Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நாகசதுர்த்தி ஸ்பெஷல் : நாகர்களுக்குப் பிடித்த நூலும் பாலும்

28.7.2025 - நாகசதுர்த்தி

29.7.2025 - நாகபஞ்சமி

தென் தமிழகத்திலேயே நாகர் வழிபாட்டுக்கு சிறந்த தலமாக ``நாகராஜா கோயில்’’ திகழ்கிறது. தமிழ்நாட்டில், நாகர் வழிபாட்டிற்கு என்று தனியாக அமைந்த கோயில் இதுவேயாகும். திருப்பாம்புரம், பாமணி, நாகப்பட்டினம், திருக்காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், திருப்பனந்தாள், கீழ்ப்பெரும் பள்ளம், கோடகநல்லூர் போன்ற ஆலயங்களில் எல்லாம் மூலவரான சிவபெருமானை வழிபட்டு, நாகங்கள் தங்களது கொடிய தோஷங்களைப் போக்கிக் கொண்டதால், பெருமைமிக்கதாகும். ஆனால், நாகருக்கென்றே தனிக்கோயில், அதாவது நாகர் மூலவராக வீற்றிருக்கும் ஆலயம் ``நாகர்கோவில் நாகராஜா கோயில்’’ மட்டுமே ஆகும். ஆதிகாலத்தில் இந்த பகுதி வயல்கள் சூழ்ந்ததாக இருந்தது.

வயலில் அரிவாளை வைத்து நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்த ஒரு பெண், நெற்கதிரை அறுக்கும் போது திடீரென செங்குருதி கொப்பளித்தது.இதைக் கண்டு பயந்து போன அந்தப் பெண், அருகில் இருந்தவர்களிடம் சொல்ல, அவர்கள் ரத்தம் வந்த இடத்தைப் பார்த்த போது, அங்கே பாறை ஒன்றில் ஐந்து தலையுடன் கூடிய நாகர் உருவம் இருந்தது. அந்த நாகர் சிலையின் மேற்பகுதியில் இருந்துதான் ரத்தம் வந்து கொண்டிருந்தது. பின்பு அந்த நாகர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து அந்தப் பகுதி மக்கள் அனைவரும் வழிபட்டனர்.

இதையடுத்து ரத்தம் வருவது நின்றது. எனவே, அந்தப் பகுதி மக்கள் தினமும், அந்த சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடத் தொடங்கினர். இதனால் அந்த மக்களின் வாழ்க்கையில் துன்பங்கள் அகன்று, வசந்தம் வீச ஆரம்பித்தது. முதலில் குடிசை போட்டு சிலையை வைத்து ஆராதித்து வந்தனர். ஒருமுறை சரும நோயால் பாதிக்கப்பட்ட களக்காடு பகுதியை ஆண்டு வந்த மன்னன் பார்த்தாண்டவர்மா, நாகராஜா கோயிலுக்கு வந்தார். அவர் நாகராஜருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார். இதனால் மகிழ்ந்த மன்னன், அவ்விடத்திலேயே நாகராஜவுக்கு ஆலயம் எழுப்பினார். ஆனால், கருவறை மட்டும் நாகங்கள் வசிப்பதற்கு ஏற்ப ஓலைக்கூரை யாலேயே வேயப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் இத்தல அர்ச்சகர்களே ஓலைக் கூரையைப் பிரித்துவிட்டு, புதிய ஓலை கொண்டு கூரையை வேய்கிறார்கள். கேரள கட்டடக்கலை பாணியில் இந்த ஆலயம் அமையப் பெற்றுள்ளது. பல நூறு ஆண்டுகளைக் கடந்த பிறகும் இப்போதும் நாகரின் கருவறை ஓலைக் குடிசையாகவே உள்ளது. களக்காடு மகாராஜா உட்பட எத்தனையோ பணக்காரர்கள் நாகராஜாவுக்கு பிரம்மாண்டமான கருவறையுடன் கூடிய ஆலயம் கட்டித்தர முன் வந்தனர்.

