சென்ற இதழின் தொடர்ச்சி…
மஹா பாசுபதாஸ்த்ராக்னி நிர்தக்தா ஸூர ஸைநிகா,
காமேஸ்வராஸ்த்ர நிர்தக்த ஸபண்டஸூர சூன்யகா
பௌத்தம் ஒன்றுமே இல்லை அதாவது சூன்யம் என்று சொல்கிறது. ஆனால், இங்கு வித்யா அந்த ஒன்று மட்டுமே இருக்கிறது என்கிற இடத்திற்குச் சென்று நிறுத்துகிறது. அப்படி ஒன்று இருப்பதுதான் அத்வைதம். அதுதான் பிரம்மம். அதுதான் சிவம். அதுதான் அம்பாள். அதுதான் நாராயணன்.
இந்த இடத்தில் ஒன்றுமே இல்லை என்று சொல்லப்பட்ட, ஜீவாத்மா இவ்வளவு நேரம் நேதி… நேதி… என்று செய்ததல்லவா… இப்படி இது இல்லை… இது இல்லை… என்று கழித்துக் கொண்டே போயிற்றோ அதெல்லாம்தான் பண்டாசுரனுடைய சைன்னியமாக இருந்தது. அதெல்லாவற்றையும் அழித்தாயிற்று.
இப்போது அந்த ஒன்றுமே இல்லாதது அழிந்ததற்குப் பிறகு, அந்த ஒன்று மட்டுமாகவே ஒன்று இருக்கிறது. ஒன்றுமே இல்லை என்பது அழிந்து விட்டது. ஒன்று மட்டும்தான் இருக்கிறது என்பதுதான் இருக்கிறது. இங்கு இந்த வரிகளை கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த ஒன்று மட்டும்தான் இருக்கிறது என்று எதைச் சொல்கிறோமே... அதுதான் அங்கு ஆத்ம சொரூபமாக இருக்கிறது. அங்கு ஆத்ம சொரூபமாக அம்பாள் இருக்கிறாள். காமேஸ்வர காமேஸ்வரி சொரூபமாக சிவசக்தி ஐக்கிய சொரூபமாக அம்பாள் இருக்கிறாள்.
இதற்கு உள்ளே உள்ள ஆழமான தத்துவ விஷயத்தைப் பார்க்க வேண்டும்.
இப்போது பாசுபத அஸ்திரத்தினால் வாசனைகளை அழித்தாள். அதற்கடுத்து காமேஸ்வரா அஸ்திரத்தினால் பண்டாசுரனை சம்ஹாரம் செய்தாள் என்பதைப் பார்த்தோம். இந்த இரண்டுக்கும் என்ன காரணம் என்னவென்று பார்க்க வேண்டும்.
சுவாமி இரண்டு நிலையில் செயல்படுகிறார். ஒருவகையில் அம்பாள் மூலமாக சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்று சொல்லக் கூடிய இந்தப் பிரபஞ்சத்தையெல்லாம் பார்த்துக் கொள்வார். அம்பாளை முன்னிட்டுக் கொண்டு இந்தப்
பிரபஞ்சத்தையெல்லாம் நிர்வாகம் செய்வார்.
இந்த இடத்தில் நாம் கொஞ்சம் சைவ சித்தாந்தத்தை வைத்துப் பார்க்க வேண்டும். அப்படிச் செய்யும்போது அவர் பதி, பசு, பாசம் என்று மூன்று இருக்கிறது. பதி என்பது இறைவன். பசு என்பது ஜீவாத்மா. பாசம் என்பது பதியைப்பற்றி தெரிந்து கொள்ள முடியாமல் இந்த பசுவை தடை செய்வதற்கு பாசம் என்று பெயர். அதையே ஆணவம், கன்மம், மாயை என்று மூன்றாகப் பிரிக்கிறது. பிறகு, அது எப்படிச் செயல்படுகின்றது என்பதை படிப்படியாக சைவ சித்தாந்தம் கொண்டு போகின்றது.
