தீபாவளி, பொங்கல், கோயில் திருவிழா மற்றும் பண்டிகைகளுக்கு இணையான பெரும் கொண்டாட்ட மனநிலை என்பது நம் இல்லங்களில் நடக்கும் திருமண விழாவே ஆகும். ஒருகாலத்தில் ஒரு வாரத்திற்கு முன்பிலிருந்தே சொந்த பந்தங்கள் வரத் தொடங்கி விடுவாரக்ள். வீட்டிலேயே சீர் பட்சணங்கள் செய்து வைத்து விடுவார்கள். ஒரு பக்கம் பதட்டங்கள் இருந்தாலும் மறுபக்கம் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமிருந்ததில்லை. ஆனால், இப்போதெல்லாம் அதிகபட்சமாக திருமணத்திற்கு சென்று வந்தாலே கடமை முடிந்ததுபோல் நினைக்கிறார்கள். சில திருமணங்களில் முதல்நாள் திருமண வரவேற்பிற்கு இருக்கும் கூட்டத்தில் ஐந்து சதவீதம் கூட மறுநாள் தாலிகட்டும்போது இருப்பதில்லை. வயதானவர்கள் மட்டும் ஆங்காங்கு அமர்ந்து அட்சதை தூவிக் கொண்டிருப்பார்கள். ‘‘ரிசப்ஷனுக்கு போனா போதும்’’’ என்கிற மனோநிலை சொந்தங்களுக்குள்ளேயே வந்து விட்டது. பெருங்குழுவாக நடந்த அக்காலத்து திருமணங்கள் இன்று தனித்தனி துளியாக பிரிந்து விட்டது.
எந்தச் சமூகத்தினராக இருந்தாலும் சரிதான், பெரியோர்கள் அந்தந்த மரபுப்படி எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்தார்கள். ஒரு சடங்கையும், சம்பிரதாயத்தையும் விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். இப்போது அவற்றை மீண்டும் ஆய்வு செய்து அறிந்து கொள்ளுதல் நிச்சயம் நம்முடைய மரபையும், பாரம்பரியத்தையும் வலுப்படுத்துவதாக அமையும். ஏனெனில், திருமணச் சடங்குகள் லௌகீகமான வாழ்க்கையிலிருந்து தெய்வீகமான வாழ்க்கையை நோக்கி நகரும் பாதையை காட்டிச் செல்கின்றது. ஏனெனில், நம்முடைய தேசம் குடும்பம் என்கிற அமைப்பை மையமாகக் கொண்டது. அந்தக் குடும்பம் எனும் அமைப்பை தூக்கி நிறுத்த வேண்டுமெனில் திருமணமும் அது சார்ந்த சம்பிரதாய சடங்குகளைச் விடாது செய்தல் மிகவும் முக்கியம். சடங்குகளுக்குள் எப்போதுமே ஒரு வரலாறை நிலைநிறுத்தும் விஷயங்கள் இருக்கும். தெய்வங்களின் ஆசியாலும், பஞ்ச பூதங்களின் சாட்சியாகவும், பெரியோர்கள் முன்னிலையிலும், நீங்கள் உங்கள் வாழ்வு முழுவதும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கும்.
திருமணம் என்பது இங்கு எப்போதுமே தெய்வீகமாகத்தான் பார்க்கப்பட்டு வந்திருக்கின்றது. இறைவனை நாயகனாகவும், தன்னை நாயகியாகவும் நினைத்தே பெரும் ஞானிகள் இந்த தேசத்தில் பக்தி புரிந்து வந்துள்ளனர். இதை BRIDAL MYSTICISM என்று அழைப்பார்கள். இப்படிப்பட்ட நாயகா, நாயகி பாவத்தை BRIDAL MYSTICISM என்பார்கள். உதாரணம் ஆண்டாள், மீரா… திருமணமான பின்னர் எப்போதுமே அவர்கள் இருவரல்லர் ஒருவரே எனும் கருத்து இங்கு வேரூன்றியுள்ளது. இல்லற தர்மத்தை முடித்த தம்பதியர் இறைவனை நோக்கி நகரும் பயணத்தில் ஈடுபடுவதையே தலையாய தர்மமாகச் சொல்லியிருக்கின்றது. திருமணம் எப்போதுமே பெருமணத்தில் சென்று முடிய வேண்டும். இன்றைய ஆச்சாள்புரம் எனும் அன்றைய பெருமண நல்லூர் தலத்தில் திருஞானசம்பந்தர் தம் திருமணத்தின்போது எல்லோரையும் ஈசனின் பதத்தில் சேர்த்தார். வந்திருந்தோர் அனைவரும் ஜீவன் முக்தர்களாக ஈசனின் திருவடியை அடைந்தனர். அவர் பெரும் ஞானியாதலால் அங்கு சாத்தியமாயிற்று. இங்கு திருமணமான தம்பதியர் நன்கு பக்குவமற்று கனிந்து திவ்ய தம்பதியராக ஜொலித்து இறைவனின் திருவடியை சேர்த்தியாகச் சேர வேண்டும் என்பதே திருமணத்தின் அடிநாதமாகும்.