அதற்காக நாகராஜா ஒப்புதல் பெற பல தடவை பிரசன்னம் பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு தடவைகூட நாகராஜா தனக்கு ஓலைக் குடிசை இருப்பிடத்தை மாற்ற விரும்பவில்லை. பிரம்மாண்டமான கல் கட்டிடம் வேண்டாம் என்று எல்லா பிரசன்னங்களின் போதும் நாகராஜா மறுத்துவிட்டார். இதனால் இன்றும் நாகராஜா ஆலயத்தில் கருவறை ஓலைக் குடிசையில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவிழாவை முன்னிட்டு கருவறை ஓலையை மாற்று ிறார்கள். கேரளாவில் இருந்து வரும் நம்பூதிரிகள் மட்டுமே இந்த பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். கருவறையின் பின்புறம் கருங்கல் ஆகியவற்றால் உருவாகியுள்ள போதிலும், அதன் கூரை மூங்கில் கழிகள் ஓலை ஆகியவற்றால் அமைக்கப்பட்ட கீற்றுக் கொட்டகையாகவே உள்ளது.

மூலஸ்தானத்தில் நாகராஜர் அருளாட்சி புரிகிறார். அவரைச் சுற்றியுள்ள பகுதி எப்போதும் ஈரமாகவே உள்ளது. இங்குள்ள புற்று மண்ணையே பிரசாதமாகப் பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். இது பல நூறு ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்ற போதிலும், இம்மண்ணின் அளவு குறையாமலிருப்பது இதன் தெய்வீக சக்திக்கு ஒரு சான்று. இம்மண் ஆறு மாதங்கள் வெண்மை நிறமாகவும், ஆறு மாதங்கள் கறுப்பு நிறமாகவும் காட்சியளிப்பதும், ஓர் அபூர்வமான அம்சமாகும்.

இவ்வாலயம் முழுவதும் சர்ப்ப மயமாகவே காட்சியளிக்கிறது. நாகராஜர் சந்நதிக்கு வலது புறம், காசி விஸ்வநாதர், அனந்த கிருஷ்ணன் மற்றும் கன்னி மூல கணபதி ஆகிய சந்நதிகள் அமைந்துள்ளன. தினமும் நாகராஜருக்கு பூஜைகள் நடைபெற்று முடிந்த பின்னர்தான் இவர்களுக்குப் பூஜை நடைபெறும். அர்த்த ஜாமப் பூஜை மட்டும் அனந்த கிருஷ்ணருக்கு முதல் பூஜையாக நடைபெறுகிறது. ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆனால் பிரதான வாயில் தெற்கு நோக்கியே இருக்கிறது. இதன் வழியாகத்தான் பக்தர் செல்கிறார்கள். இந்த வாசலை ‘மகாமேரு மாளிகை’ என்று அழைக்கிறார்கள். கோயில் வெளி பிராகாரத்தில் துர்க்கை, பால முருகன், குழலூதும் கண்ணன் ஆகியோருக்குச் சந்நதிகள் அமைந்துள்ளன.

காவல் தெய்வங்களான சாஸ்தாவும், நாகமணி பூதத்தான் சந்நதியும் உள்ளது. நாகராஜா கோயிலில், திரும்பிய திசை எல்லாம் நாகர் சிலைகளாக உள்ளது. கோயிலின் நுழைவு வாசலில் தொடங்கி நடைபாதை களின் இரு பக்கங்களிலும் நாகர் சிலைகள் குவிக்கப்பட்டுள்ளன. கோயில் குளத்தைச் சுற்றியும் நாகர் சிலைகளே உள்ளன. கோயில் சுற்றுச் சுவர் மீது வரிசையாக நாகர் சிலைகளை அடுக்கி வைத்துள்ளனர். கோயில் உட்பிராகாரத்தில், கோயில் பின்புறம் உள்ள நந்தவனத்தில் நாகர் சிலைகள் வரிசையாக அடுக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான நாகர் சிலைகளை ஒரே இடத்தில் பார்க்கும் போது, சற்று பிரமிப்பாக இருக்கும்.

