ஒவ்வொரு மனிதனும், ஆணோ பெண்ணோ, இந்நிலவுலகில் பிறந்து, படிப்படியாக வளர்ந்து, தனக்குரிய அறத்தைக் கடைப் பிடித்து வாழ்ந்து, தன் புகழையும் சந்ததிகளையும் விட்டுச் செல் கிறான். அவன் வாழ்வு ஒவ்வொரு நிலையிலும் அறம் சார்ந்ததாக இருக்க வேண்டும். அப்போது தான் அவனும், அவன் சார்ந்த சமூகமும், அமைதியுடனும் சந்தோஷத்துடனும் வாழ முடியும். அறம் தவறும் போது அத்தனையும் தவறும். இந்த அறவாழ்க்கை வாழத்துணை புரிவது திருமணம்.
வாழ்வின் படி நிலைகள்
திரு என்பது தெய்வத்தன்மை எனவும், மணம் என்பது இணைதல் எனவும் பொருட்பட்டு, மேன்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனக் கூறலாம். திருமணத்தின் முக்கியமான நோக்கம் அற வாழ்க்கை வாழ்தலே. அதனால் தான் வள்ளுவர் போன்ற சான்றோர்கள் ‘‘இல்லறம்’’ என்று வகுத்தார்கள்.
1. மனிதன் தனித்து வாழ்ந்து, கல்வி கற்று, அறிவு பெரும் நிலை “பிரம்மச்சரியம்” என்பது.
2. அக்கல்வியில் கண்ட அறத்தோடு வாழ, தனக்குரிய துணையோடு இணை தலை “இல்லறம்” என்று சொன்னார்கள்.
3. சந்ததிகளை உருவாக்கி, அடுத்த தலைமுறையை, அறநெறி வாழ்வுக்குத் தகுதியானவர்களாக மாற்றி, வாழ்ந்து படிப்படியாக இல்லற பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படைத்து தன்னை விடுவித்துக் கொள்வதை “வானப் பிரஸ்தம் என்றார்கள்.
4. முற்றிலுமாக விலகி, தன்னுடைய ஆன்ம கடைத்தேற்றம் நோக்கி நகர்தலை “சன்னியாசம்” என்றும் பிரித்து வைத்தனர். இந்த நான்கு படி நிலைகளில் ஒவ்வொன்றுக்கும், அதற்குரிய அறநெறிகள் உண்டு.
திருமணம் ஏன்?
உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரும் தனித்துவமானது. இவ்வுலகில் உயிர் தனித்து இயங்காது. அது இயங்க ஒரு உடல் வேண்டும். அப்படி உடல் பெற்ற உயிர் தான், அடுத்து ஒரு உயிரை உண்டாக்க முடியும். உடலைப் பெற்று விட்ட பின், உடலுக்கு உரிய பல தேவைகளைப் பெற வேண்டும். பல செயல்களைச் செய்ய வேண்டும். அதற்கு இன்னொரு உயிரும் உடலும் தேவை. இந்த இரண்டு உயிர்களும், ஒன்றையொன்று சார்ந்து, தானும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்விக்கும் அறவாழ்வு வாழ வேண்டும்.
திருமணத்தில் தாலி கட்டும்பொழுது ஒரு மந்திரம் வரும்.
மாங்கல்யம் தந்துனானேன மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே த்வம ஜீவ சரதஸ் சதம்”
அந்த மந்திரத்தின் பொருள் இதுதான்.
“மங்களம் நிறைந்தவளே! உன்னோடு இல்லற வாழ்வை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்று திருமாங்கல்யத்தை உன்னுடைய கழுத்தில் அணி விக்கிறேன். என் வாழ்வில் ஏற்படும் சுக, துக்கங்களில் பங்கேற்கும் நீ, சுப போகங்களுடன் நூறாண்டு வாழ்வாயாக!” என்பது இதன் பொருள். இந்த மந்திரத்தை கவனித்து அர்த்தம் புரிந்து கொண்டாலே கணவன் மனைவி உறவின் சிறப்பும் பொறுப்பும் உன்னதமும் புரியும்.
