Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இசைக்காகவே ஊத்துக்காடு

பகுதி 2

நாட்கள் சில கடந்தன...

அவருக்கென இருந்த ஒரே சுற்றமான தாயார் மறைந்தார். உலக வாழ்வில் கொஞ்சநஞ்சம் இருந்த பற்றும், விட்டுப் போனது ஊத்துக் காடுக்கு. எதிலுமே பற்றற்ற நிலையில் இருந்த ஊத்துக்காடு, பசித்த நேரத்தில் எங்கு எது கிடைக்கிறதோ அதை உண்டு, எங்கேயாவது படுத்துத் தூங்கி வந்தார். நேருக்கு நேராகத் தரிசித்த கண்ணன் பாடல்கள் மட்டும், தங்கு தடையின்றி வெளிப்பட்டு வந்தன. ஊத்துக்காடு அடைந்த உன்னதப் பெருமையை, யாரும் அறியவில்லை. அதே சமயம் ஊத்துக்காடும், மறந்துபோய்க்கூடத் தன்னையோ, தனக்குத் தெய்வ அருள் கிடைத்ததைப் பற்றியோ சொன்னது கிடையாது. அதாவது சுய தம்பட்டம் தற்பெருமை கிடையாது. இவர் தம்மை மறைத்து வாழ்ந்தாலும், இவர் பெருமையைப் பறைசாற்றத் தீர்மானித்தது தெய்வம்.

அந்தக் காலத்தில், நாதசுரம் இசைப்பதில், பெரிய ருத்ரபசுபதி பிள்ளை, சின்ன ருத்ரபசுபதி பிள்ளை என இருவர், ஈடு இணையற்றவர்களாய் விளங்கினார்கள். அவர்களில் பெரிய ருத்ரபசுபதி பிள்ளை, நீடாமங்கலத்தில் வாழ்ந்து வந்தார். ஒருநாள், எங்கேயோ போய்விட்டு, தனி ஆளாகத் திரும்பிக்கொண்டிருந்தார், பெரிய ருத்ரபசுபதி பிள்ளை. (இனி இவரை `நாதசுரவித்வான்’ எனப் பொதுப்பெயரிலேயே பார்க்கலாம்).

வந்து கொண்டிருந்த நாதசுரவித்வான், இடுகாட்டின் வழியாக வர நேர்ந்தது. அப்போது, இனிமையான இசை கேட்டது. நாதசுரவித்வான், தன்னை மறந்தார்; ``என்ன நயம்! என்ன நயம்! ஆகா! ஆகா!’’ என்றபடியே இடுகாட்டை நெருங்கிப் பார்த்தார். இடுகாட்டின் நடுவே, அமர்ந்தபடி ஒருவர் பாடிக் கொண்டிருந்தார். தவம் செய்வதைப் போலப் பாடிக் கொண்டிருந்த அந்தப் பெரியவர் முன்னால் போய் நின்று, அதைக் கலைக்க நாதசுரவித்வானுக்கு மனம் வரவில்லை; தைரியமும் இல்லை. ஆகையால், தூரத்தில் நின்றபடியே பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தார். பாடுபவர் யார் என்று உற்று நோக்கினார். நாதசுரவித்வானுக்குக் கண்கள் வியப்பினால் விரிந்தன;

``ஆகா! இங்கே பாடுவது நம்ம வேங்கடசுப்பையர் அல்லவா?’’ என்று வாய்விட்டுச் சொன்னார். அக்னி யோகம் செய்து, ருத்திர பகவானைத் தீவிரமாக உபாசனை செய்து, சங்கீதத்தின் எல்லை கண்டவர், கிருஷ்ண யோகி. அவர் ஏன் ஊத்துக்காடு கேட்டபோது, அவருக்கு சங்கீதம் சொல்லிக் கொடுக்க சம்மதிக்கவில்லை? ஊத்துக்காடுக்கு, கண்ணனே சங்கீதம் சொல்லிக் கொடுக்கப்போகிறார் என்பதால்தான், அவருக்கு சங்கீத குருவாக இருக்க கிருஷ்ணயோகி சம்மதிக்க வில்லை. அதேபோல ஒரு நிகழ்ச்சிதான் இதோ! இப்போது மறுபடியும் அரங்கேறப் போகிறது. இடுகாட்டின் உள்ளே இருந்து பாடிக்கொண்டிருந்த ஊத்துக்காடு பாட்டை முடித்துப் புறப்பட்டார். நாதசுரவித்வான் ஓடி, ஊத்துக்காடு திருவடிகளில் விழுந்து வணங்கி எழுந்து,

