Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அன்னை பராசக்தியும் குழந்தை முருகனும்

* சிவாலயங்களில் உள்ள சோமாஸ்கந்தர் வடிவில் முருகன் பாலமுருகனாக சுவாமிக்கும் அம்பிகைக்கும் நடுவே குதித்தாடும் கோலத்தில் இருக்கிறார். மேலும், அம்பிகையுடனும் அவரைக் காண்கிறோம். அம்பிகை உடனாய கந்தர் உமா நந்தனன் என்றும், உமாஸ்கந்தர் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பிகையோடு விளங்கும் குமரனின் வடிவங்களை இங்கே சிந்திக்கலாம்.

* பூம்புகார் பல்ல வனீச்சரத்தில் அம்பிகை உயர்ந்த பீடத்தில் அமர்ந்திருக்க, அவளது பீடத்தின் முன்புறம் அமைந்த பீடத்தில் பாலமுருகனைக் காண்கிறோம்.சோழர்கால அற்புதக் கலைப் படைப்பாக இந்த உமாஸ்கந்தர் வடிவம் போற்றப்படுகிறது. கொழுகொழு குழந்தையாக இருக்கும் முருகன் அனைவரையும் கவர்கிறான்.

* திருப்புறம்பயம் என்னும் தலத்தில் குகாம்பிகை என்னும் அம்பிகையின் வடிவம் உள்ளது. இதில் முருகன் ஆறுமுகங்களும் பன்னிரண்டு கரங்களுடன் பால சண்முகராக அன்னையின் இடுப்பில் அமர்ந்துள்ளார். இத்தகைய வடிவம் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

* திருவாரூரில் அன்னை பராசக்தி கமலாம்பிகை, நீலோற்பலாம்பிகை என்னும் இரண்டு பெயர்களில் தனித் தனியே கோயில்கொண்டுள்ளாள். கமலாம்பிகை யோகாசனத்தில் அமர்ந்திருக்கும் சிவயோக நாயகியாகவும், நீலோற்பல நாயகி கருவறையில் கல்திருமேனியாகவும், அழகிய உலாத் திருமேனியாகவும் எழுந்தருளியுள்ளாள். இரண்டு வடிவமும் மேலே குறித்தது போல் ஒரு மாதிரியாக அமைந்துள்ளன.

* சிவபெருமானின் மகேசுவர வடிவங்களில் ஒன்றாக இருப்பது கஜசம் ஹாரர் வடிவமாகும். இதில் சிவபெருமான் பைரவ வடிவுடன் யானையின் தோலை உரித்துப் போர்த்திக்கொண்டிருப்பவராகக் காட்சி தருகிறார். இவருடன் உள்ள அம்பிகை அக்காட்சியைக் கண்டு அஞ்சி அவ்விடத்தை விட்டு அகன்று ஓடுபவளாக இருக்கிறாள். அவளது இடுப்பில் முருகன் அழகிய குழந்தையாக அமர்ந்திருக்கிறான். அவன் புன்னகையுடன் சிவபெருமானை அன்னைக்குச் சுட்டிக்காட்டும் கோலத்தில் இருக்கிறான்.

* திருவெண்காட்டில் பிள்ளை இடுக்கி அம்மன் என்னும் அம்பிகையை அம்மன் சந்நதி பிராகாரத்தில் கன்னிமூலையில் காண்கிறோம். இவள் முருகனை இடுப்பில் வைத்துக்கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். மதுரையில் மதுரை மீனாட்சி தேவி உக்ர பாண்டியராக அவதரித்த முருகனை மடிமீது அமர்த்திக்கொண்டிருப்பவராக சுதைச்சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அம்பிகை பாலமுருகனுடன் காட்சி தரும் கோலங்கள் சிலவே என்றாலும் அவை உன்னத கலைப்படைப்புகளாக இருக்கின்றன.

ஜெயசெல்வி