திருமண நோக்கம் ஒன்றுதான்
ஆன்மா ஒரேவிதமானது. ஆண் பெண் பேதமில்லை. ஆனால் அது எடுக்கும் உடல்கள் பெரும்பாலும் இரட்டை விதமானது. உலக இயக்கம் தொடர இறைவன் செய்த, எண்ணி எண்ணி வியக்க வைக்கும், அற்புத அமைப்பு இது. ஆண் இன்றி பெண்ணில்லை. பெண்ணின்றி ஆண் இல்லை. இந்த இரண்டு உயிர்களின் உன்னத உறவே திருமணம் எனும் பந்தம். திருமண முறைகளிலும் சடங்குகளிலும் மாறுபாடு இருந்தாலும் நோக்கம் ஒன்று தான். அன்பு, பிணைப்பு, விட்டுக் கொடுத்து வாழ்வது, சமூகப் பங்களிப்பு, மகிழ்ச்சி தருதலும் பெறுதலும் என்று இந்த நோக்கம் விரிந்துகொண்டே போகிறது.
இருமனம் கலக்காது, திருமணம் சிறக்காது
திருமண பொருத்தங்கள் குறித்து பலவிதமான விஷயங்கள் இருக்கின்றன. நாள் பொருத்தம், நட்சத்திர பொருத்தம், பெயர் பொருத்தம் என பல ஜோதிட விதிகளைச் சொல்லுவார்கள். ஆனால், எத்தனைப் பொருத்தம் இருந்த போதிலும், ஒரே ஒரு பொருத்தம் மட்டும் இல்லை என்று சொன்னால், மணப் பொருத்தம் இல்லை என்றுதான் பொருள். இருமனம் கலக்காது திருமணம் சிறக்காது.
இந்த உறவை அற்புதமாகப் பாடுவார் கவிஅரசர் கண்ணதாசன்.
“கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று”
இரு உடல் கலப்பதால் மட்டும் பயனில்லை. அது காமம். அது வாழ்வின் ஒரு பகுதி தானே தவிர, அது முழுமை அல்ல. அந்த காமத்தையும் முறைப் படுத்தவே திருமண உறவு. இதில் மனப் பொருத்தம் அவசியம்.
சங்க இலக்கியம் காட்டும் மனப் பொருத்தம்
ஏதோ ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண், ஏதோ ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஆண், இருவரும் மணம்புரிந்து இணைகின்றனர். அது தாமரை இலை தண்ணீர் போல, களிமண்ணில் பெய்த மழை போல ஆகி விடக்கூடாது. எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?
செம்மண் தரை
வானிலிருந்து மழை பெய்கிறது. தரையில் தண்ணீர் ஓடுகிறது.
ஓடும்போது மழையின் எண்ணமும், தரையின் வண்ணமும் கலந்து இணைந்து பிரிக்க முடியாதபடி ஓடுகிறது.
இருவர் வாழ்க்கையும் அப்படி இருக்க வேண்டும், அல்ல அல்ல, கலக்க வேண்டும் என்பதைச் சொல்கிறது குறுந்தொகையின் 40வது பாடல்.
``யாயும் ஞாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல்நீர் போல,
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!’’
பெண்ணே! என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் யார் யாரோ என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் உறவினர்? நானும் நீயும் எவ்வாறு முன்பு அறிந்தோம்? செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல அன்புடைய நம் நெஞ்சம் தாமாக ஒன்றுபட்டனவே!
6. இல்லறம் வெற்றி பெற இல்வாழ்க்கைப் பற்றிச் சொல்லும் பொழுது திரு.வி.க அழகாகச் சொல்லுவார்.
‘‘அன்பு வளர்ப்பதற்கான ஒரே நிலைக்களன் இல்வாழ்க்கை. தான். அதை விட்டால் வேறு வழி இல்லை. உலகில் இல்வாழ்க்கை இனிது நடைபெற வேண்டும் என்னும் அருட்பெருக்கால் ஆண்டவன் உயிர்களை ஆண், பெண் வடிவாய் படைத்திருக்கிறான்.”
