Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிம்ம ராசியினர் காதலும் திருமணமும்!

காதல் பரிசு

பொதுவாக சிம்ம ராசியினர், அன்பும் பாசமும், நேசமும் பிரியமும் கொண்டவர்கள். பிரியமானவர்களுக்கு உடனுக்குடன் பரிசளித்து கௌரவிப்பார்கள். தங்களுடைய நேசத்தை பரிசுகளாலும், பாசப் பிணைப்பினாலும் வெளிப்படுத்துவார்கள். ஆனால், அதே சமயம் இவர்கள் தங்களை சற்று உயரத்தில் இருத்திக் கொண்டு, தங்களிடம் பரிசு பெறுபவர்களை தங்களுக்கு நிகரானவர், தங்களிடம் பரிசு பெறக்கூடிய தகுதி படைத்தவர் தங்களால் கவுரவிக்கப்பட்டவர், என்ற மமதையோடு பரிசுகள் வழங்குவர்.

மேஷமும் சிம்மமும்

மேஷ ராசிக்காரர் இவருக்கு மிகவும் பொருத்தமான ராசி ஆவார். மேஷ ராசிக்காரரின் படபடப்பும் முன்கோபமும் கட்டுப்படக்கூடிய ஒரே ராசி சிம்ம ராசி மட்டுமே. லிண்டா குட்மென் தன் புத்தகத்தின் அட்டைப் படத்தில் ஒரு சிங்கத்தின் அருகே சிறு ஆட்டுக்குட்டி படுத்திருக்கும் படம் போட்டிருப்பார். ஆக, சிம்ம ராசிக்கு மிகப் பொருத்தமான பெஸ்ட் மேட்ச் என்றால், அது மேஷ ராசி மட்டுமே. மேஷமும் சிம்மமும் ஜோடி சேர்ந்தால், இருவருடைய ஜாதகத்திலும் செவ்வாய், சுக்கிரன் வலுவாக இருந்தால், இருவரும் மிகச் சரியாகத் திட்டமிட்டு உயர்ந்த நிலைக்கு வருவது உறுதி. லட்சியத் தம்பதியராய் வலம் வருவர். இவை இரண்டும் உடல் ரீதியாகவும் நேச ராசிகள் ஆகும். மேஷமும் சிம்மமும் தாம்பத்தியத்திலும் பொருத்தமான ராசிகள் ஆகும்.

பொருந்தாத ராசி

சிம்மத்திற்கு சற்றும் பொருந்தாத ராசி என்றால், அது ரிஷபம். இவர்கள் வெவ்வேறு ஊர்களில் நாடுகளில் பிரிந்து வாழ்ந்தால், சிறப்பாக இருக்க வாய்ப்புண்டு. அவரவர் வருமானத்தைக் கொண்டு தங்களின் சேமிப்புகளையும் சொத்துக் களையும் பார்த்துக் கொண்டால், பெயரளவுக்கு கம்பீரமான பொருத்தமான ஜோடியாக தோன்றுவர்.

சிறந்தவர்

1) சிம்ம ராசியினர், தங்கள் நண்பர் மற்றும் காதலரை ஏனோதானோவென்று தேர்வு செய்வதில்லை. தனக்கு கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பதில்லை. முதல் தகுதி சிறந்தவராக இருக்க வேண்டும்.

2) எல்லோரும் பார்த்து பிரமிக்க வேண்டும். 3) தன்னுடைய கருத்தை கேட்காமல் அவர் தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது. 4) தானே அவர் வாழ்க்கையின் வழியும் ஒளியுமாக திகழ வேண்டும். தன்னை மீறி ஒரு நாய்க்குட்டிகூட அவர் மடியில் உட்கார கூடாது.

கூட்டு வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை.

