Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கார்த்திகையில் கண் திறக்கும் நரசிம்மர்

ஆழ்வார்கள் பாடிய நூற்றெட்டு திவ்ய தேசங்களுள் ஒன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள சோளசிம்மபுரம் எனப்படும் சோளிங்கர். திருக்கடிகை என்ற திருப்பெயரில் இவ்வூரை ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள். கடிகை என்பது ஒரு நாழிகைப் பொழுதைக் குறிக்கும். ஒரு நாழிகை இந்தத் திருத்தலத்தில் தங்கி இருந்தாலே, இத்தலம் முக்தியை அளிக்க வல்லது. அதனால் தான் திருக்கடிகை என்று இதனை ஆழ்வார்கள் அழைத்துள்ளார்கள்.

நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்பினார்கள் சப்த ரிஷிகள் எனப்படும் ஏழு முனிவர்கள். சோளிங்கர் மலைக்கு மேல் நரசிம்மர் யோக நிலையில் தவம் புரிவதை அறிந்து, 750 அடி உயரம் கொண்ட அந்த மலைக்கு மேல் சென்றார்கள். அங்கு யோகத்தில் இருக்கும் நரசிம்மர் தங்கள் முன்னே வந்து காட்சி அளிக்க வேண்டும் என்று வேண்டி ஒரு நாழிகை தவம் புரிந்தார்கள். ஒரு நாழிகை என்பது இருபத்து நான்கு நிமிடங்கள் ஆகும். அவர்கள் தவம் புரிந்த இருபத்து நான்கு நிமிடங்களில் மனம் உகந்து, யோக நரசிம்மப்பெருமாள் அவர்கள் முன் காட்சி அளித்தார். அவர் காட்சி செய்த இடம் என்பதால், யோக நரசிம்மரை அங்கேயே அவர்கள் பிரதிஷ்டை செய்தார்கள்.

வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்க விழைந்த விசுவாமித்திரர், ஒரு முறை இந்த சோளிங்கர் மலைக்கு மேல் இருபத்து நான்கு நிமிடங்கள் தவம் புரியவே, வசிஷ்டர் அவரைத்தேடி வந்து பிரம்மரிஷி பட்டத்தைக் கொடுத்து விட்டுச் சென்றார் என்றும் இவ்வூரின் தலவரலாறு சொல்கிறது.மலைக்கு மேல் அம்ருதவல்லித் தாயாரோடு யோக நரசிம்மராகத் திகழும் திருமால், அந்த மலையின் அடிவாரத்தில் பக்தவத்சலப் பெருமாளாகக் காட்சி அளிக்கிறார். மேலும் திருக்கடிகை மலைக்கு அருகிலேயே 350-அடி உயரத்தில் சிறிய மலை ஒன்று உள்ளது.

அந்த மலையிலே யோக ஆஞ்சநேயர் யோகம் செய்யும் நிலையில் எழுந்தருளியிருந்து அருள்பாலிக்கிறார். திருக்கடிகை யோக நரசிம்மப் பெருமாளை அக்காரக்கனி என்று ஆழ்வார்கள் அழைக்கிறார்கள்.மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்புக்கானைப் புகழ்சேர்ப் பொலிகின்ற பொன்மலையைத்தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்தஅக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனேஎன்று பாடினார் திருமங்கை ஆழ்வார்.

யோகத்தில் கண்மூடி இருக்கும் நரசிம்மர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து பார்த்து அடியார்களுக்கு அருள்புரிவதாக ஐதீகம் உள்ளது. குறிப்பாக, கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பெருமாளைத் தரிசிப்பது மிகவும் விசேஷமாகும்.

இறைவனின் திருமேனி அவயவங்களுக்குள் ஒரு போட்டி வந்ததாம். அவரது திருவடி, என்னிடம்தான் பக்தர்கள் சரணாகதி செய்கிறார்கள், நான்தான் பெரியவன் என்றதாம். திருக்கரம், நான்தான் சரண் அடைபவர்களுக்கு அபயம் அளிக்கிறேன், நானே பெரியவன் என்றதாம். இதுபோல் ஒவ்வொரு அவயவமும் போட்டி போட்ட நிலையில், திருமால் தீர்ப்பு தந்தாராம், என் கண்கள் கடாட்சம் புரிவதால்தான் பக்தன் வந்து சரணாகதியே செய்கிறான், எனவே கண்ணே மற்ற அவயவங்களை விட உயர்ந்தது என்று.

திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய் என்று ஆண்டாள் பாடியபடி நரசிம்மப் பெருமாளின் திருக்கண் நோக்குக்கு இலக்காகும் பேற்றினை இந்த ஆண்டு நாமும் பெறுவோமாக.

தொகுப்பு: மகி