Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நடராஜா நடராஜா நர்த்தன சுந்தர நடராஜா!

*மயிலாடுதுறை அருகேயுள்ள ஆனந்த தாண்டவபுரத்தில் நடராஜர் காலின் கட்டை விரலால் மட்டுமே நின்று கொண்டு எந்தப் பிடிப்பும் இல்லாமல் மூக்குக்கு நேரே மற்றொரு காலைத் தூக்கி கால் சாயாமல் நடனமாடும் நிலையில் காட்சி தருகிறார்.

*மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் சிவபெருமான் நடனமாடும் ஐந்து சபைகளைக் குறிக்கும் வகையில் ஐந்து நடராஜ மூர்த்தங்கள் அமைந்துள்ளன. மார்கழித் திருவாதிரை நாளில் இந்த ஐந்து நடராஜர்களும் ஒரு சேரப் புறப்பட்டு ஆலயத்தை வலம் வருகின்றனர்.

*திருஒற்றியூரிலுள்ள படம்பக்க நாதர் கருவறையின் வாயிலில் உள்ள துவார பாலகரின் முன்னுச்சியில் நடராஜர் திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது.

*சிவபெருமான் ஆதிரை நாளில் சூரிய மண்டலத்தின் நடுவே நடமாடிய வாறே உலகைப் படைத்தார் என்று நம்பப்படுகின்றது. இதையொட்டியே திருவாதிரை நாளில் சூரியப் பிரபையின் நடுவில் நடராஜ மூர்த்தியை எழுந்தருள வைத்து வீதியுலாக் காண்கின்றனர்.

*சுசீந்திரத்தில் நிலைக் கண்ணாடியே நடராஜப்பெருமானாக வணங்கப்படுகின்றது.

*சென்னையை ஒட்டி அமைந்துள்ள திருத்தலங்களில் ஒன்று திருமணம். இங்குள்ள நடராஜர் சிவகாம சுந்தரிக்கு திருவாதிரை நாளில் திருமண விழா கொண்டாடப்படுகிறது.

*திருச்செந்தூரில் ஆவணியிலும், மாசியிலும் நடைபெறும் பெருந்திரு விழாக்களின் போது ஆறுமுக நயினார் எனப்படும் பெரிய உற்சவ மூர்த்தி பவனி வருகின்றார். இவரை முன் பக்கம் ஆறுமுகராகவும், பின் பக்கம் நடராஜராகவும் அலங்கரித்து உலா வருவார்.

* திருநல்லம் உமாமகேஸ்வரர் கோயிலிலுள்ள நடராஜர் சுயம்பு நடராஜர். மனிதர்கள் போல் கைகளில் ரேகையும், கால்களில், நரம்புகளும் தெரியும். நாற்பது அடி நீளமுள்ள மண்டபத்தில் ஒரு கோடியிலிருந்து நடராஜரைப் பார்த்தால், ஐம்பது வயது தோற்றம் உடையவராய்த் தெரியும். அருகே வர வர முப்பது வயது இளமையாக தோன்றும்.

*திருச்சி அருகேயுள்ள ராஜபுரம் கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாதர் லிங்கத்தை, மார்கழி திருவாதிரை அன்று காலை ஆறுமணிக்கு சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களால் வழிபடுகிறார்.

* ராமநாதபுரத்தின் அருகேயுள்ள உத்திரகோச மங்கை ஆலயத்தில் உள்ள நடராஜர் சிலை மரகதத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக அந்த உருவத்தை பார்க்க இயலாது. மிக அருகில் சென்று சூரியனைப் பார்க்க முயல்வது போன்றதாகும். எப்போதும் அவரது மேனி சந்தனக் காப்பிட்டுத்தான் இருக்கும். இந்த சந்தனக் காப்பையும் ஆண்டுக்கு ஒருமுறை திருவாதிரை நாளில் குருக்கள் தமது கண்களை நன்றாகத் துணியால் கட்டிக் கொண்டுதான் இடுவார். அப்படி முழுவதும் சந்தனக் காப்பிட்ட பின்னரே மற்றவர்களால் காணமுடியும்.

*சென்னைக்கு அருகில் உள்ள திருமழிசை என்ற திருத்தலத்தில் உள்ள நட ராஜர் சிலை கமல பீடத்தில் அமைந்துள்ளது. நடராஜரின் இடது கண் பார்வையும், அம்பாளின் வலது கண் பார்வையும் ஒன்றை யொன்று பார்த்துக் கொள்வது போல் அமைந்துள்ளது விசேஷம்.