சைவ சித்தாந்தம் மட்டுமல்ல. வைஷ்ணவமும் இதைத்தான் சொல்லுகின்றது. ஈஸ்வரன், சித்து, அசித்து. சித் - ஜீவாத்மா. அசித்து என்பது அறிவற்று ஜடமாக இருக்கக் கூடிய இந்த பிரபஞ்சம். இந்த அஞ்ஞானம்தான் ஈஸ்வரனை காணவிடாமல் தடை செய்கிறது. அப்போது சித்தாகிய ஜீவாத்மாவை ஈஸ்வரனாகிய நாராயணனை காணவிடாமல் தடை செய்வது அசித்தாகும்.
இங்கு பதி, பாசம் என்று சொல்லும்போது - இப்படி பதியாய் இருந்து இந்தப் பிரபஞ்சத்தை நிர்வாகம் செய்கிறார் அல்லவா... அப்படிச் செய்யும்போது அவருக்கு பசுபதி என்று பெயர். அப்படி பசுபதி இருக்கும்போது என்ன செய்வாரெனில், அம்பாள் மூலமாக இந்த பசுக்களிடம் இருக்கக் கூடிய அஞ்ஞானத்தை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கழித்து விடுவார். கழித்ததற்கு பிறகு, இந்த பசுவாக இருக்கக் கூடிய ஜீவாத்மாவிற்கு மோட்சத்தை கொடுக்க வேண்டும். அந்த மோட்சத்தை கொடுக்கும்போது இந்த ஜீவாத்மா தன்னிலிருந்து வேறுபட்டவன் இல்லை.
இந்த ஜீவாத்மா பரமாத்மாவிடமிருந்து வேறுபட்டது இல்லை. இருக்கக் கூடியது ஒரேயொரு பிரம்மம்தான். அது பரமாத்மாதான். அதை காண்பித்துக் கொடுப்பது மோட்சம். அந்த மோட்சத்தை காண்பித்துக் கொடுக்கும்போது எப்படி இருப்பார் தெரியுமா? இவ்வளவு நேரம் சக்தியை தனியாக வைத்துக்கொண்டு இந்தப் பிரபஞ்சத்தை நிர்வாகம் செய்தார் அல்லவா? மோட்சத்தை இந்த ஜீவனுக்கு காண்பிக்கும்போது, சக்தியும் சிவனும் வேறில்லை என்று சிவசக்தி ஐக்கிய சொரூபமாக காமேஸ்வரராக இருப்பார்.
இப்படி பிரபஞ்சத்தை நிர்வாகம் செய்யும்போது பசுபதியாக இருக்கிறார் அல்லவா? அந்த பசுபதியாக இருக்கும்போது அவர் கையில் வைத்திருக்கக் கூடிய அஸ்திரத்தின் பெயர் பாசுபதாஸ்திரம். இந்த பாசுபதாஸ்திரத்தைத்தான் மகாபாரதத்தில் அர்ஜுனன் வாங்க வேண்டுமென்று சொல்லி, பெருமாள் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்து அவரைப்போய் தவம் செய்யச் சொல்கிறார்.
ஏனெனில், மகாபாரத யுத்தத்தின் மூலமாக பகவான் கிருஷ்ணர் கீதை என்கிற சாஸ்திரத்தை உபதேசம் செய்யப் போகிறார். அதற்கடுத்து அர்ஜுனன் என்கிற ஜீவாத்மாவிற்கு அவனைச் சுற்றியுள்ள இந்த அஞ்ஞான விருத்திகளாக பாசத்தை நீக்க வேண்டும். அதை நீக்குவது பசுபதியினால்தான் முடியும். அதனால் நீ போய் பாசுபதாஸ்திரத்தை வாங்கிக் கொண்டு வா என்று சொல்லி வாங்கிக் கொண்டு வரச் செய்கிறார்.