இருவரும் சேர்ந்து வாழும் இல்வாழ்க்கை வெற்றி பெற என்ன வழி என்பதை மிக அழகாகச் சொல்லுவார் கவியோகி.
“அறம் இருக்க வேண்டும். நல்ல தொழில் இருக்க வேண்டும். மனப்பொருத்தம் இருக்க வேண்டும். வாய்மை, கற்பு, பகுத்து உண்ணுதல், உடல்நலம், பொறுமை, போன்ற பண்புகள் இருவரிடமும் இருந்தால் மட்டுமே இல்லறம் வெற்றி பெற முடியும் என்பார்.”
திருமணம் குறித்த புத்தகங்கள்
இந்தியாவில், குறிப்பாக, தென்னிந்திய திருமணங்கள் எப்படி நடக்கின்றன? அதில் உள்ள சுவாரஸ்யங்கள் என்னென்ன? இந்த விஷயங்களை கட்டுரையாக எழுதாமல், நகைச்சுவைக் கதையாக எழுதியவர் எழுத்தாளர் சாவி அவர்கள். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் திருமணம், வாஷிங்டன் நகரில் நடந்தால் எப்படி இருக்கும் என்பதை, 70 ஆண்டுகளுக்கு முன் சிந்தித்து, “வாஷிங்டனில் திருமணம்” என்ற கதையாக எழுதினார். எல்லோரும் மிகவும் ரசித்த கதை அது. திருமண நிகழ்வுகளில் நடைபெறும் அத்தனை நுட்பங்களையும் கதைக் குள் அவர் சொல்லி இருப்பார். அதன் பிறகு எழுத்தாளர் சிவசங்கரி ‘‘கௌரி கல்யாண வைபோகமே’’ என்று ஒரு புத்தகம் எழுதினார். திருமணம் குறித்த பல தகவல்களை அவர் அதில் தொகுத்துக் கொடுத்திருப்பார். நிச்சயதார்த்தம் தொடங்கி சாந்தி முகூர்த்தம், கிரகப் பிரவேசம் செய்வது வரை அதில் சொல்லியிருப்பார். திருமண நிகழ்வுகளை திட்டமிடுபவர்களுக்கு ஒரு வழிகாட்டி நூல்.
சமூக சடங்குகளை மறந்து விடக் கூடாது.
திருமணச் சடங்குகளை எல்லா சமூகத்தினரும் ஒரே மாதிரி நடத்துவதில்லை. சில பொதுவான விஷயங்கள் தவிர, சடங்குகளின் வரிசை மாறுவதோடு சில சடங்குகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு இருக்காது. புதிய சடங்குகள் இருக்கும். ஒவ்வொரு சடங்கு செய்வதிலும் ஒரு பின்னணித் தகவலும், சுவாரஸ்யமும், அர்த்தமும் இருக்கும். அது அந்த சமூகத்தவரின் தனிச் சிறப்பைக் காட்டும். இன்று யாரும் திருமண மரபுகளில், சடங்குகளில் கவனம் செலுத்துவதில்லை. ஏதோ, கல்யாணம் ஆனால் சரி என்று அவசரப் பட்டுச் செய்கிறோம். அதன் விளைவாக பல அற்புதமான சமூக சடங்குகள் வழக்கொழிந்து போய்க் கொண்டிருக்கின்றன. 40 வருடங்களுக்கு முன், சில பத்திரிகைகளில், ஒவ்வோர் சமூகத்தினரின் திருமண முறைகள் குறித்து வெளியிட்டார்கள். அவை அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டியாக அமைந்தன. இனி சில திருமண சடங்குகளுக்கான, விளக்கங்கள் பார்க்கலாம். நம்முடைய இந்து சமயத்தில் திருமண நிகழ்ச்சியின் போது செய்யப்படும் சடங்குகளுக்கு சுருக்கமாக விளக்கம் தான் இது. அடிப்படையானது. சிற்சில இடங்களில் மாற்றங்களும் இருக்கும்.
