Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

உபேந்திர தீர்த்தருக்கு உத்தரவிட்ட மத்வர்!

13 மகான்

உடுப்பி அஷ்ட மடங்களின் ஒன்றான ``புட்டிகே மடத்தின்’’ முதல் பீடாதிபதி ``ஸ்ரீ உபேந்திர தீர்த்தர்’’ (இவரின் பெயரில், ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமி மடத்திலும் ஒரு மகான் இருக்கிறார். அவரின் மூலபிருந்தாவனம் ஸ்ரீரங்கத்தில் இருக்கிறது. ஆகையால் இவர் வேறு அவர் வேறு) பற்றிய பல தகவல்களை இந்த தொகுப்பில் காண்போம்.

பாண்டுரங்கனை கொடுத்த மத்வர்துவைத தத்துவ ஞானி ஸ்ரீ மத்வாச்சாரியரால், புட்டிகே மடம் உருவாக்கப்பட்டது. ஸ்ரீ மத்வாச்சாரியாரின் நேரடி சீடர், ஸ்ரீஉபேந்திர தீர்த்தர் என்றும் கூறப்படுகிறது. இந்த மடத்தின் மிக முக்கிய வழிபடும் விக்ரகங்களில் ஒன்று ``ஸ்ரீ பாண்டுரங்கவிட்டலா’’ ஆகும். இவ்விக்ரகம், மத்வரால் ஸ்ரீ உபேந்திர தீர்த்தருக்கு வழங்கப்பட்டது என்றும் மடத்தின் முக்கியஸ்தர்கள் கூறுகிறார்கள். இதுவரை, 30 மடாதிபதிகள் புட்டிகே மடத்தை அலங்கரித்துள்ளனர். தற்போது, புட்டிகே மடத்தின் பீடாதிபதியாக இருப்பவர் ``ஸ்ரீசுகுணேந்திர தீர்த்தர்’’. இவரின் பர்யாயம் காலம்தான் (கிருஷ்ணனை தொட்டு பூஜை செய்வது) உடுப்பியில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதாவது, புட்டிகே மடாதிபதிதான் உடுப்பி கிருஷ்ணனை பூஜித்து வருகிறார்.

ஆனால், உடுப்பி கிருஷ்ணனை சுகுணேந்திர தீர்த்தர் நேரடியாக தொட்டு பூஜைகளை செய்ய முடியாது. காரணம், மத்வரின் பெருமைகளை எடுத்து சொல்ல, வெளிநாடுகளிலும்கூட ஸ்வாமிகள் பிரச்சாரத்தை மேற்கொண்டார். சாமானிய மனிதர்களே கடல் தாண்டி செல்லக் கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. அப்போ.. சந்நியாசிகளுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன?

மத்வரை சிறை பிடித்த மன்னன்

ஆகையால், ஸ்ரீ சுகுணேந்திர தீர்த்தர் கடல் தாண்டி சென்றதால், உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணனை பூஜை செய்ய முடியாத சூழல் ஏற்படவே, தனக்கு பின் ஒரு இளைய பீடாதிபதியை தேர்வு செய்தார், சுகுணேந்திர தீர்த்தர். அவர்தான், ஸ்ரீ சுஷ்ரீந்திர தீர்த்தர். தற்போது, இவரின் மூலமாகத்தான் உடுப்பி கிருஷ்ணனின் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

``ஸ்ரீ மத்வ விஜயர்’’ என்னும் நூலில், மகான் ஸ்ரீ உபேந்திர தீர்த்தரின் மகிமையை விவரிக்கிறது. இரண்டாவது முறையாக பத்ரி சேத்திரத்திற்கு மத்வர் பயணம் மேற்கொள்ளும் வழியில், பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றதாக அந்நூல் கூறுகிறது. மத்வருக்கு மிகவும் பிரியமான சீடர், ஸ்ரீ உபேந்திர தீர்த்தர். உபேந்திர தீர்த்தரும், மிகுந்த பக்தியுடன் மத்வருக்கு அனுதினமும் சேவை செய்து வந்தார்.

ஒருமுறை, மத்வரும் அவரது சீடர்களும் கங்கை நதியைக் கடந்ததும், ஒரு முஸ்லீம் ஆட்சியாளரின் படைகள், அவர்கள் அனைவரையும் கைது செய்தன. அந்த சமயத்தில், மத்வரின் கண்களில் துளிகூட அச்சம் ஏற்படவில்லை. இதைக் கண்ட முஸ்லீம் மன்னன், ``உங்களை நாங்கள் கைது செய்துள்ளோம் உங்களுக்கு பயமே இல்லையா?’’ என்றான்.

