‘வண்டி உருண்டோட அச்சாணி தேவை’- இது நாம் அனைவரும் அறிந்த உண்மை. அதேபோல் வாழ்க்கை எனும் வண்டி நிலைகுலையாமல், நேர் வழியில் செல்ல வேண்டுமானால் அதற்குரிய அச்சாணி எது?இந்தக் கேள்விக்குப் பலரும் பலவிதமாக விடை சொல்வார்கள். ஒருவர் ‘பணம்’ என்பார். இன்னொருவர் ‘படிப்பு’ என்பார். மற்றொருவர் ‘நல்ல மனைவி’ என்பார். பிறிதொருவர் ‘சிறந்த மக்கள் செல்வம்’ என்பார்.
பணம், படிப்பு, பதவி, மனைவி, மக்கள் எல்லாம் வாழ்க்கை வண்டிக்கு ‘அலங்காரமாய்’ இருக்குமே தவிர, ‘அச்சாணியாக’ இருக்க முடியுமா? முடியாது. அப்படியானால் அந்த அச்சாணி எது?
மறுமை.ஆம். இம்மை வாழ்வு எனும் வண்டிக்கு மறுமை அச்சாணி இல்லாமல் போகுமேயானால் வண்டி குடை சாய்ந்துவிடும்; குடி சாய்ந்துவிடும்.இன்று மனித வாழ்வைப் பாருங்கள். அந்த அச்சாணியை மனிதன் மறந்தோ, வேண்டுமென்றோ அலட்சியப்படுத்தியதால் எத்தனை எத்தனை இன்னல்கள் அவனை எதிர்கொண்டுள்ளன. அமைதியைத் தேடி ஓடுகிறான்; நிம்மதிக்காக அலைகிறான்; மனமகிழ் மன்றம் முதல் மதுக்கோப்பைகள் வரை ‘தன்னை மறந்து வாழும் தருணங்களுக்காக’ தவிக்கிறான்; ‘என்ன வாழ்க்கை இது’ எனும் நிராசையில் உழல்கிறான்; பட்டம், பதவி, புகழ், அதிகாரம் என எல்லாமே இருந்தும்கூட மன அமைதி அவனிடம் இல்லை. இதற்குக் காரணம் என்ன? வாழ்வின் அச்சாணியை, மறுமையை அவன் மறந்துபோனதுதான் அல்லது மறுத்து வாழ்வதுதான்.‘மறுமையில் வெற்றி அடைய வேண்டும், ஈடேற்றம் பெற வேண்டும், இம்மை வாழ்வு குறித்து இறைவனின் நீதிமன்றத்தில் பதில் சொல்லியாக வேண்டும்’ எனும் உணர்வு மனிதனின் உள்ளத்தில் பசுமையாக இருக்குமேயானால்...
*பாவச்செயல்களில் ஈடுபட மாட்டான்.
* தீயவற்றைத் திரும்பியும் பார்க்க மாட்டான்.
*லஞ்சத்திற்காகக் கைநீட்ட மாட்டான்.
* மது - விபச்சாரத்தின் பக்கம் நெருங்கவும் மாட்டான்.
* கொலை - கொள்ளை, கற்பழிப்பு என்பதையெல்லாம் அவன் கனவில்கூட கருதமாட்டான்.
பஞ்சமா பாதகங்களிலிருந்து மறுமை உணர்வு மனிதனைக் காப்பாற்றுவதுடன், நற்பணிகளில் ஈடுபடவும் அவனை ஊக்குவிக்கிறது. மறுமை இலக்கோடு வாழும் மனிதனின் வாழ்வில், உள்ளும் புறமும் அமைதிப் பூக்கள் மலர்ந்து மணம் வீசும்.குர்ஆன் கூறுகிறது: “(மறுமையை நம்பும்) இப்படிப்பட்டவர்களுக்கே எல்லா நன்மைகளும் இருக்கின்றன. அவர்கள்தாம் வெற்றியாளர்கள். கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். சுவனங்களை இறைவன் அவர்களுக்காகத் தயார் செய்து வைத்திருக்கிறான். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். இதுவே மாபெரும் வெற்றியாகும்.” (குர்ஆன் 9: 89)
இந்த வெற்றிப் பாதையை நாமும் பற்றிப் பிடிப்போம்.
இந்த வார சிந்தனை
“ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த நன்மைகளும் தான் செய்த தீமைகளும் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதைக் காணும் நாள் வந்தே தீரும்.” (குர்ஆன் 3:30)
- சிராஜுல் ஹஸன்.


