Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சந்திரன் என்ன செய்வார் தெரியுமா?

“லக்கினம் கெட்டுவிட்டால் ராசியைப் பார்’’ என்று சொல்வதற்கு பல காரணங்கள் உண்டு. லக்கினம் என்பது தந்தை. ராசி என்பது தாய். ஒரு குழந்தையை தாயும் தந்தையும் இணைந்து வளர்த்தால் அதனுடைய அமைப்பே தனி. அந்தக் குழந்தைக்கு கிடைக்கும் பாசமும் தனி. சில குழந்தைகளுக்கு தந்தை இருக்க மாட்டார். எனவே தந்தையின் அன்பு கிடைக்காது. ஆனால் அதே சமயம் தந்தை செய்ய வேண்டிய காரியங்களையும் தாய் செய்து அந்த குழந்தையை வளர்ப்பாள். தந்தை இல்லாத சிறு குறையைத் தவிர நல்லபடியாக அந்தக் குழந்தை வளர்ந்து வாழ்ந்து விடும். ஆனால், தாயும் தந்தையும் ஒரு குழந்தைக்கு இல்லை என்று சொன்னால், அந்த குழந்தையினுடைய வளர்ச்சியும் முன்னேற்றமும் குண நலன்களும் தடைபடும் சாத்திய கூறு அதிகம் உண்டு. அந்தக் குழந்தையை தெய்வம்தான் ஏதோ ஒரு விதத்தில் காப்பாற்றும்.

இந்த அடிப்படையில் தான் தந்தையாகிய லக்கினம் கெட்டுப்போய், ஏதோ ஒரு விதத்தில் ஜாதகரை கைவிட்டாலும், தாயாகிய ராசி (சந்திரன்) அதைச் சரி செய்து அந்த குழந்தைக்குத் தேவையானதைத் தந்துவிடும். ஆனால் அதே சமயம் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். லக்கினம் கெட்டு, ராசி என்ன தான் உயர்வுடையதாக இருந்தாலும், அந்த லக்கினம் கெட்டுப்போனதால் உண்டாகும் பலாபலன்களை நிச்சயம் அந்த ஜாதகர் அனுபவிக்க வேண்டும்.இப்பொழுது இந்த உதாரண ஜாதகத்தைப் பார்த்தால் உங்களுக்கு இந்த விஷயங்கள் மிக நன்றாகப் புரியும். விருச்சிக லக்கனம். லக்னாதிபதி செவ்வாய் விரயஸ்தானத்திற்குப் போய்விட்டார்.விரயஸ்தானாதிபதி சுக்கிரன் லக்னத்திற்கு வந்து கேதுவோடு இணைந்து இருக்கிறார். பொதுவாகவே இது பரிவர்த்தனை யோகம் (அதாவது செவ்வாயும் சுக்கிரனும் வீடு தங்களுக்குள் மாற்றிக் கொண்டு இருப்பது) என்றாலும் கூட 12, 1 என்ற பரிவர்த்தனை மிகச் சிறப்பாக ஜோதிடத்தில் சொல்லப்படவில்லை.

எல்லாவற்றையும் இழந்து தான் மறுபடியும் துவக்கத்தில் இருந்து ஒவ்வொன்றையும் பெற வேண்டும் என்பதுதான் விதி. அதே சமயம் பரிவர்த்தனை மூலம் லக்கினம் கெட்டு வலுப்பெறுவதால் நிச்சயம் அது ஜாதகரை ஏதோ ஒரு விதத்தில் தாங்கி நிற்கும். அடுத்து பாருங்கள். விருச்சிக லக்னத்திற்கு 2க் குரிய குரு, அதாவது தன, குடும்ப, வாக்கு ஸ்தான அதிபதி குரு,12க்கு போய்விட்டார்.இங்கே தனம் கெட்டது. வாக்கு கெட்டது. குடும்பம் கெட்டது. இவ்வளவும் ஜாதகருக்கு ஆரம்ப காலத்தில் நடந்தது. கல்வி கெட்டது. உத்தியோகம் கெட்டது. கூச்ச சுபாவம் என்பதால் வாக்கு கெட்டது. முதல் திருமணம் முறிந்தது.அடுத்த ஐந்தாம் இடம். பூர்வ புண்ணிய ஸ்தானம். புத்திர ஸ்தானம். குரு விரய ஸ்தானத்திற்குப் போய்விட்டார். இதுவும் ஜாதகருக்கு ஒரு சங்கடம் தான்.

