Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கல்வியை கொடுக்கும் மூரடி அனுமன்

சென்ற இதழில், ``வியக்க வைக்கும் வியாசராஜரின் அனுமன்கள்’’ பகுதி, 25வது பகுதியாகும். அதனைக் கண்ட வாசகர்கள் பலரும் எமக்கு வாழ்த்துகளை தெரிவித்தது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே..! இது 26வது பகுதியாகும். இந்த பகுதியில், ஆந்திர மாநிலம் ஆனந்தபுரத்தில் உள்ள ``மூரடி முக்ய பிராணனை’’ தரிசிக்கவிருக்கிறோம்.

மிக முக்கிய மூன்று அனுமன்கள்: மத்வ மரபில், “முக்ய பிராணன்” என அனுமாரை வணங்குவார்கள். அதே போல் அனுமனை கன்னடத்தில் “பிராண தேவரு” என்றும் அழைக்கிறார்கள். பக்தர்களுக்கு வலிமை, தைரியம், ஆகியவைகளை அருள்பவராக முக்ய பிராணன் போற்றப்படுகிறார். ஆந்திர மாநிலம் ஆனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் பல அனுமன்கள் வியாசராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதில், மூன்று சிறப்பு மிக்க ஆலயங்கள் பக்தர்களின் ஆன்மிக ஸ்தலமாக திகழ்கின்றன. அவை;

*காசாபுரம் (நெட்டிக்கண்டி அஞ்சநேயர்)

*நேமக்கல்லு (நேமாகல் பிராணதேவரு)

*மூரடி முக்ய பிராணன் (மூரடி பிராணதேவரு)

இந்த மூன்று அனுமன் கோயில்களையும் பக்தர்கள் ஒரே நாளில் தரிசனம் செய்யலாம். இந்த மூன்று ஆலயங்களும், விஜயநகர கால கோயில் வடிவமாக காணப்படுகிறது.

மூரடி முக்ய பிராணன்

“மூரடி” என்ற சொல்லுக்கு கன்னடத்தில் “மூன்று அடிகள்” என்று பொருளாகும். மகான்  வியாசராஜர், மூன்று அடியில் இங்கு வந்து, இந்த இடத்தை புனிதமாக்கினார் எனும் புராண கதையுண்டு. ஆகையால், இந்த அனுமனுக்கு மூரடி அனுமன் என்கின்ற பெயர் வந்தது. மேலும், கிருஷ்ணதேவராயர் (1509 - 1530) காலத்திலேயே வியாசராஜர் மூரடி முக்ய பிராணனை பிரதிஷ்டை செய்துள்ளார் என்கிறது வரலாற்று ஆய்வுகள். ஆக, 500 ஆண்டிற்கும் மேலான அனுமன் கோயிலாகும்.

அதே போல், மிக அருகிலேயே நேமக்கல்லு (நேமக்கல்) பிராணதேவரு கோயிலும் இருக்கிறது. மூரடி முக்ய பிராணனை தரிசித்த பெரும்பாலான பக்தர்கள், நேமக்கல் அனுமனை தரிசிக்காமல் செல்வதில்லை.

சில பக்தர்கள், காசாபுரம் நெட்டிக்கண்டி ஆஞ்சநேயரையும் தரிசிக்கிறார்கள். இவரின் சிறப்பு என்னவென்றால், நெட்டிக்கண்டி அனுமனிடத்தில் வேண்டியது உடனே கிடைத்துவிடுமாம். அப்படி கிடைத்துவிட்டால், அவருக்கு புதியதாக செருப்பு ஒன்று காணிக்கையாக செலுத்தும் அற்புத மரபு இங்கு தொன்று தொட்டு வருகின்றது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் செருப்புகள், அடுத்த நாள் “ஸ்வாமி உபயோகித்தவை” என்று நம்பப்படுகிறது. இந்த அற்புத நம்பிக்கை, ஆலயத்தின் தனித்துவமாக விளங்குகிறது.

ஆறடி உயர அனுமன்

மூரடி முக்ய பிராணன் கோயிலை அடைந்ததும், ஐந்து கலசங்களைக் கொண்ட சிறிய கோபுரம் நம்மை வரவேற்கிறது. அந்த கோபுரத்தை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆம்! கோபுரத்தில் சுமார் 6 அடி உயரத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் அனுமனும், அவரின் தோள்களில் ஒருபுறம் ராமரும், மறுபுறம் லட்சுமணரும் அமர்ந்திருக்கும் அற்புதமான காட்சி நம்மை மெய்மறக்க செய்கிறது. உள்ளே சென்றதும், இடதுபுறத்தில் ராமர் கோயில் மிக அழகாக தோற்றம் கொண்டதாக இருக்கிறது. அவரை தரிசித்துவிட்டு, மூரடி முக்ய பிராணனை தரிசிக்க உள்ளே சென்றால், அலங்காரங்கள் செய்யப்பட்டு, மிக அற்புதமாக காட்சியளித்தார்.

