Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முயலகன்

நடராசர் வடிவங்களில் அவரது ஊன்றிய திருவடியின் கீழ் மிதியுண்டவாறு கிடக்கும் பூதத்தை முயலகன் என்பர். நன்னெறியில் செல்ல முயலும் உயிர்களை, அவ்வழியில் தொடர்ந்து மேற்செல்ல வொட்டாமல் தடுக்கும் ஆணவ மலத்தின் வடிவமாக அவன் விளங்குகின்றான். அவன் இறைவன் அருளுக்கு மாறான தன்மை உடையவன். உயிர்கள் ஆணவத்தால் பிணிபட்டுப் பிறவியை எடுக்கின்றன. மேலும், தொடர்ந்து வரும் பிறவிகளிலும் துன்பமே இருந்தாலும் அந்தத் துன்பங்களை போக்கிக் கொள்ளாமல், மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து அலைகிறது. உயிர்களின் அந்த விருப்பமே தொடர்ந்து அதற்குப் பிறவியை வழங்குகிறது.பிறவிச் சூழலுக்குக் காரணமான ஆணவத்தை அடக்கி மிதித்து மேலெழ ஒட்டாமல் செய்து உயிர்களை பிறவிச் சூழலிலிருந்து விடுபடச் செய்வது இறைவனின் அருளாகும். முயலகனின் செயல் அழிதலே மோட்சத்தின் வாயிலாகும். உலக நடப்பிற்கு மும்மலங்களே காரணமாக இருப்பதால், பஞ்சகிருத்திய தாண்டவங்களில் முயலகன் மகிழ்வுடன் இருப்பதாகவும், பாம்புடன் விளையாடிக் கொண்டிருப்பவனாகவும் காட்டப்படுகிறான்.முயலகனை மனதில் விளையும் ஆசைகளாகவும் அவன் ஏந்தும் பாம்பை மும்மலங்களாகவும் கூறுவர். சில வடிவங்களில் முயலகன் இறைவனைச் சுட்டிக் காட்டியவாறும் உள்ளான்.

இவனை அரக்கன் போலவும், கையில் கத்தி, கேடயம் ஏந்தியவனாகவும் அமைக்கின்றனர். இது தத்துவக் கோட்பாடுகளுக்கு மாறுபட்டதாகும். தட்சிணாமூர்த்தியின் காலடியிலும் மும்மலங்களின் வடிவான முயலகனை அமைக்கின்றனர். ஆணவம் அடங்கி நிற்கும் இடமே ஞானத்தின் பிறப்பிடம் என்பதால், தட்சிணாமூர்த்தியின் திருவடியிலும் இவனை அமைத்துள்ளனர். சில தலங்களில் நடராசர் முயலகன் மீதின்றி மலர்ப் பீடத்தில் ஆடுவதைக் காண்கிறோம். இது ஆணவம் நீங்கிய நிலையில் உள்ள அன்பர்களின் இருதயத் தாமரையில் இறைவன் ஆடும் நடனமாகும்.திருஞானசம்பந்தப் பெருமான் கொல்லி மழவன் என்ற அரசனின் மகளைப் பற்றியிருந்த முயலகன் என்னும் நோயை நீக்கிய தலம் திருப்பாச்சிலாச்சிரமம் என்னும் திருத்தலமாகும். இத்தலத்திலுள்ள நடராசப் பெருமான் திருவடிவத்தில் ஊன்றிய திருவடியின்கீழ் முயலகன் இல்லை. இந்த நடராஜர் பாம்பின் மீது நடனமாடிக் கொண்டிருக்கின்றார். அவர் திருவடியின் கீழ் பாம்பின் படம் உள்ளது. பாம்பின் உடல் அவரது பின்காலில் படிந்துள்ளது. திருஞானசம்பந்தர் முயலகனின் நோயை நீக்கும்படி பாடியபோது நடராஜர் படிமத்திலிருந்த முயலகனும் நீங்கி விட்டான் என்று கூறுவர்.