கன்னிகாதான மந்திரம் அற்புதமானது அக்னி சாட்சியாகவும், அரிமேனி சாட்சியாகவும், முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாகவும், நாற்பத்தி எட்டாயிரம் ரிஷிகள் சாட்சியாகவும், குலதெய்வம் கிராம தெய்வம் சாட்சியாகவும், பெரியவர்கள் சாட்சியாகவும் கன்னிகா தானம் செய்து கொடுக்கிறேன் என்று சொல்லி நீர் வார்க்கும்போது கெட்டிமேளம் முழங்க வேண்டும். கன்னிகாதானம் முடிந்தவுடன் மாங்கல்ய பூஜை. அந்த காலத்தில் இருந்து தாலி கட்டப்பட்டதா? கட்டப்பட வில்லையா? என்று ஓர் பெரிய விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. பழங்காலத்தில் மங்கலநாண் இல்லை என்றே கூறுகின்றனர். ஆயினும், தாலம் என்றால் பனைஓலை. அந்த பனையோலையைக் கட்டி இவள் திருமணமானவள் என்பதைக் குறிப்பதற்காக மணமகள் கழுத்திலே கட்டினர். தாலம் கட்டியதால் தாலி என்று காலப்போக்கில் மருவியது.
பின், பனையோலை அவ்வப்பொழுது சரிசெய்ய வேண்டி புது ஓலை கட்டும் சிரமம் வந்ததால் உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன. உயர்ந்த பொருளை உயர்ந்த உலோகத்தால் செய்யலாம். தாலி உயர்ந்தது. பொன்னும் உயர்ந்தது. எனவே, தோஷம் இல்லாத உலோகமான பொன்னால் தாலி செய்யப் பட்டது. ஆனால், பொன்னால் தான் தாலிசெய்யப்பட வேண்டும் என்று சாஸ்திரத்தில் கூறப்படவில்லை.
விரலி மஞ்சள் என்று சொல்லும் நீரற்ற காய்ந்த மஞ்சள் துண்டினை மஞ்சள் பூசிய நூலில் இணைத்துக் கட்டிக் கொள்வதும் உண்டு. எனவே, மங்கலம் என்பதைக் குறிப்பதற்காக மஞ்சள் இழைக்கப்படுகின்றது. பொன்னால் அணிந்தால் கூட அதிலே கட்டாயம் நூல் இருக்க வேண்டும்.
நூல் அணி என்றே இந்த மங்கல நாணைப் பற்றி ஆழ்வார்கள் பாசுரங்களிலே வருகின்றது. ஆழ்வார்கள் பாசுரங்களிலே தாலியை நூல் அணி என்று குறித்துப் பாசுரம் வருவதால் ஆயிரத்தி இருநூறு ஆண்டுகளுக்கு முன்னாலே தாலி நூலினால் உள்ள வேலி என்பது தெரிய வருகின்றது. ஆசார்யர்கள் திருமந்திரத்தைச் சொல்லும் பொழுது வேறு எத்தனை மந்திரங்கள் கற்றாலும், பெற்றாலும் ஒரு பெண்ணுக்கு மாங்கல்ய சூத்திரம் முக்கியம் என்பதுபோல ஒரு பிரபன்னனுக்கு மோட்சத்தில் இச்சையுடைய பாகவதனுக்குத் திருமந்திரம் முக்கியம். அது பெண்ணின் திருமாங்கல்யம் போலே என்பார்கள். எனவே, இது ஆயிரத்து இருநூறு வருடங்களுக்கு முன்னால் உள்ள வழக்கம்.