``பூமியில் உள்ள அனைத்து மக்களுகுள்ளும் இருப்பது ஒரே பரமபுருஷர்தான் (பகவான்) என்றும், அந்த பரமபுருஷர் உன்னிடத்திலும் இருக்கிறார். அதனால், உன்னை கண்டதும் எனக்கு அச்சம் எழவில்லை’’ என்று மத்வர் கூறினார். அச்சமற்ற துறவியைப் கண்டு, அவரது வார்த்தைகளால் ஈர்க்கப்பட்ட முஸ்லீம் மன்னர், மத்வருக்கு பல பரிசுகளை கொடுக்க எண்ணினான். ஆனால், அவை அனைத்தையும் பணிவோடு ஏற்க மறுத்தார், மத்வர்.

தனி ஒருவராக விரட்டிய மகான்

இத்தகைய துறவியை நான் எங்குமே கண்டதில்லை என்று கூறிய மன்னன், மத்வர் உட்பட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டான். அனைவரும் விடுதலையாகி சென்றார்கள். நாட்கள் செல்ல... மற்றொரு இடத்தில் கொள்ளையர்களின் ஒரு கும்பல், மத்வர் மற்றும் அவரின் சீடர்களின் ஒருவரான ஸ்ரீஉபேந்திர தீர்த்தர் அவருடன் இன்னும் சில சீடர்கள் ஆகியோரை தாக்கினார்கள். அந்த சமயத்தில், தனது சீடரான ஸ்ரீ உபேந்திர தீர்த்தரை அழைத்த மத்வர், கொள்ளையர்களை எதிர்கொள்ள ஆணையிட்டார்.

தன் குரு மத்வர் ஆணையிட்ட மகிழ்ச்சியில், ஸ்ரீ மத்வாச்சாரியாரின் உத்வேகத்தாலும், அவரது ஆசீர்வாதத்தாலும், ஸ்ரீ உபேந்திர தீர்த்தர், கொள்ளையர்களுடன் போரிட்டு அவர்களைத் தனி ஒருவராக விரட்டினார்! இதற்கு ஒரே காரணம், ஸ்ரீ உபேந்திர தீர்த்தரின் மீது மத்வரின் அளவு கடந்த கருணையின் சக்தி ஒன்றே ஆகும்.

தன்னையே மறந்து ஆக்ரோஷமாக கொள்ளையர்களை எதிர்கொண்டதாக, ``மத்வ விஜயர்’’ நூல் குறிப்பிடுகிறது. இவரின் மூலபிருந்தாவனம் எங்கு உள்ளது என்பது இன்னும் ஆராய்ச்சியில் உள்ளது. ஸ்ரீ உபேந்திர தீர்த்தருக்கு பின், ஸ்ரீ கவிந்திர தீர்த்தர் புட்டிகே மடத்தை கவனிக்க தொடங்கினார். அவருக்கு பின் ஸ்ரீ ஹம்சேந்திர தீர்த்தர் என இது வரை 30 மடாதிபதிகளை கொண்டுள்ளது, புட்டிகே மடம்.

100 ஆண்டுகள் வாழ்ந்த மகான்

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், புட்டிகே மடத்தின் வழிவந்த மகான் ஸ்ரீசுதீந்திர தீர்த்தர், சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தார் என்று புட்டிகே மடத்தின் வரலாறுகள் கூறுகின்றது. அந்த சமயத்தில், உடுப்பி கிருஷ்ணனுக்கு நான்கு பர்யாயங்களை ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் செய்திருக்கின்றார் என்றும் கூறப்படுகிறது. ஸ்ரீசுதீந்திர தீர்த்தரின் காலத்தில்தான், புட்டிகே மடத்திற்காக எண்ணற்ற பல நிறுவனங்களை உருவாக்கினார்.

இன்றும்கூட, புட்டிகே மடத்தின் மிக முக்கிய மகானாக சுதீந்திர தீர்த்தர் போற்றப்படுகிறார். இவருக்கு பிறகு, ஸ்ரீ சுஜ்னேந்திர தீர்த்தர், அவருக்கு பின்னர் தற்போதைய மடாதிபதி ஸ்ரீ சுகுணேந்திர தீர்த்தர் ஆகியோர் இந்தமடத்தை அலங்கரித்தனர்.தற்போதுள்ள 29வது மடாதிபதியான ஸ்ரீ சுகுணேந்திர தீர்த்தர், புட்டிகே மடத்திற்காக இன்னும் பல கிளைகளை உருவாக்கி விரிவுபடுத்தி வருகிறார்.

