பொய்ப் பொருளிலும் மெய்ப்பொருள் கண்டவர் மெய்ப்பொருள் நாயனார் திருநீறு பூசிய அடியாரைக் கண்டால் சிவனாகவே எண்ணி வணங்கியவர். திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட குறுநில மன்னர். சிவபெருமானை குலதெய்வமாக வணங்கிய மலையமான் குலத்தைச் சேர்ந்தவர். இவர் பெருமை பொறாது இவரோடு பகை பாராட்டிய முத்த நாதன் என் கின்ற சிற்றரசன் இருந்தான். இவரை வாள் போரில் வெல்ல முடியாது எனவே சூது செய்து கொன்றொழிக்க வேண்டும் என்ற கொடிய திட்டத்தைத் தீட்டினான்.
மெய்ப்பொருள் நாயனாரின் சிவபக்தியை கண்டும், அவர் சிவனடியார்களைக் கண்டால், உடலும் உள்ளமும் குழைந்து ஒடுங்கி வணங்குவதையும் அறிந்த முத்தநாதன், அவரை சாய்க்கும் வழியாக ஒரு சிவனடியாராக வேடம் போடுவது என்று முடிவு செய்தான்.
திருநீறு தரித்து, கையில் ஏடு ஏந்தி, மெய்ப்பொருள் நாயனாரின் அரண் மனைக்குச் சென்றான். சிவ ஆகம நெறியை இப்பொழுதே நான் அரசனுக்குச் செப்ப வேண்டும் என்று காவலர்களை பலவந்தப்படுத்தி அரசரின் தனி அறையினுள்ளே நுழைந்தான். சிவ வேடம் தரித்து இருந் தாலும் கூட சிவனாகவே கருதி மெய்ப்பொருள் நாயனார் முத்தநாதனை
வணங்கினார்.
‘‘யாரும் அறியா சிவ ரகசியத்தை தனியே தங்களுக்குச் சொல்ல வேண்டும். அதனால் யாரும் இங்கே இருக்க கூடாது’’ என்று முத்தநாதன் கேட்க, அரசன் அரசியாரையும் அந்தப்புரத்திற்கு அனுப்பிவிட்டு, ஒரு சிறந்த ஆசனத்தை முத்தநாதனுக்கு அளித்துவிட்டு அவனுடைய காலடியில் மெய்ப்பொருள் நாயனார் கை கூப்பி அமர்ந்தார்.மெய்க்காவலனும் இல்லாத அந்தநேரத்தில் சுவடிக் கட்டைப் பிரிப்பது போல விரித்து அதனுள்ளே மறைத்து வைத்திருந்த கொடிய குறுவாளால் மெய்ப்பொருள் நாயனாரை வெட்டிச் சாய்த்தான். அதைக் கண்ட தத்தன் என்ற மெய்க்காப்பாளன் உடனே உடைவாளை ஓங்கி முத்தநாதனை வெட்டுவதற்குப் பாய்ந்து வந்தான்.
அந்த நிலையிலும் மெய்ப்பொருள் நாயனார் ஒரு சிவனடியாரைக் கொல்வது தகாது என்று ‘‘தத்தனே…. நில்... இவர் நம்மைச் சேர்ந்தவர்” என்பதைச் சொல்லி தடுத்தார். அவர் செய்த அடுத்த செயலானது இன்னும் அற்புதமானது. ‘‘தத்தா...இனி இவர் அரண்மனையில் இருக்கும் வரை, இவருடைய உயிருக்கு ஆபத்து. சிவ வேடம் தரித்த எதிரியாக இருந்தாலும் கூட அதற்கு ஒரு மதிப்பு தர வேண்டும். இந்த அடியாருக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நகரத்துக்கு வெளியே பாதுகாப்பாக விட்டு வர வேண்டும். அதுவரை நான் காத்திருப்பேன்’’ என்றார்.
ஊரே திரண்டு முத்தநாதனை கொல்வதற்கு தயாராக இருந்த நிலையில், அரசரின் ஆணையை எல் லோருக்கும் சொல்லி அமைதிபடுத்தி விட்டு, கனத்த மனதோடு, கொடியவன் முத்தநாதனை, சிவ வேடம் தரித்து இருந்த ஒரே காரணத்தினால், நாட்டிற்கு வெளியே பாதுகாப்பாக விட்டுவிட்டு, கண்ணீருடன் அரண் மனைக்கு திரும்பினான். அதுவரை தம்முடைய உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்த மெய்ப் பொருள் நாயனார், ‘‘என் வாழ்நாளில் நீ செய்த காரியத்தை இனி வேறொருவர் யார் செய்யப் போகிறார்கள்?’’ என்று கை கூப்பியபடி சிவபதம் அடைந்தார். எதையும் சிவதரிசனமாகவே கண்ட மெய்ப்பொருள் நாயனாரின் குருபூஜை தினம், 12.12.2025 - கார்த்திகை உத்திரம்.