எல்லோருக்குள்ளும் ஒரு கேள்வி உண்டு. அர்ஜுனன் பாசுபதாஸ்திரத்தை வாங்கினாரே. பாசுபதாஸ்திரத்தினால் யாரை வதம் செய்தார். அவர் எங்கேயாவது அதை உபயோகப்படுத்தியிருக்கிறாரா… என்பது இன்னொரு பெரிய கேள்வியாகத்தான் இருக்கிறது. இங்கு கிருஷ்ணன் குரு ஸ்தானம். அர்ஜுனன் ஜீவாத்மா. ஞானம் என்கிற சாஸ்திரத்தை பகவக் கீதை மூலமாக சொல்லப் போகிறார். அதற்கு முன்னால் அவனுக்குள் இருக்கக் கூடிய வாசனா மலங்களை நீக்குவதற்கு பசுபதியிடமிருந்து பாசுபதாஸ்திரத்தை வாங்கி பாசத்தை நீக்குகிறார். இது குரு செய்யக் கூடிய மிகப் பெரிய வேலை.
அப்போது இங்கு அம்பாள் என்ன செய்கிறாளெனில், பாசுபதாஸ்திரம் மூலமாக வாசனா மலத்தை நீக்கி விட்டாள். இந்த வாசனா மலம் என்பது பல ஜென்மங்களாக பெறப்பட்டது. இந்த வாசனா மலத்தை பாசுபதாஸ்திரத்தின் மூலமாக அழித்தாயிற்று. இப்போது இந்த ஜீவாத்மாவோடேயே ஒரு அறியாமை - அஞ்ஞானம் ஒன்று இருக்கிறது. அதுதான் இப்படி எல்லா வாசனைகளையும் சேர்த்து வைத்திருப்பதற்கு காரணமாக இருக்கிறது. அதற்குத்தான் மூல அவித்யா. மூல அஞ்ஞானம். அதை ஒன்றை எடுத்து விட்டால் அதுதான் மோட்சம். ஜீவன் முக்தி. சொரூப ஞானம். பிறகு, தானே தானாய் இருப்பதுதான். பிறகு எதுவுமே கிடையாது. இப்படி மூல அஞ்ஞானத்தை நீக்க வேண்டுமல்லவா… அது எங்கு நடக்குமெனில், அது மோட்ச தசையில்தான் நடக்கும். காமேஸ்வர காமேஸ்வரி சிவசக்தி ஐக்கிய சொரூபத்தில் நிகழும். அதனால் அங்கு ஈஸ்வரனுடைய காமேஸ்வர அஸ்திரத்தை அம்பாள் உபயோகப்படுத்துகிறாள். இப்போது மூல அஞ்ஞானத்தை நிர்மூலம் செய்கிறாள். யார் லலிதாம்பிகையாக சிவசக்தி ஐக்கிய சொரூபிணீயாக இருக்கிறாளோ அவள்தான் இந்த ஆத்மா என்பது இந்த சாதகனுக்குத் தெரிகிறது. அந்தச் சாதகன் இதை உணருகிறான். இதுதான் உயர்ந்த ஞானநிலை. இதுவே ஜீவன் முக்தி.
ஒரு ஜீவனுக்கு சொரூப ஞானம் எப்போது சித்திக்குமெனில், காமேஸ்வரர் என்கிற ஆத்ம சொரூபத்தை நாம் உணரும்போதுதான் சொரூப ஞானம் சித்திக்கும். அதனால், அந்த நிலையில் இருக்கக் கூடிய சுவாமிக்கு, காமேஸ்வரர் என்று பெயர். அதனால் அந்த சொரூப ஞானத்தை கொடுக்கும்போது அம்பாள் காமேஸ்வராஸ்திரத்தை உபயோகப்படுத்துகிறாள்.
