Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாதம் என் ஜீவன்

பகுதி 3

இருபத்தி நாலாயிரம் கீர்த்தனைகளுக்கு மேல் எழுதிவிட்டதாக அவரின் சீடர்கள் பேசிக் கொண்டார்கள். அவர் சதாபிஷேக வயதையும் தாண்டி விட்டார். அன்று பராபவ வருஷம், தை மாதம், ஏகாதசி திதி, ராமரின் முன்பு தியாகராஜர் சம்மணமிட்டு அமர்ந்தார். அவரை அப்பொழுதுதான் முதல் முதலாக பார்ப்பது போல் தலை முதல் கால் வரை உற்றுப் பார்த்தேன். மெலிந்த தேகம், சிவந்த நிறம், தொடையை தாண்டிய நீண்ட கைகள், சற்றே நீண்ட கழுத்து, சுமாரான உயரம், ஒளிபொருந்திய கண்கள், தலையில் குடுமி, கழுத்தில் துளசி மாலை, நெற்றியில் கோபி சந்தனம் என சங்கீதத்திற்கு உருவம் கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தார். அவரின் குரல் அப்படியேதான் இருந்தது. ராமரைப் பார்த்தார். பாடத் துவங்கினார்.

‘மோக்ஷமு கலதா புவிலோ

ஜீவன்முக்துலு கானி வாரலகு.’

மோட்சத்தைப் பற்றி அவர் பாடியது எனக்குக் கலக்கத்தை அளித்தது.கீர்த்தனை முடிந்தது. எல்லா சீடர்களையும் அருகில் வர அழைத்தார். ‘‘என் ராமன் கனவில் தோன்றினார் வருகிற பகுள பஞ்சமி அன்று என்னை அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருக்கிறார். அதற்கான ஏற்பாட்டை நீங்கள் செய்யத் துவங்குங்கள்’’ என்றார்.காவிரி ஆற்றின் அருகில் ஒரு குடில் அமைக்கப்பட்டது. எல்லோருக்கும் செய்தி சொல்லி அனுப்பப்பட்டது. தியாகராஜர் காவிரி ஆற்றில் நீராடி காவி உடை தரித்துக்கொண்டார். பின்பு பூர்ண கும்ப மரியாதையுடன் அழைத்து வரப்பட்ட பரமஹம்ச பரிவ்ராஜக ஸ்ரீ பிரமானந்த சுவாமிகள், தியாகராஜருக்கு ஆபத் சன்னியாசம் வழங்கினார்.

இன்னும் பத்து நாட்களில், நம்முடைய குரு நம்மை விட்டுப் பிரியப் போகின்றார் என்கின்ற வேதனை எல்லோருக்கும் இருந்தது.பகுள பஞ்சமி நாளும் வந்துவிட்டது. அன்று அதிகாலையிலேயே தியாகராஜர் காவிரியாற்றில் நீராடினார். தியாக ராஜர் இறுதியாகப் பார்க்கும் சூரிய உதயம் இதுதான் என்று நினைக்கையில் எனக்குக் கலக்கமாக இருந்தது. காவித் துண்டையே தலையிலும் சேர்த்து அணிந்து கொண்டார். தம்புராவாகிய என்னை வலது கையில் ஏந்திக் கொண்டார்.

காவிரி கரையிலிருந்தே அவர் உஞ்ச விருத்திக்குக் கிளம்பி விட்டார். தியாகராஜர் மனநிலையில் திருமஞ்சன வீதியை நான் பார்த்தேன். எத்தனை நாட்கள் அவரின் தந்தை ராமபிரம்மத்துடன் இதே வீதியில் ஊஞ்சவிருத்தி செய்து இருக்கிறார். உடலில் எண்பது வயதுக்கு உண்டான தளர்வு இருந்த போதும், தியாகராஜரின் குரலில் அதே கம்பீரம்! ‘‘ஹரே ராம ஹரே ராம’’ மந்திர ஜெபம் தொடர்ந்தது. பிட்சை அளித்தவர்களுக்கு, மஞ்சள் அட்சதையை தூவி ஆசீர்வதித்தார்.

குடிலில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார மேடையை தியாகராஜர் அடைந்தார். நடுநாயகமாக வீற்றிருந்த ராமரை விழுந்து நமஸ்கரித்தார். குழுமியிருந்த பக்தர்களையும் சீடர்களையும் இரு கரம் கூப்பி வணங்கினார். ஸ்ரீ ராமரின் அருகிலிருந்த மரப் பலகையில் அமர்ந்தார். குழுமியிருந்த அனைவரும் தியாகராஜரையும் ராமரையும் தரிசிக்க முடிந்தது. தம்புராவாகிய என்னை அவரது வலது கரத்தில் ஏந்திக் கொண்டார். என்னால் ராமரை, தியாகராஜரை, சூழ்ந்திருந்தோரைப் பார்க்க முடிந்தது. எப்பேர்ப்பட்ட தருணம் எனக்கு வாய்திருக்கிறது! மனதில் நாரதரை நமஸ்கரித்தேன். தியாகராஜர் என்னைப் பார்த்து புன்னகைத்தார். எனக்கு விம்மியது. என்னை மீட்டி சுருதி சேர்த்தார். ராமரைப் பார்த்தார். மெல்லிய குரலில் பாடத் துவங்கினார்.

