Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

உயிர் போகும் வலியில் இருந்து காப்பாற்றிய சாய் பாபாவின் அற்புதங்கள்..!!

நானா என்னும் பக்தர் பாபாவின் மீது மிகுந்த அன்புகொண்டிருந்தார். அவருக்கு முதுகில் ஒரு கட்டி இருந்தது. அது மிகுந்த வலி கொடுத்தது. அவர் எவ்வளவோ மருந்துகளைச் சாப்பிட்டும் வலி நிற்கவில்லை. வலியால் துடிதுடித்தார் நானா. `பக்தர்களின் வலியை, தான் எடுத்துக்கொண்டு, அவர்களைக் குணப்படுத்திவிடுவார் பாபா’ என்பதை நானா அறிந்திருந்தார். எனவே, அவர் பாபாவிடம் செல்லாமலேயே இருந்தார்.

கட்டியின் வலி தாங்க முடியாமல் தவித்தார் நானா. வேறுவழியின்றி, மருத்துவரை அணுகினார். அவரோ, “அறுவைசிகிச்சை செய்வது மட்டும்தான் இதற்கு ஒரே தீர்வு. ஆனால், அது மிகவும் ஆபத்தானது” என்று சொன்னார். இதைக் கேட்ட நானா மிகவும் பயந்து போனார். எனவே அவர் பாபாவின் படத்தைத் தன் தலையணைக்கு அடியில் வைத்து, படுத்துக்கொண்டார்.

மறுநாள் அறுவைசிகிச்சை ஆரம்பிப்பதற்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன்னதாக நானா குப்புறப்படுத்துக் கொண்டிருந்தார். அப்போது மேலிருந்து ஓர் ஓடு சரியாக அவர் முதுகிலிருந்த கட்டியின் மீது விழுந்தது; கட்டி உடைந்தது. ஓடு விழுந்ததால் ஏற்பட்ட வலியால் நானா அவதிப்பட்டார். மருத்துவர்கள் வந்து, அவரைச் சோதித்துப் பார்த்துவிட்டு “இனி அறுவைசிகிச்சை அவசியமில்லை” என்று கூறியதைக் கேட்டு நானா மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

அவர் சில நாள்கள் கழித்து பாபாவைத் தரிசிக்கச் சென்றார். அங்கே, பாபா அங்கிருந்தவர்களிடம், “நானாவின் கட்டியை என் விரலால் அழுத்தி உடைத்துவிட்டேன்…” என்று சொல்லிக்கொண்டிருந்தார். இதைக் கேட்டதும் நானாவுக்கு மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது. அவர் பாபாவின் பாதத்தில் வீழ்ந்து, வணங்கினார். இப்படி பாபாவின் எத்தனையோ செயல்பாடுகள், மருத்துவர்களால் சிகிச்சையளிக்க முடியாத பல நோய்களைக் குணப்படுத்தியிருக்கின்றன. எனவே, பாபாவை வணங்குவோம்; அருளைப் பெறுவோம்!