காஞ்சிபுரம் என்றாலே கோயில்களின் நகரம் என்றுதான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். இந்தப் புண்ணிய பூமியில், சைவ சமயத்தின் ஐந்து முக்கியத் தலங்களான பஞ்சபூதத் தலங்களில் நிலத்துக்கு (பிருத்வி) உரியதாகப் போற்றப் ப டுவது, உலகப் புகழ்பெற்ற அருள்மிகு ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோயில் ஆகும். தமிழக அரசு ஏகாம்பரநாதர் கோயிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தது. பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு, பல கோடி ரூபாய் செலவில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வரும் டிசம்பர் மாதம் 8-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. ஏகாம்பரநாதர் கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம், யாகசாலை மண்டப பணிகளெல்லாம் நிறைவடைந்து, மகா கும்பாபிஷேகத்திற்காக பக்தர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கிருஷ்ண தேவராயரால் 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, தெற்கு ராஜகோபுரம் 192 அடி உயரமும், 82 அடி அகலமும், 115 அடி நீளமும், 9 நிலைகள் கொண்டது. கல்காரம் கிரானோலிதிக் கற்களால் ஆனது. இது விஜயநகரப் பேரரசின் கட்டிடக்கலையை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. கும்பாபிஷேகத்தை யொட்டி தெற்கு ராஜகோபுரத்தில், 11 கலசங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.திருக்கச்சியேகம்பம் எனப் புராணங்களால் போற்றப்படும் இக்கோயில், தனது தொன்மையும், வரலாற்றுச் சிறப்பும், ஆன்மிக அற்புதங்களும் கொண்டு பக்தர்களை வியப்பில் ஆழ்த்துவது மட்டுமில்லாமல் வா... வா... என்று பலமுறை அழைக்கும் சக்தி கொண்டது.இக்கோயிலின் மூலவர் ஏகாம்பரநாதர், சுயம்பு மூர்த்தியாக மண்ணால் ஆன மூலவர் - ‘தழுவக் குழைந்த நாதர்’ என்றும் பெயர். மணல் லிங்கமாகவே (பிருத்வி லிங்கம்) காட்சியளிக்கிறார். இவருக்குப் பொதுவாக அபிஷேகம் செய்யப்படுவதில்லை; காரணம், மணலால் ஆன லிங்கம் என்பதால் கரைந்துவிடக் கூடாது என்பதற்காகவே. அபிஷேகங்கள் லிங்கத்தின் ஆவுடையாருக்கே செய்யப்படுகின்றன. புனுகு மற்றும் வாசனைப் பொருட்கள் பூசப்பட்டு, வெள்ளிக் கவசத்துடன் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார்.
தல வரலாறுப்படி, பார்வதி தேவி (இங்கு ஏலவார்குழலி அம்மையார்) கம்பா நதிக்கரையில் மணல் லிங்கம் அமைத்துத் தவமிருந்தபோது, சிவபெருமான் வெள்ளத்தை உருவாக்கித் தவத்தைச் சோதித்தார். அப்போது, அம்மையார் லிங்கம் கரைந்துவிடாமல் இருக்க அதை மார்போடு அணைத்துக் கொண்டார். அதனாலேயே, ‘தழுவக் குழைந்த நாதர்’ என்றும் பெயர். தேவியின் பக்தியில் நெகிழ்ந்த சிவன், அந்த மாமரத்தின் அடியில் காட்சியளித்து அவளைத் திருமணம் செய்து கொண்டார். அம்மன் கட்டி அணைத்த தடம் இன்றும் லிங்கத்தின் மேனியில் தெரிவது இத்தலத்தின் மிக அரிய சிறப்பு அம்சமாகும். சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்றி பார்வதிக்கு அருள் புரிந்து, இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32 அறங்களைச் செய்ய பணித்தார். பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் பிரித்வி லிங்கம், அந்த மாமரம் தான் தல விருட்சம்.இங்கு பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் பூசித்த லிங்கங்கள் இருக்கின்றன. அவை முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன. மூம்மூர்த்திகள் வழிபட்டதால் திருவேகம்பம் என்றும் பெயர் பெற்றது.
