பகுதி 1
பின்பழகிய பெருமாள் ஜீயர், தன் சீடர்களுடன் திருப்புட்குழி ஆலயத்தினுள் நுழைந்தார். தான் பிறந்த மண்ணில் உள்ள அந்த ஆலயத்துக்கு எப்பொழுது சென்றாலும் அவருக்கு கூடுதல் சந்தோஷம் உண்டாகும். திருப்புட்குழி, நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தி ஏழாவது திவ்ய தேசம். விஜயராகவப் பெருமாள், மரகதவல்லி தாயார் தரிசனம் முடிந்து, பாதிரி மரத்தின் நிழலில் ஜீயரும், சீடர்களும் அமர்ந்தார்கள்.
ஜீயர், ‘இங்குதான் ஸ்ரீராமர் ஜடாயுவிற்கு அந்திம காரியங்கள் செய்தார். ஜடாயு எவ்வளவு பெரிய பாக்கியவான்! ராமன் எவ்வளவு கருணையானவன்’ எனக்கூறிக் குளத்தைக் காட்டினார். ‘‘ஜடாயுவிற்கு பெரிய உடையார் என்ற திருநாமம் உண்டு! என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த கோயிலுக்கு நம் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்வித்திருக்கிறார். அவரின் பிரபந்தம் ஒன்றை நான் இப்பொழுது பாடுகிறேன்.’ என்று கூறிவிட்டு, கண்களை மூடிப் பாடினார்.
‘அலங்கெழு தடக்கை யாயன்வா யாம்பற் கழியுமா லென்னுள்ளம் என்னும்,
புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும் போதுமோ...’
“ஆஹா! அற்புதம்! நாங்கள் செய்த பாக்கியம் உங்களுடன் இருப்பது’’ எனக் கூறினர்.‘எல்லாம் என் குரு நம்பிள்ளையின் ஆசிர்வாதம். என் விருப்பம் போல் என்னை ஒரு சந்நியாசியாக இருக்க அனுமதித்து, ஜீயராகவும் உருவாக்கியவர் அவர்தான்’. தன் கையில் இருந்த தண்டத்தில் தலையினை வைத்து குருவை நினைத்துப் பிரார்த்தித்தார். ஒரு சீடன் தயங்கியபடி,
‘`உங்களுக்கு ஏன் இப்படி ஒரு வித்தியாசமான பெயர்?’’ என கேட்டான்.‘`அதுவா! அழகிய மணவாளன் என்ற திருநாமம், ஆண்டாள் காலத்திலிருந்து நம் பெருமாளுக்கு உண்டு. ஆனால், நம் பெருமாளுடைய முன்னழகைக் காட்டிலும், பின்னழகு இன்னமும் அழகாக இருக்குமாம்.
அதனால் ‘முன்னிலும் பின்னழகிய பெருமாள்’ என்று நம்பெருமாளுக்கு விசேஷமான திருநாமமும் உண்டு. வடக்கே இருக்கும் கூட்டத்தை தெற்குப் பக்கம் ஈர்க்க அவர் பின்னழகைக் காட்டினார் என சுவையாகக் குறிப்பிடுவார்கள். இந்தப் பெயர் என் குருநாதருக்கு மிகவும் பிடிக்கும்.
அதனால் அவருக்கு பிடித்த எனக்கும் பின்னழகு பெருமாள் என்ற பெயரை எனக்குச் சூட்டினார். அவருக்கு என் மேல் அலாதியான அன்பு. அந்தப் பெயரே மருவி பின்
பழகிய பெருமாள் ஜீயர் என்று நாளாவட்டத்தில் அழைக்கப்படுகிறேன். இது பற்றி ஒரு செய்யுள்கூட உண்டு. ‘‘வடதிசை பின்பு காட்டி, தென்திசை இலங்கை நோக்கி’’ என்ற திருவரங்க பாசுரம் மிகவும் பிரபலம். எல்லோரும் அதைக் கேட்டு புன்னகைத்தார்கள்.
பின் எல்லோரும் ஆசிரமம் திரும்பினார்கள். மறுநாளிலிருந்தே ஜீயரின் உடல்நிலையில் சிறிது சிறிதாக மாற்றம் ஏற்பட்டது. கால்கள் துவண்டன. உடல் வலுவிழந்து போனது போல உணர்ந்தார். சிறிது தூரம்கூட நடக்க இயலவில்லை. கண்களின் பார்வைத் திறன் குறைந்தது. கரு விழியின் மீது ரத்தம் படிந்தது போல, பார்க்கின்ற பொருட்கள் எல்லாவற்றிலும் வெண்மையான மேகம் படர்ந்திருப்பது போலத் தெரிந்தது. அடுத்தவரின் துணை இன்றி தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலை வந்துவிடப் போகிறதே என பயந்தார். அந்த எண்ணமே அவரை நிலைகுலையச் செய்தது. எவ்வளவு பெரிய ஞானிக்கும் உடல் நிலையில் தளர்வு நேரிட மனது சோர்ந்துவிடும். செய்வதறியாது தனக்குள் புலம்பினார். ஒரு நாள் அடியவர்கள் அனைவரையும் அழைத்தார்.