பெரும்பாலும் சிம்ம ராசியினருக்கு குடும்ப வாழ்க்கை, காதல், தாம்பத்தியம் போன்றவற்றில் பெரிய ஈடுபாடோ பரவசமோ கிடையாது. ஆனால், தான் செய்யும் செயல் எதுவாக இருந்தாலும், அதனை வித்தியாசமாகவும் அனைவரும் பாராட்டும் படியாகவும் மிகமிக ரசித்தும் செய்வதால் இவர்களைக் குடும்பத்தினர் மிகவும் மதிப்பார்கள். இவரை தங்களில் ஒருவராகப் போற்றுவார்கள். பெரிய குடும்பத்தில் பிறந்த சிம்ம ராசியினர் அனைவருக்கும் பரிசளித்து கௌரவிப்பதில் எல்லோரது அன்பையும் சம்பாதித்து விடுவார்.

வீட்டுப் பறவை

சிம்ம ராசியினர், தங்களின் வீடு அல்லது ஊர் இவற்றை விட்டு வெளியே செல்ல விரும்புவது கிடையாது. எனவே, இவர்களை அழைத்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றலாம், சினிமாவுக்கு போகலாம், பீச்சுக்கு போகலாம் என்றெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. இவர்கள் வீட்டுப் பறவைகள். ஆகாயப் பறவைகள் கிடையாது.

சிம்ம ராசி ஆண்கள்

இவர்கள், தங்கள் காதலி அல்லது வாழ்க்கைத் துணையிடம் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். அது, அப்பெண்கள் எல்லாவற்றையும் தன் ஒருவனிடமே எதிர்பார்க்க வேண்டும் என்பதுதான். சிம்ம ராசி ஆணின் வாழ்க்கைத் துணைவி, வேறு யாரிடமும் எந்த ஒரு உதவியும் கேட்டுவிடக்கூடாது. யாருடைய துணையோடும் எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாது. அவர் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறாரே என்று சிம்மராசிக்காரரின் மனைவி போய் வாங்கினால் வில்லங்கம்தான். சொன்னால் செய்வார். தன்னைத் தவிர உலகில் வேறு ஆளே கிடையாது என்பது அவருடைய ஆழ்ந்த நம்பிக்கை. அக்கருத்தை அவர் மனைவி அடிக்கடி உறுதி செய்யும்படி நடந்துகொள்ள வேண்டும். அவரது காதலியும் வாழ்க்கைத் துணைவியும் இவரது கருத்தை நம்பினால் வாழ்க்கை சிறக்கும். இவற்றைப் புரிந்து கொண்டு இவர்களின் மனைவிமார் குடும்பம் நடத்தினால், இவர் இந்தப் பெண்களுக்கு காவல் தெய்வம்; காதல் தேவன்; எல்லாமும்.

ஆண் ரூபத்தில் பெண்கள்

சிம்ம ராசி பெண்களும், ஆண்களைப் போல கராத்தே, குங்ஃபூ போன்றவற்றை கற்றுக்கொள்வர். கராத்தே மாஸ்டர், பவுன்சர், ஜிம் ட்ரெயினர் போன்ற வேலைகள் செய்வர். ஆனால், அதற்காக அவர்கள் தங்கள் பெண்மை தன்மையை இழந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. மிகச் சிறந்த பெண்களாக இருப்பார்கள். தோற்றத்தை மட்டும் ஆண்களைப் போல மாற்றிக் கொள்வார்கள். இது அவர்களின் கணவர்களுக்கு நன்றாக புரியும். எனவே, அவர்களின் தோற்றத்தை பற்றி கவலைப்படாமல் அவர்கள் பேன்ட் ஷர்ட் போட்டாலும் அதனை அன்போடு ஏற்றுக் கொள்வார்கள். இவர்களுடைய மனம் மலரைப் போல மென்மையாக இருக்கும். ஆனால், சிறுகுழந்தையைப் போல கணவரிடம் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்ப்பார்கள். வெளியில் முரட்டு உருவமாக தெரிந்தாலும், உள்ளே சிறு குழந்தையைப் போல கணவரின் அரவணைப்பில் இருப்பதை விரும்புவர்.