“ஜகதானந்த காரகஜய ஜானகீ ப்ராண நாயக’’

சீடர்கள் இணைந்து பாடினார்கள். எல்லோருடைய பிராண நாயகன், ஜகதானந்தகாரகன் புன்முறுவல்

செய்தான்.இரண்டாவதாக, “துடுகு கல நன்னே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ’’ கீர்த்தனையைப் பாடினார். தியாகராஜர் இந்தக் கீர்த்தனையில் தன்னை துடுக்கானவன் என்று கூறிக் கொள்வதை நான் மிகவும் ரசித்தேன்.மூன்றாவதாய், ‘‘ஸாதிஞ்செனே ஓ மனஸா...’’ என்ற கீர்த்தனையைப் பாடினார். இங்கு சாதித்தவர் யார்? தியாகராஜரா? அல்லது ராமரா? இரண்டு பேருமே சாதித்து விட்டார்கள் என்றுதான் எனக்குப் பட்டது.

நான்காவதாய் “கன கன ருசிராகனக வஸன நின்னு” எனத் துவங்க, நான் உள்பட எல்லோரும் கண்கலங்கினோம். ராம நாமம் எல்லாவற்றிற்கும் மேலானது எல்லாவற்றையும் ராம நாமம் கொடுக்கும். அதற்கான பெரிய சாட்சியே தியாகராஜரின் வாழ்க்கை தான்!

குழுமி இருந்தோர் அனைவரும் தியாகராஜர் கீர்த்தனைகளைத் தொடர்ந்து பாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்று விழைந்தார்ககள். ராமரின் எண்ணம் வேறாய் இருந்தது.

தியாகராஜர் சுற்றி இருக்கும் அத்துணை பேரையும் வணங்கும் வண்ணமாய் கைகளைக் கூப்பினார். கூட்டம் மொத்தமும் ராமா ராமா என்று ஆர்ப்பரித்தது. குரலை உயர்த்தி தியாகராஜர்,

“எந்தரோ மஹானுபாவுலந்தரிகி வந்தனமு” கீர்த்தனையைப்பாடத் துவங்க, எல்லோரும் கண்ணீர் மல்கப் பாடினார்கள்.

கீர்த்தனையின் இறுதி வரிகளைப் பாடிக் கொண்டிருக்கும் போதே, ராமரை உற்று நோக்கினார். அருகில் இருந்த வேதியர் அளித்த துளசி தீர்த்தத்தை மூன்று முறை அருந்தினார். கீர்த்தனை முடிந்தது தியாகராஜர் ராமரின் பாதங்களைத் தொட்டார் கண்களில் ஒற்றிக்கொண்டார் ராமர் பாதங்களில், தலையை வைத்து வணங்கினார். ராமர் வருவதும் அவரை அழைத்துச் செல்வதும் என்னால் உணர முடிந்தது. குழுமியிருந்தோர் மௌனம் காத்தனர். தியாகராஜரிடமிருந்து ஒரு ஒளிக்கீற்று கிளம்பி ராமரை அடைவதை எல்லோரும் தரிசித்தார்கள். தியாகராஜர் கையில் இருந்து நழுவிய நான், ராமர் பாதங்களில் நமஸ்கரித்தேன்.

தியாகராஜருக்கு மரணம் என்பதே இல்லை. அந்த நாத பிரம்மத்திற்கு என்றுமே பெருவாழ்வுதான். நாதம் அவரது ஜீவன்.அவரின் கீர்த்தனைகள் இந்தப் பிரபஞ்சத்தில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும். எங்காவது அவர் கீர்த்தனையைப் பாடிக் கொண்டிருப்பார்கள், அவரது கீர்த்தனையைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். அவரது கீர்த்தனையைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள்.ராம சரிதம் சொல்லும் இடங்களில் எல்லாம் அனுமன் அமர்ந்து கேட்பதாக ஒரு ஐதீகம். அதைப்போலத்தான் நானும் தியாகராஜரின் கீர்த்தனைகள் எங்கு ஒலித்தாலும், நான் கேட்டுக் கொண்டு இருப்பேன். நாதம் என் ஜீவனும்தான்!

கோதண்டராமன்