இவ்வாலயத்தின் முன் பகுதியில் உள்ள அரசமரத்தடியிலும் ஏராளமான நாகர் சிலைகள் உள்ளன. அந்த சிலைகளுக்கு பால், மஞ்சள் அபிஷேகம் செய்வதன் மூலம் பக்தர்களுக்கு உரிய பலன்கள் கிடைக்கிறது. நாகருக்கு நடத்தப்படும் பூஜைகளில் மிக முக்கியமானது, ``நூலும் பாலும்’’ பூஜையாகும். நாகராஜா ஆலயத்தில் தினமும் இந்த பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜை எல்லா வகையான அமைதியையும் தர வல்லது. கட்டணம் செலுத்தி இந்த பூஜையை பக்தர்கள் செய்யலாம். இந்த பூஜையின் போது, மஞ்சள், அரிசி மாவு, கதலிப்பழம், கமுகு, பால் ஆகிய ஐந்தும் கலந்து நாகராஜாவுக்கு நிவேதனம் செய்யப்படும். கதலிப்பழம் நாகராஜாவுக்கு மிகமிக விருப்பமானதாகும். இந்த நிவேதன பூஜை செய்து, நாகராஜாவின் அருள் பெற எண்ணற்ற பக்தர்கள் வருகின்றார்கள்.

ஆவணி மாதங்களில் வரும் ஞாயிற்றுக் கிழமைக்கு தனி மவுசு உண்டு. அதாவது, ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமையன்று நாகராஜரை வழிபட்டால், நாக தோஷங்கள் நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். மேலும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகை தந்து தரிசனம் செய்கிறார்கள்.கனக்காட்டைத் தலைநகராகக் கொண்டு அன்றைய வேணாட்டை ஆண்ட ‘பூதள வீர ஸ்ரீ வீர உதய மார்த்தாண்ட வர்மா’ என்ற மன்னரின் ஆட்சிக் காலத்திலிருந்தே (கி.பி.1516-1535) ஆவணி மாதத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் நாகராஜருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருவதாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன.

மேலும், நாகராஜா கோயிலுக்கும் ஆயில்யம் நட்சத்திரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு! எனவே ஆயில்ய நட்சத்திர நாட்களில் இந்த ஆலயத்துக்கு வந்து வழிபாடுகள் செய்தால், அதிக பலன்களைப் பெற முடியும். ராம அவதாரத்தில், லட்சுமணர் ஆயில்யம் நட்சத்திரத்தில் அவதரித்தார். கிருஷ்ண அவதாரத்தின் போது அனந்தன் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தார். தற்போதைய கலியுகத்தில் நாகராஜா, ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்ததாக ஐதீகம்.

எனவேதான் ஆயில்யம் நட்சத்திரத்தில் இங்கே வழிபாடு செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.‘ஓடவள்ளி’ என்ற கொடியே இத்தல விருட்சமாகும். ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் நாக உருவம் கொண்ட நாகலிங்க மரம் உள்ளது. ஆலயத்தில் நாக புஷ்பங்கள் பூத்துக் குலுங்குகின்றன. நாகராஜரின் குறியீடாக அவற்றை மக்கள் நம்புவதால் அர்ச்சகர்கள் தவிர வேறு எவரும் அவற்றைப் பறிப்பதில்லை. நாகசதுர்த்தி, நாகபஞ்சமி போன்ற நாட்களில் விரதம் இருந்து ஏராளமானோர் வந்து வழிபடுகிறார்கள். நாகசதுர்த்தி திதியன்று இங்குள்ள அரச மரத்தினடியில் நாக எந்திரம் ஒன்றினை பீடத்தில் அமைத்து சிவலிங்கத்துடன் கூடிய நாகர் சிலையினை பிரதிஷ்டை செய்தால், ‘நாக தோஷம் நீங்கும் நலமுடன் வாழலாம்’ என்று போகர் கூறுகிறார். இத்திருக்கோயில் பல நூற்றாண்டு கால வரலாற்றினைக் கொண்டுள்ளது.