அடுத்து களத்திர ஸ்தானத்தைப் பாருங்கள். அங்கே ராகு அமர்ந் திருக்கிறார். அவர் வாங்கிய சாரம் பாதகாதிபதி சந்திரன் சாரம். அதே நேரம் பாக்கியஸ்தான அதிபதியான சந்திரன் 11ல் தனித்து பலம் பெற்று இருக்கிறார். இது களத்திர ஸ்தானத்தில் பின்னடைவைக் காட்டுகிறது. இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் தார தோஷத்தைக்காட்டுகிறது. இதுவும் நடந்தது.முதல் தாரம் இழந்து இரண்டாவது திருமணம் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று வாழ்ந்து வருகின்றார். 6, 8, 12 முதலிய ஸ்தானங்கள் பலம் பெற்றதால், கடனாளியாகவும் இருந் திருக்கிறார். பல்வேறு வழக்குகளில் அமைதி இழந்து இருக்கிறார். இரண்டு முறை விபத்தும் நடந்திருக்கிறது. காரணம் அந்த துர்ஸ்தானங்களின் விளைவுகளை ஜாதகர் ஏதோ ஒரு விதத்தில் அனு பவிக்கும்படியாக ஆகிவிட்டது. ஒன்பதாம் ஸ்தானம் பாதகஸ்தா னமாக மாறி பித்ரு ஸ்தான அதிபதி சந்திரன் பித்ரு ஸ்தானத் திற்கு மாரக ஸ்தானமான 11-ல் பலம் பெற்றதாலும், பிதுர் காரகன் சூரியன் லக்ன விரயத்தில் நீசமானதாலும் தந்தையை இழக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. லக்னரீதியாக என்னென்ன அவஸ்தைகள் பட வேண்டுமோ அதெல்லாம் பட வேண்டியதாகிவிட்டது.

ஆனால் இன்றைக்கு கிட்டத்தட்ட 80 வயதை நெருங்கும் இவர் எதையும் தாங்கும் இதயம் படைத்து தன்னுடைய பொருளாதாரத்தை தானே சீர் செய்து கொண்டு தனக்கு உரிய வாழ்க்கையை திடமாக வாழ்ந்து வருகின்றார். காரணம் பரிவர்த்தனை மூலம் லக்னம் பலம் பெற்றுவிட்டது என்பது ஒரு விஷயம். ஆனால் லக்கினம் கெட்டால் ராசியை பார் என்று சொல்கிறோம் அல்லவா. இப்பொழுது ராசியைப் பார்த்தால் கன்னி ராசி. ராசியில் ராசிக்கு லாபாதிபதி சந்திரன். தன குடும்ப ஸ்தானத்தில் குரு. ராசி அதிபதி புதனே இரண்டாம் இடத்தில் பலம் பெற்று இருப்பது சிறப்பான அமைப்பு. மூன்றாம் இடத்தில் கேதுவும் ஒன்பதாம் இடத்தில் ராகுவும் அமைந்திருப்பது நல்ல அமைப்பு. எதையும் தைரியத்தோடு எதிர் கொள்ளக்கூடிய திறனைத் தரும். லக்கின ரீதியாக ஜீவனஸ்தானாதிபதி சூரியன் 12 இல் நீசமானதால், அரசாங்க வேலை கிடைத்தும் நீடிக்கவில்லை. முதல் 40 ஆண்டு காலம் மிகுந்த சிரமத்தோடு பொருளாதார நெருக்கடியோடு வாழ்ந்தார். ஆனால் ஜீவன காரகன் சனி பாக்கியஸ்தானத்தில் அமர்ந்ததாலும் ராசிப்படி அது லாப ஸ்தானமாக அமைந்ததாலும் இவருக்கு பிற்கால பொருளாதார பலம் கிடைத்தது.

லக்கின ரீதியாக குறிப்பிட்ட சில தீமைகள் ராசி ரீதியாகவும் வருவதை நாம் காணலாம். பரிவர்த்தனையின் மூலம் லக்கனம் வலுப்பெற்றதால் எத்தனைக் கஷ்டங்களையும் தாங்கக்கூடிய பலம் லக்னத்திற்குக் கிடைத்தது. ராசி 11ஆம் இடத்தில் பலம் பெற்றதால், எத்தனைச் சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொண்டு அதையும் மீறி தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் சக்தியும் மனநிலையும் மனோதிடமும் ஜாதகருக்குக் கிடைத்தது. இந்த அடிப்படையில் தான் ஒரு விஷயத்தை லக்கின ரீதியாகவும் அணுக வேண்டும். ராசி ரீதியாகவும் அணுக வேண்டும். தோஷங்களைக் கூட ராசி, லக்கினம் அடிப்படையில் கணக்கீடு செய்து தான் முடிவுக்கு வரவேண்டும். லக்கின ரீதியான தீய பலன்களை சமாளித்து வெற்றி கொள்கின்ற திறனை நாம் கவனிக்க வேண்டும் என்று சொன்னால் அதை சந்திர ராசி ரீதியாகப் பார்க்க வேண்டும். லக்கினம் ஆயிரம் சோதனைகளைத் தரலாம். அது விதிக்கப்பட்டது. ஆனால் சந்திரன் அத்தனை சோதனைகளையும் புத்திசாலித் தனத்தோடு எதிர்கொண்டு தப்பிக்கும் ஆற்றலையும் சிந்தனையையும் தரும். இந்தச் சிந்தனை இருப்பவர்கள் எப்படியும் முன்னேறி விடுவார்கள்.இதைத்தான் பெரியவர்கள் “லக்கினம் கெட்டால் ராசியைப் பார்” என்று சொல்லி வைத்தார்கள்.