பந்தகால் நடுவது
இல்லத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்ட நாள் முதல், முடியும் வரை, பல விதமானச் சடங்குகள் செய்கிறோம். இந்தச் சடங்குகளில் மிக முக்கியத் துவம் வாய்ந்தது “முகூர்த்தக்கால்” நடுதல். இதை “பந்தக்கால் நடுதல்” என்று கூறுவர். இந்தச் சடங்கில் தனித்தனியே மணமகன் மற்றும் மணமகள் வீட்டில் வடகிழக்கு பகுதியில் பந்தக்கால் ஒன்று நடப்படும். இந்த பந்தக்கால் நடும் விழா, பிரம்ம முகூர்த்தம் அல்லது ஏதேனும் முகூர்த்த நாளில் நல்ல நேரம் பார்த்து, திருமணத்திற்கு முன் நடைபெறும். பந்தகால் நடுவதற்கு, வேரில்லாமல் துளிரும் மரத்தை (பூவரசம் மரம்) அல்லது கல்யாண முருங்கை மரத்தில் ஒரு கிளையை வெட்டி, அதில் உள்ள இலைகளை அகற்றிவிட்டு, மரத்தின் நுனியில், முனை முறியாத மஞ்சள், 12 மாவிலைகள், பூ மூன்றையும் இணைத்து கட்ட வேண்டும். பின்பு நட வேண்டிய குழியில் வெள்ளி நாணயம், பூ, நவ தானியம் இவற்றை போட்டு பந்த கால் நட வேண்டும். சாம்பிராணி தீபம் காண்பித்து தேங்காய் உடைக்க வேண்டும். வாழைப்பழம் வெற்றிலை பாக்கு வைத்து படைக்க வேண்டும். பந்தகால் நட்டவுடன் மரத்தின் அடியில் பால் ஊற்றி, மஞ்சள், குங்குமத்தை மேல் நோக்கி தடவ வேண்டும். மாவிலை, நவதானியம், வெள்ளி நாணயம், பூ, தீய சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும். பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங்களுக்கும் அறிவிக்கை செய்து ஆசி பெறுவது நோக்கமாகும். இன்னொரு வழக்கமும் உண்டு. முகூர்த்தக்கால் ஊன்றிய பின் இரு வீட்டாரும் திருமணச் சடங்குகள் முடியும் வரை எந்தவிதமான துக்க நிகழ்ச்சிகளிலும் பங்குபெறுதல் கூடாது.
பொன்னுருக்குதல்
பொண்ணுருக்கு வைபவம் என்பது தமிழர்களின் திருமண ஆகம மரபுச் சடங்குகளில் ஒன்று. திருமாங்கல்யம் என்பது சுமங்கலியின் சின்னம் ஆகும், போற்றிப் பாதுகாக்கப் படவேண்டியது. திருமாங்கல்யம் (தாலி) செய்வதற்கு உரிய தங்க நாணயத்தை ஆலயத்தில் இறைவனடியில் வைத்து பூசை செய்து, பின்னர், அவ்வூரில் பிறந்து வளர்ந்த பாரம்பரிய பொற்கொல்லர் மூலம் உருக்கப்படுவதே “பொன்னுருக்கல்” எனப்படும். நல்ல நாளில், தீர்க்க சுமங் கலியாக வாழ்வதற்கு, மாப்பிள்ளை வீட்டில் வைத்து உரிய நபரிடம் (பொற் கொல்லர்) புதிய பொன் கொடுத்து திருமாங்கல்யம் செய்ய வேண்டும். பொன்னுருக்கலுக்கு நிச்சயித்த சுபநாளில், மணமகன் வீட்டில் பொன்னு ருக்கல் நடைபெறுவது மரபாகும். இந்த சுப நிகழ்வில் மணப்பெண்ணைத் தவிர இரு வீட்டு உறவினர்களும், நண்பர்களும் கலந்து சிறப்பிப்பார்கள். குறித்த சுப நாளில் மணமகன் வீடு வாசலில் நிறை குடம் வைத்து விழாவை தொடங்குவார்கள்.