``ஈடு இணை இல்லாத சங்கீதம் உங்களுடையது. சாகித்யமோ, அபாரம்! அபூர்வம்! தயவுசெய்து தங்கள் சங்கீதத்தை அடியேனுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்’’ எனப் பணிவோடு வேண்டினார். அவரை ஒரு சில விநாடிகள் பார்த்த ஊத்துக்காடு, அவரது வேண்டுகோளை மறுத்துவிட்டுப் போய்விட்டார். நாதசுர வித்வான் மிகுந்த மனத்துயரோடு வீடு திரும்பினார். வீட்டிலும்கூட, அவர் எந்தநேரமும் ஏதோ ஒருவித மயக்க நிலையிலேயே இருந்தார். காரணம்? அவர் செவிகளில் ஊத்துக்காடு பாடிய தெய்வ இசை கேட்டுக் கொண்டே இருந்தது.``எப்படியாவது வேங்கடசுப்பையரிடம் இருந்து, அந்த அற்புதமான இசையைக் கற்கவேண்டும். அவரோ நம்மைச் சீடனாக ஏற்க மறுக்கிறார். ம்..! என்ன செய்யலாம்?’’

எனச் சிந்தித்தார் நாதசுரவித்வான். ஒருசில விநாடிகளில், நாதசுரவித்வான் முகம் மலர்ந்தது;

``ஆமாம்! அவர் என்னைச் சீடனாக ஏற்காவிட்டால் என்ன? தன்னை மறுத்த துரோணரை, ஏகலைவன் மானசீக குருவாக ஏற்று, உயரவில்லையா? அதுபோல, வேங்கடசுப்பையரை மானசீக குருநாத ராகக் கொண்டு, நான் இசை பயில்வேன்’’ என முடிவெடுத்த நாதசுரவித்வான், அதற்கான வழிமுறைகளில் இறங்கினார்.மறுநாள் முதல் இடுகாட்டுப் பக்கம் சென்று, அங்கே ஒரு புதரில் யார் கண்ணிலும் படாமல் பதுங்கியிருந்து, ஊத்துக்காடு வரும்வரை காத்திருந்தார். ஊத்துக்காடு வருவார்; பாடுவார்; போவார்.

சிலநாட்கள், முன்னேரத்திலேயே வந்துவிடுவார்; சில நாட்கள் மிகத்தாமதமாக வருவார்; சிலநாட்கள் வரவேமாட்டார். அதற்காக நாதசுரவித்வான் பொறுமை இழக்கவில்லை. கிடைத்த நாளன்று கிடைத்த அளவிற்கு, ஊத்துக்காடு பாடிய பாடல்களைக் கேட்டு அனுபவித்துத் திரும்புவார். திருப்தியுடன் திரும்புகிறாரே தவிர, நாதசுரவித்வானின் மனதில், ஒரு பெரிய வெற்றிடம் உருவாகிக்கொண்டிருந்தது. ஒரு மாதகாலம் கழிந்தது, ஊத்துக்காடின் இசையை உளமாறக் கேட்டாலும், அவர் பாடிய எதுவுமே நாதசுரவித்வான் மனதில் தங்கவில்லை. பாடலின் ஒரு பகுதி முடித்து, அடுத்த பகுதியை ஊத்துக்காடு பாடத்துவங்கும் போது, முன்னால் கேட்டவை மனதில் இருந்து அப்படியே மறைந்துபோய்விடும்.

