Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நல்லன எல்லாம் தரும் நாராயண மந்திரம்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அன்னை கனகதுர்க்கை என்றதும் ஆந்திர மாநில விஜயவாடாதான் நினைவுக்கு வரும். ஆனால் சென்னையில் மிகவும் பிரசித்திப் பெற்ற கனக துர்க்கை அன்னையின் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு அழகின் மொத்த உருவமாக கருணைக் கண்களுடன் மக்களுக்கு அருள்பாலிக்கிறாள். எட்டரை அடி உயர கம்பீரம், பத்துக் கரங்களின் அரவணைக்கும் பரிவு, நேர் பார்வையின் துயரம் போக்கும் ஆறுதல் மட்டுமில்லாமல் அனைத்துச் செல்வங்களையும் அள்ளி வழங்க ஆர்வத்துடன் காத்திருக்கிறாள்.

தெற்கு நோக்கிய ராஜகோபுர வாசல் வழியாக உள்ளே சென்றால், நேர் எதிரே ஐயப்பன் சந்நதியை தரிசிக்கலாம். சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இந்த இடம் ஐயப்பன் கோயிலுக்காகத்தான் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், இறை உத்தரவு வேறுமாதிரியாக வந்ததால், அம்பிகை மூலவராக இங்கு வீற்றிருக்கிறாள். அதன்படி இங்கே பிரதான தெய்வமாக கனகதுர்க்கை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறாள்.

கோயிலை சம்பிரதாயமாக வலம் வரும்போது இடது பக்கத்தில் வலம்புரி ஜோதிவிநாயகர் அருட்காட்சி வழங்குகிறார். அவருக்கு அருகே, சனகாதி முனிவர்களுடன் தட்சிணாமூர்த்தி. அவருக்குப் பக்கத்தில் புவனேஸ்வரி. அருகிலேயே மகாலட்சுமி, தனி சந்நதியில் திருப்பதி பத்மாவதியை நினைவுபடுத்துவதுபோல கொலுவீற்றிருக்கிறாள்.

வடக்கு பார்த்த சந்நதியில் சரஸ்வதி தேவி. பள்ளி, கல்லூரி துவங்கும் சமயத்திலும், பரீட்சை காலங்களிலும் இந்த சந்நதி நூற்றுக்கணக்கான மாணவர்களால் சூழப்பெறும். அவர்கள் தேர்விற்கு பயன்படுத்தப்படும் பேனாவினை கலைமகள் முன்னால் சமர்ப்பித்து, ஆசி பெற்று எடுத்துச் செல்கிறார்கள். ஏழை மாணவர்களுக்கு கோயில் நிர்வாகமே தம் செலவில் அப்பொருட்களை சரஸ்வதியின் ஆசியுடன் வழங்கி வருகிறது.

வள்ளி-தேவசேனா சமேத சுப்பிரமணியர், தனி சந்நதியில் அருளாசி வழங்குகிறார். அடுத்தடுத்து ஸ்வர்ணபைரவர், நவக்கிரக சந்நதிகள். சற்றே உள்ளடங்கி அழகு மிளிர ஒளிர்கிறாள் நாகாத்தம்மன். அவளுடைய தலைமீது குடைபிடித்திருக்கும் பஞ்சமுக நாகத்துக்குதான் எத்தனை பெருமை! அன்னையும் பஞ்சமுக நாகாத்தம்மன் என்றே அழைக்கப்படுகிறாள். அடுத்ததாக லட்சுமி குபேரரை தரிசிக்கலாம். மச்ச பீடத்தில் இவர் வீற்றிருக்கும் அன்னைக்கு தாமே மலர்களால் நேரடியாக அர்ச்சனை செய்யலாம்.ஆலயத்தின் தலவிருட்சம், இணைந்து நிற்கும் அரசும், வேம்பும். இதன் கீழே நாகர் சிலைகள் பதிக்கப்பட்டுள்ளன.

பக்கத்தில் நான்கடி அளவில் ஒரு பரப்பு தனித்துத் தெரியும்படி சிமென்டால் பூசி மூடப்பட்டிருக்கிறது. இது சுமார் 15 அடி ஆழமுள்ள நீர்த்தொட்டி. இதில் ஜலதுர்க்கை எந்நேரமும் நீரில் மூழ்கியிருக்கிறாள். வருடத்துக்கு ஒருநாள், சித்ரா பௌர்ணமி தினத்தன்று சிமென்ட் மூடியை உடைத்து ஜலதுர்க்கையை வெளியே எடுத்து மகா மண்டபத்தில் கொலுவிருத்துகிறார்கள். அன்று முழுவதும் பல்வேறு பூஜைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பலவகைப்பட்ட பிரசாதங்கள் அந்த அறை நிறையும் அளவுக்கு அன்னைக்கு நிவேதனம் செய்யப்பட்டு, பிறகு அவை அனைத்தும் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. மறுநாள் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் மீண்டும் ஜலதுர்க்கையை பாதாள கங்கை எனப்படும் நீர்த்தொட்டிக்குள் நிலைநிறுத்தி, மீண்டும் மேலே சிமென்ட் தளத்தால் மூடிவிடுவார்கள். இந்த கங்கையும் வற்றுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வருடத்துக்கு ஒருநாள் என்ற இந்த தரிசன வாய்ப்பைத் தவறவிட்டவர்கள், தளத்தில் உள்ள துவாரம் வழியாக காசு தட்சணை செலுத்தி மானசீகமாக வேண்டிக் கொள்கிறார்கள்.