ஒன்பது நூல் இழைகளை முறுக்கி கோர்க்கப்பட்டது. இது ஒன்பது குணங்களை குறித்துச்சொல்வதாகவும் இக்குணங்கள் பெண்ணைக் காவல் காப்பதாகவும் சொல்வார்கள். இனி, இந்த மாங்கல்ய பூஜை எப்படிச் செய்வது என்பதைப் பார்க்கலாம். வெற்றிலைப் பாக்கு, மஞ்சள் பூசிய தேங்காய். அதிலே இந்த மங்கல நாணைச் சுற்ற வேண்டும். ஜபம் செய் ய வேண்டும். மாங்கல்யத்தை பூக்களாலும், அட்சதையாலும், மஞ்சளாலும், குங்குமத்தாலும் அலங்கரித்து வழிபட வேண்டும். இங்கே பெரிதும் பயன்
படும் மந்திரங்கள் மஹாலட்சுமிக்குரிய மந்திரங்களே ஆகும்.
மஹாலட்சுமியினுடைய பூர்ண அனுக்ரகம் இந்த தாலிக்கயிறின் வழியே பெண்ணுக்குக் கிடைப்பதால் மஹாலட்சுமியின் அருளைப் பெற்றவளாக ஆகின்றாள்.
அவள் மணமகனின் வீட்டிற்குச் செல்லும்போது மஹாலட்சுமியையும் உடன் அழைத்துச் செல்லுகின்றாள். எனவே, இங்கே திருமகளுக்குரிய மந்திர ஜபம் முக்கியமானது. இப்பொழுது சொல்ல வேண்டிய மந்திரங்கள் லக்னம் பற்றிய ததேவ லக்னம் என்று தொடங்கும் மந்திரம். மாங்கல்ய தேவதாப்யோ நம: என்று சொல்லி பதினாறு வகை உபசாரங்களைச் செய்ய வேண்டும். அர்க்ய பாத்யாதிகளை சமர்பிக்க வேண்டும். மந்திர புஷ்பம், கற்பூர நீராஞ்சனம் சமர்பிக்க வேண்டும். அப்போது பாகவதர்கள் கோஷ்டியாக நாச்சியார் திருமொழி பாசுரங்களைச் சேவிக்க வேண்டும். அதன்பின்னாலே அவசியம் சேவிக்க வேண்டிய மந்திரம் சூக்த மந்திரங்களாகும்.
சூக்த மந்திரங்களை ஜபம்செய்து அதற்குப்பிறகு பெரியோர்கள் ஆசீர்வாதத்துடன் ஆசிரியர் திருமாங்கல்யத்தை வரனின் கையில் கொடுக்க மணமகன் அதை மணமகளின் திருக்கழுத்தில்
பூட்டுகின்றார். பெண்கள் லட்சுமி கல்யாணம் பாட, கெட்டிமேளம் அதிர திருமாங்கல்ய தாரணம் நடைபெறுகின்றது. அப்பொழுது ஒரு ஸ்லோகம் சொல்லப்படுகின்றது. மாங்கல்யம் தந்துநானேன என்ற அந்த ஸ்லோகம் அங்கே சொல்லப்படுகின்றது. கெட்டிமேளம் அதிரக் கொட்டுவதன் காரணம் இந்த சடங்கு நடக்கும்பொழுது வாழ்த்து மந்திரங்கள், வாழ்த்துப் பாடல்கள் தவிர எந்த அமங்கல சப்தமோ, சொல்லோ அந்த நேரத்தில் காதில் விழாமல் இருக்க வேண்டும்.
மண மகன் திருமாங்கல்யம் கோர்த்த சரடின் இரண்டு முடிச்சுகள் போட்டபின் மூன்றாவது முடிச்சு அவரது சகோதரி போடுவது வழக்கம். அப்படிக் கட்டிய நாத்தனாருக்கு உடனே மரியாதையாக புடவை ரவிக்கை தருவதும் வழக்கத்தில் உண்டு. திருமாங்கல்ய தாரணம் செய்யும்பொழுது சபையோர்கள் யாவரும் அட்சதைகளால் மங்களாஸாஸனம் செய்கின்றார்கள். பெரியோர்களின் பூரண ஆசியைப் பெற்றபின் மணமக்களின் ஆடை முனைப்புகளை சுமங்கலிகள் முடித்து விடுகிறார்கள். பிறகு, மணமக்கள் மனைப்பலகையின் மீது அமர்கின்றனர்.


