அனைவரையும் காத்து ரட்சிக்கும் அருள் வழங்கும் அம்மனாக, அன்னையாக விளங்கி, நாடெல்லாம் புகழ்கின்ற நாட்டரசன் கோட்டையில் கோயில் கொண்டு, வீடெல்லாம் காக்கின்ற தெய்வமாக விளங்குகின்றாள் கண்ணாத்தாள் எனும் கண்ணுடைய நாயகி. நாட்டுக் கோட்டை நகரத்தார் நிறைய வாழ்ந்து வரும் இந்த நாட்டரசன் கோட்டையில்தான் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமான் தமது இறுதி நாட்களில் இங்கே வாழ்ந்து மறைந்த தன் நினைவாக சமாதி இருந்து வருவதால், இப்பகுதி மக்கள் இந்நகரைப் ‘பாட்டரசன் கோட்டை’ என்றும் தமிழ் உண்வோடு அழைத்து வருகிறார்கள். ஊரின் நடுநாயகமாக திருக்கோயில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இந்தத் திருத்தலத்தில் தமது பேருக்கு ஏற்ப கண்ணுடைய தெய்வமாக விளங்கி வருகிற அம்பாளின் அகன்ற அருள்பாலிக்கும் மலர் விழிகளின் தோற்றம் பக்தனல்லாதவனையும் பக்தன் ஆக்கிவிடும்.
சர்வ வல்லமையுடன் வடக்கு நோக்கிய வண்ணம் திருமுகம் கொண்டு வீற்றிருக்கும் கண்ணுடைய நாயகி அம்மனுக்கு ‘வடக்கு வாய் செல்வி’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. திருக்கோயிலின் முகப்பில் உள்ள மண்டபத்தை ‘ஒட்டுக்கால் மண்டபம்’ என்று அழைக்கிறார்கள். அந்தப் பெயர் ஏன் வந்தது தெரியுமா? முக்காலத்தில் சொக்கட்டான் என்று சொல்லப்படும் படம் வைத்துச் சூதாடுவது ராஜ குடும்பத்தாருக்குப் பொழுது போக்கு விளையாட்டாக இருந்தது.
அந்த விளையாட்டில் ஈடுபட்ட நள சக்கரவர்த்தி, பஞ்சபாண்டவர்கள் போன்றோர் நாடு இழந்து காடு போனது வரலாறு. இந்த விளையாட்டில், பயன்படும் காய்களை ஒவ்வொரு கட்சியினரும் நகர்ந்துவதற்காகப் பலகட்டங்கள் அமைத்து, துணிப்படத்தின் வடிவத்தில் இந்த மண்டபமும் அமைந்துள்ளதால் அந்தப் பெயர் வந்துள்ளது என்கிறார்கள்.
இந்த வித்தியாசமான சொக்கட்டான் அமைப்பு மண்டபத்தைப் பார்த்துக் கொண்டே ஆலயத்திற்குள் நுழைவோர் சூதாட்டத்தின் கொடுமையை உணர்ந்து, அதற்கு பலியான மகத்தான் மன்னர்கள் வாழ்வு இழந்து போன வரலாற்றையும் நினைத்துப் பார்க்கிறார்கள்.‘ஒட்டுக்கால் மண்டபத்தை’ உற்று நோக்கினால், ஒரே கல்லால் அமைந்த நான்கு தூண்கள் மகத்தான சிற்ப வேலைப்பாடு களுடன் உருவாகியிருக்கும் கட்டடக்கலையின் விந்தையைக் கண்டு மகிழலாம்.
நூற்றைம்பது ஆண்டுகட்கு முன், கை தேர்ந்த சிற்பி ஒருவர் சொக்கட்டான் முறையில் மண்டபத்தின் வரைபடம் அமைத்து உதவினார் என்று கர்ணபரம்பரையாக சொல்லப்பட்டு வருகிறது. மற்றொரு வயதான பெரியவர் ஒருவர், ‘‘அந்தக் காலத்தில் இயந்திர சாதன வசதிகள் எதுவும் கிடையாது. மாபெரும் மனித முயற்சி தான்! அரும்பாடுபட்டு, சாரம் அமைத்து, கடப்பாறை, கம்பி, உருட்டுக்கட்டைகளின் துணை கொண்டுதான் இந்தத் தூண்களை நிமிர்த்தி இருக்கிறார்கள்!’’ என்று வியக்கும் வண்ணம் கூறினார். அகிலாண்ட நாயகியாகிய உமாதேவி தேவர்களின் வேண்டுகோளுக்கு அருள் சுரந்து, பத்ரகாளி உருக்கொண்டு சண்டா சூரனை அழிக்க அரும்தவம் மேற்கொண்டாள்.
காளியின் தவ வலிமையினால் அந்த அசுரன் அழிக்கப்படுகிறான். அப்போது ஏற்பட்ட உக்கிர பார்வை தணிந்து மக்கள் வழிபடுவதற்குரிய சாந்த சொரூபியாகி அருள் கடாட்கம் அளிக்கும் புன்னகைவதனத்தோடு காட்சியளிக்கிறாள் கண்ணுடைய நாயகி இத்திருத்தலத்தில், ‘பத்துத் திருக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில்! அந்த அருள் பார்வையைக் கொண்டே ‘‘கண்ணுடையவள்’’ என்று இந்தத் தலத்தில் அம்பிகை அழைக்கப்படுகிறாள் கண்பார்வை இல்லாதவர்கள் பலருக்கு இந்த அம்பிகை கண் பார்வை அளித்து அருள் தந்த உண்மை வரலாறுகள் ஏராளமாக சொல்லப்
படுகின்றன.
