சென்ற இதழின் தொடர்ச்சி...
சென்ற இதழில், ஸ்ரீ குக்கே சுப்ரமண்யா மடத்தின் முதல் பீடாதிபதி, ஸ்ரீ விஷ்ணு தீர்த்தர் என்றும், அதிசய சம்புட நரசிம்மர் பற்றியும், மன்னனின் விபரீத ஆசை பற்றியும், சம்புடத்தை திறக்க யானையாலையே முடியாத சூழல் பற்றியும், இன்றும்கூட குக்கே சுப்ரமண்யா மடத்தில் பல விக்ரகங்கள் பூஜித்து வருவதை பற்றியும் கண்டோம். இந்த இதழில், குக்கே சுப்ரமண்யா கோயிலை பற்றியும், மகான் ஸ்ரீ விஷ்ணு தீர்த்தர் பற்றியும் சில தகவல்களை காணலாம்.
நோய்களை குணமாக்கும் குமாரதாரா
கர்நாடக மாநிலம், மங்களூரில் இருந்து 104 கி.மீ., தூரம் பயணித்தால் குக்கே சுப்ரமண்யா கோயிலை அடைந்துவிடலாம். கோயில் எதிர்புறத்தில் குமாரதாரா என்னும் ஆறு ஓடுகிறது. இங்கு குளிப்பதினால் சர்பத்தினால் (பாம்பு) ஏற்பட்ட தோஷங்கள் நிவர்த்தி ஆகுகின்றன. மேலும், குமாரதாரா நதியானது ``சர்வரோக நிவாரணி’’ (எல்லா நோய்களையும் குணமாக்கும் நதி) என்றும் கூறப்படுகிறது. குக்கே சுப்பிரமணிய கோயிலில் நித்யமும் அன்னதானங்கள் நடைபெறுகின்றன. கோயில் அருகிலேயே குக்கே சுப்ரமண்யா மடமும் உள்ளது. குக்கே சுப்ரமண்யா கோயில் மலையின் மீதுள்ளதால், அழகான இயற்கை சூழலின் நடுவில் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல, மங்களூரில் இருந்து ரயிலில் பயணிக்கலாம்.
ரயிலில்தான் பயணிக்க வேண்டும். காரணம், மலைகளின் மீதே ரயிலானது செல்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குள் ரயில் செல்கிறது. கண்களுக்கு எட்டியவரையில் பச்சை பசேலென்று காணப்படுகின்றன. அதில், ஆங்காங்கு லேசான பனிமூட்டம் வேறு.. இந்த கண்கொள்ளா காட்சியினை ரயிலில் பயணம் செய்தால்தான் கண்டு ரசிக்க முடியும். ஸ்ரீ குக்கே சுப்பிரமணிய மடத்தை ``சம்பூத நரசிம்ம மடம்’’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
பாம்புகளை காத்தருளும் முருகன்
மேலும், குக்கே சுப்பிரமணிய கோயில் தட்சிண கர்நாடகாவில் தென்கிழக்கு மலைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மடம், ஸ்ரீ மத்வாச்சாரியாரால் ஸ்தாபிக்கப்பட்டது. மேலும், குமாரதாரா ஆற்றின் கரையில் உள்ள 5,000 ஆண்டுகள் பழமையான புராதண மிக்க கோயிலாக பார்க்கப்படுகிறது. கருடனால் துன்பப்பட்டுவந்த வாசுகி என்கின்ற தெய்வப் பாம்பு, இங்கு குக்கே சுப்பிரமணிய கோயிலில் உள்ள சுப்ரமணியனிடம் தஞ்சம் அடையவே, சுப்ரமணியர், வாசுகி என்னும் பாம்பை காத்து அருளினார் என்கிறது புராணங்கள்.
ஆகையால், பாம்புகளுக்கும் அதிபதியாக குக்கே சுப்பிர மணிய சுவாமி காத்து அருள்கிறார். இன்றும் கூட, குக்கே சுப்பிரமணிய கோயிலில் எண்ணற்ற பல பாம்புகளை சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது. அப்பாம்புகள், யாரையும் தீண்டாது அமைதியாக செல்கின்றது. பக்தர்களும், பாம்பினைக்கண்டால் பதற்றம் கொள்ளாது, இரு கைகளை கூப்பி தரிசித்து செல்கிறார்கள்.