அருகிலேயே சப்த கன்னியர் அழகுற கொலுவிருக்கிறார்கள். மகாமண்டபத்தில் வீர சரபேஸ்வரர் தரிசனம் தருகிறார். பிரத்யங்கராவுக்கும் தனிச் சந்நதி உள்ளது. இந்த அன்னைக்கு முன்னாலிருக்கும் ஹோம குண்டம் ஒவ்வொரு அமாவாசை அன்றும் இரண்டு மூட்டை மிளகாயை ஆஹுதியாகப் பெற்று சிறிதும் நெடியில்லாத பேரருளை அன்னை பிரத்யங்கரா சார்பில் பக்தர்களுக்கு வாரி வழங்குகிறாள்.

கோயிலின் பிரதான தெய்வம் கனகதுர்க்கை பத்துக் கரங்கள், சங்கு, சக்கரம், பாசம், அங்குசம், கத்தி, கேடயம், ஜபமாலை, ஓலைச்சுவடி ஆகியவற்றை எட்டு கரங்கள் தாங்கியிருக்க, அபய மற்றும் வரத ஹஸ்தங்களுடன் அன்னை உலகுக்கே அருள்பாலிக்கிறாள். ஆடி மாதம் பூர நட்சத்திர நாளன்று மட்டும் அன்னைக்கு பக்தர்கள் தம் கையாலேயே பாலபிஷேகம் செய்து வழிபடலாம். ஒவ்வொரு வருடமும் அன்றைய தினம், கோயிலை நோக்கி பக்தர்கள் பால் குடம் சுமந்து வந்து பூஜை செய்வது வழக்கம். புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை அன்று அன்னைக்கு திருப்பதி வெங்கடாசலபதியாக அலங்காரம் செய்கிறார்கள். அச்சு அசல் அப்படியே பெருமாள் போல் காட்சியளிப்பாள் அன்னை.

அன்னை முன் ‘தாயே நீயே துணை’ என்று நம்மை அவள் பாதங்களில் அர்ப்பணித்துவிட்டால் போதும், நம் நிறை மற்றும் குறைகள் அனைத்தையும் அன்னையே பார்த்துக்கொள்வாள். அன்னைக்கு வலது பக்க சந்நதியில் சத்யநாராயணர் மகாலட்சுமியுடன் எழுந்தருளியிருக்கிறார். பௌர்ணமி தினங்களில் இவர் முன் சத்யநாராயண பூஜை விமரிசையாக நடைபெறுகிறது. ஆலயத்தின் மற்றுமொறு சிறப்பம்சம் - ஸ்ரீவைகுந்தம். துவாரபாலகர்கள், ஆஞ்சநேயர், கருடாழ்வார் எல்லோருமே நெடிதுயர்ந்து நிற்கிறார்கள். பக்க சுவர்களில் அஷ்டலட்சுமிகள், குருவாயூரப்பன், உப்பிலியப்பன், திரிவிக்கிரம அவதாரத்தில் சுதை சிற்பங்களாகத் திகழ்கிறார்கள்.

லட்சுமி நரசிம்மரும், லட்சுமி ஹயக்ரீவரும் தனித்தனி சந்நதியில் கொலுவிருக்கிறார்கள். புத்திரகாமேஷ்டி யாகம் முதல் ராமர் பட்டாபிஷேகம் வரையிலான ராமாயண காட்சிகள், தசாவதாரக் கதைகள் அனைத்தும் இங்கு ஓவியங்களாக ஒளிர்கின்றன. இந்த வைகுந்தத்தின் மூலவர் ஸ்ரீரங்கநாதர். ஒன்பதடி நீளம், ஐந்தடி உயரமும் கொண்ட ஒரே கல்லாலான சயனகோல மூர்த்தி. பக்தர்கள் தாம் கைப்பட அஷ்டாட்சர மந்திரம் எழுதிய ஒரு லட்சம் செப்புத் தகடுகளை பீடத்தில் பதித்து அதன்மேல் ஒய்யாரமாக ஆரோகணித்திருக்கிறார் அரங்கன். கனகதுர்க்கை ஆலயம், சென்னை மேற்கு முகப்பேரில் ‘வாவின்’ வளாகத்தின் அருகே சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

தொகுப்பு: மகி