‘‘என்னுடைய நோய் தீருமா என்கிற சந்தேகம் எனக்கு வந்துவிட்டது. அதற்கான தீர்வு நம் கையில் இல்லை. நம் ரங்கனைத் தவிர யாராலும் என்னைப் பிழைக்க வைக்க முடியாது என்று நான் நம்புகிறேன். எனக்காக, நீங்கள் பிரார்த்தனை செய்தால் என் நோய் தீரும் என்று நான் முடிவுக்கு வந்து விட்டேன். மற்றவர்களுக்காக ஒருவர் பிரார்த்தனை செய்ய, இறைவன் நிச்சயம் நிறைவேற்றுவான். உங்கள் எல்லோரின் தன்னலமற்ற பிரார்த்தனையை அரங்கன் நிறைவேற்றுவான். நீங்கள் எல்லோரும் எனக்காக பாசுரங்கள் பாடி வேண்டிக் கொள்ளுங்கள்’’ என்று கைகூப்பி விண்ணப்பித்தார். இதைக் கூறுகையில் அவர் கண்கள் கலங்கின. அடியவர்கள் ஒன்றுகூடி அரங்கனிடம் பெரியாழ்வாரின் பல்லாண்டு பாசுரம் பாடினார்கள். நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் முதல் பாடல்.
‘‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் செவ்வடி செவ்விதிருக் காப்பு!’’
பிரபந்தத்தை கேட்ட அரங்கன், அகமகிழ்ந்தான். தமிழ் வேதம் அல்லவா! பின்னழகு பெருமாள் ஜீயர் பூரண நலமடைந்தார். பல்லாண்டு வாழ அரங்கன்
அனுக்கிரகித்தார். சில நாட்களில் முன்னிலும் ஆரோக்கியத்துடன் ஜீயர் பொலிவு பெற்றார். ஒரு வகையில் பக்தர்கள் மகிழ்ந்தபோதும், சிலருக்கு மனதில் ஏதோ உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. எல்லோரும் ஒன்றுகூடி நம்பிள்ளையிடம் சென்றார்கள்.
‘‘ஜீயர் எனப்படுவர் மேலான இடத்தில் வைத்து வணங்கத் தக்கவர். சுய நலமின்றி பிறருக்காக வேண்டிக்கொள்பவர். ஆனால் நம் ஜீயர் இப்படித்தான் நீண்ட நாள் வாழவேண்டும் என்பதற்காக எங்களை அரங்கனிடம் பிரார்த்தனை செய்துகொள்ளச் சொன்னது எங்களுக்குச் சரியாகப் படவில்லை. ஜீயர் நலமடைந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சியே! ஆனாலும் இது சரியான செயலா?’’ என வினவினர். நம்பிள்ளை;
‘‘அப்படியா! இதைச் சரியா தவறா என்பதை நான்கு பேரிடம் விசாரித்துவிடலாம். இதற்கு விடையை முதலில் எங்களாழ்வானிடமும், பின் திருநாராயணபுரத்து அரையரிடமும், அம்மங்கி அம்மாளிடமும், பெரிய முதலியாரிடமும் சென்று கேட்டு வாருங்கள்” என்று சொல்லியனுப்பினார். அடியவர்கள், முதலில் எங்களாழ்வாரைக் கேட்க அவர் ‘அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே’ என்று ஜீயருக்குத் திருவரங்கத்தின் மீது உள்ள பற்றாக இருக்கலாம்’’ என்று பதில் கூறினார். அடுத்து திருநாராயணபுரத்து அரையரிடம் கேட்டார்கள். அதற்கு அவர்;
“இன்னமும் முடிக்காத சில கைங்கரியங்கள் ஜீயருக்கு இருக்கலாம். அதை முடிக்க வேண்டும் என்பதற்காக இன்னும் சிறிது காலம் வாழ விரும்பியிருக்கலாம்” என்றார். அடுத்து அவர்கள் அம்மங்கி அம்மாளிடம் கேட்க “ஜீயருக்கு நம்பிள்ளை காலட்சேபம் என்றால் மிகவும் பிடிக்கும், அந்த அனுபவத்தைப் பிரிய மனமில்லாது, மேலும் அனுபவிக்க வேண்டும் என்று இவ்வாறு பிரார்த்தனை செய்திருக்கலாம்” என்றார். நான்காவதாக அவர்கள் சந்தித்த பெரியமுதலியாரோ “இவருக்கு நம்பெருமாளிடம் மிகுந்த பற்று! காதல்! அவரை விட்டுப் பிரிய மனமில்லாமல் இங்கேயே இருக்க ஆசைப்பட்டிருப்பார்” என்றார்.