உதாரணமாக, பல்லவி பாடி அனுபல்லவி துவங்கும் போது, மனதில் பதிந்த பல்லவி மறைந்துபோய்விடும். அனுபல்லவிமுடித்து சரணம் தொடங்கும்போது, மனதில் பதிந்த அனுபல்லவி மறைந்துபோய் விடும். மொத்தத்தில், ஊத்துக்காடுபாடியது எதுவுமே, நாதசுரவித்வான் மனதில் பதியவில்லை.``என்ன இது? மந்திரமா? மாயமா? ஆனந்தமாக இருக்கும் இந்த இசை, மனதில் பதிவதுகூட கண்கட்டு வித்தைபோல மறைந்து போய் விடுகிறதே! நம் சங்கீதத்திற்கே சவாலாக இருக்கிறதே இது!’’ என்று வருந்தினார் நாதசுரவித்வான்.

நாளாகநாளாக நிம்மதி பறிபோனது. ஓர் உண்மையான இசைக்கலைஞனின் உள்ளம் இதுதான். கலை தாகத்தின் வெளிப்பாடு இது. நாதசுரவித்வான் நிம்மதி இழந்து தவிப்பதைக் கண்ட அவர் மகள், ``அப்பா! என்ன ஆச்சு உங்களுக்கு? கொஞ்ச நாளா எதையோ பறி கொடுத்ததைப்போல இருக்கிறீர்களே!’’ எனக் கேட்டாள். நடந்ததை எல்லாம் சொன்னார் தந்தை. ஆறுதல் சொன்னாள் மகள்; கூடவே தந்தையின் எண்ணம் நிறைவேற ஒரு வழியையும் விவரித்தாள்.

``அப்பா! இதற்குப்போய் ஏன் கவலைப் படுகிறீர்கள்? அவர் ஒரு பகுதி பாடியதும் மனதில் பதிகிறது; அடுத்ததைப் பாடக் கேட்டால், முதலில்கேட்டது மறந்துபோகிறது. அடுத்ததைக் கேட்டால் இது மறந்து போகிறது. மொத்தத்தில் வீட்டிற்கு வரும் போது, மனதில் பிரமிப்பு இருக்கிறதே தவிர, கேட்ட பாடல் எதுவுமே மனதில் இல்லை. இதுதானே உங்கள் பிரச்னை?’’ எனக் கேட்டாள் மகள்.``ஆமாம்!’’ எனத் தலையாட்டினார் தந்தை. ``அப்பா! ஒரு வழியிருக்கிறது உங்கள் கவலை தீர! நாளைக்கு நீங்கள்போகும்போது, கொஞ்சம் பஞ்சும் மெழுகும் எடுத்துச் செல்லுங்கள்!

பாட்டுப் பாடும் பெரியவர், ஒருபகுதி பாடி முடித்து அடுத்த பகுதி பாடத் தொடங்கும் முன், பஞ்சையும் மெழுகையும் வைத்துக் காதுகளை அடைத்துக் கொண்டு, வந்துவிடுங்கள்!

``முதல் பகுதி பாட்டு மனதில் பதிந்திருக்கும் அல்லவா? அதைத் தீவிரமாக சாதகம் செய்யுங்கள்! அது நன்றாக மனதில் பதிந்ததும், மறுபடியும் போய்ப் பாட்டின் அடுத்த பகுதியை மட்டும் கேட்டுத் திரும்பி விடுங்கள்! பழையபடி சாதகம் செய்யுங்கள்! இப்படியே ஒவ்வொரு பாடலாக நீங்கள் தெரிந்து கொள்ளலாமே!’’ என்று சொல்லி முடித்தாள் மகள்.

மகள் சொல்வதில் உள்ள சூட்சுமத்தை - நியாயத்தை உணர்ந்த நாதசுரவித்வான், மறுநாள் முதல் அப்படியே செய்யத் தொடங்கினார். மூன்று மாத காலம், மகள் சொன்னபடியே கடுமையாக உழைத்தார், நாதசுரவித்வான். கொஞ்சமாகப் பலன் கிடைத்தது; அவ்வளவுதான்! இந்த நாதசுரவித்வானும் ஊத்துக்காடும் பின்னால் சந்திப்பார்கள். அவர்கள் சந்திக்கும்போது சந்திக்கட்டும். இப்போது ஊத்துக்காடு பற்றிப் பார்க்கலாம். எப்போதும் கண்ணனையே கருத்தில் இருத்தி, கவிபாடிக் கொண்டிருந்தவர் மனம், கல்யாணம் முதலானவைகளில் ஈடுபடவில்லை. அவ்வப்போது, நீடாமங்கலத்தில் இருந்த `ஊட்டுப்புரை’ ஒன்றில் உணவு கொள்ளச் செல்வார்.

