அம்பிகையின், ஆணைகளை சிரமேற்கொண்டு செய்பவர்கள்தான் யோகினிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் எண்ணிக்கையில் பல்லாயிரம் கோடிகள் இருப்பார்கள். ஆனால், இந்த பல்லாயிரம் கோடி யோகினிகளில் முக்கியமானவர்களாக கருதப்படுபவர்கள் அறுபத்தி நான்கு பேர்கள்.‘கடாக்ஷ கிங்கரி பூத கமலா கோடி சேவிதா’ என்று லலிதா சஹஸ்ரநாமமத்தில் ஒரு நாமம் இடம் பெறுகிறது. இது, அம்பிகையின் கிருபைக்கு பாத்திரமாவதற்காக, அம்பிகை இடும் ஆணைகளை சிரமேற் கொண்டு செய்து முடிக்க காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான யோகினி களால் அம்பிகை எப்போதும் சேவிக்கப் படுகிறாள் என்று சொல்கிறது.
இந்த நாமம், யோகினிகள், எண்ணில் அடங்காத கணக்கில் இருக்கிறார்கள் என்று நமக்குக் காட்டிக் கொடுக்கிறது.இப்படி முக்கியமான யோகினிகள் அறுபத்து நான்கு பேர்களில், மிகவும் சக்தி வாய்ந்த ஒரு யோகினியும் மற்றும் மாத்ருகா சக்திகளில் ஒருவராக இருக்கக் கூடியவளுமான நரசிம்ஹி தேவியைப் பற்றி காண்போம் வாருங்கள்.நரசிம்ஹி தேவியும் துர்கா தேவியும். இதை நரசிம்ஹி தேவி என்றும் சொல்லலாம். சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்கள் உலகிற்கு இல்லாத தொல்லைகளை கொடுத்து வந்தார்கள். அவர்களது தொல்லைகளைத் தாங்காத தேவர்கள் இமயமலையில் தவம் செய்ய, துர்காதேவி கௌசிகி என்ற வடிவில் தோன்றி அரக்கர்களோடு போர் புரியச் சென்றாள்.
அப்படி ஆதிசக்தி சண்டை செய்யும்போது, அனைத்து தேவர்களும் தங்களது சக்தியை அம்பிகைக்கு துணைபுரிய அனுப்பினார்கள். அந்த வகையில் நரசிம்மப் பெருமானின் சக்தியாக தோன்றி துர்கா தேவிக்கு போரில் உதவி செய்தவளே இந்த நரசிம்ஹி தேவி. இப்படி நரசிம்ஹி தேவி நரசிம்மரைப் போன்ற உருவத்தோடு அவரிடம் இருந்து தோன்றிய சரிதத்தை நாம் மார்க்கண்டேய புராணத்தில் காணலாம்.
இந்த தேவியின் பரிவார தேவதைகளாக இருப்பவர்கள் எட்டு தேவிகள். பாஸ்வதி முதலான அவர்களோடு சேர்த்து இந்த தேவியை பூஜிக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.
ஸ்கந்த புராணத்தில் நரசிம்ஹி தேவிஸ்கந்த புராணத்தில், ஆனந்தவனத்தில் நிலை கொண்ட பல விதமான யோகினிகளுக்கு நடுவில், நரசிம்ஹி தேவி, நிர்வாண நரசிம்மர் என்ற நரசிம்மர் வடிவத்தோடு இணைந்து காணப் படுவதாக சொல்லப் படுகிறது.
‘நிர்வாண-நரசிம்ஹஸ்ய ஸமீபே மோட்சகாங்க்ஷிபிஹி,
நரசிம்ஹீ’
- என்ற ஸ்லோகத்தின் மூலம் இதை அறியலாம்.
அக்னி மற்றும்
பத்ம புராணத்தில்
நரசிம்ஹி
அந்தகாசுரன் என்ற அரக்கன், பார்வதி தேவியை கடத்திச் சென்றான். அம்பிகையை மீட்க, சினம் கொண்ட சிவன், அந்தகன் மீது போர் தொடுத்துச் சென்று அவனைத் தாக்கினார். ஆனால், அங்குதான் விபரீதமே நடக்கிறது. பூமியில் விழும் அந்தகனின் ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்தும் புதியதாக ஒரு அந்தகாசுரன் தோன்ற ஆரம்பித்தான்.இப்படி அவனது ஒவ்வொரு ரத்தத் துளியில் இருந்தும் தோன்றிய அந்தகாசுரனால் உலகமே நிறைந்தது.
அப்போது ஈசனுக்கு உதவும் வகையில், பார்வதி தேவியானவள், அனைத்து தேவர்களையும் கட்டளையிட, அனைத்து தேவர்களும் தங்கள் தங்கள் சக்தியை ஒன்று திரட்டி, தங்களைப் போலவே ஒரு தேவியை தோற்றுவித்து, அந்தகனை அழிக்க ஈசனுக்கு துணையாக அனுப்பினார்கள்.அதன்படி, நரசிம்மர், தனது சக்தியை பெண் வடிவமாக திரட்டி, அந்தகாசுரனுடனான போரில், சிவ பெருமானுக்கு உதவி புரிய அனுப்பினார். இப்படிதான் நாரசிம்ஹி தேவி தோன்றியதாக அக்னி புராணம், சிவ புராணம் போன்ற நூல்கள் சொல்கின்றன.
