகரத்தில் தொடங்கி தொடர் எழுத்துகளுக்கு ஒவ்வொரு பாடலாக அமைந்துள்ளன. இக்கோவையில் 16ஆம் பாடல் ‘ங’ என்ற எழுத்தை முதலெழுத்தாகக்கொண்டு தொடங்குகின்றது.

ஙகர வெல் கொடியானொடு - நல்நெஞ்சே!

நுகர நீ உனைக்கொண்டு உயப்போக்கு உறில்

மகர வெல்கொடி மைந்தனைக் காத்தவன்

புகர்இல் சேவடி யேபுகல் ஆகுமே

என்பதே அப்பாடலாகும்.

இங்கு ‘‘ஙகரவெல் கொடியான்’’ என்று ஒரு புதிய சொல் கொண்டு சிவபெருமானைக் குறிக்கின்றார். சிவபெருமானுக்குரிய கொடியாகத் திகழ்வது வெள்ளை இடப உருவம் பொறிக்கப்பட்ட கொடியேயாகும். எனவே, இடப உருவை (ரிஷபம்) ‘‘ஙகரம்’’ எனக் குறிப்பிடுகின்றார். சங்க இலக்கிய நூலான புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலில் பாரதம் பாடிய பெருந்தேவனார்,

ஊர்தி வால் வெள்ளேறே சிறந்தசீர்கெழு கொடியும் அவ்ஏறு என்ப

என்று கூறி சிவபெருமான் ஊரும் இடபத்தின் பெருமையையும், அவரது சீர்மிகு இடபக்கொடியின் சிறப்புப் பற்றியும் கூறியுள்ளார். சங்க நூல்களிலும் பின்பு வந்த தமிழ் நூல்களிலும் ‘இடபம்’ என்பதை ‘ஙகரம்’ என்ற சொல்லாட்சி கொண்டு கூறாதபோது திருநாவுக்கரசர் மட்டும் எவ்வாறு குறிப்பிட்டார் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

தேவாரத்தைப் பதிப்பித்த சில ஆசிரியர்கள் ஙகரவெல்கொடி என்பதை நகரவெல்கொடி எனத் தவறாகக்கூடப் பதிப்பித்துள்ளார்கள். அப்பரடிகள், சித்தத்தொகை திருக்குறுந்தொகையில் தமிழ் எழுத்துகளின் வருக்கக் கோவையின்படி பாடியிருக்கும்போது ககரப் பாடலுக்கு அடுத்த பாடலாக ஙகரம் என்பதுதான் இருத்தல் வேண்டுமேயொழிய நகரம் எனத் தொடங்கும் பாடல் இருக்க வாய்ப்பில்லை. அப்படியாயின் ஙகரம் என்பது எவ்வாறு இடபமாக இருக்க முடியும்?

அப்பர் அடிகளின் காலம் கி.பி. 580 - 660ஆக இருத்தல் வேண்டும் என்பது தொல்லியல் வரலாற்று அறிஞர்களின் கருத்தாகும். அவரது காலத்தில் தமிழகத்தின் பெரும் பகுதியைச் செங்கோலோச்சியவன் மகேந்திர பல்லவனாவான். பல்லவர்களுக்குரிய கொடி இடபக்கொடியேயாகும். இதனைத் திருமங்கையாழ்வார்,

வெண்குடை நீழல்செங் கோல்நடப்ப

விடைவெல்கொடி வேல்படை முன்னுயர்த்த

பண்புடைப் பல்லவர் கோன்பணிந்த

பரமேச் சுரவிண் ணகரம் அதுவே!

என்று தெளிவாக உரைக்கின்றார்.

இதுவரை கிடைத்துள்ள பல்லவர்களின் இலச்சினை, காசு போன்றவற்றில் இடப உருவமே (காளை உருவம்) இருத்தல் கண்கூடு. குறிப்பாக மகேந்திர பல்லவனின் பட்டப்பெயர்களுள் ஒன்றான ‘பாகாப்பிடுகு’ என்ற பெயர் தமிழில் பொறிக்கப்பெற்று இடப உருவத்தோடு உள்ள அம்மன்னவனின் காசுகள் அண்மைக் காலத்தில் கிடைத்துள்ளன. பல்லவ இலச்சினைகளிலும், காசுகளிலும் காணப்பெறும் காளை உருவம் நின்ற நிலையில் நன்கு ஏற்றத்தோடு திகழும் திமில் உடைய எருதுகளாகக் காணப்பெறுகின்றன.

திமில் உடைய எருதுகள் தமிழகத்தின் தொன்மை மரபுவழிக் காளைகள் என்பதில் ஐயமே இல்லை. எனவே, அப்பர் அடிகள் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தில் காணப்பட்ட காளைகளின் உருவங்களைத்தான் பல்லவர்களுடைய இலச்சினைகளிலும், காசுகளிலும் நாம் காண்கிறோம். இதே உருவங்கள்தான் சிவாலயங்களில் ஏற்றப்படும் கொடிகளிலும், சிவபெருமான் திருமேனி உலாப்போகும்போது எடுத்துச் செல்லப்படும் ரிஷபக்கொடிகளிலும் காணப் பெற்றிருக்கும். இவற்றை எல்லாம் கண்ட அப்பரடிகளுக்கு அவ்வுருவம் அவர் காலத்தில் எழுதப்பெற்ற தமிழ் எழுத்தான ‘ங’ என்ற எழுத்தை ஒத்துத் திகழ்வது போல் தோன்றியிருக்கிறது. அவரது கலை உள்ளத்தின் கற்பனையில் அவ்வெழுத்து காளையாகவே அவருக்குக் காட்சியளித்துள்ளது.

அதனால்தான் ‘ங’ என்ற எழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு அவர் சற்றும் தடுமாறாமல் ‘ஙகர வெல்கொடியான்’ எனக் கூறித் தமிழ் மொழிக்குப் புதிய சொல்லும் தந்துள்ளார். மகேந்திர பல்லவன் காலத்து ‘ங’ என்ற எழுத்தை அம்மன்னவன் காலத்துக் கல்வெட்டுகளில் காண இயலுகின்றது. மகேந்திர பல்லவன் காலத்து நடுகற்களிலும், பிற சாசனங்களிலும் காணப்பெறும் ங என்ற எழுத்தை நாம் அப்படியே காளை உருவாக வரைய முடியும். ஆழ்ந்த புலமையோடு திகழ்ந்த தாண்டக வேந்தரின் கலைப் பார்வையில் ஙகர எழுத்தின் வடிவம் காளை

வடிவமாகவே காட்சியளித்துள்ளது.

தமிழில் வருக்கக் கோவை என்ற இலக்கிய வகைக்கு முதன்முதலில் அகர வரிசைப்படி பாடல்கள் எழுதியதோடு ‘ங’ என்ற எழுத்தை மொழிக்கு முதல் எழுத்தாகப் பயன்படுத்திக் காட்டி, அவ்வெழுத்தில் காளை உருவைப் (பல்லவர் காசுகளிலும் கொடியிலும் உள்ளதுபோன்று) பொதித்துக் கற்பனை செய்த நாவுக்கரசரின் திறம் நாம் தலைவணங்கிப் போற்றும் தகுதியுடையதல்லவா!

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்