Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மங்களம் அருள்வாள் மகாலட்சுமி

கர்நாடகா மாநிலம், ஹாசன் ஜில்லாவில் தொட்டகட்டவல்லி என ஒரு கிராமம் உள்ளது. இது ஹாசனிலிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இதனை ஹாசன் மகாலட்சுமி தேவி என்றே அழைக்கின்றனர். இந்தப் பகுதியில் சில வருடங்களுக்கு முன்னால் பிரபல வியாபாரியாக இருந்தவர் குல்கானா ரகுதா. இவருடைய மனைவி சகஜாதேவி. வியாபாரி பெரும் ெசல்வச் செழிப்பில் வாழ்ந்து வந்தார். இதனால் வியாபாரியின் மனைவிக்கு, லட்சுமிக்கு ஒரு கோயில் எழுப்ப வேண்டும் என ஆசை எழுந்தது. கணவரும் அதனை ஏற்று லட்சுமிக்கு ஒரு கோயில் கட்டினார்.

பிறகு இந்தக் கோயில் கி.பி. 1114-ல் ஹொய்சாலா மன்னன் விஷ்ணுவர்த்தனால் பெரிய அளவில் விஸ்தரிக்கப்பட்டது. பொதுவாக ஹொய்சால கட்டிட கோயில்கள், மேடை கட்டி அதன் மீது எழுப்பப்பட்டிருக்கும். ஆனால்,இந்தக் கோயில் தரையிலிருந்தே எழுப்பப்பட்டுள்ளது. சுற்றி கோட்டை போல் 7 அடி உயரத்தில் மதிற் சுவர் கட்டப்பட்டுள்ளது. அதனுள்தான் இந்த சதுர்முக கோயில் அமைந்துள்ளது.

புதுமுக மண்டபத்தின் நுழைவாயில் வழியாக இந்தக் கோயிலுக்குள் நுழைய வேண்டும். 12 தூண்களை கொண்ட மண்டபம். உள்ளே நான்கு விமானங்கள், சதுர்முக பாணியில் இணைத்து கட்டப்பட்டுள்ளன. இவற்றை ஒருமுகப்படுத்தும் நடு மண்டபமும் உள்ளது. மத்திய மண்டபத்துடன் இடைப் பாதைகள் உருவாக்கப்பட்டு விமானங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இது தவிர தனி விமானம் கொண்ட சந்நதி ஒன்று உள்ளது. அங்கு வீரபத்திரர் வீற்றிருக்கிறார். விமானங்களில் மூன்று கூம்பு மற்றும் இரண்டு ஹொய்சால பாணியில் சிற்பங்கள் அமைந்துள்ளன.

உள்ளே மகாலட்சுமி அம்மன் 3 அடியே உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அம்மனுக்கு உதவியாக, ஒவ்வொரு பக்கமும் ஒரு பெண் நிற்கிறார்.அம்மனின் மேல் வலது கையில் சங்கும், இடது மேல் கையில் சக்கரமும், கீழ் வலது கையில் ஜபமாலை, கீழ் இடது கையில் தண்டாயுதமும் வைத்துள்ளார்.தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தால் வடக்கு பக்கம் காளியும், தெற்கு பக்கம் விஷ்ணுவும், மேற்கு புறத்தில் லிங்கமும் உள்ளது.

மண்டபத்தின் மேல் கூரையில் வட்ட வடிவில் நடனமாடும் சிவன், கஜலட்சுமி ஆகியோரை தரிசிக்கலாம். நுழைவு வாயில் அருகே தாண்டேஸ்வரர், யோக நரசிம்மர் உள்ளனர். இந்தக் கோயில் சிற்பங்களில் இந்திரன், இந்திராணி, 4 தந்தங்களைக் கொண்ட ஐராவதம் யானை, அக்னி, யமன், சுப்ரமணியர், பிள்ளையார், கேசவப் பெருமாள் என பலர் காட்சியளிக்கிறார்கள். சிவ-விஷ்ணு ஒற்றுமையை பிரதிபலிக்கும் அபூர்வ கோயிலாக அமைந்துள்ளது ஹொய்சாலர்கள் கோயில் கட்டினால் அதில் தங்களின் சிற்பத் திறமையை வெளிப்படுத்துவார்கள். இதற்கு உதாரணமாக ஒரு மண்டபமே இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு தீபாவளி ரொம்ப விசேஷம். அப்போது லட்சுமி தேவிக்கு அபிஷேகமும் அலங்காரமும் அமர்க்களப்படும். பல ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி தேவியை வழிபடுவார்கள். பெங்களூரிலிருந்து 180 கிலோ மீட்டர் பயணம் செய்து ஹாசனை அடையலாம்.

மகி