வர்ணிக்கும் வாதிராஜர்

மத்வரால், ஸ்ரீ உபேந்திர தீர்த்தருக்கு பரிசாக வழங்கப்பட்ட ருக்மிணி மற்றும் சத்ய பாமாவுடன் கூடிய பாண்டுரங்கவிட்டலாவின் விக்ரஹம், ஒரு கையில் சங்கு ஏந்தி, மற்றொரு கையால் தனது கால்களை நீட்டி, இரண்டு கைகளும் இடுப்பு மட்டத்தில் உள்ளன. இதனை, ``சங்கு மற்றும் சக்கரத்தின் அடையாளத்தை அணிந்துகொண்டு, இறைவனின் பாதங்களில் சாஷ்டாங்கமாக வணங்குபவர்களுக்கு, இறைவனின் அருளால், சம்சாரம் என்னும் வாழ்க்கை கடலின் ஆழம் இடுப்பு மட்டத்திற்கு மேல் வராது. இதனால், மிக எளிமையாக பாவக் கடலை கடந்து விடமுடியும்’’ என்று பாண்டுரங்கவிட்டலா விக்ரகத்தை, ஸ்ரீ வாதிராஜதீர்த்தர், மிக அழகாக வர்ணிக்கிறார்.

சில மடங்களுக்கும் விட்டலரின் விக்ரஹம் இருப்பதாலும், புட்டிகே மடத்தின் விக்ரஹம் மற்ற விக்ரஹங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டவும், இந்த பாண்டுரங்க விட்டலாவை ``ஸ்ரீஉபேந்திர விட்டலா’’ என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், இந்த மடத்தில் ஸ்ரீலட்சுமிநரசிம்மர் விக்ரஹமும் உள்ளது.

(தொடரும்)

புட்டிகே மடத்தின் குரு பரம்பரை

1. ஸ்ரீ உபேந்திர தீர்த்தர்.

2. ஸ்ரீ கவீந்திர தீர்த்தர்.

3. ஸ்ரீ ஹம்சேந்திர தீர்த்தர்.

4. ஸ்ரீ யாதவேந்திர தீர்த்தர்.

5. ஸ்ரீ தரணிதர தீர்த்தர்.

6. ஸ்ரீ தாமோதர தீர்த்தர்.

7. ஸ்ரீ ரகுநாத தீர்த்தர்.

8. ஸ்ரீ ஸ்ரீவத்சங்க தீர்த்தர்.

9. ஸ்ரீ கோபிநாத தீர்த்தர்.

10. ஸ்ரீ ரங்கநாத தீர்த்தர்.

11. ஸ்ரீ லோகநாத தீர்த்தர்.

12. ஸ்ரீ ராமநாத தீர்த்தர்.

13. ஸ்ரீ ஸ்ரீவல்லப தீர்த்தர்.

14. ஸ்ரீ ஸ்ரீநிவாஸ தீர்த்தர்.

15. ஸ்ரீ ஸ்ரீநிதி தீர்த்தர்.

16. ஸ்ரீ குணநிதி தீர்த்தர்.

17. ஸ்ரீ ஆனந்தநிதி தீர்த்தர்.

18. ஸ்ரீ தபோநிதி தீர்த்தர்.

19. ஸ்ரீ யாதவேந்திர தீர்த்தர்.

20. ஸ்ரீ கவீந்திர தீர்த்தர்.

21. ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர்.

22. ஸ்ரீ விபுதேந்திர தீர்த்தர்.

23. ஸ்ரீ சுரேந்திர தீர்த்தர்.

24. ஸ்ரீ புவனேந்திர தீர்த்தர்.

25. ஸ்ரீ யோகேந்திர தீர்த்தர்.

26. ஸ்ரீ சுமதீந்திர தீர்த்தர்.

27. ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர்.

28. ஸ்ரீ சுஞானேந்திர தீர்த்தர்.

29. ஸ்ரீ சுகுணேந்திர தீர்த்தர்.

(தற்போதுள்ள பீடாதிபதி)

30. ஸ்ரீ சுஷ்ரீந்திர தீர்த்தர்.

(ஜூனியர் பீடாதிபதி)

தொகுப்பு: ரா.ரெங்கராஜன்