3500 ஆண்டுகளான வேத மாமரம்
இக்கோயிலின் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தது, கருவறைக்கு அருகில் அமைந்துள்ள தல விருட்சமான மாமரம் ஆகும். சுமார் 3500 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும். இந்த ஒற்றை மாமரத்தின் பெயராலேயே (ஏகம் + ஆம்ரம் = ஏகாம்ரம்) இறைவன் ஏகாம்பரநாதர் என்று அழைக்கப்படுகிறார். இந்த மாமரம் நான்கு கிளைகளாகப் பிரிந்து காணப்படுகிறது. இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வண ஆகிய நான்கு வேதங்களைக் குறிக்கின்றன.மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த நான்கு கிளைகளிலிருந்தும் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என நான்கு விதமான சுவைகளைக் கொண்ட மாம்பழங்கள் விளைகின்றன. இந்த தெய்வீக மாமரத்தின் அடியில் தான் சிவபெருமான், பார்வதிக்குக் காட்சியளித்து திருமணம் செய்து கொண்ட திருமணக் கோலமும் சோமாஸ்கந்த வடிவில் அமைந்திருக்கிறது.
கம்பீரமான ராஜகோபுரமும் ஆயிரங்கால் மண்டபமும்
40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில், இந்தியாவின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்று. விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரால் கி.பி. 1509-ல் கட்டப்பட்ட 58.5 மீட்டர் (192 அடி) உயரமுள்ள தெற்கு ராஜகோபுரம், தென்னிந்தியக் கோயில் கோபுரங்களிலேயே மிக உயரமானவற்றில் ஒன்றாகும். இது இக்கோயிலின் பிரம்மாண்டத்தைப் பறைசாற்றுகிறது.இக்கோயிலின் நான்காவது பிராகாரத்தில் உள்ள புகழ்பெற்ற ஆயிரங்கால் மண்டபம், விஜயநகர மன்னர்களின் கலைத்திறனுக்குச் சான்றாக விளங்கு கிறது. பல ஆண்டுகளாக பூட்டியே கிடந்த இந்த மண்டபம், சமீபத்தில் திறக்கப்பட்டு பக்தர்கள் அரிய சிற்பங்களைக் கண்டு ரசிக்க அனுமதிக்கப்பட்டது. நிலாத்துண்டப் பெருமாள்: இக்கோயிலின் முதல் பிரகாரத்தில், மகாவிஷ்ணுவுக்கு உரிய 108 திவ்ய தேசங்களுள் ஒன்றான நிலாத்துண்டப் பெருமாள் சந்நதியும் அமைந்துள்ளது. சிவ ஆலயத்தில் பெருமாள் அருள்பாலிப்பது இக்கோயிலின் அரிய ஒற்றுமையைக் காட்டுகிறது.
தை மாதத்தில் வரும் ரத சப்தமி தினத்தன்று, லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவது இக்கோயிலின் மற்றொரு வியக்கத்தக்க அம்சமாகும்.திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய சைவத் திருமுறையாளர்களால் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் இது முதன்மையானதாகும். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் என்பது பழைய சமய நூல்களில் திருக்கச்சியெகம்பம் எனக் குறிப்பிடப்படுகிறது. திருக்குறிப்பு தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், கழற்சிங்க நாயனார் ஆகியோரின் அவதாரத்தலம் மற்றும் சாக்கிய நாயனார் முக்தியடைந்த தலம் இதுவாகும். இது முக்தி தரும் தலங்கள் ஏழினுள் முதன்மை பெற்றது. சங்கிலி நாச்சியாருக்குச் செய்து கொடுத்த சூளுறவு பிழைத்ததின் காரணமாகத், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டிய அளவில் இரு கண்பார்வைகளும் மறையப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இடக்கண் பார்வையை இறைவர் கொடுத்தருளிய தலம் இது.