எது சரியான விளக்கம் என அறிய, சிஷ்யர்கள் நம்பிள்ளையிடம் திரும்ப வந்து நால்வரும் கூறிய பதில்களைச் சொன்னார்கள். நம்பிள்ளை, ‘‘சரி. இதில் எது சரியான காரணம். நம் ஜீயரையே அழைத்துக் கேட்டுவிடலாம்’’ என்றார். அவரிடம் காரணத்தைக் கேட்க, பின்பழகிய பெருமாள் ஜீயர். ‘‘உங்களுக்கு தெரியாதது இல்லை. எல்லாமும் அறிந்த குரு நீங்கள். இருந்தாலும் என் வாயினால் உரைக்க வேண்டும் என்பது உங்கள் சித்தம். சொல்லுகிறேன். தேவரீர்! தினமும் ஸ்நானம் செய்துவிட்டு வந்தவுடன் தேவரீரின் திருமேனியைக் கண்குளிரக் கண்டு, தேவரீருக்கு ஆலவட்டம் வீசுதல் என்ற கைங்கரியத்தை செய்து வருகிறேன். உங்களுக்கு சேவை செய்வது ஒன்றுதான் எனக்கு என்றும் மேலானது.
அந்தத் திருப்பணியை விட்டுவிட்டு அடியேன் பரமபதம் போக விரும்பவில்லை” என்றார். அவர் கூறியதைக் கேட்ட பின், இந்த மாதிரியான பிரேமையை எப்படி அளக்கலாம்? நம்மாழ்வாரை காட்டிலும், ‘தேவுமற்று அறியாத’ மதுரகவிகள் போலவும், எம்பெருமானாரைக் காட்டிலும் வேறு அறியாத வடுகநம்பியைப் போலவும் இவர் இருக்கிறார் என அனைவரும் உணர்ந்து சிலிர்த்தார்கள். பகவானைவிட பகவானின் பக்தர்கள் மேலானவர்கள் என்ற உண்மை எல்லோருக்கும் புரிந்தது. நம்பிள்ளை மிகுந்த சந்தோஷமடைந்தார்.
‘‘உங்கள் எல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. பின்பழகிய பெருமாள் ஜீயர் வார்த்தாமாலை என்ற நூலை இயற்றி யுள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும். மற்றுமொரு நூல் ஆறாயிரபடி குரு பரம்பரை பிரபாவம் என்ற தலைப்பில் எழுதி முடித்துவிட்டார். அந்த நூல் பன்னிரண்டு ஆழ்வார்களைப் பற்றியது.
நாராயணன் மேல் பக்தியில் ஆழ்ந்து போனவர்கள்தான் ஆழ்வார்கள். இந்த நூலைப் படிப்பவர்கள், ஆழ்வார்கள் மீது பக்திகொண்டு ஆழ்ந்து போவார்கள் இது திண்ணம். நூலைப் படிப்பதைவிட அதை எழுதியவரே கதையாக சொல்கையில் ஒரு பேரானந்தம் உண்டு அல்லவா! ஆழ்வார்களின் சரித்திரத்தை அவர்கூற நாம் எல்லோரும் கேட்கப் போகிறோம். பக்தியில் ஆழப் போகிறோம். என்னுடைய சிஷ்யன் இப்படிப்பட்ட உயர்ந்த நிலையை அடைந்ததை எண்ணி எனக்கு மனது விம்முகிறது. அவன் இந்தப் பணியை செய்யத்தான், நாம் எல்லோரும் அவன் நலமடைய பிரார்த்தித்தோம் என நினைக்கிறேன்.
‘‘அரங்கனின் திருவுள்ளம் அதுதான் என்பது புரிகிறது.’’
‘‘உங்கள் சந்நதியில், அரங்கனைத் துதித்த ஆழ்வார்களைப் பற்றி என் அறிவுக்கு எட்டியவரை கூறுகிறேன். தவறு இருப்பின் பொறுத்தருள வேண்டும்.” நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கித் தொடங்கினார்.‘‘வையத்து வாழ்வீர்காள்!’’ கூடியிருந்தவர்கள் மாபெரும் இறை அனுபவத்திற்கு தயாரானார்கள்.
தொகுப்பு: கோதண்டராமன்