Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மகாதேவனின் பிரசாதங்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

மகாசிவராத்திரி நாளில் சிவனை வழிபட்டு பார்வதி தேவியும், தேவர்களும் வேண்டிய வரங்களை பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. அது போல் நாமும் சிவபெருமானை முழு சரணாகதியுடன், உண்மையான பக்தியுடன் வழிபட்டால் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தையும் சிவபெருமான் நிறைவேற்றி வைப்பார் என்பது ஐதீகம். சிவ பெருமானுக்குரிய அஷ்ட விரதங்களில் மிக முக்கியமானது மகாசிவராத்திரி விரதம்.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வருவது மகாசிவராத்திரியாகும். நாடு முழுவதும் சிவ பக்தர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் விழாக்களில் மகாசிவராத்திரி விழாவும் ஒன்று. இந்துக்களின் மிக முக்கியமான விரத நாள். முப்பெரும் தேவர்களில் ஒருவரான சிவபெருமானுக்குரிய ராத்திரியாக சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மகாசிவராத்திரி விழா மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. சிவன் கோயில்களில் வழங்கப்படும் வித்தியாசமான பிரசாதங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

*கங்கை கொண்ட சோழபுரத்தில் கோரைப்புல் கிழங்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

*சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயிலில் புற்று மண் உருண்டை பிரசாதமாக வழங்கப்படுகிறது. திருக்குற்றாலத்தில் குற்றாலநாதர், அம்பாள் இருவருக்கும் சுக்கு காபி நைவேத்யம் செய்து பிரசாதமாக வழங்கப்படுகிறது.

*ஆவுடையார் கோவில் சிவனுக்கு பாகற்காய் படைக்கப்படுகிறது.

*பட்டுக்கோட்டை அருகிலுள்ள பிரக்காலக்கோட்டை சிவன் கோயிலில் ஆல இலை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மருத்துவ குணம் கொண்டதாகும்.

*காளஹஸ்தியில் பச்சைக் கற்பூரத்தை பன்னீரில் கலந்து, சங்கின் மூலம் தீர்த்தம் வழங்கப்படுகிறது.

*கோவை துடியலூர் விருந்தீஸ்வரர் சிவன் மணலால் செய்யப்பட்ட லிங்கமாக உள்ளார். இங்கு முருங்கை இலைதான் பிரசாதம்.

*திருவாரூர் தியாகேசப் பெருமானுக்கு பாகற்காயும், தூதுவளைக் கீரையும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

*திருச்சி திருவாளைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் மாங்காய் பிரசாதமாக வழங்குகிறார்கள்.

சிவனின் அபிஷேகங்கள்

*சிவனும், பார்வதியும் திருமணக் கோலத்தில் காட்சி தரும் வேதாரண்யம் கோயிலில் ஆண்டுக்கொரு முறை அபிேஷகமும், சந்தனக் காப்பும் செய்கின்றனர்.

*கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வடக்குநாத சுவாமிக்கு தினமும் நெய் அபிஷேகம் மட்டும் செய்யப்படுகிறது.

*குற்றாலம் குற்றால நாதருக்கு மூலிகைகள், வேர்கள், மருந்துச் சரக்குகள் சேர்த்து அரைத்துக் காய்ச்சும் தைலத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு, பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

*திருவாரூர் மாவட்டம் பொன்னிறை தலத்தில் எழுந்தருளியுள்ள அகஸ்தீஸ்வரருக்கு நெல்லிக்காய் பொடி அபிஷேகம் செய்யப்படுகிறது.

- ஆர்.பத்மப்ரியா, திருச்சி.