கல்வி கொடுத்த அனுமன்

மூரடி அனுமன் கோயில் அருகில், ``ஹுலிகல்’’ என்னும் கிராமம் உள்ளது. இங்குள்ள ஒரு சிறுமிக்கு கல்வி பயில வேண்டும் என்கின்ற ஆர்வம் ஏற்பட்டது. ஹுலிகலில் இருந்து சுமார் 40 கி.மீ., தொலைவில் ஒரே ஒரு பள்ளிக்கூடம் ஒன்று இருந்திருக்கிறது. இந்த பள்ளிக் கூடத்தில் சேர்ந்து பாடங்களை கற்க வேண்டும் என்கின்ற ஆசையும், ஆவலும் சிறுமிக்கு. ஆனால், இந்த சிறுமியின் பெற்றோர்கள் வசதி வாய்ப்புகள் இல்லாதவர்கள். சிறுமியின் ஆசைக்காக சிறுகச் சிறுக பணத்தை சேகரித்து வந்தனர். எப்படியும் தங்கள் குழந்தையை பள்ளியில் சேர்த்தே ஆகவேண்டும் என்கின்ற வைராக்கியத்தில், பணத்தை சேகரித்தனர். சிறுமியின் பெற்றோரும், படிப்பு வாசனையே இல்லாத காரணத்தால் ஒன்றை அவர்கள் அறியாமல் இருந்தனர். சிறுமிக்கு வயது ஏறிக் கொண்டே சென்றது. பெற்றோரும் பணத்தை சேகரித்துக் கொண்டே இருந்தனர்.

ஒரு கட்டத்தில் போதிய அளவு பணம் சேர்ந்தாகிவிட்டது. சிறுமியை அழைத்துக்கொண்டு நேராக பள்ளிக்கு சென்றார்கள். பணத்தை மேசையில் கொட்டி..

``எங்கள் குழந்தை இங்கு படிக்க போதியளவிற்கு பணம் இருக்கிறது. சேர்த்துக்கொள்ளுங்கள்’’ என்றார். நகைத்த பள்ளி நிர்வாகிகள்,

``உங்களிடம் பணம் இருக்கலாம். ஆனால், குழந்தைக்கு வயதாகிவிட்டது. சரியான வயதில் அவளை பள்ளியில் சேர்த்திருந்தால், அவள் இப்போது 2ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்’’ என்றார்கள். அந்த சிறுமியின் பெற்றோர்கள் எவ்வளவோ கெஞ்சி கூத்தாடினாலும் அவர்கள் குழந்தையை சேர்க்க மறுத்துவிட்டனர். நாட்கள் கடந்தன...

அந்த சிறுமி மனம் நொந்து, அருகில் இருக்கும் மூரடி அனுமன் கோயிலுக்கு வந்திருக்கின்றாள். அனுமனிடத்தில், ``தான் படிக்க வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டும்’’ என்று முறையிட்டுயிருக்கிறாள். இப்படியாக தினமும் மூரடி அனுமன் கோயிலுக்கு வருவது சிறுமியின் வாடிக்கை.

ஒரு நாள், கோயிலில் சிறுமி வருத்தத்துடன் இருக்க, அருகில் ஆஜானுபாகுவாக அனுமன் தோற்றத்தில் ஒருவர் சிறுமியின் அருகில் அமர்ந்து, சிறுமியிடத்தில்,

``கவலை வேண்டாம். உனக்கு நான் பாடம் எடுக்கிறேன்’’ என்று சொல்லி தினமும் அந்த சிறுமிக்கு அனுமாரே பாடங்களை நடத்தியிருக்கிறார். நாட்கள் செல்ல...

``நான் இதுவரையில் உனக்கு எடுத்து வந்த பாடங்களை, பள்ளிக்கு சென்று ஆசிரியரிடத்தில் ஒப்புவித்து சொல்... இனி அவர், பள்ளியில் உன்னை சேர்த்துக்கொள்வார்’’ என்றார், அனுமன்.

அதே போல், தன் பெற்றோரை அழைத்துக்கொண்டு, பள்ளிக்கு சென்று பாடங்களை மடமடவென ஒப்புவித்தாள். இதில், ஆச்சரியம் கொண்ட அனைவரும்;

``எப்படி நீ மனப்பாடமாக பாடங்களை ஒப்புவிக்கின்றாய்?’’ என்று கேட்க, நடந்தவற்றை சிறுமி சொல்ல... அந்த மூரடி அனுமனே நேரடியாக குழந்தைக்கு பாடங்களை எடுத்த அற்புதம் தெரியவந்தது. பள்ளி நிர்வாகம் அவளை சேர்த்துக் கொண்டது. இன்று அந்த சிறுமி, மிக பெரிய கல்வியறிவை பெற்று துபாயில் வசித்துவருகிறாள். அனுமன் இடத்தில் உண்மையான பக்தி இருந்தால் மட்டும் போதும். அந்த குழந்தை, அனுமனிடத்தில் பக்தியை மட்டுமே செலுத்தியது.

விழாக்கள்: எப்போதும் போல், இக்கோயிலையும் ராமநவமி, அனுமன் ஜெயந்தி போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

*திறந்திருக்கும் நேரம்: காலை 5.30 முதல் 12.30 வரை, பிற்பகல் 2.30 முதல் 8.30 வரை.

* எப்படி செல்வது: ஆனந்தபுரத்தில் இருந்து 106 கி.மீ., பயணித்தால் இக்கோயிலை அடைந்துவிடலாம்.