வயிற்று வலியால் வதைபட்டவர்கள் அம்பாள் சந்நதியில் விரதம் இருந்து, மாவிளக்கு ஏந்திக் குணம் பெற்ற உண்மைச் சம்பவங்கள் ஏராளம். அதற்கு சாட்சியாக கோயில் பிராகாரத்தில் மாவிளக்கு இடிக்க, பல உரல்களும், உலக்கை களம் குவிந்து கிடப்பதைக் காணலாம். பிராகாரத்தின் மற்றொரு புறம் கரும்புத் தொட்டில்கள் வரிசை கட்டி நிற்கின்றன. விதானத்திலும் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கின்றன. குழந்தை இல்லாதவர்கள் பிரார்த்தனை செய்து அது பலித்து இருப்பதாலேயே, அருமைப் புதல்வர்களைப் பெற்ற பெற்றவர்களின் காணிக்கைப் பொருட்களாகக் காட்சியளிக்கின்றன கரும்புத் தொட்டில்கள்! இந்த ஊரில் அம்பாளின் அருளால் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘கண்ணப்பன்’, கண்ணன், கண்ணகி, கண்ணம்மா, கண்ணாத்தாள் என்றெல்லாம் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
ஆடித்திங்கள் முழுவதும் விழாமயமாக இருக்கிறது. ‘ஆடிச் செவ்வாய்ப் பொங்கல்’ எனும் திருவிழா இங்கு மிகவும் விசேஷமாகும். தை முதல் நாள், மாட்டுப் பொங்கல் நாளன்றும் விமரிசையாகக் கொண்டாடு கிறார்கள். ஆடிப் பௌர்ணமியில் முனைக்கொட்டு உற்சவம் களைகட்டும்.விழா நாட்களில் கண்ணுடைய நாயகிக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
அந்த நாளில் ‘மஞ்சுவிரட்டு’ என்னும் மாடுகளைத் தொழுவங்களிலிருந்து திறந்து விடப்படும் விளையாட்டு இங்கே மிகவும் பிரசித்தம் விழா நடத்தும் நகரத்தார்கள் கூடி அமர்ந்து ‘காளாஞ்சி’ என்னும் வெற்றிலை, பாக்கு கொடுக்கப்பட்டுக் கௌரவிக்கப்படுகிறார்கள். ஆண்டுதோறும் வைகாசித் திங்களில் விசாகத்திருவிழாவும் சிறப்பாக நடக்கின்றது. பத்து நாட்கள் நடைபெறும் ஆண்டு விழா உற்சவத்தின் போது அம்மனுக்கு பல விதமான அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.
அம்மனுக்கு அணி மணி ஆடை அலங்காரங்களும் ஏராளமான ஆபரணங்கள் அணிவித்து வெள்ளிரதத்தில் ஏற்றி மேளதாளங்களுடன், வாணவேடிக்கைகளுடன் திருவீதி உலாவும் விமரிசையாக நடத்துகிறார்கள். இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னையை தரிசனம் கண்டு மகிழ்கிறார்கள். ஊரில் நல்ல மழை பெய்யவும், நெல் விளைச்சல் செழிக்கவும், நோய் நொடிகள் அணுகாமல் இருக்கவும் அம்மன் அருள்புரிய வேண்டும் என்பதற்காகவே அம்மனுக்குப் பெருந்திருவிழா நடத்தப்படுகிறது.
சில ஆண்டுகட்கு முன் திருக்கோயிலின் கோபுர உச்சியில் தங்கக் கலசங்கள் வைப்பதற்குத் தேவையான தங்கத்தை இந்நகரில் வாழும் ஏராளமான பெண்மணிகள் முன் வந்து மன மகிழ்ச்சியோடு தந்து உதவினார்கள் என்பது ஒரு தங்கமான செய்தி.கருவரையில் அம்மனைச் சுற்றிச் சலவைக் கற்கள் பதிக்கப்பட்டு, சர விளக்குகளின் மின்னொளியில் தன் அருள்பாலிக்கும் கண்ணொளியுடன் அற்புத தேஜஸுடன் விளங்கி அருளாட்சி புரிகிறாள் அன்னை கன்னுடைய நாயகி! அன்னையின் சந்நதியில் நாள்தோறும் இடைவிடாமல் ஒலிக்கும் பாடல் இது
‘‘மண்ணுக்கும் விண்ணுக்கும் மறைகட்கும் மூத்தவளே!
பண்ணுக்குள் இசையாய் பரம்பொருளாய் நிற்பளே!
எண்ணாமிலா முன்பதமே எந்நாளும் சரணடைவோம்!
கண்ணுடைய நாயகியே! காத்தருள்வாய் எங்களையே!’’
அம்பாளின் இந்தப் பிரார்த்தனைப் பாடல்தான் நாட்டரசன் கோட்டையைச் சுற்றி அன்றாடம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த அம்பாளுக்கு 12-ஆண்டுகளுக்கு ஒருமுறை விசேஷமான ‘‘முழுகளியாட்ட திருவிழா’’ கொண்டாடுகிறார்கள். இது 48 நாட்கள் கோலாகலமாக காண்போர் வியக்கும் வகையில் அற்புதமாக பாரம்பரிய முறைப்படி நடைபெறுகிறது. விழாக்காலம் முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
அமைவிடம்: சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலுக்கு மேற்கே 10 கி.மீ. தொலைவிலும், கொல்லங்குடி காளி கோயிலுக்கு வடமேற்கே 6 கி.மீ. தொலைவிலும், திருப்புத்தூருக்கு தென் மேற்கில் 36 கி.மீ. தொலைவிலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது. ஏராளமான பேருந்து வசதிகள் உண்டு.
ஆர்.சந்திரிகா