நாளை வைத்து குறி சொல்பவர்கள்
ஆச்சரியார் பொன்னை உருக்கிய பின்னர், ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், பூ, மஞ்சள், குங்குமம், தேங்காய் வைத்து வெற்றிலை மேல் உருக்கிய தங்கத்தை வைத்து அதை மணமகனுக்கு கொடுப்பார். மணமகன் பூசை அறையில் வணங்கி பொன்னுருக்கலுக்கு வந்திருக்கும் சபையோருக்கு அதை காண்பிக்க வேண்டும்.
அந்தத் தங்கத்தை வைத்து அவர்களின் எதிர்கால வாழ்க்கையைச் சொல்லக் கூடியவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்றும் இருக்கிறார்கள். இப்பொழுதும் சில கிராமங்களில் இப்படித்தான் நடக்கிறது. ஆனால், தலை முறை மாற்றங்களால் நேரடியாக கடைகளில் சென்று வாங்கும் முறையும் அதிகரித்து வருகிறது.
கலப்பரப்பு
நிச்சயதார்த்தத்தின் ஒரு வடிவம் இது. பெண் உறுதியானவுடன் அந்தப் பெண்ணுக்கு பூ சூடுதல் என்று மங்கலப் பொருட்களோடு சென்று பார்ப்பார்கள். அது ஒரு விழாவாக நடைபெறும். மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் சேலையை களத்தில் பரப்பி (தரையில் விரித்து), மணப் பெண் அமர்ந்து, மங்களப் பொருட்களை, இரு வீட்டாருக்கும் வழங்குவதன் மூலம், இரு வீட்டாரும் கலந்து ஒன்றாகி விட்டதற்கான அடையாள நிகழ்ச்சி (கலம் என்பது பாத்திரம்) ஆகும். பாத்திரத்தில் (மங்கலப் பொருட்களை மஞ்சள் கலவை, வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழங்கள், பூச்சரம்) நிரப்புதல் கலப் பரப்பு ஆகும்.
கலசம் (கும்பம்) வைத்தல்
பிம்பத்தில் இருப்பதெல்லாம் கும்பத்தில் இருக்கும் என்பார்கள். கலசத்தில் மந்திர பூர்வமாக நீர் நிரப்பப்படுகிறது. படைப்பில் உள்ள எல்லாம் எந்த நீரில் தோன்றியதோ, அந்த நீரைக் குறிப்பது. அது சாதாரணமான நீரல்ல. மந்திர பூர்வமானது. உயிர்த்துடிப்பு உள்ளது. ஜீவன் உள்ளது. ‘‘நீரின்றி அமையாது உலகு’’. தேவதைகளை நீரில் ஆவாகனம் செய்வது மரபு. அந்த அடிப்படையில் கும்பம் வைக்கிறார்கள். கும்பம் இறைவனது திரு உடம்பின் அடையாளம். இறைவனது திருமேனி, கும்பத்தில் பாவிக்கப்படும்.
கும்பவஸ்திரம்--- உடம்பின் தோல்
நூல்-------- நாட நரம்புகள்
குடம் ---------- தசை
தண்ணீர் --------- ரத்தம்
நவரத்தனங்கள் ------ எலும்பு
தேங்காய் --------- தலை
மாவிலை ------- தலைமயிர்
தருப்பை --------- குடுமி
மந்திரம் --------- உயிர்
ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. மணமக்களுக்கு இறை அருள் இனிது கிடைக்க, கும்பம் வைத்து பூஜிக்கிறார்கள்.
இதை மறக்காதீர்கள் மண மேடையின் புனிதம்
திருமணம் என்பது அற்புதமான அர்த்தமுள்ள ஒரு முக்கியமானச் சடங்கு.
அடுத்து, இந்த மணமக்கள் என்ன செய்யப்போகிறார்கள்? எப்படி வாழ வேண்டும் என்பதை அறிவுறுத்தும் மந்திரங்கள் அடங்கியச் சடங்கு.