தேவி கவசத்தில் நரசிம்ஹி தேவி
மார்க்கண்டேய புராணத்தின் ஒரு பகுதியாக தேவி கவசம் கருதப்படுகிறது. இதில் நம்மை பல விதமான தேவியின் வடிவங்கள் காக்கட்டும் என்ற பிரார்த்தனை அம்பிகையிடம் வைக்கப்படுகிறது. அந்த வகையில் நம்முடைய கணுக்காலை காக்கும் தேவியாக நரசிம்ஹி அதில் சொல்லப்படுகிறாள்.
பிரத்யங்கிராவும் நரசிம்ஹி தேவியும்
ஹிரண்யனை கொன்று ஒழித்த நரசிம்மரின் கோபத்தை யாராலும் அடக்க முடியவில்லை. அவரது கோபத்தால் உலகமே பல இன்னல்களுக்கு ஆளானது.அப்போது உலகைக் காக்க சிவ பெருமான் ஒரு சரப பட்சியின் வடிவம் தாங்கினார். அந்த பட்சியின் ஒரு சிறகில் பிரத்யங்கிரா தேவியும், மற்றொரு சிறகில் இருந்து சூலினி துர்கா தேவியும் அவரது சக்தியின் வெளிப்பாடாக தோன்றினார்கள்.
இறுதியில் சரபேஸ்வரர் நரசிம்மப் பெருமானை கட்டி அணைத்து அவரது சினத்தை தனித்தார். இப்படி நரசிம்மப் பெருமானின் அடங்காத கோபத்தை அடக்க ஈசனுக்கு உதவி செய்த அவருடைய சக்தியையே நாம் பிரத்யங்கிரா தேவி என்று சொல்கிறோம்.அதர்வண வேதத்துக்கும் தந்திர சாஸ்திரங்களுக்கும் இவளே தலைவி என்பதால் இவளை அதர்வண பத்ரகாளி என்று அழைப்பதுண்டு. ராமாயணத்தில் இந்திரஜித் இந்த தேவியை பூஜித்து தான் பலவிதமான அரிய வெற்றிகளை பெற்றான். இந்த பிரத்யங்கிரா தேவி ஒரு பெண்ணின் வடிவத்தோடும் சிம்ம முகத்தோடு நரசிம்ஹி தேவியை போலவே காட்சித் தருகிறாள்.
ஆனால், சில தேவி உபாசகர்கள்
நரசிம்ஹி தேவியும் பிரத்யங்கிரா தேவியும் ஒன்றுதான் என்று சொல்கிறார்கள். சிலர் அதை மறுக்கவும் செய்கிறார்கள். நரசிம்ஹி தேவியும் துர்க்கையின் சக்தி ஆயுதமும் துர்கா தேவியின் கையில் அதி சக்தி வாய்ந்த ‘சக்தி ஆயுதம்’ என்று ஒரு ஆயுதம் உண்டு. இதை அம்பிகை தனது வலது கீழ் கரத்தில் தாங்குகிறாள். இந்த ஆயுதத்தின் அம்சமாக தோன்றியவள் இந்த நரசிம்ஹி தேவி என்று சொல்லும் வழக்கமும் உண்டு. ‘சாக்த யாமள தந்திரம்’ இதை பற்றி விரிவாக சொல்கிறது என்று சொல்லப்படுகிறது.
நரசிம்ஹி தேவி நமக்கு காட்டும் தத்துவம்
இந்த தேவி ஒரு புறம் அதி உக்கிரமாக காணப்படுகிறாள். மற்றொரு பக்கம் உலகின் அன்னையாக லோக மாதா என்றும் அழைக்கப்படுகிறாள். அன்பின் உச்சியான தாய்மையும் கோபத்தின் உச்சியான கர்ஜனையையும் ஒரே இடத்தில் கொண்டு இருக்கிறாள் இந்த தேவி. இது சமநிலையை குறிக்கிறது. இந்த மன சமநிலையை அடைவதுதான் ஆன்மிக வாழ்க்கையின் வெற்றியாக கருதப்படுகிறது. அந்த சமநிலையை கொடுப்பவள், இந்த தேவி.
கட்டுக்கடங்காத கோபத்துடன் கூடிய நரசிம்மர் மனித மனதின் அடங்காத தன்மையை குறிக்கிறார். அவரது கோபத்தை அடக்கியதன் மூலம் மன ஒருமைப்பாட்டை தரக்கூடிய தேவியாக நரசிம்ஹி இருப்பதாக கருதினால் அது தவறில்லை.இந்த நரசிம்ஹி தேவியின் வழிபாடு எதிரிகளின் தொல்லையை நீக்கி எதிரிகளை இல்லாமல் செய்து விடும் என்று சொல்லப்படுகிறது. இது மனித மனதில் இருக்கும் ஆணவம், ஆசை, பொறாமை, கஞ்சச்தனம் போன்ற கெட்ட குணங்களை குறிக்கிறது. இந்த தீய குணங்களைக் கடந்து ஆன்மிக வாழ்க்கையில் முன்னேற உதவுபவளே, இந்த தேவி.
எப்படி வணங்குவது?
யோகினிகளை வழிபடும் முறையை, கிரமமாக ஒரு குரு மூலமாகக் கேட்டு அறிந்து கொண்டு, அதன்படி பூஜிப்பதே முறை. இருப்பினும் யோகினிகளின் அருளை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள், உளமார அந்த பராசக்தியை வணங்கி வழிபட்டால் போதும். அம்பிகையின் ஏவலர்களான யோகினிகளின் அருள், அம்பிகையின் அருள் இருந்தால், தானாக வந்து சேரும்.
ஜி.மகேஷ்
