Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முருக வழிபாடு

நன்றி குங்குமம் ஆன்மிகம்

முருகனுக்குரிய மந்திரங்களை தொடர்ந்து உச்சரித்து வந்தாலே வேண்டிய வரங்கள் மட்டுமல்ல முருகப் பெருமானையே நேரில் காணும் பெரும் பேறு கிடைக்கும். அதோடு முக்தியும் கிடைக்கும் என ஆன்மிக ஆன்றோர்கள் வாக்காக உள்ளது.

தமிழ் கடவுளான முருகப் பெருமான் பலருக்கும் இஷ்ட தெய்வமாக விளங்கக் கூடியவர். "சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை...சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" என்பார்கள். அப்படி என்ன பிரச்சனை என்றாலும், என்ன வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றாலும் கந்தனின் காலை பிடித்தால், வந்த வினையும், வருகின்ற வினையும் ஓடி விடும்.

வேலை, திருமணம், குழந்தைப் பேறு, கடன், பண கஷ்டம், மனை மற்றும் வீடு தொடர்பான பிரச்சனை, நோய்கள், காரிய வெற்றி என எதை வேண்டினாலும், விரதம் இருந்து வழிபட்டாலும் சகல நலன்களையும் தரக் கூடியவர் முருகப் பெருமான். இவரை யார் வேண்டுமானாலும் வழிபடலாம்.ஆனால் குறிப்பிட்ட சிலர் முருகன் வழிபாட்டை தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் மற்றவர்களை விட இவர்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும். அப்படி யாரெல்லாம் முருகனை வழிபட்டால் அதிர்ஷ்டத்தை அதிகம் பெறலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.

செவ்வாய் கிழமையில் பிறந்தவர்கள், செவ்வாய் ஹோரையில் பிறந்தவர்கள் முருகன் வழிபாட்டை தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் அதிர்ஷ்டம் பெருகும். செவ்வாயின் நட்சத்திரங்களாக சொல்லப்படும் சித்திரை, மிருகசீரிஷம், அவிட்டம் ஆகியவற்றில் பிறந்தவர்களும் முருகன் வழிபாட்டை தொடர்ந்து மேற்கொள்ளலாம். மேஷம், விருச்சிகம் லக்னக்காரர்களும், ராசிக்காரர்களும் முருகன் வழிபாட்டினை தொடர்ந்து மேற்கொள்ளலாம். திதியின் அடிப்படையில் வளர்பிறை மற்றும் தேய்பிறை சஷ்டிகளில் பிறந்தவர்களாக இருந்தால், நவமி, தசமி திதியில் பிறந்ததிருந்தால் அந்த திதி வரும் நாட்களில் முருகப் பெருமானை வழிபட்டால் யோகங்கள் அதிகரிக்கும்.

இது தவிர வீடுகளில் மயிலிறகு, சிறிய அளவிலான வேல் வைத்து வழிபடலாம், பெரிய வேலாக இருந்தால் வாங்கி கோவில்களுக்கு நன்கொடையாகக் கொடுக்கலாம். செம்பால் ஆன வேல் வைத்து வழிபடலாம். முருகனுக்கு உரிய உலோகம் செம்பு. அதனால் செம்பால் ஆன மோதிரம் போன்று செய்து கையில் அணிந்து கொள்ளலாம். செம்பு பாத்திரத்தில் நீர் வைத்து, முருகன் வழிபாட்டிவை மேற்கொள்ளலாம். வீட்டில் செம்பருத்தி செடி நட்டு வைத்து வளர்ப்பது, முழு துவரையை அடிக்கடி உணவில் பயன்படுத்துவது, துவரம் பருப்பினையும் அடிக்கடி உணவில் பயன்படுத்தி வந்தால் யோகங்கள் பெருகிக் கொண்டே இருக்கும்.

இது தவிர கந்தகுரு கவச்சத்தில் முருகனின் மூல மந்திரம் உள்ளது. இதை தொடர்ந்து உச்சரித்து வந்தால் அத்தனை விதமான துன்பங்களில் இருந்தும் விடுபடலாம். இந்த மந்திரத்தை எத்தனை முறை உச்சரிக்கிறோமோ அதற்கு ஏற்ற பலன் கிடைக்கும். ஒரு லட்சம் முறை உச்சரித்தால் நினைத்த காரியங்கள் அப்படியே நடக்கும். யம பயம் நீங்கும். கோடி முறை உச்சரித்தால் முக்தி கிடைக்கும். முருகப் பெருமானே நமக்கு நேரில் ஜோதி வடிவமாக நமக்கு காட்சி தருவார் என்பது ஆன்றோர்கள் வாக்கு.

"ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்

க்லெளம் ஸெளம் நமஹ"

என்ன பலன் கிடைக்கும் ?

இந்த மந்திரத்தை கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கு அமர்ந்த உச்சரிக்க வேண்டும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் உள்ளரிப்பது பல மடங்கு சிறப்பான பலனை தரும். அப்படி முடியாதவர்கள் மாலை நேரத்தில் விளக்கேற்றி வைத்து இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். கிருத்திகை, சஷ்டி போன்ற நாட்களில் முருகனுக்கு விரதம் இருந்து இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்தால், வேண்டிய வரங்கள் கிடைக்கும்.