இக்கோயிலை, ``சிவல்லி மத்வ அந்தணர்கள்’’ (Shivalli Madhwa Brahmins) பூஜித்து வருகிறார்கள். ஸ்ரீ மத்வாச்சாரியாரின் ``தந்திர சார சங்கிரஹத்தின்படி’’ (Tantra Sara Sangraha) பூஜைமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். புராணத்தின்படி, குக்கே சுப்பிரமணிய கோயில், பரசுராமரால் நிறுவப்பட்ட ஏழு புனித தலங்களில் ஒன்றாகும் என்று ஒரு சாரார் சொல்லும் கூற்று. மேலும், குக்கே சுப்பிரமணிய கோயிலில் இருந்து, ஒரு பெரியமலை செல்கிறது. அதற்கு ``குமார பர்வதம்’’ என்று பெயர். பலரும் இந்த மலையில் ட்ரக்கிங் (Trekking - மலையேற்றம்) செல்கிறார்கள்.
பரிகாரஸ்தலம்
பாம்புகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள, குறிப்பாக மலைவாழ் மக்கள், காட்டுப் பகுதியில் வசிக்கும் மக்கள் ஆகியோர் இத்திருக்கோயிலில் ``ஆஷ்லேஷா பலி’’ (Ashlesha Bali) என்னும் பூஜையும், பாம்புகள் தொடர்புடைய ``சர்ப்பதோஷம்’’ போன்ற தோஷபரிகாரமும் குக்கே சுப்பிரமணிய கோயிலில் செய்யப்படுகிறது. இத்தகைய மாபெரும் திருத்தலத்தை கொடுத்த மகான் ஸ்ரீ விஷ்ணு தீர்த்தர், துவைத வேதாந்த தத்துவத்தின் மாபெரும் அறிஞராக பார்க்கப்படுகிறார்.
மேலும், உடுப்பி அஷ்ட (எட்டு) மடங்களில் சோதே மற்றும் சுப்பிரமணியா ஆகிய இரு மடங்களை ஸ்தாபித்தவர். விஷ்ணுதீர்த்தரின் பெற்றோர்கள் மறைந்த பிறகு, பிரம்ம சம்பிரதாயத்தில் சேர, வீட்டைவிட்டு வெளியேறினார். நேராக தனது பூர்வாஷ்ரம மூத்த சகோதரரான மத்வாச்சாரியாரை சந்தித்து, தானும் பிரம்ம சம்பிரதாயத்தில் ஈடுபட தனது விருப்பத்தை கூறினார். மத்வருக்கும் எல்லையில்லா மகிழ்ச்சி. தன் சகோதரருக்கு வேதாந்த ஞானத்தை புகுத்தி, சந்நியாசமும் கொடுத்தார்.
மீண்டும் ஸ்ரீ விஷ்ணு தீர்த்தர்
இவரின் மூல பிருந்தாவனத்தை பற்றிய தகவல்கள் ஏதும் காணப்படவில்லை. ஸ்ரீ விஷ்ணுதீர்த்தருக்கு பிறகு, ஸ்ரீ அனிருத்த தீர்த்தர் என்னும் மகான், சுப்பிரமணிய மடத்தின் பீடாதிபதியாக பொறுப்பேற்றார். இன்னும் கலியுகம் முற்று பெற்று, அதர்மம் மட்டுமே தழைத்தோங்கும் சமயத்தில், மீண்டும் ஸ்ரீ விஷ்ணுதீர்த்தர் அவதரிப்பார், மக்களுக்கு நல்வழி காட்டுவார் என்று துவைத தத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. அவர் வருகைக்காக நம் வருங்கால சங்கதியர்கள் காத்திருக்கட்டும். விஷ்ணுதீர்த்தரை நம் வருங்கால சங்கதியர்கள் காணவிருக்கிறார்கள் என்பதனை நினைக்கும் போது, எத்தகைய பாக்கியமிது!
சந்நதி திருந்திருக்கும் நேரம்:
காலை: 6.30 முதல் 1.30 வரை, மாலை: 3.30 முதல் 9.00 வரை.
எப்படி செல்வது: மங்களூரில் இருந்து 104 கி.மீ., பயணித்தால் குக்கே சுப்ரமண்யா கோயிலை அடைந்துவிடலாம். பெங்களூர், மைசூரில் இருந்தும் செல்லலாம். பல ஊர்களில் இருந்தும் குக்கே சுப்ரமண்யா கோயிலுக்கு ரயில்கள் செல்கின்றது.
ரா.ரெங்கராஜன்