இப்படி மேலே சொன்ன இரண்டு நிலைகளிலும் அம்பாள் செயல்படுகின்றாள். இப்படி இரண்டு நிலைகளிலும் அம்பாள் நிகழ்த்தும்போது அம்பாளுக்கு ஒரு முழுமை அல்லது ஒரு wholeness வருகின்றது.
நாம் இந்த நாமத்திற்கான கோயிலாக திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலைச் சொல்லலாம்.
நாம் ஏன் இந்தக் கோயிலைச் சொல்ல வேண்டுமெனில், திருவாரூர் கோயிலின் மூல லிங்கம் வன்மீகநாதர் என்பதாகும். புற்றிடங் கொண்டார் என்பது அதன் தமிழ்ப் பெயர். இந்தக் கோயிலின் விசேஷமான மூர்த்தியாக… இன்னும் சொல்ல வேண்டுமெனில் வைகுண்டத்திலிருந்து இந்திர லோகத்திற்கு வந்து இந்திரனிடமிருந்து பூமிக்கு எழுந்தருளிய தியாகராஜ சுவாமி.
நாம் இந்த நாமத்தில் சுவாமி பசுபதியாக இருக்கிறார் என்று பார்த்தோம். அந்த பசுபதியாக இருக்கக் கூடிய சுவாமி வன்மீகநாதர் என்று சொல்லக் கூடிய புற்றிடங்கொண்டார். அதே சுவாமி காமேஸ்வரராக இருப்பார் என்று பார்த்தோம். அந்த காமேஸ்வரராக இருக்கக் கூடியவர் தியாகராஜர். இந்த புற்றிடங்கொண்டார் பசுபதியாக இருப்பதால்தான் ஒட்டுமொத்த ஜீவராசிகளையும் நிர்வாகம் செய்கிறார். சிறிய எறும்பு முதல் பிரம்மா வரையிலுள்ள அத்தனையையும் நிர்வாகம் செய்கிறார். சாஸ்திரமானது ஆபிரம்மாதி பிபீலிகாந்த ஜனனி…. பிரம்மா முதல் பிபீலிகா என்றால் எறும்பு வரையிலும் எல்லா உயிரினங்களுக்கும் அம்மா யாரெனில் அம்பாள்தான்.
அந்த எறும்பு முதல் பிரம்மா வரை எல்லோருமே பசுதான். ஜீவாமாக்கள்தான். அந்த ஜீவாத்மாக்களை நிர்வாகம் செய்யக் கூடியவாராக யார் இருக்கிறாரெனில் வன்மீகநாதர் புற்றிடங் கொண்டார் இருக்கிறார். புற்று எங்குள்ளதெனில் இந்த மண்ணில். அவருடைய இந்த உண்மையான நிலையை நினைத்துக் கூட பார்க்க முடியாது. அவர் நமக்காக இந்த மண்ணில் இறங்கி புற்றிடங் கொண்டாராக இருக்கிறார். அவர் நமக்காக இந்த பூமியில் இறங்கி வன்மீகநாதராக இருக்கிறார். ஒரு சாதாரண புற்றுக்குள் இருக்கிறார். அப்படி புற்றுக்குள் இருக்கும்போது யாரெல்லாம் அவரை பூஜை செய்கிறார்கள் என்று பார்த்தால், தேவர்கள் பூஜை செய்கிறார்கள். ஆனால், என்ன உருவத்தில் செய்கிறார்களெனில்… எறும்பு உருவத்தில் செய்கிறார்கள். பூஜை செய்கிறவர்கள் தேவர்கள். ஆனால், அவர்கள் பூஜை செய்யக்கூடிய உருவர் எறும்பு உருவம். அப்போது சுவாமி இதிலேயே நமக்கொரு தத்துவத்தை காண்பித்துக் கொடுப்பது என்னவெனில், நாம் பார்க்கின்ற சாதாரணம் எறும்பில் ஆரம்பித்து, இந்திராதி தேவர்கள் வரைக்கும் எல்லாருமே என்னுடைய குழந்தைகள்தான். இதனால்தான் அவர் பசுபதியாக இருக்கிறார்.