தெய்வ வேட்கைகொண்டு எவரிடமும் எதற்காகவும் கையேந்தாத உத்தமர்கள் உணவுக்காகக் கஷ்டப்படக் கூடாது என்று, உணவிடும் இடம் `ஊட்டுப்புரை’ என்று அழைக்கப்படும். அப்படிப்பட்ட ஊட்டுப்புரையில் ஊத்துக்காடு உணவு கொள்ளச் செல்வார். அங்கும் ஓர் ஓரமாக அமர்ந்து அமைதியாக உண்பாரே தவிர, யாருடனும் ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டார். பெரும்பாலும், அவர் வருவதும் போவதும் தெரியாது.

ஒருநாள்... ஊட்டுப்புரையின் வெளியில் - திண்ணையில் பலரும் காத்திருக்க, மணி ஓசை முழங்கியது. அனைவருமாக உள்ளே சென்றார்கள். வரிசையாகப் போடப் பட்டிருந்த இலைகளின் முன்னால் அமர, உணவு பரிமாறப் பட்டது; உண்ணத் தொடங்கினார்கள். ஊத்துக்காடு ஒரு பக்கமாக அமர்ந்து, உண்டு கொண்டு இருந்தார். வயிற்றில் கொஞ்சம் உணவு விழுந்ததும், உண்டு கொண்டிருந்தவர்களில் சிலர் பேசத் தொடங்கினார்கள்.

``பிரமாதம்! பிரமாதம்! நானும் எவ்வளவோ ஊர்களுக்கு எல்லாம் போயிருக்கிறேன். இந்த மாதிரி சாப்பாடு போடும் இடத்தைப் பார்த்ததே இல்லை’’``என்ன சந்தேகம்? வாங்கோ வாங்கோன்னு சந்தோஷமாகக் கூப்பிட்டு வரவேற்கும் உபசரிப்பு, நாக்குக்கும் மனசுக்கும் இனிமையான அறுசுவை உணவு! இங்கு போடப்படுவதைப் போல, வேறு எங்குமே நானும் பார்த்ததில்லை’’``ப்ச்! என்ன செய்து என்ன பலன்? ஆயிரக்கணக்கான பேர்களுக்கு அன்றாடம் வயிறு நிறையும்படியாக, இப்படி ஓர் உணவுச் சாலையை ஏற்படுத்திய அந்த உத்தமருக்கு, ஒரு வேளை உணவைத் திருப்தியாகச் சாப்பிடக் கொடுத்துவைக்கவில்லையே! அவர் செய்யும் இந்த தர்மம் - அன்னதானம், அவர் கஷ்டத்தைப் போக்க

வில்லையே!’’

``யாரைச் சொல்லி என்ன செய்ய? முன் வினைப் பயனைத் தான் சொல்ல வேண்டும்’’ இப்பேச்சுக்கள், அங்கே உண்டு கொண்டிருந்த ஊத்துக்காடு காதுகளில் விழுந்தன. கையில் எடுத்த உணவுக் கவளத்தை அப்படியே இலையில் வைத்த அவர்,``நீங்கள் பேசிக் கொள்வதைக் கேட்டேன். ஆனால் விவரம் புரியவில்லை’’ என்றார். அவர் அவ்வாறு கேட்டது, அங்கிருந்த பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால், ஊத்துக்காடு வருவார் - உண்பார் - போவாரே தவிர, அன்றுவரை அங்கு யாருடனும் ஒரு வார்த்தைகூடப் பேசியதில்லை. அப்படிப் பட்டவர், இன்று பேசி விவரம் வேறு கேட்கிறாரே என்று, வந்திருந்தவர்களில் பலர், ``நான் சொல்கிறேன்! நான் சொல்கிறேன்!’’ என்று தாங்களாகவே முன் வந்தார்கள்.

(அவர்கள் சொன்ன தகவல்கள் அடுத்த இதழில்...)

பி.என்.பரசுராமன்