புனிதமான இந்த நிகழ்ச்சி எந்த முறையில் நடத்த வேண்டும் என்பதை நமக்கு நமது ஆன்றோர்கள் அறிவுறுத்திச் சென்றிருக்கிறார்கள்.
இந்நிகழ்வுகளை அரைகுறையாகவும், புரிந்து கொள்ளாமலும், அலட்சியமாகவும், ஏனோ தானோ என்று சிரத்தையின்றியும் நடத்தக்கூடாது.
ஆன்மிகத்தில் இதற்கு ஆண்டாள் நாச்சியார் அருமையாக வழிகாட்டியிருக்கிறார்.
மணமகன் வரவேற்பு!
எப்படி வரவேண்டும்! வழியில் அலங்காரம் எப்படியிருக்க வேண்டும்!
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் - என்றெதிர்
பூரணப் பொற்கும்ப கலசங்கள் வைத்து
தோரணம் நாட்ட கனாக் கண்டேன்! தோழி நான்!
அலங்கரிக்கப்பட்ட கலசமும் தீபமும் மங்கலப் பொருட்கள்!
அதைப் போல வாழையும், கமுகும் மாவிலைத் தோரணமும் மங்கலப் பொருட்கள்!
இவைகள் எளிமையானவை. மங்கலகரமானவை. அழகைக் கொடுப்பவை.
சில பொருட்கள் ஆர்ப்பாட்டமாக இருக்கும். ஆடம்பரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும். சில பொருட்கள் எளிமையாக இருக்கும். புனிதத்தையும், அமைதியையும் கொடுக்கும்.
எது நமக்கு வேண்டும்?
மலர்கள், மாவிலைத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மணப்பந்தல் முக்கியம்!
எது எப்படியிருந்தாலும், முதல் நாள் நிச்சயதார்த்தம் முக்கியம்.
அதனைத் தான், நாளை வதுவை என்று மணநாளிட்டு என்று ஆண்டாள் பாடுகிறாள்.
திருமண வைபவ வரிசைக்கு நாம் ஆண்டாளின் வாரணமாயிரம் பாசுர வரிகளை அப்படியே கொண்டு நடைமுறைப்படுத்தலாம். நடைமுறைப்படுத்த வேண்டும்.
நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ! நான்
இதிலே இரண்டு செய்திகள் விளக்கப்படுகின்றன. மாப்பிள்ளை அழைப்பா (ஜானவாசம்) பெண் அழைப்பா என்றால் மாப்பிள்ளை அழைப்பு தான் அன்றைய முறை!
திருமணத்துக்கு முதல் நாள் பெண் வீட்டிற்குப் பிள்ளை ஆயத்தமாகி உரப்படுவது ஜானுவாசம். அவனைப் பெண் வீட்டார் எதிர்கொண்டு அழைப்பது மாப்பிள்ளை அழைப்பு. ஜானு என்றால் முழங்கால் வரை என்று பொருள் வாஸ: என்றால் வஸ்திரம். முழங்கால்வரை வஸ்திரம் அணிந்து ஜானவாஸனாக நிற்பவன் பிரம்மச்சாரி. அந்த உடையில் அவனை மாப்பிள்ளையாக எதிர்கொண்டு அழைக்க வேண்டும். அந்த ஊர்வலம் தான் ஜானுவாசம்.
பெண்ணின் உறவினர்கள் மாப்பிள்ளையை அழைத்து தன் வீட்டில் வைத்து உற்றார் உறவினர் முன்னிலையில் கன்யாதானம் செய்வதாக வருகிறது. சீதா கல்யாணமும் ஜனகரின் திருமாளிகையில் தான் நடைபெறுகிறது.
இப்பொழுது சிலர் நிச்சயதார்த்தம் பெண் வீட்டார் செலவு, திருமணம் மாப்பிள்ளை வீட்டார் செலவு என்றும் சொல்கின்றனர்.