இக்கச்சி ஏகம்பத்திற்கு மாத்திரம் திருமுறைகளில் பன்னிரண்டு பதிகங்கள் இருக்கின்றன. இவை சமயக் குரவர்கள் நால்வரில் மூவரால் பாடப் பெற்றவை. இவ்வூரில் கச்சியேகம்பத்துடன் கச்சி மேற்றளி, கச்சிஓணகாந்தன்றளி, கச்சி நெறிக்காரைக்காடு, கச்சியநேகதங்காவதம் என்னும் தேவாரம் பெற்ற கோயில்களும் கச்சி மயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஆக ஆறுகோயில்கள் இருக்கின்றன. இவைகளுள் கச்சி மயானம், திருக்கச்சி ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னுள்ளது.பல்லவர் காலத்திலேயே சிறப்புற்று இருந்ததாக கருதப்படும் இக்கோயில், இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயிலுக்குப் பிற்பட்டது என கருதப்படுகிறது. இக்கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களால், செங்கல்லால் கட்டப்பட்ட கோயிலொன்று முன்னரே இருந்திருக்கலாமோ என்ற ஐயப்பாட்டை வரலாற்றாய்வாளர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. எப்படியும் இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை கொண்டதாக கருதப்படுகின்றது.
இக்கோயிலிலே பல்லவர் காலந்தொட்டு நாயக்கர் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணிகள் செய்தமைக்கு ஆதாரமாக அவர்களுடைய கல்வெட்டுகள் பல இந்த வளாகத்தினுள் காணப்படுகின்றன. இக்கோயிலின் தெற்கு வாயிலில் காணப்படும் பெரிய இராஜ கோபுரம், விஜயநகர அரசனான கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. இதன் காலம் பொ.ஊ. 1509 எனக் கல்வெட்டுகளிலிருந்து அறிய முடிகின்றது. இங்கே விஜயநகர மன்னர் காலத்திய ஆயிரங்கால் மண்டபம் ஒன்றும் உண்டு. இம் மண்டபம் அதற்கு முன், நூற்றுக்கால் மண்டபமாக இருந்ததாகவும், அது பிற்காலச் சோழர்கள் ஆட்சியில் கட்டப்பட்டுப் பிற்காலத்தில் திருத்தப்பட்டதாகவும் தெரிகின்றது. இக்கோயிலின் வெளிமதில் பொ.ஊ. 1799-இல் ஹாச்ஸன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. அதில் இங்கு பாழ்பட்டு கிடந்த பழைய சிலைகள் உள்ளிட்ட புத்தர் மகா நிர்வாணம் முதலிய உருவங்கள் எல்லாமும் இக்கோயிலோடு சேர்த்துப் புதுப்பிக்கப்பட்டன. இறைவன் திருப்பெயர் : ஏகாம்பரநாதர், திருவேகம்பர், தழுவக்குழைந்த நாதர்.
இறைவியார் திருப்பெயர் : ஏலவார்குழலி, காமாட்சியம்மை.
தல மரம் : மாமரம் (வேதம் மா மரமாக உள்ளது.)
தீர்த்தம் : கம்பா நதி, சிவகங்கை, சர்வ தீர்த்தம்.
வழிபட்டோர் : உமையம்மை, பிரம்மா, திருமால், ருத்திரர்.
சக்தி பீடமாகிய காமகோடி பீடம் உள்ள தலம். மூவர் பெருமக்களாலும் பாடப் பெற்றத் திருத்தலம். ஆகவே காஞ்சி ஏகாம்பரநாதரை வணங்கினால் வாழ்வில் ஏற்றம் பெறுவது உறுதியாகும். ஏகாம்பரேஸ்வரரின் பேரருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழலாம்.
- படங்கள்: பாஸ்கர்


