Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மருத் / மாருத யோகம்

கிரகங்கள் மட்டும்தான் யோகத்தை பிரசவிக்கின்றன. அப்படி பிரசவிக்கப்படும் யோகங்கள் இரண்டு கிரகங்களை மட்டும்தான் அடிப்படையாகக் கொண்டிருப்பது என்றல்ல... இரண்டு கிரகங்களுக்கு மேலேயும் வெவ்வேறு அமைப்புகளில் வெவ்வேறு யோகத்தை கொணர்கின்றன. ராசி பாவகங்கள் அடிப்படையிலும் சந்திரன் நின்ற ராசியின் அடிப்படையிலும் இந்த யோகங்கள் உண்டாகலாம். பலன்கள் வெவ்வேறாக மாறுபடுவதற்கான சாத்தியம் உண்டு. பலன்களை புரிந்து கொள்வதிலிருந்தும் பலன் வருவதிலிருந்தும் யோகங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்ட அமைப்பை தோற்றுவிக்கின்றன.

ஐந்திற்கு மேற்பட்ட கிரகங்கள் இந்த யோகத்தில் தொடர்பு ஏற்படுவதால் சிறப்பான பலன்களை தரும். சூரியனையும் சந்்திரனையும் மையப்படுத்தி சொல்லப்படும் யோகங்களில் இந்த யோகம் குறிப்பிடும்படியான யோகம் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட யோகங்களில் மருத் யோகம் என்ற மாருத யோகமாகும்.

மருத் யோகம் என்றால் என்ன?

சூரியனுக்கு கேந்திரத்தில் சந்திரன், சந்திரனுக்கு திரிகோணத்தில் குரு, சுக்கிரன் போன்ற கிரகங்கள் அமையப்பெற்றால் அது மருத் என்ற மாருத யோகம் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அவ்வாறே, மருத் என்பதும் மாருதம் என்பதும் காற்றை குறிக்கிறது. புயலைப் போன்ற வலிமையான யோகத்தை ஏற்படுத்தும் அமைப்பாக உள்ளது.

இந்த யோகம் எவ்வாறு செயல்படுகிறது?

சந்திர கேந்திரத்தில் சூரியனும்; சூரிய கேந்திரத்தில் சந்திரனும் இருப்பது எப்பொழுதும் ஒரு சிறப்பான யோக அமைப்பாகும். இந்த இரு கிரகங்கள் மட்டுமே ஒளித் தன்மையோடு எப்பொழுதும் உள்ளது. மற்ற கிரகங்கள் ஒளித் தன்மையின் பிரதிபலிப்புகளால் மாற்றத்தை உருவாக்குகின்றன. ஜாதகரை எப்பொழுதும் இயங்கும் தன்மையை உண்டாக்கிக் கொண்டே இருக்கும்.

சந்திர திரிகோணத்தில் சுப கிரகங்கள் அமைவது சந்திரன் வளமையை உருவாக்கும் அமைப்பை கொண்டதாக இருக்கிறது. சமூகம், பொருளாதாரம், அதிகாரம் இவைகளுடன் தொடர்பில் இருப்பதுடன் இயக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேதான் இருக்கும். இதில், மூன்று கிரகங்களின் தொடர்பு ஏற்படுவதால் மிகுந்த நற்பலன்களை வழங்கும். இதில் லக்னத்தை எடுத்துக் கொள்ளாமல் கிரகங்களின் அமைப்பை மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதில் இரண்டு மூன்று யோகங்கள் இணைந்து யோகப் பலன்களை உண்டாக்குகிறது என்பது சிறப்பானதாகும்.

சூரியனுக்கு கேந்திரத்தில் சந்திரன் வருவதால் வளர்பிறை அமைப்பை கொண்ட சந்திரனாக இருக்கும். சந்திரன் சுபத்துவ சக்தியோடு செயல்படுவதால் நல்ல மனநிலை இவருக்கு உண்டு.

சந்திரனுக்கு பத்தாம் பாவகத்தில் சூரியன் வருவதால் அரசு தொடர்பான அமைப்பில் இவருக்கு அதிக தொடர்புகள் உண்டு.

மருத் என்ற மாருத யோகத்தின் வெவ்வேறு அமைப்புகள்...