காலச் சூழ்நிலையில் மாறிவிட்டது. ஆயினும் ஆண்டாளின் பாசுர வரிகள் மாறவில்லையே! எனவே மாப்பிள்ளை வீட்டில் செய்தாலும், பெண் வீட்டில் செய்தாலும் ஆண்டாளின் மந்திரச் சொற் களைத் துணையாகக் கொள்ளுங்கள்.
அடுத்து திருமண நிச்சயதார்த்த நாளுக்கும், திருமண நாளுக்கும் உள்ள இடைவெளி பற்றிய கருத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஓர் காலத்தில் திருமண நிச்சய நாளுக்கும் திருமண நாளுக்கும் உள்ள இடைவெளி குறைவாக இருக்கும்.
இன்றைக்கு நிச்சயதார்த்தத்துக்குப் பின் 1 வருட காலம் கழித்துக் கூட பல காரணங்களால் தள்ளி வைக்கிறார்கள்.
இதற்கு
1) விடுமுறை
2) மண்டபம் கிடைக்காதது இப்படிப் பல காரணங்கள்.நாளிட்டு என்பதில் இன்னொரு நுட்பமும் இருக்கிறது. ததேவ லக்னம் ஸூதினம் ததேவசந்திரபலம் தாரா பலம் ததேவ- என்று மந்திரம் வருகிறது.
சந்திர பலமும், தாரா பலமும் நட்சத்திர அடிப்படையில் பார்க்கப்படும் விஷயம்.
எனவே, இருவர் நட்சத்திரத்திற்கும் பொருத்தம் பார்த்து திருமண நாளினை நிச்சயிக்க வேண்டும்.
விவாகத்திற்கு என்னென்ன அடுத்தடுத்துச் செய்ய வேண்டும் என்று கிரமம் இருக்கிறது.
அடுத்து,
கலசங்கள் நிறுவி (கலச பூஜை), ஆராதனங்களுடன் நிகழ்ச்சியைத் துவங்க வேண்டும். (ஏற்கனவே இந்த விபரம் கொடுக்கப்பட்டிருக்கிறது).
அடுத்து செய்ய வேண்டிய விபரத்தை ஆண்டாள் நாச்சியார் வழிகாட்டுகிறார்.
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்
வந்திருந்து என்னை மகட்பேசி மந்திரித்து
மந்திரக்கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான்
1) கூறைப்புடவை உடுத்துதல்.
2) மணமாலை சூட்டுதல்.
இங்க ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல வேண்டும்.
மேடையிலே பலர் செருப்புக்காலுடன் அங்கே இங்கே என்று நடக்கிறார்கள்.
திருமண மண்டபம் திரையரங்கு போல ஆகிவிட்டது.
எத்தனை புனிதமான - வைதீகமான தெய்வீகக் காரியம் நடைபெறுகிறது என்கிற உணர்வு பெரும்பாலும் நடத்துபவர்களுக்கோ வந்து கலந்து கொள்பவர்களுக்கோ இருப்பதில்லை. இது மாற வேண்டும்.
விளக்கேற்றி வைத்து தூய்மையாக மந்திரங்களுடன் நடைபெறும் அந்த இடத்திற்கு இந்திரன் உள்ளிட்டதேவர் குழாமும், பித்ருக்கள் வர்க்கமும், சாட்சாத் பகவானும் ஆசார்ய பெருமக்களும் சூட்சுமமாகவே வருகை தருகிறார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இவர்களை நம் நடத்தையால் அவமதிக்கக்கூடாது. எனவே மண மேடைகளில் எல்லோரும் செல்வதோ, புனிதத்தைக் கெடுப்பதோ கூடாது. நம் திருமண மரபும், நோக்கமும், சடங்குகளும், மந்திரங்களும் எத்தனை முக்கியமானது என்பதை வாசகர்களுக்கு தெரிவிக்க, சில விஷயங்களை அளித்திருக்கிறோம். சக்கரை சுவை அறிந்தால், பின்பு நீங்களே அதைத்தேடி சாப்பிடுவீர்கள் அல்லவா? இனி இதில் உள்ள மற்ற சடங்குகளின் அர்த்தங்களைப் பார்ப்போம்.