கி.பி.16 - ஆம் நூற்றாண்டு வரை சமணப் பள்ளியாக இத்திருக்கோயில் இருந்துள்ளது. கி.பி.1643 - ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று இக்கோயிலை ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் என்று கூறுகிறது. சென்ற நூற்றாண்டு வரை இப்பகுதி கோட்டாறு என அறியப்பட்டது. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வெவ்வேறு காலங்களில் இங்கு ஆட்சி புரிந்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. கி.பி. 19-ம் நூற்றாண்டில் கிறித்துவ சபையின் பிரதி நிதியான ‘ரிங்லேடாப்’ என்பவரின் வருகைக்குப் பின்னரே இப்பகுதி நாகர்கோயில் எனப்பெயர் பெற்றது.

இவ்வாலயத்தில் நாள்தோறும் நான்கு கால வழிபாடுகள் நடைபெறுகின்றன. நாக வழிபாட்டில் பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டுள்ள ‘பாம்பமே காட்டு இல்ல’தைச் சேர்ந்தவர்கள் பூஜை செய்து வருகிறார்கள். இவர்கள் கேரள நம்பூதிரி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தை மாதத்தில் பத்து நாட்கள் பெருந்திருவிழாவும், ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளிலும், ஆயில்ய நட்சத்திர நாளன்றும் விசேஷ வழிபாடுகள் விமரிசையாக நடைபெறுகின்றன. நாகதோஷத்தால் பீடிக்கப்பட்டோர் பரிகாரம் தேட இது உகந்த தலமாகும். தீராத வியாதியஸ்தரும் குறிப்பாக சரும நோய்களால் பாதிக்கப்பட்டோரும், புத்திர பாக்கியம், மண வாழ்க்கை, போன்ற கோரிக்கையை உடையவர்களும் அதிக அளவில் இங்கு வந்து பிரார்த்தனைகளை நடத்துகின்றனர்.

மரம், மீன் போன்ற பொருட்கள், உடலுறுப்புக்கள், தொட்டில்கள், உப்பு, மிளகு, நெற்கதிர்கள், மலர்கள், பால் போன்ற பல பொருட்களைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இங்குள்ள துர்க்கை சிலை, இங்குள்ள நாக தீர்த்தத்தில் கிடைத்தது. எனவே செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் இந்தத் தீர்த்தத்தில் நீராடி பால் அபிஷேகம் செய்து, நெய் எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால், நாக தோஷம் உடனே அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். நாகர் கோயில் நாகராஜா ஆலயம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகவும் புராதனமான பழமையான ஆலயம். பல்வேறு மதத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்று மீண்ட இந்த ஆலயம், பாரம்பரிய புனிதத்தை மாறாமல் நிற்பது குறிப்பிடத்தக்கது. அதிசயம் என்ன வென்றால், இந்த நாகர்கோயில் நாகராஜா ஆலயத்தின் பூஜை முறைகள் மாறவில்லை.

புற்றுமண் பிரசாதம் மாறவில்லை. நாகராஜா வீற்றிருக்கும் ஓலைக் குடிசை மாறவில்லை. பல நூற்றாண்டுகளாக நாகராஜா கோயிலின் பாரம்பரிய சிறப்பை இப்போதும் பிரதி பலித்துக் கொண்டிருக்கின்றன. குமரி மாவட்டத்தில் நாகர்கோயில் நகரின் மையத்தில் நாகராஜர் கோயில் அமைந்துள்ளது. நாகராஜா ஆலயம் தினமும் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. முதலில் நிர்மால்ய அபிஷேகம் நடத்தப்படும். 5.30 மணிக்கு உஷ்த்கால பூஜை செய்யப்படும். இதைத் தொடர்ந்து சீவேலி நடைபெறும்.

10 மணிக்கு உச்சிக்கால பூஜை தொடங்கும். கலச அபிஷேகம் செய்யப்படும். 11.30 மணிக்கு உச்சிக்கால பூஜை, சீவேலி செய்யப்பட்டு நடை மூடப்படும். மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 6.00 மணிக்கு சாய ரட்சை பூஜை. 7.30 மணிக்கு அத்தாள பூஜை. 8.30 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடந்ததும் நடை மூடப்படும். சக்தி வாய்ந்த எண்ணற்ற திருத்தலங்களில் நாகர்கோவில் நாகராஜா ஆலயம் தனித்துவம் கொண்டதாக திகழ்கிறது!

டி.எம்.ரத்தினவேல்