Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முத்தான வாழ்வளிக்கும் முத்து மாரியம்மன்

மண்ணியாற்றின் வடகரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இந்தத் திருக்கோவில். மகாமண்டபத்தின் வடமேற்கு மூலையில் விநாயகர் மற்றும் பின்னமான அம்பாள் திருவுருவங்கள் இடம்பெற்றுள்ளன. அர்த்த மண்டபத்தில் விநாயகர், சுப்ரமணியர் உடனுறை அம்பாளின் உற்சவத் திருமேனி இடம்பெற்றுள்ளது.கருவறையின் உள்ளே பிரம்பு காட்டில் இருந்து வெளிப்பட்ட, அனைவரையும் காத்து ரட்சிக்கும் அம்பாள், தன்னை நாடி வந்து வேண்டுவோருக்கு வேண்டியதை தருபவளாய், சாந்த சொரூபமாக நான்கு கரங்களுடன் வீற்றிருக்கிறாள் அன்னை முத்து மாரியம்மன். மேலிரு கரங்களிலும் சூலம், டமுருகம், கீழிரு கரங்களிலும் கத்தியும், கபாலமும் கொண்டு தன்னை நாடி வருகிறவர்களின் அனைத்து துன்பங்களையும் போக்கி அவர்களை வாழ்க்கையில் புதிதாகத் துளிர்விட்டுப் பிரகாசிக்க வைக்கிறாள்.இக்கோயிலில் புளிய மர இடத்தில் தோன்றிய அம்மனும் அருள்பாலிக்கிறார்.

கோயிலின் எதிரில் வெட்டுண்டு துளிர்த்த முந்நூறு ஆண்டு பழமையான புளியமரமும் உள்ளது. அதனையொட்டி கருப்பழகி, ஆரியமாலா உடனுறை காத்தவராயன் சந்நதியும், 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகத்தின் போது புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட பேச்சியம்மன் சந்நதிகளும் மேற்கு நோக்கி அமைந்துள்ளன. அடுத்ததாக தெற்கு நோக்கிய வள்ளி - தெய்வானை உடனுறை சுப்ரமணியர் சந்நதி இருக்கிறது.

மாதானம் உருவான வரலாறு இன்றைய சீர்காழி வட்டம் முற்காலத்தில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. அவர்களின் பிரதிநிதியாக வடகால் ஜமீன்தார்கள், இப்பகுதியில் இருந்த 2000 வேலி நிலங்களில் வரிவசூல் செய்யும் உரிமையை பெற்றிருந்தனர். நாயக்க மன்னர்களின் ஆணைக் கிணங்க வடகால் ஜமீன்தார்களால், பதினோரு அந்தணர்களுக்கு தானமாக அளிக்கப்பட்ட ஊரே ‘மகாதானம்’. பெரிய அளவிலான நிலத்தை தானமாக அளித்ததால் இப்பெயர் வழங்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி மாதானமாகியது.

திருக்குடமுழுக்கு

வடகால் ஜமீன் குடும்பத்தாரால் உருவாக்கப்பட்ட இக்கோயில், அவர் வழி வந்தவர்களால் 1890ல் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 1908 நீண்ட கால இடைவெளிக்குப்பின், 2006-ம் ஆண்டுகளில் மறு கும்பாபிஷேகம் மேற்கொள்ளப்பட்டு தற்போது 5 நிலை ராஜகோபுரமும் பின்னப்பட்ட அம்பாளுக்கு தனி சந்நதியும் கட்டப்பட்டு 2017 செப்டம்பர் 15 அன்று திருக்குடமுழுக்கு அதிவிமர்சையாக நடைபெற்றது.

தலவிருட்சம் புளியமரம்

கண் நோய் அகல கண்ணடக்கம் வாங்கிச் சாத்துவதும், வேண்டுதல் நிறைவேற மாவிளக்குப் போடுவதும் இங்கு நேர்த்திக் கடன். குழந்தை இல்லாதவர்கள் மரத்தொட்டிலையும், திருமணம் வேண்டி பெண்கள் மஞ்சள் கயிற்றையும் ஆலயத்தின் தல விருட்சமான புளியமரத்தில் கட்டுகின்றனர். இதனால் வேண்டுதல் பலிக்குமென்று பக்தர்கள் கூறுகின்றனர்.

கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் இந்த ஆலயத்திற்குக் கொண்டு வரப்பட்டு, அன்னையின் சந்நதியைச் சுற்றி வந்தால் அவர்கள் குணமாக்கப்படுவர் என்ற நம்பிக்கை உள்ளது. அம்மை நோயின் தாக்குதல் இந்த அன்னையின் பார்வையால் குணமாக்கப்படுகிறது.

திருவிழா

மாதம்தோறும் பௌர்ணமி சிறப்புப் பூஜை. விநாயகருக்கு மாதம் தோறும் சங்கடஹர சதுர்த்தி மற்றும் முருகன் சந்நதியில் மாதம்தோறும் கிருத்திகை வழிபாடு. ஆண்டுக்கு ஒருமுறை ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் உலக நன்மைக்காக மகா சண்டியாகம், ஆவணி கடைசி வெள்ளியில் ஏக தின லக்சார்ச்சனை, நவராத்திரி 10 நாட்களும் விமர்சையாக சிறப்புப்பூஜைகள் ஒவ்வொரு நாளும் உற்சவ அம்பாள் பத்து அவதாரத்தில் ஊஞ்சலில் திருக்காட்சி நடைபெற்று வருகிறது.

ஆண்டு தோறும் ஆடி உற்சவம் 13 நாட்கள் நடைபெறும், அதில் ஆடி கடைசி வெள்ளி தீமிதி திருவிழா சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீக்குழியில் இறங்கி தீ மிதித்து தங்கள் நேர்த்திகடனை செலுத்துகின்றனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் அம்மனை தரிசனம் செய்கின்றனர். தை, சித்திரை மற்றும் மாதம் தோறும் தமிழ் ஒன்றாம் தேதி சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.

நடை திறந்திருக்கும் நேரம்

தினமும் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

கோயில் அமைவிடம்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி - சிதம்பரம் சாலையில் புத்தூர் என்ற இடத்தில் இருந்து கிழக்கே 6.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சீர்காழியில் இருந்தும் மாதானம் செல்லலாம்.

சீர்காழி ஏ.கே.ஷரவணன்