Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
South Rising
search-icon-img
Advertisement

முகப்பேரில் மகப்பேறு அருளும் ஸ்ரீனிவாசப்பெருமாள்

திருமலையில் இருக்கும் ஸ்ரீனிவாசரை போலவே, சென்னையில் உள்ள முகப்பேரில் `சந்தான ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு வரமளித்து வருகிறார். அவரை பற்றிய இந்து தொகுப்பில் காணலாம்.

தன்னை வேண்டிக் கொள்ளும் பக்தர்களுக்கு மகப்பேறு வழங்குவதற்காகவே, இந்த முகப்பேறு மேற்கில், `ஸ்ரீசந்தான ஸ்ரீனிவாச பெருமாளாக’ எழுந்தருளியிருப்பதாக இங்கு பூஜைகளை மேற்கொண்டு வரும் கோயிலின் மூத்த பட்டர் அண்ணா ஸ்ரீநிவாசன் தெரிவித்தார். மேலும், பிரதிமாதம் வருகின்ற பௌர்ணமி, புனர்வஸு, சுவாதி, ரேவதி, ஸ்ரவணம், ரோகிணி ஆகிய ஆறு நாட்களில் `சந்தான பூஜை’ நடைபெறுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தம்பதி சகிதமாக இந்த திருத்தலத்திற்கு வரவேண்டும். அவர்களை பெருமாளின் முன்பு அமரவைத்து, மடியினில் சந்தான கோபாலரை ஏலம் செய்து, இந்த சந்தானபூஜை நடைபெறும். தொடர்ந்து மூன்று முறை வந்திருந்து இந்த பூஜையை மேற்கொள்ள வேண்டும். அப்படி, மேற்கொண்ட பல தம்பதிகளுக்கு மகப்பேறுகிட்டி சௌபாக்கியம் அடைந்திருக்கிறார்கள் என்று பட்டர் சொல்லும் போதே இந்த பிராத்தனையை ஒரு தம்பதி செய்துக் கொண்டிருந்தார்.

சற்று இடைவெளிக்கு பின், மீண்டும் பட்டர் பேசத் தொடங்கினார். இந்த கோயில், மிக பழமைவாய்ந்தது. மூலவரான சந்தான ஸ்ரீ னிவாச பெருமான், சுமார் 9 அடி மிக உயரமானவர். மேலும், இவர் அபயஹஸ்ததாரி. ஸ்ரீனிவாசப்பெருமாள், அபயஹஸ்த தாரியாக காட்சியளிப்பதை வேறெங்கும் காணக்கிடைக்காதவை.

ஒரு காலத்தில், இந்த சந்தான ஸ்ரீனிவாசப் பெருமாள் இங்கு கோயில் கொண்டு மகப்பேறு வரங்களை தந்தமையால் `மகப்பேறு இடம்’ என்றே பெயர் பெற்றது. அது காலப்போக்கில் மருவி, மகப்பேறு - முகப்பேறு என்றாகிவிட்டது.

இந்த பெருமாளின் சந்நதியை தவிர, சந்தான லட்சுமி என்னும் தாயார் சந்நதியும் தனியாக உள்ளது. வெள்ளிக்கிழமை தோறும் விசேஷ அலங்காரங்கள் செய்து பூஜைகள் நடைபெறுகின்றன.

பௌர்ணமி, சுவாதி, சிரவணம், ரேவதி, புனர்வஸு, ரோகிணி ஆகிய ஆறு நாட்களில், `சந்தான பூஜை’ நடைபெறுகிறது. இந்த ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் புத்திர பாக்கியத்திற்கும் தொடர்புண்டு.

பௌர்ணமி அன்று சந்தான பாக்கியத்திற்காக பூஜை செய்யும் விசேஷ நாள். தம்பதிகள் சௌகரியமாக இருக்க பௌர்ணமி அன்று பூஜை செய்வது சிறந்தது.

லட்சுமி நரசிம்மரின் திருநட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் இந்த பூஜை செய்வதால், ஏதேனும் காத்து கருப்பினால் தடைப்பட்ட குழந்தை பேறு சரியாகும். அதே போல், கருடாழ்வாரின் திருநட்சத்திரமும்கூட. இந்த பூஜையினை செய்வதற்கான அருமையான நாள்.