பசு என்கிற வார்த்தைக்கு நிறைய பொருள் உண்டு. பசு என்பதற்கு ஜீவாத்மா, விலங்கு என்று இன்னொரு பொருளும் உண்டு. இப்படி தேவர்கள் தாண்டி, மனிதர்கள்தாண்டி எல்லோருக்குமே பசு என்றுதான் பெயர்.
ஜீவாத்மாவிற்கு மோட்சம் கொடுக்கும்போது காமேஸ்வரராக இருக்கிறார். காமேஸ்வர காமேஸ்வரி சொரூபமாக இருக்கிறார். காமேஸ்வர காமேஸ்வரி சொரூபத்தை காண்பித்துக் கொடுக்கக்கூடிய மூர்த்திதான் தியாகராஜ மூர்த்தி. அங்கு சுவாமி, அம்பாள், முருகன் என்று சோமாஸ்கந்த மூர்த்தியாக இருப்பார். ஆனால், அலங்காரத்தில் முருகன் மறைந்திருப்பார். அம்பாளும் சுவாமியும் மட்டும்தான் தெரியும். இந்த நிலை எதை உணர்த்துகிறது எனில், மோட்ச தசையில் சுவாமி கொடுக்கக்கூடிய ரகசியமான ஆனந்தத்தை குறிக்கின்றது. ஆத்ம சொரூபத்தை அடைந்தவன் அனுபவிக்க முடியுமே தவிர அதை வெளியிலே சொல்ல முடியாது. அதனால், அவர் ரகசிய மூர்த்தியாக இருப்பார்.
அந்த காமேஸ்வர காமேஸ்வரி சொரூபத்தில் மோட்சத்தை சித்திக்க வைக்ககூடிய, சொரூபத்தை காண்பித்துக் கொடுக்கக்கூடிய காமேஸ்வரராக இருக்கக்கூடியது யாரெனில் தியாகராஜர். அப்போது தியாகராஜர் என்கிற காமேஸ்வரராக இருந்து முக்தி நிலையை கொடுப்பவரும், வன்மீக நாதர் என்கிற புற்றிடங்கொண்டாராக இருந்து இந்த உலகத்தை நிர்வகிக்கிறவருமாக இரண்டையுமே செய்வதால் இந்த இரண்டு நாமங்களில் இந்த இரண்டையுமே பார்த்திருக்கிறோம்.
பாசுபதாஸ்திரம் மூலமாக வாசனா மலத்தையும், காமேஸ்வரர் மூலமாக மூல அஞ்ஞானத்தையும் அம்பாள் எப்படி நீக்குகிறாள் என்று பார்த்ததால், சுவாமி அங்கு பசுபதியாகவும் இருக்கிறார். காமேஸ்வரராகவும் இருக்கிறார். வன்மீகநாதராகவும் இருக்கிறார். தியாகராஜராகவும் இருக்கிறார்.
இந்த தலத்தில் அம்பாள் யோக ரூபியாக இருக்கிறாள். இரண்டு அம்பாளும் இரண்டு ரூபத்தில் இருக்கிறாள்.
நீலோத்பலாம்பிகையாகவும் கமலாம்பிகையாகவும் இருக்கிறாள். கமலாம்பிகை என்று சொல்லும்போது மூலாதாரத்திலிருந்து சகஸ்ராரம் வரையிலுள்ள சகஸ்ராரங்களின் சக்ரங்களின் சொரூபமாக இருக்கிறாள். அந்த சக்ரங்களின் வழியாக பிரவேசிக்கக்கூடிய குண்டலினியாகவும் அம்பாளே இருக்கிறாள். அது நீலோத்பலாம்பிகை.
எனவே, இந்த இரண்டு நாமங்களுக்கான கோயிலாக திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தைச் சொல்லலாம்.