*சூரியன் மேஷத்தில் அமர்ந்திருப்பதும், கேந்திரமாகிய கடகத்தில் சந்திரன் அமர்ந்திருப்பதும், சந்திரனுக்கு திரிகோணத்தில் மீனத்தில் சுக்கிரன் அமர்ந்திருப்பதும், விருச்சிகத்தில் வியாழன் அமர்ந்திருப்பதும் மருத் என்ற மாருத யோகம் செயல்படுவது 100% பலன்களை முழுமையாக தருவதாக உள்ளது.

*சூரியன் சிம்மத்தில் அமர்ந்து அதற்கு கேந்திர ஸ்தானமாகிய (10ம்) இடத்தில் சந்திரன் உச்சம் பெற்ற அமைப்பில் அமர்ந்திருப்பதும், சந்திரனுக்கு திரிகோணங்களாகிய ரிஷபத்திலேயே வியாழனும், கன்னியில் சுக்கிரனும் நீச பங்கமாகி புதனுடன் இணைந்து ஏற்படுத்தும் மாருத யோகம் சிறப்பான அமைப்பாகும்.

*சூரியன் ரிஷபத்தில் அமர்ந்து அதற்கு கேந்திரமாகிய விருச்சிகத்தில் சந்திரன் அமர்ந்து பௌர்ணமி திதியில் இருப்பதும், சந்திரனுக்கு திரிகோண ஸ்தானமான மீனத்தில் சுக்கிரன் இருப்பதும், வியாழன் கடகத்தில் உச்சம் பெறுவதும் சிறப்பான மாருத யோகம் அமைப்பாகும். இந்த யோகத்தில் ஜாதகர் மேஷ லக்னமாகி சூரியன் அமர்ந்து கேந்திர ஸ்தானமாகிய நான்காம் பாவகத்தில் (4ம்) சந்திரன் அமர்ந்து, சந்திரனுக்கு ஐந்தாம் பாவகமாகிய விருச்சிக பாவகத்தில் (8ம்) வியாழன் அமர்ந்து, அதே சந்திரனுக்கு ஒன்பதாம் பாவகமாகிய (9ம்) மீனத்தில் சுக்கிரன் இருப்பதும் சிறப்பான யோகமுடைய அமைப்பாகும். இவ்வாறு லக்ன பாவகத்துடன் இணைந்து பலன்கள் ஏற்படும் போது ராஜயோகத்திற்கு ஈடான அமைப்பாக இந்த மாருத யோகம் உள்ளது.

மாருத யோகப் பலன்கள்

*ஜாதகர் மிகுந்த மனோ தைரியம் கொண்டவராகவும். எதையும் எதிர்கொள்ளும் சக்தி படைத்தவராகவும் இருக்கிறார்.

*மேடைப் பேச்சில் சிறந்து விளங்குபவராக இருப்பார்.

*ஆரோக்கியத்தில் அதிக கவனம் கொண்டிருப்பார்.

*சூரியன்-சந்திரன் கேந்திரத்தில் இருப்பதால் எப்பொழுதும் முழு சுறுசுறுப்புடன் இயங்குபவராகவும் இருப்பார்.

*பல்துறை நுட்பங்களை கற்றறிந்தவராகவும் பல துறை வல்லுநராகவும் இருப்பார்.

*மாபெரும் வெற்றியாளர்களாக இருப்பர். சாதனை புரிவதில் வல்லவராக இருப்பார்.

*வணிகத்தை புதுமையான முறைகளில் எப்படி செய்யலாம் என்ற நுட்பத்தை அறிந்திருப்பார்.

*இலக்கியத்தில் அதிக ஈடுபாடும் உடையவராக இருப்பார். கலை, இசை, எழுத்தின் மூலமும் தனது சாதனைகளை விரிவாக்குவதில் வல்லவராக இருப்பார்.

*சந்திரன் நல்ல அமைப்பில் இருப்பதால் மற்றவர்களுக்கு உதவும் நல்ல மனநிலை இவருக்கும் உண்டு.

*சந்திரனுக்கு திரிகோணத்தில் வியாழனும் சுக்கிரனும் வருவதால் அதிக பெண் நட்புகளை பெற்றவராகவோ அல்லது அதிக பெண் உடன்பிறப்புகளை கொண்டவராகவோ இருப்பார்.