சிரவணம் நட்சத்திரம் சாட்ஷாத் அந்த மலையப்ப சுவாமியின் நட்சத்திரம். ஆகையால் இந்த நட்சத்திரமும் உகந்தது. அதே போல், ரேவதி நட்சத்திரமும்கூட பெருமாளின் நட்சத்திரம்தான் இந்த நட்சத்திரத்தில் செய்வதாலும் பலனுண்டு. புனர்பூசம் நட்சத்திரத்தில், புத்திரகாமேஷ்டி யாகம் செய்துதான் ராமர் பிறந்தார். ஆகையால், இந்த நட்சத்திரத்தில் பூஜை செய்வதால் சந்தான ஸ்ரீ நிவாசன் குழந்தை பாக்கியம் கொடுக்கிறார்.

ரோகிணி நட்சத்திரம், எல்லாருக்கும் தெரிந்ததே! கண்ணாபிரான் பிறந்த நட்சத்திரம். அதனால், இந்த நட்சத்திரத்தில் பூஜை செய்வதால், கண்ணனைப்போன்றே குழந்தை பிறப்பான் என்பது ஐதீகம்.

மேலே கூறிய ஏதேனும் ஒரு நட்சத்திர நாட்களில், குழந்தை பாக்கியம் வேண்டுவோர், தம்பதி சகிதமாக சந்தான ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயிலுக்கு காலை 6.00 மணிக்கு வந்து (எதையும் உட்கொள்ளாமல் வெறும் வயிற்றுடன் வருவது நல்லது அல்லது காபி - டீ போன்ற, நீராகாரத்தை மட்டும் குடித்து வரலாம்), கோயில் பட்டரிடம் `சந்தான பூஜை’ செய்ய வேண்டும் என்று சொன்னால், அவர்கள் அந்த தம்பதிகளை அழைத்துக் கொண்டு, பெருமாளின் முன்பாக அமரவைத்து, ஆயிலை சந்தான கோபால கிருஷ்ணரை (விக்ரகம்) தம்பதியின் மடியினில் வைத்து,

``தேவகி ஸுத் கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே

தேஹி மே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் ஶரணம் கதஹ

தேவ தேவ ஜகந்நாதா கோத்ர வ்ருத்திகர ப்ரபோ

தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்பந்தம் யசஸ்விமம்’’

என்னும் மந்திரத்தை உச்சரிக்க சொல்லிக் கொடுப்பார்கள். சில முறை கோயிலையே தம்பதிகளாக சேர்ந்தே சொல்லிய பிறகு, அதனை வீட்டிலும் மனமுருகி வேண்டிக் கொண்டு இருவரும் சேர்ந்து சொல்லவேண்டும். இரவில், தூங்குவதற்கு முன்பாக தம்பதிகள் வெண்ணெய், தேன் ஆகியவற்றை உட்கொள்ளவேண்டும். அதே போல், வாரம் ஒரு செவ்வாழையை சாப்பிடவேண்டும்.

இந்த பூஜையினை மேற்கொள்ள தொடர்ந்து மூன்று முறை வரவேண்டும். எந்த நட்சத்திரத்தில் வருகிறார்களோ அதே நட்சத்திரத்தில்தான் வரவேண்டும். உதாரணத்திற்கு; ரேவதி என்றால் அடுத்த மாதம் வருகின்ற ரேவதியில்தான் வரவேண்டும். இவை அனைத்தையும் கடைபிடிப்பவர்களுக்கு, நிச்சயம் சந்தான ஸ்ரீ நிவாச பெருமாள் சந்தானத்தை அருள்வார்.

புரட்டாசி மாதம் அன்று நான்கு சனிக்கிழமைகளிலும் விசேஷ அலங்காரத்துடன் பெருமாள் சேவைசாதிக்கிறார். ஆனி மாதம் ரேவதி நட்சத்திரத்தில், 10 நாட்கள் பிரம்மோற்சவம், பிரதி பௌர்ணமி கருட சேவை, பவித்தோற்சவம் போன்றவை சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது. அதே போல், மார்கழி மாதத்தில் விடியற் காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பகல் பத்து, ராப்பத்து உற்சவங்கள் நடைபெற்று, வைகுண்ட ஏகாதசி அன்று பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று, அந்த வழியாக பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிவார்.

மேலும், தாயாருக்கு ஆடி- தை மாதத்திலும், நவராத்திரி போன்ற நாட்களிலும் ஊஞ்சல் சேவை நடைபெறும்.

கோயில் திறந்திருக்கும் நேரம்: ஞாயிறு முதல் வெள்ளி வரை - காலை: 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை. மாலை: 4.00 மணி முதல் இரவு 09.00 மணிவரை. சனிக்கிழமை அன்று காலை 5.30 மணிக்கு திறந்து இரவு 09.30 மணி வரை.

முகவரி: ஸ்ரீ சந்தான ஸ்ரீ னிவாச பெருமாள் ஆலயம் வெள்ளார் தெரு, முகப்பேர், சென்னை - 37.